WHO WAS THE FOURTH PERSON? J K SIVAN

பெண்ணையாற்றங்கரையில்  …நங்கநல்லூர்  J K  SIVAN
நாலாம் ஆள்  யார்?

சில வருஷங்களுக்கு முன்  ஒரு சிவராத்திரி யாத்திரை யின் போது   சில  ஆலயங்களுக்கு சென்றோம்.   மஹா சிவராத்திரி வைபவம் முடிந்து சென்னை திரும்பும் வழியில் திருக்கோவலூருக்குள்  நுழைந்தோம்.  கண்ணில் முதலில் தென்பட்டது  தபோவனம் ஆஸ்ரமம், ஸ்ரீ  ஞானானந்தா இன்னும்  அங்கே சுவாசிக்கப் படுகிறார். மணக்கிறார். எங்கும் அவர் இனிய  மலர்ந்த முகம் நமக்கு தைரியம் கொடுக்கிறது. மிகப்பெரிய  வளாகம். நிறைய குழந்தைகள் காணப் பட்டனர்.      அங்கே  பெண்ணையாற்றங்கரையில் இன்னொரு  அழகினை சிவாலயம். அரகண்ட நல்லூர்  சிவன்.  நேரமாகிவிட்டதால் ஆலயம் செல்ல முடியவில்லை. அதே போல் தான் திருவிக்ரமன் ஆலயம். ஒரு சிறந்த திவ்ய தேசம்.  திருக்கோவலூர்  த்ரிவிக்ரமனை தரிசிக்க முடியவில்லையே  என்று  மனதில் அவனை  நினைத்து பிரார்த்தித்தேன் . ஒரு காட்சி  மனதில் தோன்றியது.  அடிக்கடி நினைத்துக் கொள்வேன். எழுதுவேன். இதோ மறுபடியும் சொல்கிறேன்.

திருக்கோவலூருக்கு  எனக்கு முன்  பல நூற்றாண்டுகளுக்கு முன்   ஒருவர் சென்றார். காரில்   அல்ல.நடந்தே  எங்கும் சென்ற ஒரு முதியவர்.  காஞ்சிபுரத்திலிருந்து வழியில் பல  பெருமாள்  கோவில்களுக்குச் சென்று கொண்டே திருக்கோவலூர்  வந்து சேர்ந்தவர் அப்போது மாரிக் காலம்.   சாயந்திர நேரம்.  எப்போதும்  இருட்டிக்கொண்டே  இருந்த வானம்  இடியும்   மின்னலும் சேர்ந்து  தாக்கியதால்  அந்த  சாயங்கால நேரமே  ராத்ரியாகிவிட்டது.   கும்மிருட்டு.  காற்று  வேறு சுழன்று சுழன்று  வேகமாக வீசியதில்  குளிர்  நடுக்கம்.  விளக்கொளி எங்குமே இல்லை.  மழை வலுத்தது.   அங்கே  நடந்து வந்து சேர்ந்த முதியவர்    ஒரு ஞானி.  பரம  வைஷ்ணவர். பொய்கை ஆழ்வார்  என்று பெயர் கொண்டவர்.  திரிவிக்ரமன்  மேல்  அடங்கா  அன்பும் பக்தியும்  கண்டு அவனைத் தரிசிக்க  அந்த ஊருக்கு வந்தவர்.  மழை பெய்து வலுத்தது.  எங்காவது ஒதுங்க இடம் தேடியவர் கண்ணில்   யார் வீட்டு   வாசலிலோ   இருந்த  ஒரு சிறு  திண்ணை கண்ணில் பட்டது.  சிறு திண்ணை தான்  எனினும் சந்தோஷமாக அதில்   தஞ்சம்  அடைந்தார்.  ஒருவர்  படுக்க மட்டுமே  அந்த  திண்ணையில்  இடம் இருந்தது.
திருமாலைத் துதித்த வாறே கால் நீட்டி  படுத்தார் பொய்கை ஆழ்வார்.  நேரம்  நழுவியது.

மழையில் நனைந்தவாறே  எங்கிருந்தோ  மற்றொருவர்  அங்கே   வேகமாக வந்து  சேர்ந்தார்.   ஆச்சர்யமாக அவரும்  அந்த ஊருக்கு   பெருமாள் தரிசனத்துக்கு  வந்தவர்.  பூதத்தாழ்வார்  என்ற பெயர் கொண்டவர்.  மழைக்கு ஒதுங்க  இந்த  திண்ணையையேவா   நோக்கி ஓடி  வரவேண்டும்? எல்லாம்  தெய்வ சங்கல்பம். யாரென்று தெரியாவிட்டாலும் படுத்திருந்த  பொய்கை ஆழ்வார்  எழுந்திருந்து  அவருக்கும்   உட்கார  இடம்  அளித்தார். இருவர்  தாராளமாக அந்த சின்ன திண்ணையில்  அமர முடிந்தது.
இது  என்ன அதிசயம்? இன்று   இங்கே என்ன  நடக்கிறது?
பேயாழ்வாரும்  அதே  சமயம்  அங்கே வந்து சேர்ந்தார். அவரும்  திருக்கோவலூர்   திரிவிக்கிரமனை  தரிசனம் பண்ண அங்கே   வந்தவர்.    மழையினின்றும் தப்ப அதே  திண்ணையையே  நம்பி வந்தார்.   அந்த சின்ன  திண்ணையில் உட்கார மூவருக்கும் இடம் போதாது என்பதால்   மூவருக்கும்   நிற்க  இடம் இருந்தது.  மழையோ விடாமல் பெய்தது.காரிருள் சூழ்ந்து விட்டது. விளக்குகள் தெருவில் இல்லாத  காலம்.  அந்தச்  சிறு திண்ணையில்.  மழை விடும் வரை  நிற்கலாம்  என்று  மூவரும்  நின்று  கொண்டே இருந்தனர்.
அடாது  இடித்து விடாது பெய்தது மழை.   இருள் நன்றாகவே  கவ்வி  இருந்ததில்  ஒருவரை  ஒருவர் முகம்  பார்த்து அறிந்து கொள்ள இயலவில்லை. கும்மிருட்டு.    ஆச்சர்யமாக  அந்த   மூவருமே வைணவ ஆழ்வார்கள் அல்லவா?.  மாரியிலும்  மாலவனையே காண்பவர்கள் ஆயிற்றே.  ஆழி மழைக் கண்ணனை  அந்த மழையில்  கண்டு புளகாங்கித்து  பாட  ஆரம்பித்தார்கள் மூவரும். ஏதோ ஒரு  நெருடல். மற்று மோர் ஆசாமியும்  நெருக்கியடித்துக்  கொண்டு அவர்களொரு  நான்காவதாக அங்கு நிற்கின்றாற் போல் தோன்றியது. ஆனால் யாரும்  அவர்களை அணுகி  இடம் கேட்கவில்லையே?  அந்த நாலாவது ஆசாமி  யாராக இருக்கும்?  ஒருவரும் அங்கு  வரவுமில்லை,   குரலும்  கேட்கவில்லை. மூன்று பேருக்கு  மேல் நிற்கக்கூட  முடியாத  அந்த  சிறு  இடத்தில்  எப்படி புதிதாக  நாலாவது ஆள் வந்து அவர்களோடு நிற்கிறான்?   இருட்டில் ஒன்றும்  புரியவில்லை. யார் என்று ஒருவர்   மற்றொருவரை  அறியமுடியாத  இருள்.  ஒருவேளை பிரமையோ? வெளிச்சம் இருந்தால் நன்றாக இருக்குமே. விளக்குக்கு எங்கே போவது?  எண்ணெய்,  திரிக்கு எங்கே போவது?

எண்ணத்தில்  இது  தோன்றினாலும் மனத்திலே அந்த மாயவன் குடிகொண்டதால்  முதலில்  பொய்கை ஆழ்வாருக்கு  ஒரு பாசுரம் தோன்றி லயித்துப்  பாடினார்.

”வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே  சூட்டினேன் சொல் மாலை
இடராழி  நீங்குகவே என்று”

 அவற்றுக்கு  தோன்றிய  கற்பனை இது:  ரசியுங்கள்: இந்த  மாபெரும்  பூமண்டலத்தையே   ஒரு பெரிய  ஒரு  அகலாக்கி,  அதைச்  சூழ்ந்த சமுத்ரங்களின் நீரெல்லாம்  தீபத்துக்கு நெய்யாக்கி  அதால்  அந்தப் பெரிய  அகலை நிரப்பி,  அந்த   அகலின் தீபமாக   சூரியனே ஒளி  வீச, அந்த தீபத்தால்  சங்கு சக்ரதாரி  ஸ்ரீமன் நாராயணனுக்கு  தீபாராதனை செய்து  ”துன்பக்கடலிலிருந்து, சம்சார  சாகரத்திலிருந்து,  என்னை மீட்பாய்” என்று  வேண்டத்  தோன்றியது பொய்கை ஆழ்வாருக்கு.   அற்புதமாக  பாடிவிட்டார்  பொய்கை ஆழ்வார்.
இந்த  மாபெரும் தீப ஒளியிலும் அந்த  நான்காவது  ஆசாமி  புலப்படவில்லை அவர்களுக்கு.

இதைப் பார்த்த  கேட்ட  பூதத்தாழ்வாருக்கு  ஆனந்தம் பொறுத்தது.  அவருக்குள்ளும்  ஒரு  ஆர்வம்  பிறந்தது.  அவர்  ஒரு விளக்குப்  பாசுரம்  இயற்றிப் பாடினார்.

 ”அன்பே தகளியாய்  ஆர்வமே  நெய்யாக,
இன்புறு சிந்தை இது  திரியாக
நன்புருகி  ஞானச்சுடர் விளக்கேற்றினேன்  நாரணர்க்கே
ஞானத் தமிழ்  புரிந்த நான்.  

பூதத்தாழ்வார்   கொஞ்சம்  வேறு மாதிரியாக யோசித்தார்.  ஏன்?   என்   நாராயணனின் மேல்  எனக்கிருக்கும்  அன்பையே அகலாக்குக்கிறேனே.   அவன் புகழ் பாடும், கேட்கும் படிக்கும்  ஆர்வத்தையே  நெய்யாக்கி அதை அகலில் நிரப்பி,  என் மனத்தையே  திரியாக்கி அந்த விளக்கின் தீபத்தை  நாராயணனுக்கே  ஆரத்தியாகக்  காட்டி, வணங்கினால்  என்ன? என்  பாசுரத்தையே நைவேத்யமாக  கொடுத்தால்…”?ஆஹா  பூதா, உனக்கு நீயே  நிகர்.  அசாத்தியமான  கற்பனை, பக்தி வெள்ளம்.

இந்த  இரு ஆழ்வார்களின் பக்திப் பாசுரம் அவர்களது ”அக’ தீப  ஒளி மெதுவாக  அங்கிருந்த  நான்காவது  ஆளைக்  காட்டிக் கொடுத்து விட்டது. அது யார்என்று முதலில் பார்த்தவர்  மூன்றாவதாக நின்றுகொண்டிருந்த  பேயாழ்வார்.    

இது என்ன  ஆச்சர்யம்! மற்ற ரெண்டு  பேருக்கு கிடைக்காத  அதிர்ஷ்டம்  அவருக்கு முதலில் கிடைத்தது. அவர் தான் அந்த நாலாவது ஆள்  யார் என்று   பார்த்தவர். அந்த க்ஷணமே  பேயாழ்வார்   வாயிலிருந்து  ஒரு  பாசுரம்   அமுதமென புறப்பட்டது.  அதில் விளக்குகிறார்  யார்  அந்த  நான்காவதாக அவர்களுடன் நின்றவர்  என்று.  

திருக்கண்டேன்  பொன் மேனி  கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று
” தெய்வமே உன் தரிசனம் கண்டேன்.  உன் திருமேனியைக் கண் குளிரக் கண்டேன்.  நீலமேக சியாமள வண்ணா  நினைக்  கண்டேன். பொன்னையும்  பழிக்கும்  திவ்ய ஒளி    படைத்த உன் திரு முகம் கண்டேன்.  பளபளக்கும்  உன்   சுதர்சன சக்ரம்  கண்ணுக்குத் தெரிகிறதே. மற்றொரு கரத்தை  அலங்கரிக்கும்  பால்  நிற பாஞ்சஜன்ய சங்காயுதம் தரிசித்தேன். இன்று  என்  வாழ்நாள்  மகத்வமானது. புனிதமடைந்தேன். என்னைப்  பறிகொடுத்தேன்  புண்ணியா   உன்னடி என் என் மனத்தே  வைத்து” என்று  பரவசமானார்.

பரந்தாமனுக்கு  பக்தனைப் பிடிக்கும்.   அவன்  மனம் கனிந்து  பாடினால் ரொம்ப பிடிக்கும். பாகும் தோற்கும் இனிமை நிறைந்த  பாசுரத்தையே  இயற்றிய  ஆழ்வார்  என்றால் ரொம்ப ரொம்ப  பிடிக்கும். ஒன்றுக்கு  மூன்று   ஆழ்வார்கள்  ஒன்றாக அபூர்வமாக   சேர்ந்து  இருக்கும் இடம் என்றால் பரமனின் சதோஷத்துக்கு  கேட்கவா வேண்டும்.  மழையையே  லக்ஷ்யம் செய்யாமல்,   அந்தச்  சிறு  திண்ணை  இடமே  தான்  இருக்கும்  வைகுண்டமாகக் கருதி அவர்கள் சமீபத்தில்  ஆனந்தமாக  நிற்கப்   பிடிக்காதா என்ன  அந்த   நாராயணனுக்கு? .    தன்னைத்   தரிசிக்க  அவர்கள்  வருவதற்கு  முன் தானே  அவர்களைத் ”தரிசிக்க” மூவுலகும்  ஈரடியால்  அளந்த அந்த  திரிவிக்ரமன்   ”திரி”  ஆழ்வார்களைச்   சந்திக்க தானே  அங்கு  இருட்டில்  வந்து  அவர்களுடன் திண்ணையில்  நின்றான்.

இது  கதையென்று கொள்ள வேண்டாம்.   தூய பக்திக்கு மாயவன்  எப்படி  அடிமையாகிறான்  என்று  புரிந்து கொள்ள இது உதவினால் போதும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *