SANKALPAM J K SIVAN

மறக்கக்  கூடாத  விஷயம்  —   நங்கநல்லூர் J K  SIVAN

 நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம்  ”எது ஸாஸ்வதம், எது  நிரந்தரம், எது அழியக்கூடியது. அநித்யமானது என்ற உண்மை, பாகுபாடு.   நம்முள்  இருக்கும்   ஆத்மா தான் நித்யமானது,  ஸாஸ்வதமானது. உலகில் தோன்றும் மற்றதெல்லாம்  மாறுவது அழிவது. இது புரிந்தால் புலன்கள் நம்மை   அதன் வழியில் இழுக்காது.  மனது அதனால் அமைதியுறும்.   ஆனால் நமக்குள்  ஆத்மா என்று ஒன்று இருப்பதே  தெரியாமல் நாம்  பல வருஷங்கள் வாழ்ந்து கண்ணை மூடி விடுகிறோமே .  

”ஷட் ஸம்பத்”  என்று வேத ஸாஸ்த்ரங்கள் கூறும் ஆறு செல்வங்கள் எது?  ஏற்கனவே தெரிந்தாலும் மறந்து போய் விட்டிருக்கும் என்பதால்  திரும்ப அதை நினைப்போம்.

 ‘சமம்  ” –   எல்லாவற்றையும் ஒன்றாக அபேதமாக ஏற்பது.
‘தமம்’   –  புலனடக்கம்
‘உபரதி ”   புலனின்பத்திலிருந்து விடுபடுவது.
”திதிக்ஷா” –  பொறுமை , அடக்கம்
‘ ஸ்ரத்தா – நம்பிக்கை ‘ சமாதானம் – முழு கவனம்
ஒவ்வொருவனுக்கும் எது தேவை?
பகவானிடம் பக்தி,
வேத ஸாஸ்த்ரங்களில் நம்பிக்கை.
குருவிடத்தில்  பெரியோரிடத்தில்   மதிப்பு, மரியாதை,  இதை தான் ஸ்ரத்தை  என்கிறோம்.  ஆத்மாவிடம் சரணாகதி.
மனதை ஒருமைப்படுத்தி ஒன்றின் மேல் செலுத்துவது  சமாதானம்
வேத சாரமான  உபநிஷதங்கள் முடிவை  சிறு வாக்கியங்களாக அமைத்திருக்கிறார்கள் மஹா ரிஷிகள். அவை  மஹா வாக்கியம் எனப்படுபவை. அவற்றை மனப்பாடம் செய்து அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும்.

தியானம் செய்து  பழக்கத்தில் கொண்டு வரவேண்டும்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான் என்று அறிய அப்போது தான் முடியும்.
இதை ஆத்ம தியானம் என்கிறோம்.
எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது என்று  புரிபடும். பகவான் நாமத்தை தொடர்ந்து ஜபம் செய்ய வைக்கும்.
நாம்  இந்த தேகமல்ல, அதன் உள்ளே ஒளிரும் ஆத்மா என அறிவோம். ஸாத்வீக  உணவை மிதமாக உண்போம்.
அஹிம்சை, கருணை, அன்பு பெருகும்.
நாம் ஒரு அடி  பகவானை நோக்கி நடந்தால் அவன் பத்து அடிகள் நம்மை நோக்கி வருவான் என்று புரியும்.
காணும் யாவும் கண்ணனின் பல உருவம் என்று மனதுக்கு புலப்படும்.
 சங்கல்பம்:காலையில் சுவர்கடிகாரம்  மணி  6.15 என்று காட்டியது.
எதிரே தாம்பாளம், பஞ்சபாத்ரம், சொம்பில் ஜலம் , எல்லாம் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.  வாசல் கதவு திறந்துகொண்டு ரெட்டைநாடியானவர்  உள்ளே நுழைகிறார். என்னைப்பார்த்து  மேல் வரிசை பல் காவியாக  சிரிக்கிறது.
 ”வாங்கோ”.
 காலையில் ஐந்தேமுக்காலுக்கே  நான்  பஞ்சகச்சம்  கட்டிக்கொண்டு விட்டேன். (என்  முதல் பேரனுக்கு இப்போது 26,  மூன்று வயதில் அவன்  ”பங்கஜத்தை கட்டிக்கொண்டு ”  என்று சொல்வது ஞாபகம் வருகிறது)  நெற்றி கைகள், மார்பில்  பட்டை பட்டையாக வெண்ணிற  விபூதியோடு  ரெடி.   நேற்றே காலையில்  சைக்கிளில்  போய் சூரி சாஸ்திரியிடம்  இன்று வரச்
சொல்லியாகிவிட்டது.

இதோ எதிரே சூரி வாத்யார்  உட்கார்ந்திருக்கிறார். நைலான் பையிலிருந்து தர்ப்பை கட்டு வெளியே வந்துவிட்டது.
அப்போதெல்லாம் என்னால் காலை மடக்கி சப்பணம் போட்டு உட்காரமுடிந்தது.  சங்கல்பம்  செய்து வைக்கிறார்:

”மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்…””அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோபிவா| ய:ஸ்மரேத் புண்ட³ரீகாக்ஷம்ʼ ஸ: பா³ஹ்யாப்⁴யந்தர: ஶுசி:|| மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரீ ராம-ராம-ராம||திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த …. “ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யாபலம் தைவபலம் ததேவ கௌரீபதே (லக்‌ஷ்மீபதே)தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”
இப்படித்தான் பல காரியங்களுக்கும் சங்கல்பம் ஆரம்பிக்கிறது. கிளிப்பிள்ளை மாதிரி வாத்யார் சொல்வதை திரும்பிச் சொன்னாலே சமத்து.  அதையே சொல்வதில்லை.  அப்புறம் இதன் அர்த்தத்தை எப்படி, எப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று தோன்றியதால் கொஞ்சம் சொல்கிறேன்.

”நான் செய்த எல்லா பாவங்களையும் அழிப்பதன் மூலம், பரமேஸ்வரனை திருப்தி படுத்துவதற்காக புனிதமல்லாததோ,புனிதமானதோ எந்த நிலையில் இருப்பவனானாலும்,  யார் தாமரைக் கண்ணனை மனதால் நினைக்கிறாரோ அவருடைய உள்ளும் புறமும் சுத்தமானதாகிறது. மனது,  சொல்,  இவற்றால் செய்த செயல்களால் கிடைத்த பாபம் ஸ்ரீ ராமனை தியானம் செய்வதால்,  நினைப்பதால் நீக்கப் படுகிறது; சந்தேகம் இதில் கொஞ்சமும்  வேண்டாம்.”
”விஷ்ணுவே திதி. அதுவே வாரம். நக்ஷத்ரமும் விஷ்ணுவே. யோகம்,  கரணம்.  ஆகிய சகலமும்  விஷ்ணுவே. உலகமெல்லாமே. சர்வமுமே, சகலமுமே , விஷ்ணு மயமாகும்.
கௌரீ பதியாகிய சிவபிரானே (லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவே) உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன்.அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) லக்னம் நல்ல லக்னமே; நாள் நல்ல நாளே. நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவை நல்லன செய்வனவே.    கல்வியறிவி னாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.

எல்லா கூறுகளையும் கவனிக்கப்  போனால் நல்ல நேரம் என்பது தேவர்களுக்கும் அகப்படாதாம். அப்படியானால் மனிதர் களான நமக்கு மட்டும் எப்படி அகப்படும்?  அதனால் சுலபமான வழி இறைவனை நினைப்பது ஒன்றே தான்.  அது ராமனோ, கௌரீபதியான சிவனோ, லக்ஷ்மி பதியான விஷ்ணுவோ – அது நம் குல ஆசாரப்படி இருக்கட்டும். அப்படி இறைவனை நினைக்கும்போது  அந்த லக்னமே நல்ல லக்னம் ஆகிவிடுகிறது. அந்த நாளே நல்ல நாள் ஆகிவிடுகிறது. அமாவாசை அன்று சந்திரனுக்கு பலமில்லை.   இருந்தாலும் இறைவனை நினைக்க அது பலம் பொருந்தியது ஆகி விடுகிறது.
சிலர் ” என்ன  சார் இது, நல்ல நாள்தான் பார்த்தோம்; நல்ல முகூர்த்தம்தான் பார்த்தோம். இருந்தாலும் எடுத்த காரியம் இப்படி ஆகிவிட்டதே ”  என்று புலம்புகிறார்கள். என்ன பிரச்னை? மந்திரம் சொல்பவர்  கார்யம் செய்து வைப்பவர் சொல்லச்  சொல்ல  அதை மேலே சொன்ன  கிளிப்பிள்ளை மாதிரி  திருப்பிச்  சொன்னால்  மட்டும் போதுமா?  மனதால் கொஞ்சமாவது பகவானை நினைத்துக்கொண்டு சொல்லவேண்டாமா , அவன் பேரை அவன் நினைவில்லாமலே சொன்னால் என்ன பலன்?  எப்படி பலன் கிடைக்கும்?    சங்கல்ப நேரத்திலாவது பகவானை நினைக்கிறோமா?
அதற்காக முகூர்த்தமே பார்க்க்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். முடிந்த வரை நல்ல முகூர்த்தமாக பார்த்து விட்டு -ஆதர்ச முகூர்த்தம் கிடைப்பது அரிது என்பதாலும், தெரிந்த,  தெரியாத,  தோஷங்கள் இருக்கலாம் என்ப தாலும் – பகவா னை நினைத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.இனியேனும் சங்கல்ப நேரத்தில் இறைவனை நினைத்துக் கொண்டு சங்கல்பம் செய்வோம்.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *