HANUMAN J K SIVAN

இனிய  மூன்று நாள்  பிரயாண நினைவு:      நங்கநல்லூர்  J K  SIVAN
சூரிய பழமும்  வடை  மாலையும்  –   

ஹநுமானைப் பற்றி சொல்லிக்கொண்டே போனால்  அதுவும்  ஹனுமார்  வால் போல் எல்லையில்லாமல்  நீண்டு கொண்டே தான் போகும்.  இருந்தாலும் அதைக் கேட்க, படிக்க  ஆர்வமும்  நீண்டு கொண்டே தானே போகிறது. இதோ ஒரு அருமை யான  ஹனுமான் விஷயம், எல்லோருக்கும் தெரிந்தது தான். நான் ஒன்றும் புதிதாக  சொல்லிவிடவில்லை. தெரிந்தாலும் மறுபடியும்  படிக்க  ஆசை குறையவே குறையாது.  

அஞ்சனாவிற்கும்  வாயுவிற்கும் ஒரு அருமையான  பிள்ளை  பிறந்தது.   அவன்  பிறப்பை வருஷம் தவறாமல்  கொண்டாடு கிறோம்.  ஏன்?  அப்பா தானே  உயிர்  சக்தி   நமக்கு. பிராண வாயு.  பிள்ளையோ  கேட்கவே வேண்டாம்.  அப்பா அருளில்  உயிர் வாழும்  நம்மை  ஹனுமான் தான் நலமுடன்  வாழ செய்பவர்.  நீ  என்ன வேண்டுமானாலும்  கேளேன். அது  உடனே கிடைக்கும்.  அப்பா   கூட  உதவ  முடியாமல் ஸ்ரீ  ராமனும்  லக்ஷ்மணனும்  உயிரற்றவரென யுத்த களத்தில்  விழ,  கண் இமைக்கும்  நேரத்தில் .  சஞ்சீவினி   இலையை உடனே   கொண்டுவந்து சாறு பிழிந்தால் தான்   அவர்கள்  உயிர் பிழைக்க வழி  இருக்கிறதென்று ஜாம்பவான் சொல்ல சஞ்சீவி இலை தேட  நேரமில்லாமல்,  சஞ்சீவி  இலை கிடைக்கும்   அந்த மலையையே ஒரே  தூக்காக  தூக்கிக்  கொண்டு வந்து  அனைவரையும்  பிழைக்க  வைத்தவர்.    நம்மை விட்டு விடுவாரா?.  அடேயப்பா  நம்மவர்களில்  எத்தனை பேர்  சஞ்சீவி என்ற  பெயர் கொண்டவர்கள்!!
ஹநுமானுக்கு  ஏன்  வடை மாலை?  ஒரு ஹனுமத்  ஜெயந்தி சமயத்தில்  மஹா பெரியவா சொன்ன  ஸ்வாரஸ்யமான  விஷயம்  இங்கே  பொருத்தமாக சொல்கிறேன்.

ஒரு வடக்கத்தி காரர் மஹா பெரியவாளைத் தரிசிக்க  காஞ்சிபுரம்  வந்தார். தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தார். இவரது மனதில் ஏதோ கேள்வி கேட்க  விருப்பம் என்று தீர்மானித்த பெரியவா,
 “என்ன ஏதாவது சந்தேகம் இருக்கோ?. கேளுங்கோ” என்றார். மஹா பெரியவா மற்றவர்களை பார்க்கும்போதே அவர்கள் மனதில்  ஓடும் எண்ணங்களை  அப்படியே படம்  பார்ப்பது போல்  தெரிந்து கொள்ளும் சக்தி கொண்டவரல்லவா?
”ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.  பலரிடம் விளக்கம் கேட்டும் பயனில்லை. சரியான பதில் வரவில்லை..ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்”

.”வாயு புத்ரனைப் பத்தியா சந்தேகம் உங்களுக்கு, கேளுங்கோ ” 

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கு இஷ்ட தெய்வம். வணங்கி அருள் பெறுகிறார்கள். எனக்கு  சந்தேகம் அவரைப்  பற்றி ஒரு சந்தேகமும்  இல்லை. அவருக்கு அணிவிக்கப்படும் மாலையைப் பற்றித் தான் . ஹநுமானுக்கு  தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.   வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசம்?”ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா  சொன்ன பதில்:

“குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பண்ணினால் அம்மாக்காரி  குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி  ஊட்டி சாப்பிட வைப்பாள்.  அழகான நிலாவையும் வெளிக்  காற்றையும்  ஸ்வாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.  பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.  நம்மைப்போல்  சாதாரண  குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் ஆனது போல் , ராம  தூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை அனுமனுக்கு வந்துவிட்டது . அனுமன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியனை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது.. சூரியனை,  ஒரு பழம் என்று நினைத்து விட்டார்.  வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று  வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.
பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்  குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.   அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு  பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த பந்தயத்தில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் செய்து  யார்  அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் நான் பிடிக்க மாட்டேன் எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உளுந்து  பக்ஷணம்,  தன்னுடைய  உடல் போல் (பாம்பு போல்) ,  வளைந்து இருக்க வேண்டும் என்று  ஒரு  கண்டிஷன் போட்டார்  ராகு.   ஆகவே  தான்  உளுந்து வடையை மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

யாருக்காவது ராகு தோஷம் இருந்தால் உளுந்தால் செய்த வடை மாலைகளை அனுமனுக்குச் சாற்றினால்,  ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும். இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.   வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை.. தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை பண்ணக் காரணம்  இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன.  இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம்.

வட இந்தியாவில் கரும்பு விளைச்சல் அமோகம். சர்க்கரை பெருமளவில் உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.   வட இந்தியர்கள் இனிப்பு விரும்பிகள். ஒவ்வொருநாள் விடிகாலை நாம்  சற்றும்  யோசிக்காத,  ஜிலேபி அவர்களுக்கு ஒரு பிரேக் ஃபாஸ்ட். அய்ட்டம்.  அவர்கள் தங்களைப்  போலவே  ஆஞ்சநேயருக்கும்  ஸ்வீட் கொடுக்க உத்தேசித்து  உளுந்தால்  ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாற்றி  வழிபடுகிறார்கள்.
”எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டபடி  உளுந்து பக்ஷண மாலைகள் அனுமனுக்கு  மேலே மேலே  ஆபரணம் ஆகிறது.  உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.   உளுந்தை மாலையாக  சாற்றி  ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, மகா பெரியவா  சிரித்தார்.  வடக்கத்தி  அன்பருக்கு  பரம சந்தோஷம். நமக்கு  மட்டும்  இல்லையா  என்ன?
எங்கள்  நங்கநல்லூரில்   ஆஞ்சநேயரை பெரிய  வடை  மாலையோடுகண் நிறைய  பார்த்து  கொஞ்சம் பிரசாதமும் வாங்கி கொண்டு வீடு வரும் வழியில்  ஒரு சமயம்   என் மொபைலில்  ஒரு  மெயில். சிங்கப்பூர் உமா அனுப்பினது  படித்த ஞாபகம் வருகிறது.
சிங்கப்பூரில் ஸ்ரீனிவாச  பெருமாள்  கோவிலில்  ஒரு  அசாத்திய அழகிய  ஆஞ்சநேயர் இருக்கிறார்.  அவருக்கு  கோலாகல மான வடைமாலை அலங்காரம். கண்கொள்ளா காட்சி. ”கவலைப்படாதே. எனக்கு  வடை மாலை அமோகமாக கிடைச்ச மாதிரி உனக்கு உன் கவலைகளிலிருந்து நிம்மதி  கிடைக்கும் என்று ஒரு அபய ஹஸ்தம்.  முகத்தில் மந்தகாசம். ஒரு  கையில்   கதாயுதம்.  உன்  தடையை (ப்ராப்ளம் எல்லாவற்றையும்)   வடையை  நொறுக்குவது போல்  என் கதையினால் போக்குகிறேன்”  என்று  ஆறுதல்  தரும்  கம்பீரம், அழகு.

 நான்  இதற்கு மேல் சொல்ல வேண்டாம்  நீங்களே  புத்தி, பலம், தைர்யம், நிர்பயம், ஆரோக்கியம்,  வலிமை,வாக்கு வன்மை, எல்லாம் தரும்  அந்த சிங்கப்பூர்  மாருதியை வடை  மாலையோடு  தரிசியுங்களேன் . 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *