KRISHNA JAYANTHI – J K SIVAN

கிருஷ்ண ஜெயந்தி – நங்கநல்லூர் J K. SIVAN

கிருஷ்ணன் மனிதனாக அவதரித்த தெய்வம். அவன் அவதாரங்களிலேயே மிகவும் நமக்கு நெருங்கியவன்.
கிருஷ்ணன் அபூர்வன். பூர்ணாவதாரன். பிறந்ததும் மரணம் ரெடி என்று தெரிந்த தாய்க்கு ”பிறப்பு இறப்புக்கு அல்ல, சிறப்புக்கு ” என்று நிரூபித்தவன்.

தெய்வத்துக்கு பிறப்பு இறப்பு கர்மா எதுவுமே இல்லை என்றாலும் மனிதப்பிறவி எடுத்ததால், பிறந்ததும் மரணம் என்று முத்திரை குத்தினாலும் 125 வருஷம் வாழ்ந்து காட்டியவன். வருஷா வருஷம் அவன் பிறந்த நாளை ஸ்ரீ ஜெயந்தி என்றும் கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். கிருஷ்ணன் அவதரித்த ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நக்ஷத்ர நாள், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். குறிப்பாக வடஇந்தியாவில் 10 நாட்கள் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பலவிதமான விளையாட்டு போட்டிகளும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும். இந்தவருஷம் 6.9.2023 இரவு 09.14 க்கு பிறகே அஷ்டமி திதி துவங்குகிறது. மாலை 03.25 க்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. அதோடு செப்டம்பர் 07 ம் தேதி தான் நாள் முழுவதும் அஷ்டமி திதி காணப்படுகிறது. அன்று இரவு 09.14 மணிக்கு பிறகே நவமி திதி துவங்குகிறது. அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. 6/9/23 ஆ அல்லது 7/9/23 என்ற குழப்பமே வேண்டாம். கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவு நேரத்தில். ஆகவே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கான நாள் செப்டம்பர் 06 ம் தேதி தான். கிருஷ்ண பூஜையை செப்டம்பர் 06 ம் தேதி இரவு 11.57 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 12.42 மணிக்கே நிறைவு செய்ய வேண்டும்.

கிருஷ்ணன் பொம்மையாகவோ, படமாகவோ, இல்லாத ஹிந்துக்கள் வீடே இல்லை. நமது பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரிக்கும்போது, கிருஷ்ணன் பிறந்த நாள் அலங்காரம் பற்றி சொல்லவே வேண்டாம். தோரணங்கள், மாக்கோலங்கள், பஜனைகள், குழந்தைகளுக்கு ராதா கிருஷ்ணன் வேஷம். ஊர்வலம், என்றும் செய்யாத வெல்லச் சீடை உப்புச்சீடை எவ்வளவு தின்றாலும் அலுக்காது. அதற்கு என்றே ஒரு தனி ருசி.கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் என்ற பாட்டில் சொன்ன படி அவன் பூர்ண மனிதராக அவதரித்து அழியாக கீதையை நமக்கு பரிசளித்தவன்.
”வருஷா வருஷம் இப்படி உன்னைக் கொண்டாடுகிறோமே , கிருஷ்ணா நீ மீண்டும் எப்போது நிஜமாகவே இங்கே வருவாய்?”
”இதென்னடா கவலை உனக்கு? நான் தான் ரொம்ப புரியும்படியாகவே சொல்லி இருக்கிறேனே. ஓவ்வொரு யுகத்திலும் நான் வந்து என் கடமையைச் செய்வேன். என் கடமை என்ன என்று கேட்கிறாயா? தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பது. கலிகாலத்தில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன், தக்க சமயத்தில் வந்து வேரோடு அவற்றைக் களைவேன்” என்று சொல்லி இருக்கிறான்.

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्‌ ।धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥4.8॥
paritrāṇāya sādhūnāṃ vināśāya ca duṣkṛtām‌ । dharmasaṃsthāpanārthāya sambhavāmi yuge yuge ॥4.8॥
” பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டு வதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன். ஆகவே இன்னும் அவன் வரும் நேரம் நமக்கு வரவில்லை.

கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நக்ஷத்ர நாள், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். குறிப்பாக வடஇந்தியாவில் 10 நாட்கள் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பலவிதமான விளையாட்டு போட்டிகளும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும்.

நள்ளிரவில் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்திற்கு பழங்கள், மலர்கள், தேங்காய், நெய்யினால் செய்த பலவிதமான இனிப்பு பலகாரங்கள், வெண்ணெய், ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுடன் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஒரு யுகம் முந்தி, துவாபர யுகத்தில் 5250 வருஷத்துக்கு முன்பு ரோஹிணி நக்ஷத்திரத்தில், ஆவணி மாதம் நள்ளிரவில், தேய்பிறை அஷ்டமி திதியில் இருட்டில் பிறந்தாலும் அஞ்ஞான இருள் போக்க கீதை போதித்தவன். யது குலத்தை சேர்ந்தவன் என்றாலும் ஆநிரை மேய்த்து ஆயர்பாடியில் அனைவரையும் எளிமையோடு அரவணைத்து ஆனந்தத்தில்
ஆழ்த்தியவன்.
ஜன்மாஷ்டமியாக பலர் கொண்டாட வைஷ்ணவர்கள் ரோகினி நக்ஷத்ரத்தன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடு கிறார்கள். ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, தஹி அண்டி, தயிர் ச ட்டி, என்று பல பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் ரொம்ப விசேஷம். அன்று நிறைய பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும். நம் ஊர்களில் வெண்ணைத்தாழி உற்சவம். உறியடி உத்சவம் பிரசித்தம்.

மஹாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்பார்கள். மக்கள் ஈடுபாடு கிருஷ்ணன் பிறந்த ஜென்மாஷ்டமி விழாவில் அதிகமானது என்பது .உலகறிந்த உண்மை. இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும். வ்ரஜ பூமி என்று கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க இந்தியாவின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். தனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.கேரளாவில் “அஷ்டமி ரோகிணி” என்று கொண்டாடுவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே எப்போதுமே மனதில் குடிகொண்ட கிருஷ்ணன், நினைத்தபோதெல்லாம், குழந்தையாக, ஆலிலை கிருஷ்ணனாக, ராதாகிருஷ்ணனாக, கோவர்தனகிரிதாரியாக, கீதாச்சார்யனாக மாறி மாறி உருவெடுத்து மகிழ்விக்கிறான், என்னை ஊக்குவித்து வழி நடத்துகிறான். எனக்கு ஒவ்வொரு நாளும் கிருஷ்ணஜெயந்தி என்று சொல்லவே, எழுதவே பெருமையாக இருக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *