AADIPURAM J K SIVAN

ஆடிப் பூரத்தாள்  –                     நங்கநல்லூர் J K  SIVAN
நாளை  ஆடிப்பூரம்.  இன்று உலகில்  ஆண்டாள் என்று பெயர் கொண்ட பெண்கள் அத்தனைபேருக்கும்  நாம காரணமாக விளங்கிய  ஒரு பெண் 7ம் நூற்றாண்டில் பிறந்தாள்.  பிறந்தாளா? கிடைத்தாளா?  எல்லாமே  ஒன்று தான். அன்று  கலியுகத்தில்  98 வதான நள வருஷம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள்.
ஆண்டாள்  எங்கே  கிடைத்தாள்?  விஷ்ணு சித்தர்  என்கிற பெரியாழ்வார் வில்லிப்புத்தூரில்  ஒரு பெரிய நந்தவனம் வைத்து  அதில் துளசி செடிகள் வளர்த்தவர். தினமும்  விடிகாலை குளித்துவிட்டு  ஹரி நாமம் சொல்லியவாறு  துளசி புஷ்பங்கள் எல்லாம் நந்தவனத்தில் பறித்து மாலை தொடுத்து  அருகே  இருக்கும் வடபத்ர சாயி  கோயிலில்  அரங்கனுக்கு  மாலை சூட்டுபவர்.  நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே அன்று ஒரு சிறு குழந்தையின் குரல் கேட்டு ஆச்சர்யமாக  அவளை எடுத்து அணைத்து தாய் போல வளர்த்தார்.  தன் மகளாகவே கருதி “கோதை”( பூமியிலிருந்து  பிறந்தவள்),    என பெயரிட்டு வளர்த்தார். பூமாதேவிக்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?  சிறந்த தமிழறிஞர், விஷ்ணு பக்தர் என்பதால் பாசுரங்கள் சொல்லி கொடுத்தார். வெகு சீக்கிரமே  அவள் தந்தையை மிஞ்சிய தனயளாக வளர்ந்தாள். விடாமல்  பெருமாள் பெருமை,மஹிமை, கம்பீரம், அழகு எல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டதால்  துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல்  ஆண்டாள்   எம்பெருமான் மேல்  ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத
நேரத்தில் அவர் தொடுத்த மாலைகளை  தானே  சூடிக்கொண்டு  கண்ணாடி முன் நின்று ”அரங்கா, நானுனக்கு பொருத்தமானவளா? ” என கேட்பாள். ஆண்டவனுக்கு ஆண்டாள் தானே பொருத்தமானவள் .
மனதளவில் அரங்கனும் ஆண்டாளும் ஒன்றானதை ஆழ்வார்  அறியமாட்டார்.  ஒருநாள் அவள் சூடிக் கொடுத்த  மாலையில்  அவள் தலை முடி ஒன்று இருந்ததால்  ஆலயத்தில் பட்டாச்சாரியார்  இது யாரோ அணிந்தது. வேறு கொண்டுவாருங்கள் என்று மாலையை திருப்பி தந்துவிட்டார்.  ஆழ்வாருக்கு ஆண்டாள் செய்த வேலை இது என்று தெரிந்து அவளைக் கோபித்து வேறு புதிதாக ஒரு மாலை தொடுத்து ஆண்டவனுக்கு சாற்ற  எடுத்துச் சென்றார். அன்று கனவில்  அரங்கன்  ஆழ்வாரிடம் ”ஆண்டாள்  சூடிய  மாலை மட்டுமே  மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” எனக்  கூறினான். அன்று முதல்  ஆழ்வாருக்கு ஆண்டாள் மகளல்ல. அவளை பூமாதேவியாகவே  மதித்து போற்றினார்.  

பத்து வயதானால்  மணப்பருவம்  அக்காலத்தில்.   ஆகவே ஆண்டாளுக்கு யாரை மணாளனாக மணமுடிப்பது?  உனக்கு யார்  அம்மா வேண்டும் ? என்று கேட்டார் ஆழ்வார்.
மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறினாள் . அதாவது எந்த மனிதனையும்  நான் கணவனாக ஏற்க மாட்டேன். அவர்களை பற்றி என்னிடம் பேசினால் உயிரோடு இருக்கமாட்டேன்.”.”சரி அப்படியென்றால் இந்த 108 திவ்ய தேசங்களில்  வாழும் எம்பிரான்களில் உனக்கு  யார்  அம்மா  வேண்டும்?””அவர்களை பற்றி எல்லாம் சொல்லுங்கள்? நான் பதில் சொல்கிறேன்” என்றாள்  ஆண்டாள்.
ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்தாள். அந்த நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்
கண்டாள்.எப்படி  ஆண்டாள் அரங்கனை மணமுடிக்க முடியும்?  என்ற கவலை ஆழ்வாருக்கு.அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்  திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்  கைத்தலம் பற்றுவோம்.” என்று சொன்னான்..
அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்ரம், சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வாரைப் வணங்கி  ஆண்டாளை அழைத்து வர அரங்கன் கட்டளையிட்டதாக  சொன்னார்கள்.
ஆழ்வாரும் மற்றோரும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த  சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை
பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”  என்று பெரிய  முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை  அடைந்தனர்.  பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் பட்டுச் சேலை யணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது
கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அதிக பக்ஷம் அவளுக்கு அப்போது வயது பதினைந்து.
ஆண்டாள்  மார்கழி நீராடி  மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாச்சியார் திருமொழி  ஆகிய பிரபந்தங்களைப் பாடி நமக்கு அருளியவள்..
வில்லிப்புத்தூர்  கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்  சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர். என்னுடைய ”பாவையும் பரமனும்”  புத்தகத்தில் ஆண்டாள் சரித்திரத்தை திருப்பவையோடு இணைத்து சொல்லி இருக்கிறேன். படிக்க பிடிக்குமா?  அணுக: 9840279080

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *