NATURE AND OURSELVES J K SIVAN

ஒரு சுய பரிசோதனை.    நங்கநல்லூர்  J K  SIVAN இயற்கையும் நாமும்

வெண்டைக்காய் வெட்டப் போய் விரலை வெட்டிக்கொண்டேன்.  புண் ஆறவில்லை. ஒரு சில நாளில் ஆறும். அது வரை வலி பொறுக்கத்தானே வேண்டும்.  ஒரு சந்தோஷம்.   நான் சாகவில்லை , மூச்சு விடுகிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன்.இதோ காற்று வாங்க நடக்கிறேன். பார்க்கில் செடி கொடிகள் காற்றில் ஆடி மகிழ்விக்கிறது. தென்னை மரங்களுக்கிடையே கிளைகளில் காக்கை கூடுகள். அணில்களின் தாவல்.  திருவல்லிக்கேணி , மயிலாப்பூர், அடையாறில் இருந்தால் கடற்கரைக்கு சென்றிருப்பேன். புண்ணோ வலியோ மறந்தே போயிருக்கும்.

இயற்கை வழி காட்டுமா?  இல்லை.   உண்மையை உணர்விக்கும்.  வலியும்  அதை மறப்பதும் மனத்தில் தோன்றுவது தான். இயற்கை வேறு நாம் வேறு இல்லையே.
ஆஹா,   விரலில் கத்தி பட்டுவிட்டதே.  ஒருவேளை கத்தியில் துரு இருந்ததோ?  செப்டிக் ஆகிவிடுமோ, உள்ளே நரம்பு துண்டாகி இருக்குமோ.  ஆறாக ரத்தம் வழிந்ததே, இதனால் என் இதயம் துடிப்பது குறைந்து விடுமோ.  ஓடு அப்போல்லோவுக்கு?  ஓடினால் உனக்கு எல்லாம் உடனே சரியாகிவிடுமா?  முள்ளிலே சரியாவதை  கோடாலியால் வெட்டின கதை.  பல இடங்களில் ஊசி குத்தி  மெஷின்கள் போட்டோ எடுத்து, பல டாக்டர் இளைஞர்  பலவாக கூறி, பல கலர்களில்  மருந்துகள்,…..   பத்து நாளா இதற்கு ??   பர்ஸ் இளைத்து நோஞ்சா னாகும்.
மன அழுத்தம் ஒன்றே இதை தீர்க்கும் மருந்து. மனதை அமைதியாக வைத்திருப்பவனுக்கு எந்த நேரமும் எந்த ஆபத்தும் இல்லை.
என்னைச் சுற்றி எத்தனையோ நடக்கிறதே.   என் அமைதிக்கு பின்னால் இத்தனையா?.  மனிதனைத் தவிர விலங்குகளோ பறவைகளோ தாவரங்களோ  டாக்டரிடம் போகிறதா? வக்கீல் தேவையாகிறாரா? பள்ளிக்கூடம் தான் அவசியமா?  இயற்கை சகலமும் அளிக்கிறது. சொல்லித்தருகிறது.   அசைவின்மை ஆழ்ந்த மனோ வலிமை தருகிறது.
வாரி வாரி கொடுக்கும் இயற்கை பதிலுக்கு ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. மனிதன் எவ்வளவு தான் அதை நாசம் பண்ணினாலும், அழித்தாலும்  இயற்கை  தன்னிடம்  இருப்பதை  கொடுப்பதில் தவறுவதில்லை. இந்த ”தாராள மனது”  பாடத்தை மனிதன் புரிந்து கொண்டால் எவ்வளவு அருமையாக உலக வாழ்வு சீர் படும். மானிட வாழ்வு பெருமை பெறும். தயையும் கருணையும் எவ்வளவு பெருகும்.
நமக்கு ஒளி, ஆரோக்யம், உயிர், உணவு  இத்தனை தருகின்ற ந்த சூரியன் ஒருநாள் கூட  ”நீ எனக்கு இவ்வளவு பாக்கி” என்று சொல்லவில்லையே.
புத்தரை ஒரு இடத்தில் பேச அழைத்தார்கள்.  புத்தர்  பேசவில்லை. கையில் ஒரு சிறு புஷ்பம். அதன் மிருது, மலர்ந்த இதழ், மணம் ,இதையே ரசித்துக் கொண்டிருந்ததது. பிறகு எல்லோரிடமும்  அதை காட்டி ”இந்த சிறு மலர்  போதிக்கும்  அதிசய பாடத்தை நாம் உணர்ந்தால் நமது வாழ்வின் போக்கே  மாறிவிடும்.” என்றார்.இயற்கை எல்லாமே  கற்றுத்தருகிறது. அதை உணரும் நுண்ணறிவு இருந்தால் போதுமானது. வேறே படிப்பே வேண்டாம்.   அதெல்லாம் யாருக்கோ எதற்கோ எங்கேயோ சான்றிதழாக காட்டி காசு சம்பாதிக்க தேவைபடலாம்  ஆனால் வாழ்க்கைக்கு  அது வெறும் காகிதம். ஏட்டுச்சுரைக்காய் தான்.

ஒரு பெண் நீர்வீழ்ச்சியில் விழுந்தாள்.  அவள் அவ்வளவு தான் என்று  அருகிலிருந்தோர் முடிவு கட்ட, அவள் கீழே நீர்வீழ்ச்சியோடு விழுந்தவள் எங்கோ  எழுந்து நடந்து வந்தாள் .”என்னடி ஆச்சு?  அதிசயமா இருக்கே? மந்திரம் ஏதாவது தெரியுமா உனக்கு?’
”அட சீ.  எப்போது  தண்ணீரில் விழுந்தேனோ, நான் அது போக்கிலே போனா தான் தப்பமுடியும். எதிர்த்து என் வழி போக நினைத்தால் நீ சொல்றமாதிரி காலி ஆகியிருப்பேன்.  கீழே விழும்போது நீரோடு நீராக ஒண்டிக் கொண்டேன். அதன போக்கில் மிதந்தேன். கொஞ்சம் அது ஒரு இடத்தில் மெதுவாக திரும்பும்போது அருகில் இருந்த பாறைக்கு  சட்டென்று தாவி வெளியேறினேன். ”

வாழ்க்கை ஒரு நேர் பாதை அல்ல. பள்ளம் மேடு, நீர் வீழ்ச்சி, பாதாள  ஆழம், சுழல்,  பாறை மேடு  எல்லாம் உண்டு. அதன் வழியே போக கற்றுக் கொண்டு நம்மை பக்குவப்  படுத்திக்கொண்டால் துன்பமோ, ஏமாற்றமோ இல்லை.
இயற்கை ஒரே சீராக பயணிக்கிறது. நம்மைப் போல்  தடுமாற்றம், மாற்றம்  எதுவுமில்லை. ஒரு சிறு புல் தானாகவே  வளர்கிறது.பெரிதாகிறது.  வெட்டப்படுகிறது. அல்லது ஆடு மாட்டுக்கு இரையாகி முடிகிறது பதற்றம் பயம் இதில் எதுவும் இல்லை.  ஒரு கான்க்ரீட் சுவற்றில்  இடுக்கில் கூட வளரும் தைர்யம் அதற்கு இருக்கிறது.
பாலைவனத்தில் வாழ்பவன் நட்போடு பழகமுடியுமா?. மலைவாசி அன்போடு சிரிக்கிறான். பெரும் நகரத்தில் இருப்பவன் அடுத்தவனை தெரியாதவன். பணக்காரன் ஏழையோடு இணைய மாட்டான்.  பிச்சைக்காரன் பணக்காரனைக்  கண்டதும்  தவறு செய்தவன் போல்  ஓடி ஒளிகிறான்.
இயற்கை  பாரபக்ஷம் இல்லாதது. இருப்பதை எவருக்கும் தருகிறது. இயற்கையின் நீதியை புறக்கணிப்பவன் எவனானாலும் தண்டனை பெறுகிறான்.
இயற்கை குளிர், வெப்பம், மழை, வெயில் எதற்கும் தன்னை தயார் நிலையில் வைத்துள்ளது. பறவைகள் விலங்குகள் அவ்வாறே. மனிதன் விலங்குகள், பறவை  இனங்களின்  வாழ்க்கையோடு மோதி அவற்றை சீர்குலைக்கிறான். இயற்கையை அலட்சியம் பண்ணி சுயநலத்தால் தீமை விளைவித்து பலனை அனுபவிக்கிறான்.  ஆற்று மணலை எடுப்பானேன், தண்ணீரின்றி தவிப்பானேன். ஆற்றங்கரையிலும்  ஏரிக்கரையில் வீடு கட்டுவானேன்,   வீடே   மூழ்கி   சோற்றுப் பொட்டலத்துக்கு  மொட்டை மாடிமேல் காத்திருப்பானேன்.
வெட்டிய  மரத்திலும் சிறு துளிர்  தலை நீட்டுகிறது. சாவிலும் வாழ்வு இயற்கைக்கு  தெரிந்தது. வாழ்வையே சாவாக்கி தவிப்பவன் ஆறறிவு படைத்த மனிதன்.
இளம் சூரியன் கதிரில்  பனி நீங்கி மொட்டவிழ்ந்து மலரும் புஷ்பம் அதே வெயிலில் மாலை கருகி வாடி வதங்கி வீழ்கிறது. இது அதற்கு புதிதல்ல. தொடர்ந்து நடக்கும் செயல். எந்த ஆரவாரமும் இதில் இல்லை.  ஆஹா ஓஹோ  என்று ஜனன மரண விதிகளை சந்திக்கும்போது மனிதன்  ஆவேசம் அடைகிறான்.
நம் ஒவ்வொரு மூச்சு, அசைவு, ஒரு கவள  உணவு, ஒரு வாய் நீர்,   ஒரு அடி  பாட்டு, எல்லாமே சூரியனால் நமக்கு கிடைப்பது. காலம் காலமாக. ஆனால் சூரியனின் கதிர்கள் பனித்திரையை பிளக்க நாமே  o zone ஐ  தொந்தரவுகள் பண்ணி  கால நிலை மாறுதல்களின்  விளைவை சந்திக்க திணறுகிறோம்.
சூரியன் தோன்றி மறைவது போல் நாமும்  வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வோம். நடந்ததெல்லாம் மறப்போம். பழசெல்லாம் நினைவிலிருந்து அகலட்டும். நீ  தனியன் இல்லை. பலரது உணர்வுகள் உன்னிலும் உண்டு. நல்லதெல்லாம் ஒன்றாக இணை. உன் உள்ளே ஒரு ஒளி வட்டம் தயாராகும். அது வீசும் ஒளியில் நீ நகர்வாய். உன் கற்பனை உன்னை விட்டு பறந்து போய்விட்டது. நிர்மலமான அமைதி ஒன்றே உன் மனதில் நிரம்பி வழிகிறது இப்போது. அது தருவதே பிரம்மானந்தம்.  மனம் வாக்கு காயம் எல்லாம் ஒன்றாக திரிகரண சுத்தி  ஆகிவிட்டது.  இது தான் சிம்பிள் வேதாந்தம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *