GITA GOVINDAM – J K SIVAN

கீதகோவிந்தம் – நங்கநல்லூர் J K SIVAN
ஜெயதேவர்

‘உள்ளங்கவர் கள்வன்.”

நான் பிறக்கு முன்பே M K தியாகராஜ பாகவதர் கொடி கட்டி பறந்தார். தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய சிறப்பு அம்சம், முகம் கோணாமல் கந்தர்வ கானமாக பாடுவார். பாகவதரின் நடிப்பை விட பாடல்களுக்காகவே படங்கள் வருஷக்கணக்கில் ஓடின என்றால் அதுவே உண்மை. ஒரு படத்தில் குறைந்தது 25-30 பாட்டாவது இருக்கும். ஒவ்வொரு படமும் 3 மணிக்கு குறையாமல் ஓடும். கொடுத்த காசுக்கு ரசிகர்கள் மனம் நிறைந்து பாடிக் கொண்டே வீடு திரும்புவார்கள். நான் நிறைய MKT பாடல்களை இன்னும் பாடுபவன்.

எங்கள் வீட்டுக்கு வழக்கமாக ரிக்ஷா வண்டி இழுத்துக்கொண்டு வரும் கோவிந்தசாமி ‘ராதே உனக்கு கோபம் ஆகாதடி ” பாடிக்கொண்டு தான் எங்களை ரிக்ஷாவில் இழுத்துச் செல்வார். தலை முடியும் கழுத்து வரை, பின்பக்கமாக தூக்கி வாரப்பட்டிருக்கும். நெற்றியில் பெரிய ஒரு ரூபாய் அளவு குங்குமம். ரிக்ஷணகாரரால் கஸ்தூரி ஜவ்வாது வாங்க முடியாமல் இருந்திருக்கும்., கர்நாடக சங்கீதம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவ MKT ஒரு மூல காரணம் எனலாம். தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேர் ஜில்பா (பாகவதருடைய தலை முடி மாதிரி பின் கழுத்து வரை ) சிகை அலங்காரம் செய்து கொண்டு திரிந்தார்கள்.

முதல் வரிசை தெலுங்கு பாட்டு மட்டுமே பாடிய கர்நாடக இசை வித்வான்களுக்கு பாகவதர் மேல் உள்ளூர ஒரு பொறாமை உணர்ச்சி இருந்தது. காரணம் அவரது காந்த சக்தி தோற்றம், நெருங்க முடியாத கணீர் குரல், ஜன ஆகர்ஷணம். ஒரு சரியான ஜோடியாக பாபநாசம் சிவன் பாடல்கள் அவருக்கு அமைந்தது வரப் பிரசாதம்.

இது இருக்கட்டும்.

சிந்தாமணி என்று ஒரு படம். சிந்தாமணி என்கிற வேசியாக நடித்தவர் அஸ்வத்தம்மா என்கிற இழுத்து போர்த்திய ஆந்திர பெண்மணி. அவள் படத்தை அனேக வீடுகளில் மாட்டி வைத்து ரசித்த காலம். நாங்கள் சில காலம் குடியிருந்த மன்னார்குடியில் ஹரித்ரா நதிக்கரை ஓரத்தில் ஒரு வீட்டில் அரிசி குதிரின் மேல் அவள் படம் தொங்கியது கவனம் இருக்கிறது.

பாகவதர் தான் பில்வ மங்கள். பில்வ மங்கள் யார் என்று தெரியாதா? இதோ விவரம்:

ஊரில் இருந்த ஒரு வேசி சிந்தாமணி மீது கண்மூடித்தனமாக மையல் கொண்ட ஒரு வாலிபன் பில்வமங்கள். ஒரு இரவு. கொட்டும் மழையில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் சிந்தாமணி வீட்டுக்கு போகவேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத ஆவல், ஆர்வம், ஈர்ப்பு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் புரண்டோட அங்கு மிதக்கும் ஒரு பிணம் தோணியாகிறது. அக்கரை சேர்ந்தாலும் வேசியின் வீடு வாசல் சார்த்தப் பட்டிருக்கிறதே?.

உப்பரிகையில் அவள் குரல் கேட்க எப்படி மேலே செல்லலாம் என்று யோசிக்கும் பில்வமங்கள் ஒரு கயிறு கிளையில் தொங்குவதை கவனித்து அதைப் பிடித்துக்கொண்டு மரம் ஏறி அதன் வழியாக அவள் உப்பரிகையில் செல்கிறான்.

”ஏன் இந்த நேரம் வந்தாய்? ஏன் உன்மீது இவ்வளவு ரத்தம்? யாரையாவது கொலை செய்தாயா?” என கேட்கிறாள் சிந்தாமணி.

” நானா? கொலையா ?என் மீது ரத்தமா? ”

பிலவ மங்கள் திகைக்கிறான். சிந்தாமணி யோடு அவனும் வெளியே வந்து பார்க்க பெரிய பாம்பு ஒன்று செத்து உப்பரிகை அருகே கிடக்கிறது. அதன் ரத்தம் அவன் மீது எப்படி வந்தது?

பில்வ மங்கள் நடந்ததைச் சொல்கிறான். தீராக் காமம் காதல் வயப்பட்டு இரவு நேரம், மழை, வெள்ளம், பாம்பு எதையும் லட்சியம் செய்யாமல், ஒரு பிணத்தையே தோணியாக யாக உபயோகித்து பாம்பைக் கயிறாக உபயோகித்து அவளை அடைந்தான் என்பதை அறிகிறாள்.

அழியும் என்னுடைய இந்த தேகத்தில் மீது இத்தனை மோகம் கொண்ட நீ அழியாத பரந்தாமன் மீது துளியாவது மனதை ஈடுபடுத்தினால் எத்தனை புண்யம் பெறுவாய்?. வலுக்கட்டாயமாக பாபத்தை சேர்த்து மூட்டை கட்டிக்கொள்கிறாயே” என்று அவனுக்கு இதமாக சொல்கிறாள். கல்லும் கரையும் அவள் பக்திப் பேச்சு பில்வமங்களை சிதைத்து ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன் உருவாகிறான்.

பின்னர் லீலா சுகர் என்ற பெயர் கொண்டு பில்வமங்கள் அசாத்திய மாக ஒரு 108 ஸ்லோகங்கள் உருவாகிறது. அதுவே ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ரிதம்.

எனது நண்பர் ஒருவர் மும்பையிலிருந்து இந்த புத்தகத்தை நேற்று எனக்கனுப்பி ரசியுங்கள் என்று சொல்லுமுன்பே அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பூர்வ பீடிகை.

ஜெய தேவர் அஷ்டபதி, கீத கோவிந்தம் என்னை எப்படி உலுக்கியதோ அதைப்போலவே இந்த புத்தகமும் என்னை ஈர்த்து விட்டது. இரு கண்களில் எந்த கண் உயர்ந்தது?

என்னை சிந்தாமணி பாடல்களால் கவர்ந்த MKT ஆத்மா சாந்தி பெறவும், மும்பை நண்பர் S விஸ்வநாதன் அவர்களின் ஆத்மாவும் கிருஷ்ணன் திருவடியில் அமைதி பெறவும் அந்த கிருஷ்ணனையே, ”சித் சோரை”, யே பிரார்த்திக்கிறேன். சித் சோர் யார் என்று புரியவில்லையா ?சித் = சித்தம் சோர் = கள்ளன் . பில்வ மங்கள் இப்படித்தான் லீலா சுகராக மாறியபின் கிருஷ்ணனை அழைக்கிறார். தமிழில் அதி அற்புதமாக இதையே ”உள்ளங்கவர் கள்வன் ‘ என்று அழைக்கிறோம்.

இந்த சிவன் போல பில்வ மங்கள் கூட ஒரு சைவராயிருந்த கிருஷ்ண நேசர். லீலா சுகர் என்று பின்னர் அழைக்கப்பட்டவர்.வட மதுரையில் அவர் சமாதி உள்ளது. அவர் கேரளத்துக்காரர் என்பதில் சற்று உண்மையுள்ளது. ஏனெனில் கேரளாவில் கிருஷ்ண கர்ணாம்ருதம் மிகவும் பிரபலம். ஒருவேளை குருவாயூரப்பனின் கிருபையோ ?

ஒரு சில ஸ்லோகங்களில் குட்டி கிருஷ்ணன் புலி நகம் தரித்தவனாக வர்ணித்திருப்பதால் கேரளா பக்கம் இந்த பழக்கம் உண்டென்பதால் பில்வ மங்கள் மலையாள தேசம் என்பது ஊர்ஜிதமாகிறது.

சைதன்ய மகாபிரபு ஆந்திர தேசம் வந்தபோது அவருக்கு கிருஷ்ண கர்ணாம்ரிதம் முதல் பகுதி மட்டும் கிடைத்து மிக்க ஆர்வத்தோடு மற்ற இரு பாகங்களை தேடிக்கண்டு பிடிக்க அவரது சிஷ்யர்கள் சிலர் மலையாள தேசம் சென்றார்கள்.

”உன்னி கிருஷ்ணா என்னோடு வாடா” என்று பில்வ மங்கள் கூப்பிட்டபோதெல்லாம் குருவாயூரப்பன் கூடவே வந்தான் என்பார்கள்.

चिन्तामणिः जयतु सोमगिरिः गुरुः मे(जयतु) शिक्षा गुरुः च भगवान् शिखि पिञ्छ मौलिः (जयतु) यत् पाद कल्प तरु पल्लव शेखरेषु- (यत्) जय श्रीः लीला स्वयंवर रसम् लभते(सा) जयतु
cintāmaṇirjayatu somagirirgururme śikṣāguruśca bhagavān śikhipiñchamauliḥ | yatpādakalpatarupallavaśekhareṣu līlāsvayaṁvararasam labhate jayaśrīḥ || 1-1
(vasanta-tilaka)

எந்த சிந்தாமணியால் சாதாரண அல்ப ஜீவனாக இருந்த பில்வ மங்கள், கிருஷ்ணன் வசம் ஈர்க்கப்பட்டாரோ, எவள் அவரை மிருகத்திலிருந்து உயர்ந்த மனிதனாக்கினாளோ அவள் பெயரோடு முதல் ஸ்லோகம் தயாரானது விந்தையிலும் விந்தை.

”கிருஷ்ணா நீ வேடிக்கையான விநோதனடா. உன் மற்ற அவதாரங்களை விட முற்றிலும் வேறுபட்டு, எங்களில் ஒருவனாக, ஒரு கிராமத்தில் பசு கன்றுகளோடு தலையில் ஒரு மயிலிறகை சூடிக்கொண்டு ஒரு மூங்கில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு ஆச்சர்யமாக எங்களைக் கண் போல் காத்தவன். மயில் இறகை சூட்டிக்கொண்டதிலும் ஒரு சூட்சுமம் புரிகிறது. அந்த ஒரு இறகில் மட்டும் தான் ”கண்” இருக்கிறது. எங்களைக் கண்காணிக்கவே வந்த ”கண்”ணன் நீ என்று காட்டவே மயில் கண்ணா ?? என்குரு ஆச்சாரியார் சோமகிரி எனக்கு கற்றுக்கொடுத்த ஒரே மந்த்ரம் கோபால மந்த்ரம். அது போதுமே! என்கிறார் பில்வமங்கள்.

अस्ति स्वस्तरुणीकराग्रविगलत्कल्पप्रसूनाप्लुतम् वस्तु प्रस्तुतवेणुनादलहरीनिर्वाणनिर्व्याकुलम्। स्रस्त स्रस्त निरुद्धनीवीविलसद्गोपीसहस्रावृतम् हस्तन्यस्तनतापवर्गमखिलोदारम् किशोराकृति॥ १-२
asti svaḥ taruṇī kara agra vigalat kalpa prasūna āplutam vastu prastuta veṇu nāda laharī nirvāṇa nirvyākulam srasta srasta niruddha nīvī vilasat gopī sahasra āvṛtam
hasta nyasta nata apavargam akhila udāraṁ kiśora ākṛti

பிரம்மம் பிரணவம் எல்லாவற்றையுமே ஒன்று சேர்த்து பிழிந்து சாறெடுத்து அதை உலர்த்தி காற்றில் கலந்து ஒரு மூங்கில் குழல் வழியே செலுத்தி அது உயிர் நாதத்தோடு அலை அலையாய் மிதந்து காதில் வருகிறதே. உன்னையன்றி, அதை வேறு யார் தரமுடியும்
கிருஷ்ணா? அதைக் கேட்க கொடுத்து வைத்திருந்த கோப கோபியர் இடுப்பு துணி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடோடி வந்தது
மட்டுமல்ல அவர்களோடு வந்த கன்று பசுக்கள் எல்லாமே கூட இன்று மட்டும் அல்ல, என்றும், வைகுண்டத்தில் தான் இருப்பார்கள் என்று எனக்கு சந்தேகமே இல்லை.
கோபாலா, உனது ஜீவ நாதத்தை செவியுற்ற செடி கொடி மரங்கள் குலுங்கி தங்கள் மலர்கள் அனைத்தையும் உனக்கு புஷ்ப பூஜை செய்தனவே. என்ன புண்யம் செய்தவை அவை. நீ உபயோகித்த மூங்கில் குழல் ஒரு அற்ப வஸ்துவா, அற்புத வஸ்துவா?

चातुर्य एक निदान सीम चपल अपाङ्ग च्छटा मन्थरम् लावण्यामृत वीचि लोलित दृशम् लक्ष्मी कटाक्ष आदृतम् कालिन्दी पुलिन अङ्गण प्रणयिनं काम अवतार अङ्कुरम् बालम् नीलम् अमी वयम् मधुरिम स्वाराज्यम् आराध्नुमः
cāturya eka nidāna sīma capala apāṅga cchaṭā mantharam lāvaṇyāmṛta vīci lolita dṛśaṁ lakṣmī kaṭākṣa ādṛtam kālindī pulina aṅgaṇa praṇayinaṁ kāma avatāra aṅkuram bālam nīlam amī vayam madhurima svārājyam ārādhnumaḥ

கண்ணா, உன் சாதுர்யம் உன் கண் வீச்சிலேயே வெளிப்படுகிறது. உன் அழகிற்கு காரணம் தெரியுமே. நீ மன்மதனுக்கே அப்பனல்லவா? (கிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் தான் மன்மதனின் அவதாரம்) உன்னை ஏன் சகல ஜீவ ராசிகளும் சுற்ற மாட்டார்கள். உன் காந்த பார்வையில் கருணை மட்டுமா இருந்தது, லக்ஷ்மியின் கடாக்ஷமும் அல்லவா சேர்ந்திருக்கிறது.
நீ அமர்ந்திருந்த யமுனை நதியின் மண் திட்டுகள் கூட சுவர்க்க பூமி அல்லவா?

बर्ह उत्तंस विलासि कुन्तल भरम् माधुर्य मग्न आननम् प्र उन्मीलत् नव यौवनम् प्र विलसत् वेणु प्रणाद अमृतम् आपीन स्तन कुट्‌मलाभिः अभितः गोपीभिः आराधितम्
ज्योतिः चेतसि नः (चकास्तु) जगताम् एक अभिराम अद्भुतम्

barha uttaṁsa vilāsi kuntala bharam mādhurya magna ānanam pra unmīlat nava yauvanam pra vilasat veṇu praṇāda amṛtam
āpīna stana kuṭmalābhiḥ abhitaḥ gopībhiḥ ārādhitam jyotiḥ cetasi naḥ cakāstu -chakAstu- jagatām eka abhirāma adbhutam

அதரம் மதுரம் என்று ஜேசுதாஸ் பாடிய மதுராஷ்டகம் முதலில் கேட்டபோது அதன் ஓசை, இனிய குரல் இரண்டு மட்டுமே மனதில் இடம் பிடித்தது. அர்த்தம் தெரிந்து கொண்டபோது உன் அழகிய லாவண்ய ரூபம் வர்ணிக்கப்படும் போது கண் முன்னே மட்டும் நீ தோன்றவில்லை, என் முழு மனதையுமே நீ ஆக்ரமித்து விட்டாய் பால கோபாலா.’ ஏற்கனவே அழகான மயிலிறகு உன் சிரத்தில் பூஷணமாக அமர்ந்தபோது உன்னால் அதன் அழகு கூடிவிட்டதப்பா. எந்த மனத்திலும் இவ்வளவு அமிர்தத்தை யாரால் நிரப்ப முடியும் உன்னைத் தவிர?

कोकिलम्; प्राकृत- चर्चरी; some call it as नर्कुट मधुर तर स्मित अमृत विमुग्ध मुख अम्बु रुहम् मद शिखि पिङ्छि लाङ्छित मनोज्ञ कच प्रचयम्
विषय विष आमिष ग्रसन गृध्नुनि चेतसि मे विपुल विलोचनम् किम् अपि धाम चकास्ति चिरम्
madhura tara smita amṛta vimugdha mukha ambu ruham mada śikhi piṅchi lāṅchita manojña kaca pracayam viṣaya viṣa āmiṣa grasana gṛdhnuni cetasi me
vipula vilocanam kim api dhāma cakāsti ciram

பாம்பு கடித்தால், பாம்பின் விஷத்தை வைத்தே சிகித்சை செய்வார்கள். விஷத்தை விஷத்தாலே முறிப்பது என்று இதற்கு பெயர்.
இந்த மாய லோகத்தில் எத்தனையோ விஷயங்கள் விஷமாகவே என்னை விழுங்கப் பார்க்கின்றன. அவற்றில் சிக்கி மீளுவதற்கு முயலும்போது எது உதவும் உன்னைத் தவிர?
நீ விஷ வைத்யன். சிறு வயதிலேயே விஷத்தை ஒருவள் உனக்கு பாலாக புகட்டி அவள் விஷத்தால் அவளையே கொன்ற உனக்கு இந்த உலக விஷயாதி விஷங்களில் இருந்து எம்மைக் காப்பது வெகு எளிதான காரியம். உன் உடலையே விஷ முறிவாக இதற்காகத்தான் செய்து கொண்டவனா? உன் குழந்தை முகமே மாத்திரை, உன் காந்த விழிகளே மூன்று வேளை அல்ல, முழுவேளை மருந்து.

சிறு குழந்தைகளுக்கு யானை, கடல், குரங்கு பார்க்க பார்க்க அலுக்காதவை என்பார்கள். எனக்கு இதையெல்லாம் தவிர உன் உருவம் ஒன்றே சக்தியளிக்கும் சாதனம். கைவல்யம். தைர்யம், வழிகாட்டும் ஒளி விளக்கு. பால கிருஷ்ணா என் மனத்தை விட்டு அகலாதே

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *