PAZHAIYANUR NEELI STORY – J K SIVAN

பழையனூர்  நீலி கதை  – நங்கநல்லூர்  J.K. SIVAN

பேய்,  பிசாசு, அதுவும்  கொள்ளி  வாய்  பிசாசு, ரத்த காட்டேரி  கதைகள் கேட்டு,  சின்ன வயதில் நடுங்கி, அரை நிஜாரை ஈரமாக்கியவர்களில் நானும் ஒருவன். கரெண்ட் இல்லாத காலம். ஆகவே  காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ”ஹா ஹா”  என்று உரக்க சிரிப்பது,  பறவைகளின் கீச் கீச் சப்தம், இரவில் ஓலமிடும் நாய்கள், மிருகங்களின் புரிபடாத சப்தம், எங்கோ யாரோ அழுவது போல் பிரமை,  பேயை  ரொம்ப சீக்ரம்  என் அருகிலே கொண்டு வந்து  நிற்க வைத்து விடும்.  பேய்க்கதைக்கு  BACK கிரௌண்ட், பின்னணி,முக்கியமாக  இருட்டு.  பயம் அதிகம் ஏற்படுத்தும்.பேய் பிசாசு பயத்துக்கு   காற்றும், இருட்டும், சப்தங்களும் தான் அஸ்திவாரம்.  மரங்கள் கிளைகளை அசைப்பது,  எங்கோ தொங்கும் காற்றில் ஆடும்  சில துணிகள், ஏதோ ஒரு  பேய்  வேறு  யாரும் கிடைக்காமல் என்னையே சுற்றி சுற்றி வருவது போல்  ஒரு உணர்ச்சியை  அணுவைத்திருக்கிறேன்.   எனது இந்த  நிலைக்கு  முக்ய காரணம்   சொக்கலிங்கம்.  எனக்கு   ஆறு  ஏழு வயதில் சொக்கலிங்கம் என்னுடைய ஹீரோ.  சூளைமேட்டு சௌராஷ்ட்ரநகர் வாசி. கதை சொல்வதில்  நிபுணன். எப்போ வருவான் என்று காத்திருப்போம். அவனுக்கு 12 – 13 வயசானாலும் எட்டு ஒன்பது வயது பையனைப் போல் தான் இருப்பான். எண்ணெய் காணாத தலை. எப்போதும் ஒரு தொள  தொளா காக்கி நிஜார். அதற்கு பொருத்தமில்லாத  ஏதோ  ஒரு கலர் அரைக்கை சட்டை. பட்டன் இல்லாமல் ரெண்டு safety pin போட்டு மூடி இருப்பான். தாயற்ற சிறுவன். தந்தை ஒரு அச்சகத்தில் அச்சு கோர்ப்பவர். அவருக்கு உதவியாக அவனும் வேலைக்கு போவதால் பள்ளிப் படிப்பை  நிறுத்திக் கொண்டவன். அவனுக்கு மாதம் ஆறு ரூபாய் சம்பளம் என்று பெருமையாக சொல்லும்போது ஏக்கப்பெருமூச்சு விடுவேன்.சொக்கலிங்கம் கற்பனை வளம் மிருந்தவன் என்பதால் அவனது பேய்க் கதைகள் மெய் சிலிர்க்க வைக்கும் . பேய்க்கு தரையில் கால் பாவாது,  நான் பேய்களை பார்த்து இருக்கேன் ஏன், அதோடு சண்டை போட்டு,  வெந்நீரை  சூடாக  அதன் மேல்  ஊற்றி விரட்டி இருக்கிறேன் என்பான். அவன் சொல்வதை கேட்டு திகில் கொண்டு, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுடைய கால் தரையில் ஊன்றி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறேன்.  வேண்டுமென்றே தனது காலை தரையில் வைக்காமல் தூக்கி வைத்துக்கொண்டு என் கால்களை பாருங்கள் தரையில் படியவே படியாது என்பான். அலறுவோம். திகில் மன்னன் சொக்கலிங்கம்.
 காற்றில் மரங்கள் இருட்டில் அசையும் போது அதோ பார்  புளியமரத்தில் பேய் உட்கார்ந்து கையை ஆட்டி வா வா என்று கூப்பிடுகிறது  அதன் சப்தம் தான் இது என்று எதையோ காட்டி சொல்வான். தனக்கு பேய் பாஷை தெரியும் என்பான்.  அப்படியே  அவன் சொல்வதை எல்லாம் நான் நம்பியிருக்கிறேன். சாயந்திரம் முடிந்து இரவு வந்துவிட்டால் எதுவும் பேயாக தோன்றும்படியாக எங்களை மாற்றிவிட்டவன் சொக்கலிங்கம்.  இப்போது சொக்கலிங்கம் இருக்கிறானோ? இல்லையோ?

 19.8.2018 அன்று  வழக்கம்போல  கோவில் யாத்திரை செல்லும்போது ஒரு  பேய் சம்பந்தப்பட்ட  ஊர் வழியாக சென்ற போது  சொக்கலிங்கம் ஞாபகம் வந்தது.  நான் சென்ற ஊர்  பழையனூர். திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள கிராமம். நாங்கள் சென்றபோது இரவு 9 மணி. எங்குமே ஒரு வீடு வாசல் தென்படாத  முள் புதர்களாக தர்ப்பைகள்  வளர்ந்த ஒரு பிரதேசமாக இருந்தது. தெருவில் விளக்கே இல்லை.  எங்கள் கார் வெளிச்சத்தில்  தான்  பிரயாணம்.
பழையனூர்  திருவாலங்காட்டுக்கு அரை கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம். அங்கே ஒரு  சின்ன  கோவில். நீலி அம்மன் கோவில்.  ”என்ன சார்  பேய் என்கிறீர்கள் கோவில்  என்கிறீர்கள். ரொம்ப வயாதாகி விட்டது பாவம் உங்களுக்கு? என்று சொல்லவேண்டாம். கொஞ்சம் வரிகள் படித்த பிறகு தான் மெதுவாக பேய் வரும்.
நல்லதங்காள், கண்ணகி மாதிரி  நாட்டுப்பாடல்களில் அழியாதவள் நீலி.

புவனபதி என்ற  காஞ்சிபுரத்து பிராமணன்  குடும்பம் மனைவியை விட்டு காசிக்கு சென்றான். விஸ்வ நாதரை தரிசித்து சில காலம்  அங்கேயே  தங்கினான். அங்கே   சத்தியஞானி என்ற ஒருவர் பழக்கமாகி  ஒருநாள் அவர் வீட்டுக்கு சாப்பிட போனவன் அவர் மகள் நவஞானி என்ற  அழகியைப் பார்த்து மயங்கி அவளைக் கல்யாணம்  பண்ணிக் கொண்டான்.  காஞ்சிபுரம் குடும்பம், அங்கே உள்ள  மனைவி பற்றி மூச்சு விடவில்லை.  சிலமாதங்கள் கடந்து காஞ்சிபுரம் திரும்பும்போது நானும் வருவேன் என்கிறாள் புது மனைவி. அவளோடு அவள் சகோதரன் சிவஞானியும் வருகிறான். இந்த சிக்கலில் இருந்து மீள வழி தெரியாமல் நடுங்குகிறான் புவனபதி. ரொம்ப சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.  காஞ்சிபுரம் அடைவதற்கு முன்னால்  திருவாலங் காட்டை அடைந்தான். சில நாட்கள் அங்கே மூன்று  பேரும் தங்கினார்கள். .  

ஒரு நாள் சாயந்திரம்  மைத்துனன்  சிவஞானியிடம்  ”நீ போய் ஒரு குடம்  தண்ணீர்  குடிக்க கொண்டு வா” என்று அனுப்பிவிட்டு, அவன் வருவதற்குள்  புது மனைவி  நவஞானியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு  புவனபதி ஓடிவிட்டான்.
தண்ணீருடன் வந்த  சிவஞானி தங்கை இறந்து கிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளியமரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு  தானும் இறந்துவிட்டான்.  அந்த ரெண்டு பேரும்  நீலன், நீலி என்ற பேய்களாக அந்த  திருவாலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர். ஊரார் அந்த பக்கமே தனியாகவோ  சேர்ந்து கூடவோ  போவதில்லை.

பல வருஷங்கள் ஓடின.  புவனபதி இறந்து போனான். அடுத்த பிறவியில்  தரிசனன்  என்ற  ஒரு வியாபாரி யாக பிறந்தான். அவன் ஜாதகத்தை பார்த்த சில நல்ல ஜோசியர்கள், அவனுக்கு ஏதோ சாபம். பேய் ஒன்று அவனை பழிவாங்க காத்திருக்கிறது  என்கிறார்கள். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. மாந்த்ரீகர்கள் ஹோமம், ஜபம், செய்து ஒரு மந்திர சக்தி வாய்ந்த கத்தியை எப்போதும்  இடுப்பில் செருகி வைத்துக்கொள்.  வடக்கே போகாதே ” என்றார்கள்.
 தரிசனனுக்கு காஞ்சிபுரத்தில் கல்யாணம் ஆனது. பிள்ளை பிறந்தான்.   தரிசனனின்  அப்பா,   சாவதற்கு முன்  தரிசனனிடம்  அவன் ஜாதகத்தைப் பற்றி  ஜோசியர்கள் சொன்னது  மந்திர கத்தி பற்றி சொல்லிவிட்டு மண்டையைப் போடுகிறார்.  அங்கே திருவாலங்காட்டில்  அடுத்த பிறவியில்  நீலனும், நீலியும்  ஒரு குடும்பத்தில் பிறக்கிறார்கள். பகலில் சாதாரண குழந்தைகளாகவும்  இரவில்  மீண்டும்  பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள்.  ஊர் காரர்கள் ஆடு மாடுகள் இழப்புக்கு காரணம் தேட இரவில் ஒளிந்து சிலர் பார்க்க,  நீலன், நீலியின் பேய் உருவம் தெரிகிறது.  அந்த பேய்க் குழந்தைகளின்  குடும்பம் ,தொட்டிலோடு, அவர்களை கொண்டுபோய் ஒரு  மரத்தில் கட்டி விட்டார்கள்.  நீலனும் நீலியும் தனித்தனியாக பிரிந்து  பிராமணனை பழிவாங்க தேடினார்கள்.   நீலன்  ஒரு வேலமரத்திலேயே இருக்க நீலி திருச்செங்கோடு பறந்து போனாள் .

பழையனூரில்  விவசாயிகள் அதிகம். சிலர்  உழுவதற்கு கலப்பை செய்ய மரம் தேடி நீலன் இருந்த மரத்தை வெட்டி விட  நீலன்  கோபத்தில் அங்கிருந்து  பறந்து சென்றவன் வழியே இருட்டில்  போய்க்  கொண்டிருந்த  திரு வாலங்காட்டு கோவில் குருக்களை அடித்து விட்டான், உயிர் போகுமுன் அந்த சிவாச்சாரியார் சிவபெருமானிடம்  வேண்ட, சிவனின் கணம் ஒன்று நீலனை அழித்தது.  நீலிக்கு   விஷயம் தெரிந்து  நீலன் மறைவுக்கு காரணமான  அந்த விவசாயிகளை பழிவாங்க சபதம் செய்கிறாள்.  ஏற்கனவே  ஏமாற்றிய   பிராமணனைக்  கொல்ல  ஒரு பழி பாக்கி இருக்கிறதே..

தரிசனனின் போதாத  காலம் அவனுக்கு  பழையனுரில் வியாபாரம் ஒன்று கிடைத்தது. மந்திரக் கத்தி இருக்கும் தைரியத்தில்  வீட்டில் எவர் சொல்லியும் கேட்காமல் கிளம்பினான். திருவாலங்காட்டை அடைந்த அவனை   காத்திருந்த நீலி அடையாளம் புரிந்துகொண்டாள் . அழகிய பெண்ணாக மாறி அவனை அழைத்தாள்., தரிசனன் அவள் வலையில் விழவில்லை. இடுப்பில்  மந்திரக்கத்தி வேறு  . ஆகவே நீலியால் தரிசனனை நெருங்க முடியவில்லை.    தரிசனனின் மனைவி நவஞானியாக உரு  மாறி  தலைவிரி கோலமாக, அழுது கொண்டு இடுப்பில் ஒரு கள்ளிமர  கட்டையை குழந்தையாக்கி வைத்துக்கொண்டு பழையனூரில்அழுது  புரண்டு  அட்டகாசம் பண்ணி எல்லோர்  இரக்கத்தையும் சம்பாதித்தாள்.

”ஐயோ இது என்ன கொடுமை, என் புருஷன் என்னையும் குழந்தையும் விட்டு பிரிகிறாரே,  ஊரார் இதை தடுத்து அவரை என்னோடு சேர்த்து வைக்க நீதி வழங்கக் கூடாதா. உங்களிடம்  சொன்னதால்  என்னை கொன்று  விடுவார். அவரிடம் ஒரு கத்தி மறைத்து வைத்திருப்பார். அதை பிடுங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என்று அலறுகிறாள். அழுகிறாள்.  பஞ்சாயத்து கூடியது.
”ஐயோ, நம்பாதீர்கள்,  இது ஒரு பேய்,  என் மனைவி இல்லை ” என  தரிசனன் கத்தினாலும் வேளாளர்கள்  நம்பவில்லை. அவனிடம் கத்தி இருந்தது அவளை நம்பவைத்தது.

”சாமி நீங்க பயப்படாதீங்க உங்க  புருஷன் பொண்டாட்டி சண்டையை தனியாக இன்னிக்கு பேசி தீத்துக் கிடுங்க. நாங்க இருக்கிறோம். தைரியமா போங்க. உங்க உயிருக்கு ஏதாவது ஆபத்துன்னா  நாங்க  எழுபது  பேரும் அப்போதே  உயிரை விட்டுவிடுவோம் என்று அருகே சாட்சி பூதேஸ்வரர் முன்னால்  சத்தியம் செயது, சமாதானம், தைர்யம் சொல்லி  தரிசனனை நீலியோடு அனுப்பினார்கள்.
மறுநாள்  காலை  தரிசனன்  அவர்கள் தங்கியிருந்த சத்திரத்தில் பிணமாக கிடந்தான். நீலியை காணோம்.
உண்மை விளங்கியபின் எழுபது  வேளாளர்களும் சாட்சிபூதேஸ்வரர் ஆலயம் முன்பு தீக்குளித்த  இடம் பழையனூரில் இப்போது ஒரு குளமாக  இருக்கிறது. பார்த்தேன். .

சிதிலமான சிறிய சாட்சி  பூதேஸ்வரர் கோவில்  எதிரே  தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலை வைத்திருக்கிறார்கள்.

சேக்கிழார் பெரியபுராணத்தில்  நீலி பற்றி வருகிறது.
‘நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுதொண்டர் நவைவந்
துற்றபோது தம்முயிரையும் வணிகனுக் கொடுகாற்
சொற்றமெய்ம் மையுந்தூக்கியச் சொல்லையே காக்கப்
பெற்றமேன் மையினிகழ்ந்தது பெருந் தொண்டை நாடு’

சேக்கிழார் புராணத்திலும்  இந்த நீலி கதை வருகிறது.  பொய்யாக யாராவது அழுது கண்ணீர் பெருக்கினால் நீலிக் கண்ணீர் என்ற பெயரும்  நமது சமூகத்தில் நிலைத்துவிட்டது.
ஸ்ரீனிவாசன் காரில் திருவள்ளூர் வந்து  அக்ஷயா உணவகத்தில் தோசை சாப்பிடும் வரை நீலியும்  என்  பால்ய நண்பன்  பேய்க்கதை சொக்கலிங்கமும்  ஒன்றாக  நினைவில் இருந்தார்கள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *