THIRUMURUGAATRUPPADAI PAZHAMUDHIR SOLAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –    நங்கநல்லூர்   J K   SIVAN நக்கீரர்  

6. பழமுதிர்சோலை
பாடல் வரிகள்  218 முதல் 250  வரை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை. மதுரையிலிருந்து27 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை  ”சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா.?”  என்று சோதித்தது இங்குதான்.   மஹாவிஷ்ணுவின்  கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்திருத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அழகர் கோவில் தீர்த்த மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.  இதற்கு  இன்னொரு பெயர்  சோலைமலை. இங்கே  முருகன் வெற்றிவேல் முருகன்.

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்சோலை என்பதற்கு பழம் முற்றி  தானாகவே  கீழே  உதிர்க்கின்ற  சோலை என்று நச்சினார்க்கினியர் உரைக்கிறார்.
 வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம்  என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.  இங்கே  உள்ள “நூபுர கங்கை” என்னும் சிலம்பாற்றை பழ முதிர்சோலைத் திருப்புகழில் அருணகிரி பாடியுள்ளார். வெள்ளிக்கிழமை   அன்று  இங்கே  முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியம் செய்து விட்டு  அதையே  பிரசாதமாக   அனைத்து பக்தர்களும்  உண்பார்கள்.
இனி  திருமுருகாற்றுப்படை  என்ன சொல்கிறது  என்று அறிவோம். ”சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து  218
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 219
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் . . . .220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் 221
வேலன் தைஇய வெறி அயர் களனும் 222
காடும் காவும் கவின்பெறு துருத்தியும் 223
யாறும் குளனும் வேறுபல் வைப்பும் 224
சதுக்கமும் சந்தியும் புதுப் பூங்கடம்பும் 225
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்  226
சிறுதினையை மலர்களுடன் கலந்து படைத்து, ஆட்டுக் குட்டியைக் கொன்று அறுத்துப் பலியிட்டு முருகனுக்குப்  படைப்பது வழக்கம்.  முருகனின்  சேவற் கொடியும்  எங்கும்  பறக்கும். முருகக் கடவுளை   வரச்செயது  ஆங்காங்கே ஊர்வலத்தை  நிறுத்தி  ஊர்கள் தோறும் எடுத்துக்கொண்ட   சிறப்பாக   நடக்கு ம்  விழாக்களிலும்,   முருகன் மேல்  பற்றுள்ள  பக்தர்கள்  மனம் மகிழ   கண்ணார  தரிசனம் பெற்று அவர்கள் புகழ, மனம்  வேல் கொண்ட  வேலனாக  ஆடவர்கள்  வெறியாட்டம்  ஆடு ம்  இடங்களிலும்   முருகனின்  உற்சவ மூர்த்தி நின்று  தரிசனம் தருவார்.  முருகனை  களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகுடைய ஆற்றின் தீவிலும், ஆறுகளிலும், குளங்களிலும், வேறுபல ஊர்களிலும், நாற்சந்தியிலும், முச்சந்தியிலும், புதிய மலர்களை உடைய கடம்ப மரத்திலும், ஊர் மன்றத்திலும், அம்பலத்திலும், இறைவன் குறியாக நடப்பட்ட தறியிடத்தும் (தூண்களிடத்தும்)  இருப்பதாக  கருதி பக்தர்கள்  அதிலும் முக்யமாக  வெறியாட்டம்  ஆடுவார்கள்.
  பக்தி அளவுக்கு மீறி  அவர்கள் தன்னை மறந்து  ஆடுவார்கள்.  தேனும் தினைமாவும் தான் அவர்கள் ஆகாரம்.  ஆட்டுக்குட்டிகள்   பலி  கொடுப்பது வழக்கம். எங்கும்  சேவல்கொடி பறக்கும்.  இரவு பகல்  என்று பாராமல்  முருகனை பாடி துதித்து  பக்திரசத்தோடு ஆடுவார்கள். இந்த வெறியாட்டம் மிகவும் முருகனுக்கு பிடித்த ஒரு வழிபாடு.
  ஆண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர 227
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து 228
குடந்தம்பட்டு கொழுமலர் சிதறி 229
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ . . .230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி 231
மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக் 232
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி 233
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ 234
சிறுபசு மஞ்சளொடு நறு விரை தெளித்து 235
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை 236
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி 237
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி 238
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி 239
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க . . .240
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் 241
குருதிச் செந்தினை பரப்பி குறமகள் 242
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க 243
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியல் நகர் 244

ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் 245
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி 246
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி 247
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட 248
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே 249
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக 250
 தலை  ஆண்  போல, உடல் பறவையின் வடிவாகவும்  கொண்ட  உருவம் வரையப்பட்ட   கொடி  ஏந்தி,  நெய்யுடன் வெண்கடுகையும் அப்பி, மென்மையாக உரைத்து வழிபட்டு, பெரிய மலர்களைத் தூவி, மாறுபட்ட வடிவினையுடைய இரண்டு ஆடையை உள் ஒன்றும் புறம் ஒன்றாகவும் உடுத்தி, சிவந்த நூலினால் ஆன காப்புக் கயிற்றைக் கட்டி, வெள்ளைப் பொரியை நிறைய  தெளித்துச்  சிதறி, மிகுதியான வலிமையையுடைய நிலை பெற்ற பெரிய காலையுடைய கொழுத்த கிடாவினது ரத்தத்தோடு  கலந்த தூய வெள்ளை அரிசியைச் சிறு  உருண்டை  உருண்டைகளாக  பலி கொடுத்து ,  வாழை இலைகளில் இதெல்லா பிண்டங்களை  பரப்பி வைத்து, சிறிய   பச்சை  மஞ்சளுடன் வாசனைப் பொருட்களை  அதன் மேல் தூவி தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வரளி  மாலையை  சாற்றி க்கொண்டு,  நிறைய  வண்ண மலர்  மாலைகளையும் வரிசையாக  தொங்கவிட்டு, தோரணம் போல  அமைத்து.  அடர்ந்த   அந்த  மலைப்  பிரதேசத்தில் உள்ள நல்ல ஊர்களைப் “பசியும் பகையும் பிணியும் இங்கு வராமல்  போகட்டும் ” என வேண்டிக்கொள் வார்கள்.    அருமையான  கமகம  எனும் வாசனை அளிக்கும் அகில்  புகையைப் பரப்பிக் குறிஞ்சிப்  பண்ணில்   முருகன் மேல் பாடுவார்கள்.  பழமுதிர் சோலை மலைமீது இருந்து ஓடும்  அருவிகள் ஓசை அற்புதமாக  ஒலிக்க , வெறியாட்டம்  ஆடுபவர்கள்  பலவகை   வாத்தியங்கள் வித  விதமான இனிய  இசையை  எழுப்பும்.    முருகனுக்கு  பிடித்த சிவந்த  நிற  பல மலர்களைத்  தூவுவார்கள்.  ”ஆஹா  ஊஹூ ” என்று  பயம்  த்வனிக்கும்   உரத்த சத்தம்  எங்கும் கேட்கும்.
ரத்தம் தோய்ந்த  சிவப்பு வண்ண  தினை மாவுகளை  பரப்பி, அந்த மலையில் வாழும்  குறவர் பெண்கள் முருகனுக்குப் பிடித்த  வாத்திய  கருவிகளை வாசிப்பார்கள்.  முருகனை வா வா என்று வேகமாக  சப்தித்து  பாடுவார்கள்.  பயம்   தரும் பக்தி இது.
நக்கீரர் காலத்திய  ஒரு வர்ணனை இது.  பிணிமுகம் என்ற பட்டத்தை உடைய ஒரு யானை தான் முருகனின் வாகனம். கண  கண  என  மணிகள் சப்திக்க  இருகைகைளையும்  சிரத்துக்கு மேல்  குவித்து  வருஷா வருஷம்  விடாமல்  வந்து ஆடி ஓடி  முருகனைப்  போற்றி பாடுவார்கள்.பழங்கால   பழமுதிர் சோலை வழிபாடு  வர்ணனை  நமக்குத் புதிதாக இருந்தாலும்  பக்தி என்றும் பழையது தான்.
மேலும்  நக்கீரர்திருமுருகாற்றுப்படை  பாடலை அறிவோம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *