ADHITHYA HRIDHAYAM J K SIVAN


சூர்யா உனக்கு  நமஸ்காரம்  —   நங்கநல்லூர்   J  K  SIVAN
ஆதித்ய  ஹ்ருதயம்

யாரையாவது ஒருவரை நான்  ஆஹா  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான். அவரைப் போல் எவரும்  பாக்யசாலி  இல்லை.   ப்ரம்ம ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள் அருகே அதிக நேரம் வாழ்க்கையில்  கழித்தவர்  வேறு எவரும் இல்லை.  நூறு வருஷங்களுக்கு அப்புறம்  நம்மைப் போன்றவர்களுக்கு  அதால் எவ்வளவு நற்பயன் கிடைத்திருக்கிறது.!  ஸ்ரீ  சாஸ்திரிகள் அல்லவோ  ஸ்வாமிகளோடு தனது அனுபவத்தை நமக்கு    காமிராவில் படம் பிடித்தது போல்  காட்டுகிறார்.  எவ்வளவு பக்தர்கள் மனம் அதனால் நிறைந்திருக்கிறது.  இது  எல்லாமே  தெய்வ சங்கல்பம் தான்.  அவனன்றி ஓர்  அணுவும் அசையாது.  (என் புத்தகம்  ”ஒரு அற்புத ஞானி”  முழுக்க முழுக்க சேஷாத்திரி ஸ்வாமிகள் அனுபவம் பற்றி  சாஸ்திரிகள் சொன்ன விஷயங்கள் தான். வேண்டுபவர்கள்  அணுகவும். தருகிறேன்.விலை கிடையாது. நன்கொடை மட்டுமே  எங்கள் டிரஸ்ட் பெற்று இத்தகைய புத்தகங்கள் வெளியிடுகிறது.  ஜே கே சிவன் 9840279080 வாட்ஸ்சப் இதே நம்பர் தான்.)

சேஷாத்ரி ஸ்வாமிகளே   ஸாஸ்திரிகளை  இதற்கு பயன் படுத்த  அனுக்ரஹம் பண்ணி   இருக்கலாம். இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை.

மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள்  அவ்வப்போது  சில பக்தர்களுக்கு  ஒரு சில  குட்டி குட்டி  வார்த்தைகள்  சொல்வது தான் உபதேசம்.  எத்தனையோ பேர்  அதை லக்ஷியம் செய்யவில்லை.  ஏதோ பைத்தியக்காரன் பேத்தல் என்று சிரித்து விட்டு ஹோட்டலில்  மசால் வடை சாப்பிட போனவர்கள் தான் முட்டாள்கள்.  புதையல் கிடைத்தும் பிச்சை எடுத்தவர்கள்.

நன்றாக யோசித்தால், பின்பற்றினால்,  ஸ்வாமிகளின்  ஒரு சில  வார்த்தைகள் எவ்வளவு அதீத சக்தி கொண்டவை என்று   புலப்படும்.  ஓரிரு  உதாரணங்கள்  சொல்கிறேன்.
ஒருவருக்கு  அவர் சொன்ன உபதேசம்:

”டேய் , என்ன யோசிக்கிறே?     நீ  இப்போதி லிருந்து   ”ராம ராம மஹா பாஹோ ” ன்னு  அடிக்கடி  சொல்லிண்டே வா.   மோக்ஷம் உடனே  உனக்கு ”.    இதென்ன  பெரிய உபதேசமா?   ஆமாம்.  இது  ஏதோ உளறல் இல்லை.   ஆதித்ய ஹ்ருதயத்தில் வரும் வார்த்தை.    அகஸ்திய  மகரிஷி   ஸ்ரீ   ராமனுக்கு உபதேசித்த  வாக்கு. ராமனுக்கு  ராவணனைக்  கொல்லும் யுக்தி சக்தி இதனால்  அமோகமாக  கிடைத்தது.   இந்த ஸ்லோகங்களை நாமும் சொல்லி வருவதால்  நமது தீமைகள்  அழிந்து  மோக்ஷ சாதகம் என்கிறார் பூடகமாக சேஷாத்ரி  ஸ்வாமிகள்.

”ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் பண்ணு . உதய காலத்திலேயே  அரை நிமிஷமாவது உட்கார்ந்து சொல்லு. ராக்ஷஸன் சாவான்”    என்று ஒருவருக்கு  உபதேசித்தார் ஸ்வாமிகள்.  ராக்ஷஸன்  என்றது நமது புலன்கள் அளிக்கும் தொந்தரவுகளான  காமம், கோபம்,  பேராசை, பொறாமை, த்வேஷம், சுயநலம்  போன்ற தீய எண்ணங்கள்.  குழுமணி நாராயண சாஸ்திரி  முடிந்தவரை  சேஷாத்ரி ஸ்வாமிகளின் நிழலாக  அவரை தொடர்ந்தவர்..

மத்தியானம் உச்சி வெயில் நேரத்தில் ஒருநாள்  மேலே  சொன்ன  ஆதித்ய  ஹ்ருதயம் பற்றி   சாஸ்திரி களுக்கு  ஸ்வாமிகள் உபதேசித்தார். சாஸ்திரி கீழே விழுந்து வணங்கி எழுவதற்குள் சுவாமியைக் காணோம்.  அவர்   சடைச்சி வீட்டு திண்ணைக்கு ஓடிவிட்டார்.    ஸ்வாமிகள்  நமது மனத்தில் உள்ள மலங்கள் விலகி பரிசுத்தமடையும் என்பதைத் தான்   ‘ ராக்ஷஸன் சாவான்’  என்கிறார்.

இன்னொருவரிடம் ஸ்வாமிகள் சொன்ன  உபதேச வார்த்தை என்ன தெரியுமா?

‘நீ  சுந்தர காண்டம் வாசி. ஞானம் பிறக்கிறதா இல்லையா பார் ”   . இதற்கு அர்த்தம் சொல்லவேண்டாம். சுந்தர காண்டத்தின் மஹிமை தெரியாதவர் யார்?.

இன்னொரு  பக்தருக்கு  ஸ்வாமிகள்  வழங்கிய  உபதேசம்
”நீ  எது தேடியும்  பிரயோஜனம் இல்லை. முதலில் ஆசையை ஒழிக்கணும் ”. திடீரென்று  உபதேசம் செய்தார்  ஸ்வாமிகள்.   அது  இராமாயண சம்பூ காவ்யத்தில் அகஸ்திய முனிவரை வர்ணிக்கும் ஸ்லோகம்.  அதை ஸ்வாமிகள் நினைவு கூர்ந்து சொன்னது:
”பரித்யக்த ஸர்வாசமபி  உபகத தக்ஷிணாசம்”   அதாவது,  அகஸ்தியர்  நான்கு திசைகளில் மூன்றை விட்டு தெற்கு திசை (தக்ஷிணம்) நோக்கி வந்தவர்.   இன்னொரு அர்த்தம்   எல்லா ஆசைகளையும் விட்டொழித்தாலும்  ”தக்ஷிணை” யாசகம் வாங்குபவர் என்று ஒரு சிலேடை. அது முக்கியமில்லை.

ஸ்வாமிகள்  ” இந்த ஸ்லோகத்தை சொல்லி நீங்கள் எல்லோரும்  நன்றாக அப்யாசம் பண்ண வேண்டும்”  என்று சொன்னது   ‘ உணவு பிரதானம் இல்லை, ஆசை வேண்டாம். இருப்பதைக்  கொண்டு திருப்தியோடு  சந்தோஷமாக இரு. பகவான் நாமாவைச்  சொல்”  என்று உணர்த்துவதற்காகவே.

ஒரு முறை  தனது கட்டைவிரலை ச் சுண்டி விட்டு ”ராமன் எங்கேயும் வியாபித்திருக்கிறான். அப்படி இருப்பதால் ”ராம ராம ராம ‘ என்று  சதா விடாமல் ஜெபிக்கவேண்டும்”  என உபதேசித்தார்.

ஸ்வாமிகள் இதை நிறைய பேரிடம் சொல்ல காரணம்  கலியுகத்தில் இதை விட சிறந்த மோக்ஷ சாதனம் கிடையாது.  அதனால் தான் ”சதா” என்கிறார். இதைச் சொல்ல  கால தேச நியமம் ஒன்றும் வேண்டாம்.

ஒருநாள் சாஸ்திரிகளிடம்  ”  நாராயணா,  நீ வா  என்னோடு  இளையனார் கோவில் மண்டபத்தில் ராத்திரி படுத்துக்கோ ” என்று சொல்லி  ஸ்வாமிகளின்  திருவடிகளை  சாஸ்திரிகள் தனது சிரத்தின் மீது தாங்கி படுத்திருக்கும்போது” மேற்படி உபதேசம் அவருக்கும்  கிடைத்தது.

இனி  ஆதித்ய  ஹ்ருதயம் ஸ்லோகங்களை  அறிவோம்.
ராமன் மனிதனாக அவதரித்ததே   தேவர்களின் குறையை நிவர்த்தி செய்ய, அதாவது கொடிய செயல்கள் புரிந்து துன்புறுத்திய   ராக்ஷஸர்களை அழிக்க.  எவராலும் வெல்லவோ, கொல்லவோ  முடியாத வரங்களை பெற்று  ராக்ஷர்களை பலம் மிக்கவர்களாக  மூன்று லோகங்களையும்  தமது அதிகாரத்தில் வைத்து  வாட்டி விதைத்தார்கள்.

அதில் முக்கியமானவன்  த்ரேதா யுகத்தில்  இருந்த ராவணேஸ்வரன் என்ற சிவபக்த ராக்ஷஸன்.  பராக்கிரமம் மிகுந்த அரக்கன் ராவணனை வதம் செய்ய ராமன்  மனிதனாக அவதரிக்க காரணம் ராவணன் கேட்ட வரம்.  ராவணனை அழிக்க  ராமனும் லக்ஷ்மணனும் இலங்கை செல்கிறார்கள்.. தனி மனிதனாக  சில வானரர்கள் உதவியோடு ராமன் ராவணனை எதிர்கொள்ள  தயாராகிவிட்டான்.

அந்த நேரத்தில் அகஸ்திய மகரிஷி ராமனை சந்திக்கிறார். ராமனுக்கு   ராவணனை வெல்ல  சூரியனின் அனுக்ரஹம் கிடைக்க மந்திரம் உபதேசிக்கிறார். விஞ்ஞான காலத்தில் நாம் வாழ்கிறோம். சூரிய ஒளியின் மஹத்வம் நமக்கு தெரியும். அதுவே உலகத்தில் நமது ஜீவாதார சக்தி என்று புரியும். அதை உணர்வதற் காகவாவது இதை படிப்போம். அகஸ்தியர் கூறும் மந்திரத்தின் பொருள் அறிவோம். ராமன் அதால் பயன் பெற்றதைப் போல் நாமும் தினமும் இதை உச்சரித்து பயனடைய ஒரு காசும் செலவில்லை.

जयतु जयतु सूर्यं सप्तलोकैकदीपं किरणशमितपाप क्लेश द्ःखस्य नाशम्। (i) अरुणकिरण गम्यं आदिं आदित्यमूर्तिं सकल भुवनवन्द्यं भास्करं तं नमामि॥ (ii)
jayathu jayathu soorya saptha lokaika deepam kirana samitha papam klesa dukhasya nasam
aruna nigama gamyam chadhi adithya moorthim sakala bhuvana vandhyam, bhaskaram tham namami
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் | கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஸம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் | சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

இது ஒரு அற்புதமான  சூர்ய த்யான ஸ்லோகம்.
ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹ  லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்  கதிர்கள்   சகல துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை   ஆட்கொண்டு  உயிர் வாழ வைக்கின்றன.   நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.   சூரிய பகவானே. உனக்கு ஜெயம், ஜெயம், ஜெயம். உன்னுடைய கதிர்கள் படும் இடம் எல்லாம் சகல பாபங்களும் தொலையும். வலி தீரும். துயரம் துன்பம் எல்லாமே காணாமல் போகும், வேதங்கள் உன்னை அடைய வழிகாட்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நீ ஒருவனே தேவன் சூரியநாராயணன். சர்வலோகமும் உன்னை வழிபடுகிறதே ஆதித்ய. சூர்ய நாராயணா. என்னுடைய நமஸ்காரங்களையும் அவற்றோடு சேர்த்து உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன். சூரியா உனக்கு  நமஸ்காரம். எனது நாள் உன்னருளால் இன்று நன்றாக துவங்கட்டும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *