PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K   SIVAN

அங்கயற்கண்ணி  மீனாக்ஷி  -2

மஹா பெரியவா  மதுரை மீனாக்ஷியைப் பற்றி சொன்னதில் முதல் ஒரு பகுதியாக  இதற்கு முன்பு ஒரு பதிவு  இட்டிருந்தேன் அல்லவா?  அதன் தொடர்ச்சியாக   அந்த பேசும் தெய்வம் மேற்கொண்டு  சொன்ன அற்புத விஷயங்கலில்  ரெண்டாம்  பதிவு  இன்று அறிவோமா?
”திருமலை நாயகரிடத்தில் பிரதம மந்திரியாக இருந்தவர்  நீலகண்ட தீக்ஷிதர்.  அவர் அம்பாளைப் பற்றி ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’  இயற்றியிருக்கிறார். பரமசிவ அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பி பேரர் இந்த நீலகண்ட தீக்ஷிதர். பக்தி, பாண்டித்யம், குணம், சீலம் எல்லாவற்றிலும் பெரியவர். அவர் இந்த ஸ்தோத் திரம் பண்ணினதைப் பற்றி ஒரு விருத்தாந்தம் உண்டு.

பாண்டிய ராஜாக்களின் காலத்திலிருந்து மீனாக்ஷி கோவிலுக்குத் திருப்பணிகளும், ஏராளமான திரு வாபரண ஸமர்ப்பணங்களும் நடந்து வந்திருப்பதைப் போலவே திருமலை நாயக்கரும் நிறையச் செய்தார். நீலகண்ட தீக்ஷிதரின் மேற்பார்வையில் அப்போது ‘புதுமண்டப’ நிர்மாணம் நடந்தது. அதில் வைப்பதற்காக ஸுமந்திரமூர்த்தி ஆசாரி என்ற சில்பி, பத்னிகள் ஸமேதமாக நாயக்கருடைய சிலையையும் பண்ணினார். பட்டத்து ராணியின் சிற்பத்தைப் பண்ணும்போது வலது முழங்காலுக்கு மேலே ஒரு சில்லு தெறித்துப் போய்விட்டது. என்ன பண்ணினாலும் அந்த மூளி தெரியாமல் மறைக்க முடியாத தினுஸில் இது நடந்து விட்டது. ரொம்பவும் அழகாக உருவான சிற்பத்தில் இப்படி ஏற்பட்டுவிட்டதே என்று துக்கப்பட்டுக்கொண்டு ஆசாரி (நீலகண்ட) தீக்ஷிதரிடம் போய் அழுதார்.

தீக்ஷிதர் ஏதோ கொஞ்சம் தீர்க்கமாக யோசனை பண்ணினார். அப்புறம் “அப்பா அழாதே! நீ பண்ணின சிலை தத்  ரூபமாக இருக்க வேண்டுமென்றுதான் இம்மாதிரி சில்லு தெறித்துப் போகும்படி அம்பாள் பண்ணியிருக்கிறாள். அதனால் அது இருக்கிறபடியே இருக்கட்டும். அப்படியே மண்டபத்தில் வைத்து விடலாம்” என்று சொல்லிவிட்டார்.

ராணிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்திருக்கிறது. தீக்ஷிதருக்கு இது தீர்க்க தரிசனத்தால்  ஸ்புரித்ததால்தான், flash ஆனதால் தான் அப்படிச் சொன்னார். ஸாமுத்ரிகா லக்ஷணப்படி உத்தம ஸ்திரீகளுக்கு இம்மாதிரி மச்சம் இருக்கவேண்டும் என்பதன்படியே ராணிக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.
ஆசாரியும் அதேபோலச் சிலையை மண்டபத்தில் வைத்துவிட்டார். இப்போதும் ஏழு பத்தினிகளோடு இருக்கிற திருமலை நாயகர் சிலையில் பட்டமஹிஷியின் சிற்பத்தில் இந்த பின்னம் இருக்கிறது.

வேலைகளை மேற்பார்வையிட நாயகர் வந்தார். ராணியின் சிலையைப் பார்த்துவிட்டு ஆசாரியிடம், “ஏன் இந்த மூளியைச் சரி பண்ணாமலே வைத்திருக்கிறீர்?” என்று கேட்டார்.

“அந்த இடத்தில் அம்மாதிரி இருப்பதுதான் சரி யென்று ஐயா தீக்ஷிதர் சொன்னதால்தான் அப்படியே விட்டு விட்டேன்” என்று ஆசாரி சொன்னார்.

நீலகண்ட தீக்ஷிதரை ‘ஐயா தீக்ஷிதர்’ என்றே ஸகலரும் சொல்வார்கள். தஞ்சாவூரில் நாயக் ராஜாக்களுக்குப் பிரதம மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷிதருக்கு ‘ஐயன்’ என்கிற பெயர் வழங்கினதுபோல், மதுரையில் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதருக்கு ‘ஐயா’ என்ற பெயர் இருந்தது.

ராணிக்கு இப்படி மச்சம் இருப்பது தீக்ஷிதருக்கு எப்படித் தெரிந்தது என்று நாயகருக்கு ஸந்தேஹம் வந்துவிட்டது. மஹா கோபமும் வந்துவிட்டது. உடனே அவரைக் கைது பண்ணி அழைத்துக்கொண்டு வரும்படி அவருடைய கிருஹத்துக்கு ஸேவகர்களை அனுப்பினார்.

அப்போது தீக்ஷிதர் கிருஹத்தில் மீனாக்ஷியைத் தான் பூஜை பண்ணிக்கொண்டிருந்தார். வேளை கெட்ட வேளையில் ஸேவகர்கள் வந்திருக்கிறார்கள் என்ற உடனேயே அவருக்கு அம்பாள் கிருபையால் என்ன காரணம் என்று புரிந்துவிட்டது.

தீபாராதனைக் கர்ப்பூரத்தை, அப்படியே ஐஸை வைத்துக்கொள்கிற மாதிரித் தம் கண்களில் அழுத்திக் கொண்டுவிட்டார்.

ஈஸ்வராநுக்ரஹத்தில் அப்பர் ஸ்வாமிகளுக்குச் சுண்ணாம்புக் காளவாயே ‘மாசில் வீணையும் மாலை மதியமு’மாக இருந்தாற்போல, மீநாக்ஷியின் கருணா கடாக்ஷத்தால் தீக்ஷிதருக்குக் கண்ணைச் சுட்டெரித்துக் கொண்டதும் ஜில்லென்றுதான் இருந்தது!

அப்படியே வாசலுக்கு வந்து, “ராஜா எனக்கு என்ன தண்டனை தர வேண்டுமென்று நினைத்தாரோ அதை அவருக்குச் சிரமம் இல்லாமல் நானே பண்ணிக் கொண்டு விட்டேன் என்று சொல்லுங்கள்” என்று ஸேவகர் களிடம் சொன்னார்.

அவர்கள் அப்படியே போய்ச் சொன்னவுடன் நாயக்கர், “இத்தனை பெரிய மஹானைத் தப்பாக நினைத்து அபசாரம் பண்ணி விட்டோமே!” என்று ரொம்பவும் பச்சாத்தாபம் கொண்டார். மாணிக்கவாசகரைத் தண்டித்ததற்காக இதே மதுரையில் அரிமர்த்தன பாண்டிய ராஜா எத்தனை துக்கப்பட்டாரோ அத்தனை துக்கப்பட்டார் திருமலை நாயக்கர்.

உடனே தீக்ஷிதரின் வீட்டுக்கு ஓடோடி வந்தார். தாம் பண்ணின அபசாரத்துக்கு மன்னிப்பு வேண்டினார்.
உத்தம குணமுள்ள தீக்ஷிதர், “ மன்னா, நீ ஸந்தேஹப்பட்டது நியாயம்தானே? எவருக்கும் ஏற்படக் கூடிய ஸம்சயம் தானே இது?” என்று பெரும்போக்காகச் சொல்லி மன்னித்து விட்டார்.

“என்னை நீங்கள் மன்னித்தது பெரிதில்லை. ஆனால் நீங்கள் இப்படிக் குருடராக இருக்குமளவும் என் மனஸ் எப்படி ஸமாதானப்படும்? அது என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கும். எப்படியாவது நீங்கள் மறுபடியும் கண்பார்வை பெற்றால்தான் எனக்கு நிம்மதியாகும்”என்று நாயக்கர் ரொம்ப மன்றாடினார்

அப்போதுதான் தீக்ஷிதர் இந்த ‘ஆனந்த ஸாகர ஸ்தவ’த்தைப் பாட ஆரம்பித்தார். பரம துக்கமான ஒரு ஸந்தர்ப்பத்தில் லோக ஜனங்களின் ப்ரதிநிதியாக துக்கத்தோடு ப்ரலாபிக்கும்போதே உள்ளூர அம்பா ளுடைய அருள் என்கிற ஆனந்த ஸாகரத்தில் மிதந்துகொண்டு பாடினார். கர்மம், பக்தி, ஞானம் முதலான எல்லாவற்றுக்கும் மேலாக ‘அவள் விட்ட வழி’ என்று பிரபத்தி (சரணாகதி) பண்ணுவதையே அதிலே விசேஷமாகச் சொல்லியிருக்கும். அம்பாளை எதிரே வைத்துக்கொண்டு பேசுகிற மாதிரி இருக்கும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கலாம் போல ஒரு இடத்தில், ” சரணம் ப்ரபத்யே மீனாக்ஷி விச்வ ஜநநீம் ; ஜநநீம் மமைவ “என்று வரும் (ஸ்லோ 32) ‘ஸகல லோக மாதா எனக்குங்கூட மாதா’ என்று விநயமாகச் சொல்கிறார். ‘அவளே கதி என்று சரண் அடைகிறேன்’ என்கிறார்.

நூறுக்கு மேல் ஸ்லோகமுள்ள இந்த ஸ்துதியில் முதல் பாதியில் இப்படி பிரபத்தி தர்மத்தை விளக்கவிட்டு, ‘ஸெளந்தர்ய லஹரி’யில் முதல் பாதியில் சாக்த தத்வங்களைச் சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் தேவியைக் கேசாதிபாதம் வர்ணிக்கிறமாதிரி, தீக்ஷிதரும் இரண்டாம் பாதியில் அம்பாளைப் பாதாதி கேசம் வர்ணிக்கிறார். இந்த வர்ணனை ஆரம்பத்தில்தான், ‘ஸெளந்தர்ய லஹரி’யில் அதன் தலைப்பு வருகிறது போலவே ‘ஆனந்த ஸாகர’ என்ற இந்தத் தலைப்பும் வருகிறது.

இதிலே ஒரு இடத்தில், “த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந?” – “(உன் சரணங்களை எனக்குக் காட்டினாலும் கூட) அதை நான் எந்தக் கண் கொண்டு பார்ப்பேன்?” என்று வருகிறது (ஸ்லோ 61) மேலே சொன்ன விருத்தாந்தம் நிஜம் என்பதற்கு இது internal evidence (உட்சான்று) .

இப்படி பாடி முடித்ததும் அம்பாள் தீக்ஷிதருக்குப் பார்வை கொடுத்துவிட்டாள். திருஷ்டி விசேஷத்தினாலேயே ‘மீனாக்ஷி’ என்று பெயர் பெற்றிருப்பவள் தீக்ஷிதருக்கு மீளவும் திருஷ்டியை அநுக்ரஹம் பண்ணிவிட்டாள்.
தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *