THAI AMAVASYA J K SIVAN

 

தை அமாவாசை –  நங்கநல்லூர்  J K  SIVAN

இன்று  ரொம்ப ஸ்ரேஷ்டமான  தை அமாவாசை.
மொத்தத்தில் அமாவாசை  நான்கு உண்டு. சாதாரண  அமாவாசையை  விட  மற்ற   மூன்று  அமாவாசைகள்  இருக்கிறதே அவை   ரொம்ப விசேஷமானவை. ஒன்று  ஆடி அமாவாசை.   அன்று சந்திரனும் சூரியனும் கடக ராசியை ஆக்ரமிக் கிறார்கள். மிகவும் முக்கியமான நாள் இது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்  விசேஷமான அமாவாசை.
வருஷா வருஷம் பலர்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடு வார்கள்.  லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது ஒரு கண் கொள்ளாக்  காட்சி. என்னால்  மேலே  ஏறமுடியாமல்  மனதில் ஆசையை  தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.

ரெண்டாவது முக்ய அமாவாசை  தை  அமாவாசை.இதுவும்    ஹிந்துக்களுக்கு  ஒரு  சிறப்பு வாய்ந்த அமாவாசை.  அமாவாசை,  க்ரஹணம்,  மாச பிறப்பு,  ஸ்ராத்த திதி   என்று  சில  முக்ய  தினங்களில் விடாமல்   மறைந்த முன்னோர்களை நினைத்து, துதித்து, அவர்களுக்கு எள்ளும் ஜலமும் அர்பணிப்பது தான்  தர்ப்பணம். ஸ்தூல சரீரத்தை இழந்து அவர்கள் பித்ருலோகத்தில்  சூக்ஷ்ம சரீரத்துடன்  இருக்கும் அவர்கள்  நம்மைக் காண  வரும்போது அவரக்ளை நாம் காண இயலாது. அவர்களது ஆத்ம சாந்திக்கு  எள்ளும் ஜலமும் தான் கொடுக்க முடியும்.   சில பிராமணர்களை அழைத்து  அவர்கள் ரூபத்தில் பித்ருக்கள் வருவதாக பாவித்து  உணவளித்து வணங்குவது ஆத்ம திருப்திக்கு தான்.  தர்ப்பணம் பண்ணும்போது பித்ருக்களை  எதிரே   தர்ப்பைப் புல்லில்  அவர்களை  வரவழைத்து இருக்கச்செய்வது  தான் ஆவாஹனம்.    தென்புலத்தார் என்பதால் தர்ப்பை நுனி தெற்கு நோக்கி இருக்குமாறு  தாம்பாளத்தில் வைத்து  தர்ப்பணம் செய்து ஆசி பெறுகிறோம். 

 

தர்ப்பணம் பண்ணும்போது ,  சில தர்ப்பைகளை  கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைத்து விட்டு  தர்ப்பைகளை ஓரமாக  வடக்கு பக்கம் வைக்கிறோம்.


”அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை”  என்று சொல்வதன் அர்த்தம்;
”ஹே, யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால்  வந்து தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு  இது தக்க இடம்”.

”அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன”

—- பூணலை இடப்  பக்கமாக அணிந்துகொண்டு தான் பித்ரு தர்ப்பணம் செய்கிறோம். கருப்பு எள் தான் உபயோகம்.  அதை கொஞ்சம் எடுத்து  வலது கட்டை விரல்  ஆள்காட்டி விரல் ரெண்டுக்கும் இடையே,  இடுக்கு வழியாக  ஜலத்தோடு இறைக் கிறோம்.இதன் மூலம்  அஸுரர், ராக்ஷசர், பிஶாசர்  ஆகியோர்   நாம் செய்கிற   பித்ரு கர்மாவுக்கு  இடைஞ்சல் செய்யாமல்  இந்த இடத்தை விட்டு   வேறே எங்கோ  போகிறார்கள்..

”அ பவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசி: பூர் புவஸ்ஸுவோ பூர் புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ”

” மஹா விஷ்ணுவை  ஸ்மரித்து  நான்  தெளிக்கும் இந்த ஜலம் இந்த இடத்தை  புனிதமாக்கட்டும்.”மனது ஒருமுகப்பட்டு பித்ருக்களின் உருவ ஞாபகம் மனதில் தோன்றி  வாய் மந்திரத்தை சொல்கிறது.

”ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச”

”என்  பிரியமான   பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்  கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.

பித்ரு தர்ப்பணம் பணம் கொடுக்க காசி, கயா க்ஷேத்திரங்களுக்கு  எல்லோராலும் போக  முடியாதே .மாசா மாசம் அமாவாசை யன்று  உள்ளூரில் உள்ள புண்ணிய தலங்களுக்காக  செல்வோம். பித்ரு  தோஷம் நீங்கும்.

அமாவாசை  தர்ப்பணம்  பண்ண சில  முக்ய  ஸ்தலங்கள் பற்றி  கொஞ்சம் சொல்கிறேன்:

திருபுவனத்தில்   வைகை நதியில் கரைக்கப்பட்ட அஸ்தி சாம்பல்  பூவாக மாறியதால், சிவனுக்கு இங்கே   ஸ்ரீபூவனநாதர், ஸ்ரீபுஷ்பவனநாதர் என பெயர்.அம்பாள்  சௌந்தர்ய நாயகி.வடகிழக்காக  உள்ள  ஆலயம் ல் எல்லா நாளுமே இங்கே பித்ரு காரியம் செய்கிறார்கள்.  திருபுவனத்தில்  வசித்து,  தனது  தந்தையின் ஈமக் கடன்களைச் செய்ய    அஸ்தியோடு காசிக்குப்  போக  விரும்பிய ஒரு மகன்  வழிச் செலவுக்குக் காசு இல்லாமல் வருந்த  அவன்  கனவில் தோன்றிய பரமேஸ்வரன்  ”காசிக்கு போக முடியவில்லையே என வருந்தாதே,  இதோ இங்கேயே  ஆற்றில் உன் தந்தையின் அஸ்தியைக் கரைத்து, பித்ரு தர்ப்பணம் பானு. காசியில் பண்ணிய பலன் உண்டு” என்கிறார்.   மகன்  சந்தோஷமாக  அருகே  உள்ள  நதிக் கரைக்குச் சென்று, பித்ரு தர்ப்பணம் பண்ணி  அஸ்தியை  நீரில் கரைத்தபோது அஸ்தி நறுமணம் கமழும் பூக்களாக மாறியது.  பித்ருக்கள் ஆசியும் கிடைத்தது.  இது திருபுவனம் ஸ்தலபுராண விஷயம்.

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தூரம்.பூந்தோட்டம் கிராமம் . அருமையான  சரஸ்வதி கோயில்  உள்ள ஸ்தலம். அங்கிருந்து  4 கி.மீ. தொலைவில் திலதர்ப்பணபுரி. இப்போது செதலப்பதி என்றால் தான் வழி காட்டுவார்கள். இங்கே  விநாயகருக்கு  மனித முகம்  ஒரு அதிசயம். ஆதி விநாயகர்.  தர்ப்பணம் செய்ய உகந்த ஸ்தலம்.  பெற்றோர் ஆசியுடன்  முக்தி பெறலாம். ஆகவே  சிவனுக்கு இங்கே  முக்தீஸ்வரர் என்று நாமம்.  இங்கே   சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால்,   தினமும், நித்ய அமாவாசை   ஸ்தலம்.  யானைத்தலை பெறுவதற்கு முன்  விநாயகர் மனித முகத்தோடு இருந்த அற்புத  சிலை உருவம் இணைத்திருக்கிறேன்.  திலதர்ப்பண புரி ஆலயத்தில் தான் முதலாக ஆதிவிநாயகரை தரிசித்தேன்.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் உப நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது.  காசிக்கு நிகர்.

திருவெண்காடு சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரம். புதன் வழிபாட்டு ஸ்தலம்.  காவிரிக்கரையில் காசிக்கு நிகரான  6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடு ஒன்று. இங்கே   அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ள  பெரிய  கோவில். றன. சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை ஆகி இருக்கிறது. தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க  நிறைய பேர் வருகிறார்கள்.

திருவிளமர் என்கிற ஊர் திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ.  பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். தினமும்   நடராஜ  தாண்டவ தரிசனம் செய்து விட்டு தான் ஆகாரம்.  பதஞ்சலியும் வியாக்ர பாதரும்  நடராஜனின்  அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும்  கண்டு களித்தவர்கள்.  இந்தத் தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்களும் கண்டு களித்தனர். சிவபெருமானின்  ருத்ரபாதத்துக்கு  தினமும் பூஜை நடக்கிறது.    அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் ஸ்னானம் பண்ணிவிட்டு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து,  பித்ரு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை வழிபடுவது ஸ்ரேஷ்டம்.


திருக்கண்ணபுரம் திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று. பெருமாள் பெயர்  ஸ்ரீநீலமேகப் பெருமாள். உற்சவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். ஒன்பது படித் துறைகள் நவகிரஹத்தை குறிக்கிறது. இங்கே நித்ய புஷ்கரணி  விசேஷம். இங்கே  ஸ்னானம் பண்ணிவிட்டு  பித்ரு  தர்ப்பணம் செய்வது சிலாக்கியம்.  முடியாதபோது  இந்த நித்ய புஷ்கரணியில் எள்ளைத் தெளித்து விட்டு மனதால்  பிரார்த்தித்தாலே போதும். பித்ருக்கள்  ஆசி  பெருமாளின் அனுக்ரஹத்தோடு  சேர்ந்து  கிடைக்கும்.
ராமேஸ்வரம்  பற்றி சொல்லவே வேண்டாம்.   12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.  ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம்  விலக ஸ்ரீ ராமன் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்தலம். இங்கே  அக்னி தீர்த்தம் பித்ரு தோஷத்தைப் போக்கும்.  சீதா தேவி  அக்னி பிரவேசம் செய்தபோது, அவளைத்  தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான் இங்கே சமுத்திர  ஸ்னானம் பண்ணியதால் இதற்கு  அக்னி தீர்த்தம் என்ற பெயர். லக்ஷக் கணக்கானோர் இங்கே வந்து  பித்ரு தர்ப்பணம் பண்ணுகிறார்கள்.  நானும் பண்ணி இருக்கிறேன்.

திருப்புல்லாணி ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம். தர்ப்பை தான் திருப்புல் . தர்ப்பாசயன க்ஷேத்ரம். பெருமாள் பெயர் ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு புத்ர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள்.  ராம சேது பாலம் கட்டுமுன்  ஸ்ரீ ராமன் ஆதிசேஷன் மீது தர்ப்பையை விரித்து சயனக்கோலம்  கொண்ட  இடம். சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம், பித்ரு தர்ப்பணத்துக்குகந்த  ஸ்தலம்.

தீர்த்தாண்டதானம் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. சிவன் பெயர்  ஸ்ரீசர்வ தீர்த்தேஸ்வரர். பித்ரு தர்ப்பண ஸ்தலம்.  ஓர் அமாவாசை நாளில்  அகஸ்தியர்  சொன்னபடி  ராமர்   தனது பித்ரு கடனைச் செய்து, சிவபெருமானின்  அருளை பெற்றார் என்கிறார்கள்.  ஆடி  தை அமாவாசை  தர்ப்பணம்  இங்கே ரொம்ப விசேஷம்.

பவானி சங்கமம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பித்ரு தர்ப்பண க்ஷேத்திரம்.  சிவன் பெயர்  ஸ்ரீசங்கமேஸ்வரர்.  ஒரு தடவை இங்கே  ஸ்னானம் செயது ஸ்ரீசங்கமேஸ்வரரை  நமஸ்கரித்தாலே போதும்.  முக்தி நிச்சயம்.  அம்பாளின் பெயர்  நதியின் பெயர்  ரெண்டுமே  பவானி.

கருங்குளம் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் சுமார் 18 கி.மீ. தூரம். மார்த்தாண்டேஸ்வரன் என்ற ராஜா  தினமும் சிவபூஜை செய்ய விரும்பிய போது  அவன் கனவில் தோன்றிய சிவபெருமான் ‘இங்கே  தாமிரபரணிக் கரையில் ஒரு ஆலயம் கட்டு” என  உத்தரவிட்டார். சிவன் பெயர்  ஸ்ரீ மார்த்தாண்டேஸ்வரர். அம்பாள்  ஸ்ரீகுலசேகரநாயகி.  தை  அமாவாசை பித்ரு  தர்ப்பணம் பண்ணும் ஸ்தலம்.

திருச்செந்தூர் சமுத்திர கரையில் உள்ள  பித்ரு தர்ப்பண ஸ்தலம். அறுபடை வீடுகளில் ஒன்று. காயத்ரி மந்திர 24 அக்ஷரங்கள் இங்கே தீர்த்தங்கள். மணல் மூடி தூர்ந்துவிட்டன என்றாலும் சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றிலும்   ஸ்னானம் பண்ணுகிறோம். தென்புலத்தார் தீர்த்தமும் என்று  ஒன்றில்  முழுக்கு போட்டு பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து அவர்கள் ஆசி பெறுகிறோம்.

நான் சொன்னது கொஞ்சம் தான்  இன்னும் கூட  நிறைய  ஸ்தலங்கள் பித்ரு தர்ப்பணம் பண்ண இருக்கிறது. ஒரு முக்கிய விஷயம்  :     எதற்குமே  போக முடியாவிட்டால் வீட்டிலேயாவது விடாமல்  அமாவாசை அன்றாவது  தர்ப்பணம் பண்ணுவது கட்டாயம் அவசியம். மூன்று தலைமுறை என்று அப்பா, தாத்தா,கொள்ளுத்தாத்தா, அம்மா, பாட்டி கொள்ளு பாட்டி  என்று தர்ப்பணம் செய்வதன் காரணமே அப்பா, பிள்ளை பேரன்   மூவரில் யாராவது ஒருவராவது விடாமல் தர்ப்பணம் பண்ண என்று தோன்றுகிறது.

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *