BAJAGOVINDAM SLOKAS 6 TO 10 J K SIVAN

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 6 – 10

6. बालस्तावत् क्रीडासक्तस्तरुणस्तावत्तरुणीसक्तः। वृद्धस्तावचिन्तासक्तः परे ब्रह्मणि कोऽपि न सक्तः॥ भज ॥
Balasthavat kreedasaktha, Stharunasthavath tharunee saktha, Vrudha staavath chintha magna, Parame brahmani kopi na lagna. (Bhaja Govindam….)
பாலஸ்தாவத் க்ரீடா சக்தா தருணஸ்தாவத் தருணீ சக்தா,வ்ருத்தாஸ்தாவத் சிந்தாசக்தா,பரமே ப்ரஹ்மணி கோபி ந சக்தா

என் சின்ன வயதில் ஷேக்ஸ்பியரின் மனிதனின் ஏழு வாழ்க்கை நிலைகளைப் பற்றி ஆங்கிலத்தில் சென்னை தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீ T N சுந்தரம் அற்புதமாக நடித்து சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. அப்போது கற்றது வெறும் கவிதையின் அர்த்தம். இப்போது புரிவது வாழ்க்கையின் அனுபவ பாடம். ஷேக்ஸ்பியர் எப்போதோ எப்படியோ சங்கரரைத் தெரிந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது.

” ஹே, மானுடா கொஞ்சம் நில்லுடா, உன் வாழ்க்கையைத் திரும்பிப்பார். யாருமே சொல்லவேண்டாம். நன்றாக உனக்கே புரியும். ஒவ்வொருவரும் வாழும்போது எத்தனை விதமான வேஷம் போடுகிறோம் .டயலாக் பேசுகிறோம்.
முதலில் பாலகன். அப்போது மனம் பூரா விளையாட்டில் சென்று விட்டது. வளர்ந்தோம். பெண்கள் நாட்டம் மனதை வாட்டியது. கல்யாணம் பண்ணிவைத்தார்கள். வைத்தியம் பைத்தியத்தை தீர்க்க வில்லை.
வயதாகியது. இப்போது எண்ணம் பூரா வயிற்று வலி, கண், காது, இதயம், நுரையீரல், முதுகு, கால் முட்டி வலி (இப்போது அநேகருக்கு இது தான் ஸ்மரணை) வியாதி, நிறைய கலர் கலராக சின்னதும் பெரியதுமாக மாத்திரைகள், வித வித சீசாக்கள், ஒரு நாளைக்கு ஒரு தரமாவது சித்ரவதை, அதான், ஊசி. உப்பில்லாத சர்க்கரையில்லாத ஆகாரம் ஒரு சித்ரவதை, தண்டனை. வாசலில் சங்கு ஊதும் நேரம் வரப்போகிறதே. இப்போதாவது கொஞ்சம் அந்த பரப்ரம்மத்தை நினையேன். கோவிந்தா என்று வாய் மணக்கச் சொல்லேன். பாடேன். கேளேன். இத்தனை காலம் தான் வேஸ்ட் பண்ணி விட்டாயே. எதை நினைக்கவேண்டுமோ அதை நினைக்காமல் தேவையற்ற வீணான விஷயங்களில் மனதை முழுசாக இழந்து விட்டாயே என்கிறார் சங்கரர்.
ஒரு பரிதாபமான நிலை என்னவென்றால் ஒவ்வொருநாளும் நமது கவனம் எண்ணம் பூராவும் அன்றைய சாப்பாடு, நமக்கு கிடைக்கக் கூடிய ஆதாயம் பிறருக்கு எது எப்படி எவ்வளவு கிடைக்கிறது, அவர்களை பற்றிய வம்பு என்று சுயநல நினைவிலேயே போய்விடுவதால் கோவிந்தனை நினைக்க நேரமே இல்லாமல் போகிறது. இனியாவது நல்ல பிள்ளையாய் சங்கரர் சொல் பேச்சு கேட்போமா?

7. का ते कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः। कस्य त्वं कः कुत आयातस्तत्वं चिन्तय तदिदं भ्रातः॥ भज।। संसारोऽयमतीव विचित्रः।
कस्य त्वं वा कुत अयातः,तत्त्वं चिन्तय तदिह भ्रातः॥8॥
Kaathe kanthaa kasthe puthra, Samsoroya matheeva vichitra Kasya twam ka kutha aayatha, thathwam chinthya yadhidham braatha. (Bhaja Govindam…..)
காதே காந்தா கஸ்தே புத்ர சம்சாரோய மதீவ விசித்ர கஸ்ய தவம் கா குத ஆயாத தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:
”அண்ணன் என்னடா, தம்பி என்னடா அதிசயமான உலகத்திலே . ”என்பது ஒரு சினிமா பாட்டு என்றாலும் ”உலகே மாயம்” எனும் பாட்டைப் போல் ரொம்ப உள் அர்த்தம் கொண்டது.
”ஹே மனசே, கொஞ்சம் யோசிக்கிறாயா? மனைவி யார்? உன்னைக் காட்டிலும் உன் மணி பரிசின் மேல் காதல் கொண்டு இருந்தாளே அவளா? பிள்ளை குட்டி யார்? நீ வளர்த்து படிக்கவைத்து, அவன் வெளியூர் சென்று ஒரு பெண்ணை மணந்து கொண்டு அங்கேயே சாஸ்வதம் என நினைத்து தங்கி, உன்னை ஒரு ”இல்லத்தில்” சேர்த்தானே அவனா? இந்த வாழ்க்கையின் வினோதத்தை என்னவென்று விவரிப்பது?
புதிரான வாழ்க்கையை புதிதாகப் பார். அதெல்லாம் சரி, முதலில் நீ யார்? எங்கிருந்து வந்தாய்?
எங்கே போகிறாய்? இப்படி யோசிப்பதைத் தான் ஆத்ம சிந்தனை என்பார்கள். யோசி. விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தால் கேள்வியிலிருந்து பதில் தானே முளைக்கும். ஒரு விடை தானாகவே கிடைக்கும். எல்லாம் அவன் செயல். ஆட்டுவிக்கிறான் ஆடுகிறேன். கோவிந்தா நீயே கதி. வழி காட்டு வைகுந்தா! கட்டாயம் மனம் நிம்மதி பெற வைப்பான். அது தான் அவன் வேலையே. ஆதி சங்கரரின் அற்புதமான பாடல் தொகுப்பு பஜ கோவிந்தம்.

8. सत्सङ्गत्वे निस्सङ्गत्वं निस्सङ्गत्वे निर्मोहत्वम् । निर्मोहत्वे निश्चलतत्त्वं निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥ ९॥
Satsangathwe nissangathwam, Nissangathwe nirmohathwam, Nirmohathwe nischala thatwam, Nischala tathwe jeevan mukthi. (Bhaja Govindam….)
சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம் நிஸ் சங்கத்வே நிர் மோஹத்வம் நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிச் சலதத்வே ஜீவன் முக்தி :

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி உண்டு. ”உன் நண்பன் யாரென்று காட்டு, நீ எப்படிப்பட்டவன் என்று நான் புட்டு புட்டு வைக்கிறேன்” என்று. நல்லவர்களோடு பழகி சேர்ந்து நல்ல பழக்கங்கள் வந்துவிட்டால் தானா கவே கெட்ட பழக்கங்கள் கெட்ட சகவாசம் எல்லாம் மறைந்து விடும்.

ஒரு காட்டில் ஆட்டுக் கூட்டத்தில் வளர்ந்த சிங்கக் குட்டி ”மே மே” என்று கத்தி புல் தின்றது. பிறகு மற்றொரு சிங்கம் அதை பார்த்து அதன் பூர்வோத்தரம் சிங்கக்குட்டிக்குத் தெரிந்தபோது ஆடாக இதுவரை இருந்த சிங்கம் கர்ஜித்தது. இதை எதற்காக சொல்கிறோம்? சகவாச தோஷம் புரிய.

தீய எண்ணங்கள், பழக்கங்கள் இதுவரை தனது சகவாசத்தால் இருந்த ஒருவன் அது நீங்கும் பட்சத்தில், அவனது நாட்டம் எதன் மேல் செல்லும் ? மண், பெண், பொன் மீதா? இல்லையே. கண் மீது, அது தான், கண்ணன் மீது. பிறகு என்ன? கோவிந்தா உன் திவ்ய நாமத்தில் ஸ்மரணையில் மனம் களித்தால், எனக்கு கிடைப்பது மோக்ஷ சாம்ராஜ்யம் தானே! அப்புறம் ஜீவனுக்கு பிறப்பேது இறப்பேது? சரீரம் இருக்கும்போதே இப்படி சரீர சம்பந்தத்தை விட்டொழிக்க வசதி இருக்கும்போது அதை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டாமா?

9. वयसिगते कः कामविकारः शुष्के नीरे कः कासारः ।क्षीणेवित्ते कः परिवारः ज्ञाते तत्त्वे कः संसारः
Vayasi gathe ka kama vikara, Shushke neere ka kaasaara, Nashte dravye ka parivaara, Gnathe tathwe ka samsaara. (Bhaja Govindam…)
வயசி கதே க: காம விகாரா: ஷ்கே நிரே க: காசார : நாஸ்தே த்ரவ்யே க: பரிவாரோ: னே தத்வே க: சம்சார:

இன்னுமா அறியாமையில் உழல ஆசை உனக்கு? ”ஹே, மானுடா, உன் வயதென்ன? சின்னக்குழந்தையாக இருந்தவன் பையனாகி, வாலிபனாகி, கல்யாணமாகி, குடும்பஸ்தன், அப்பாவாகி, தாத்தாவாகி மூன்றாம் காலாக உதவும் கொம்பில்லாமல் நடக்க முடியாதவனாகி விட்டாயே,கொஞ்சமாவது கவனித்தாயா காலம் எப்படி ஓடுகிறது என்பதை? உன்னை யாராவது இப்போது சீண்டுவார்களா? இனி காமமோ மோகமோ உன் மேல் கொண்டு எந்த ஜீவனாவது உன்னை நெருங்குமா? யோசித்தாயா? இந்த நிலையில் உனக்கு எதற்கு இன்னமும் அந்த பழைய காமம் மோகம், ஆசை, பேராசை எல்லாம்?

எதிரே பார்த்தாயா, என்ன இருக்கிறது? வறண்டு போய் இருக்கிறது பார் ஏரி ? எவ்வளவு நீர் ஓடுகிற ஏரி ஒரு காலத்தில். எத்தனை பேர் நீந்துவார்கள் உன்னோடு அதில். இப்போது வெறும் மணல் திட்டு. பேருக்கு மட்டும் தான் அது கோபாலன் ஏரி . உன்னைப்போல் தான் அதுவும். அதில் ஒருகாலத்தில் நிறைந்து இருந்த நீர் எல்லாம் இப்போது எங்கே காணோமே? வறண்டிருக்கும் அந்த மணல் திட்டில், எந்த பறவை வந்து உட்கார்ந்து மீன் தேடும்? தண்ணீர் குடிக்கும்? நிறைய தாவரம் ஜீவராசிகள் அந்த ஏரியில் ஒருகாலத்தில் நிறைய இருந்தனவே எங்கேப்பா அதெல்லாம்?
உன் கையில் பைசா இருப்பு கரைந்து விட்டதே. எல்லா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களும் மருந்து கடைகளும் இருந்த உன் சொத்தை எல்லாம் பங்கு போட்டுக் கொண்டு கரைத்து விட்டார்களே. ஆனால் இன்னும் உன் வியாதி குறையவில்லையே!
உன்னை சுற்றி இருந்த உன் உறவு பரிவாரங்களை எங்கே காணோம்.? எங்கே அவர்கள் அட்ரஸ் ? இதெல்லாம் எதற்கு ஞாபகமூட்டினேன் தெரியுமா?.
ஞானம் வந்துவிட்டால், உண்மை புரிந்துவிடும் .
எது சாஸ்வதம் என்று அறிந்து விட்டால், இப்போதே எந்த ஆபத்தும் வரும் முன்னரே, உனது சம்சார பந்தங்கள், கவலைகள், பயங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாமே மேலே சொன்னவைகளைப் போலவே விலகிவிடும் இதற்கு மந்திரக்கோல் எது தெரியுமா, அந்த புல்லாங்குழல் ஊதும் வெண்ணைத் திருடன் உன்னை பார்க்கிறான் பார் எதிரே சுவற்றில் அவன் தான். கோவிந்தா, உன் நாமம் ஒன்றே சர்வ வியாதி நிவாரணி. சர்வ உபத்ரவ நாசினி..

10. मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषात्-कालः सर्वम् | मायामयमिदम्-अखिलं हित्वा ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ‖
Maa kuru dhana jana yowana garwam, Harathi nimishoth kaala sarvam,Maamaya midhamakilam hithwa, Brahmapadam
twam pravisa vidhitwa. (Bhaja Govindam……..)
மா குரு தனஜன யவ்வன கர்வம் ஹரதி நிமேஷாத் கால சர்வம் மாயா மயமித மகிலம் ஹித்வா பிரம்மபதம் த்வம் ப்ரவிஷ விதித்வா.

ஆதி சங்கரர் ஒரு பெரிய தீர்க்க தரிசி மட்டுமல்ல, மனோ தத்வ நிபுணன். மனித குணம் எப்படிப் பட்டது, அது என்னவெல்லாம் செய்ய வைக்கும், என்பதை ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே நன்றாக கவனித்து கணித்து அது இன்றும் நம்போன்றோர் குணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது பாருங்கள்.

”ஆறறிவு இருக்கிறது என்று மார் தட்டும் மூடா, கவனமாகக் கேள்! உன் செல்வம், இளமை,கர்வம், பெருமை, பட்டம் பதவி, உறவு பற்றியெல்லாம் எல்லோரிடமும் பீற்றிக்கொள்வாயே , இவை எல்லாமே கால வெள் ளத்தில் ஒரு நிமிஷ நேரத்தில் அடித்து செல்லப்படும் நிலையில்லா வஸ்துக்கள் என்று புரிந்துகொள். சுனாமியில் கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் இழந்தவை என்னென்ன? எவை, இழந்தவர் எத்தனை பேர் யோசித்துப்பார். எல்லாம் மாயை. இருப்பது போல் தோன்றும் இல்லாதவை அவை. நிழலை நிஜம் என்று நம்பி ஏமாறாதே. கானல் நீர் தாகத்துக்கு உதவுமா? சினிமா காட்சி எல்லாமே அதிக பக்ஷம் மூன்று மணி நேரம். அதற்குள் சண்டை, சச்சரவு, காதல், சாதல், தேடல், ஆடல், ஓடல் எல்லாமே முடிந்துவிடுகிறது. நிஜம் மாதிரி நிழல் ஓடுவது அவ்வளவு தான். அப்புறம் வெள்ளையான திரை ஒன்றே மிஞ்சும்.

பிரம்மபதம் ஓன்றே என்றும் சாஸ்வதம் என்று திரும்ப திரும்ப நினைவில் கொள்வாய். கோவிந்தனை மறவாதே. அவனே உற்ற நண்பன். உறவுக்கு கை கொடுப்பான். நிரந்தர வஸ்து. செல்வமும் கூட. அருகே இருப்பவனை மறந்துவிட்டு எங்கோ எவன் பின்னோ ஓடாதே.

சில விஷயங்களை கேள்விப்படும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. அது உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு நமக்கு நேரமில்லை, எண்ணமுமில்லை.. தேவையுமில்லை. அதற்கென்றே தான் சிலர் இருக்கிறார்களே .

முக்கால்வாசி மழை இரவில் தான் பெய்கிறது என்று ஒருவர் சொன்னால், ”இல்லவே இல்லை, அதெப்படி, காலையில் தான் மழையே பெய்ய வாய்ப்பு” என்று வாதாட, அதை நிரூபிக்க இரவெல்லாம் தூங்காமல் விழித்து நிறைய மழையில் நனைந்து மறுப்பதெற்கென்றே சிலர் உலகில் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் வாதாடி ஓய்வதற்குள் இன்னொரு கூட்டம் தயாராகும். ‘யாரய்யா சொன்னது இதை? மழைக்கு என்று தனியாக நேரம் எதுவுமே கிடையாது. எப்ப வேணுமானாலும் பெய்யும்” என்று இதற்கு ஆதரவாக ஆப்பிரிக்காவில் கண்ட நேரத்தில் ஆறுமாசமாக மழை பெய்த விவரங்கள் எல்லாம் தேடி எடுத்துக்கொண்டு வந்து கொட்டு வார்கள்.!.
ஒன்று நிச்சயம். தனி மனிதனின் அபிப்பிராயம் எப்போதும் அவனைப்போலவே மாறுபடும் தன்மை வாய்ந்தது. ஆதிசங்கரர் விஷயத்தில் ஒரு சில சம்பவங்கள் படிப்பதற்கு ருசிகரமாக இருக்கின்றதால் தான் இந்த பீடிகை போடும் விஷயத்துக்கு வருகிறேன். ஏனென்றால் அதையே சிலர் ”அது தப்பான விஷயம்” என்று கூறவும் வாய்ப்புண்டே .
ஆதிசங்கரர் ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்தில் ஒரு யந்திரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதற்கு ஜனாகர்ஷன யந்த்ரம் என்று பெயர். அந்த புண்ய க்ஷேத்ரத்துக்கு அனேக பக்தர்களை வரவழைக்க வைக்கப்பட்ட யந்திரம். அதனால் தான் அங்கு நாம் ரூபாய் நிறைய கொடுத்தும் தரிசனம் செய்ய அப்போதும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தர்ம தரிசன வரிசை வாயில் வரை அனுமார் வாலாக நீளுகிறது. உலகிலேயே அதிகம் பேரால் தரிசிக்கப்படும் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் என்பார்கள். .

திருப்பதியிலும் ஒரு யந்திரம் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார் சங்கரர். அது தனாகர்ஷண யந்த்ரம். பணம் கொட்டோ கொட்டு என்று கொட்ட ஏற்படுத்தப்பட்ட யந்த்ரம். ”போ வெளியே” என்று தெலுங்கில் ஜருகண்டி, என்று பிடித்து தள்ளினாலும் ”கோவிந்தா கோவிந்தா” என்று உரக்க உச்சரித்துக்கொண்டே மற்றவர் காலை மிதித்துகொண்டு கால் கடுக்க பல மணி நேரம் வரிசையில் நின்று ஒரு வினாடி பார்க்க செய்யும் அற்புத தெய்வம் வெங்கடாசலபதி. உலகில் பணம் அதிகம் திரளும் கோவில் திருப்பதி திருமலா வெங்கடேச பெருமாள் கோவில்தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *