TAMIL AND LORD GANESH – J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்   J K  SIVAN
தமிழும்  தொப்பை சாமியும்

இன்று  தமிழ் புத்தாண்டு  விழா.  தமிழ் கூறும் நல்லுலகம் மகிழும் நாள்.  தமிழ் அமிழ்தினும் இனியது என்று நாம் அறிவோம். நம் தாய் மொழியை போற்றுவோம், வணங்குவோம், தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், குழந்தைகளுக்கும் எழுத படிக்க கட்டாயம் கற்றுத்தருவோம்.இந்த நன்னாளில்  மஹா பெரியவா  தமிழ் பற்றி சொன்னது என்ன?
”கலாசாரத்தில் பாஷை முக்யம். அதை வைத்துத்தானே ஸமய ஸம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக்கொடுக்கும் நூல்கள், மனஸுக்கு ரஞ்ஜகமான மற்ற கதை, கவிதை, காவ்யம், எல்லாம்? தமிழ் பாஷைக்கு விக்நேஸ்ரரும் ரொம்ப முக்யம். எதை  எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால்கூட ஸரி, முதலில் ” உ ” என்று சுழிக்கிறோம்.? ‘பிள்ளையார் சுழி’ ? எடுத்த கார்யம் சுழித்துப் போகாமல் ரட்சித்துக் கொடுப்ப தற்காகதான்  எதற்கெடுத்தாலும்  முதலில் பிள்ளையார் சுழி!’

பிள்ளையார் சுழி’ என்ற அர்த்தத்தில் ஸம்ஸ்கிருதம் உள்பட இந்த தேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக SYMBOL  எதுவும்  இல்லை. இது தமிழ் மொழியின் பாக்யம். ‘பாத்யதை’ என்று சொல்லி சண்டை கிளப்பாமல் ‘பாக்யம்’ என்று சொல்லி நமஸ்காரம் பண்ணுவோம்.

முத்தமிழை பிள்ளையார் ஆதியிலேயே மேரு மலையில் எழுதினார் எனும் அபூர்வ தகவலைஅருணகிரிநாதர் திருப்புகழ் பாராயணம் ஆரம்பிக்கும் போது பாடும் ‘கைத்தல நிறைகனி’ பாட்டில் சொல்கிறார்.
”முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே” -என்கிறார். அடேயப்பா. எல்லாம் ஒரே ‘மு’ மயமாக எதுகை மோனை வைத்து அல்லவோ பாடியிருக்கிறார். எவ்வளவோ தேடியும், விஷயம் தெரிந்த புலவர்களைக் கேட்டுங்கூட ‘அல்யூஷன்’ (பாடல் குறிக்கும் பூர்வ கதை) அகப்படவில்லை. ஆகக்கூடி, வ்யாஸருக்காக பாரதம் எழுதுவதற்கு முந்தியே, ‘முற்பட’ என்று பாட்டில் வருகிறதற்கேற்க, பிள்ளையார் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் நூல்களை எழுதினதாக ஏற்படுகிறது.
பள்ளியில் சேர்ந்து படித்த காலத்தில்  நாம் முதலில் கற்றுக் கொண்டது ஓளவைப்பாட்டி உபதேசங்களைத் தான். ”அறம் செய விரும்பு”……அந்த ஒளவைப்  பாட்டி யார்? பிள்ளையாரின் பரம பக்தை. வாக்கு உண்டாவதற்கே பிள்ளையார் பாதத்தைத்  தான் கெட்டியாக பிடித்தாகணும் என்று அவள் கற்றுக் கொடுத்ததை தான் முதலில் வாத்தியார்கள்  என் சிறுவயதில் அப்போதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள் மனப் பாடம் பண்ணுவோம். சின்ன வயசில் மனசில் ஏறியது மறக்கவே மறக்காது.

”வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலராள்
நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.”

‘வாக்குண்டாம்’ = :வாக்கு உண்டாகும். வாக்கு மட்டுந்தானா? சும்மாவுக்காக வாக்கு – பேச்சு மட்டும் அழகாக ஜோடித்து விட்டால் போதுமா? நல்ல மனஸைப் பெற்று அந்த மனஸிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துக்கள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்யம், பிறத்தியாருக்கும் உபகாரம்? அந்த நல்ல மனஸு, இன்னும் வாழ்க்கை ஸெனக்யமாக அமைவதற்குத் தேவையான லக்ஷ்மி கடாக்ஷம் எல்லாமே ஒரே குறியாக- ‘தப்பாமல்’ என்று போட்டிருக்கிறாள், அவள்தான் போட்டாளோ, அதுவே தான் விழுந்ததோ? ஒரே குறியாக – அவர் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்துவிட்டவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று அந்தப் பாட்டி நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.
‘மேனி நுடங்காது’ = ‘சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் காமல்.    ‘பிள்ளையாரை உபாஸிக்கிறதற்குப் பெரிசாக ஒன்றும் ஹடயோகம், பட்டினி உபவாஸமெல்லாம் வேண்டாம். உடம்பை சிரமப்படுத்திக்க தேவையில்லை. நாலு பூவைப் பறித்துப் போட்டுவிட்டாலே போதும்’ என்கிறாள்.
‘துப்பார் திருமேனி’ = பவளம் மாதிரிச்  ‘ஜெக ஜெக’  ன்னு ஜொலிக்கும், செக்கச் செவேலென்று அவர் சரீரம் . ‘பவளம் போல் மேனி யில் பால் வெண்ணீறு என்று பிள்ளையாரின் அப்பா நடராஜரை அப்பர் சொன்னது போல். அப்பனுடைய பிள்ளையும் அப்படியே ஜொலிக்கிறார் ஆனால் ‘தாயைப் போலப் பிள்ளை’ என்று தானே வசனம். அப்படி என்றால் அந்தத் தாயாராம் நம்முடைய காமாக்ஷியாயிருக்கிறபோது செக்கச் செவேல் தான்!”சந்தேகமே இல்லை.
எப்படி மஹா பெரியவா பரமாச்சார்யாளின் சிந்தனை!!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *