26.02.2023 AALAYA DHARSHAN J K SIVAN

26/02/23  ஆலய  தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN
காவேரிப்பாக்கம்  முக்தீஸ்வரர் ஆலயம் 

அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  கிட்டத்தட்ட  ரெண்டு மணி நேரம் ஓடி பழந்தண்டலத்திலிருந்து வளைந்து நெளிந்து, குதித்து, சருக்கி, திருமுடிவாக்கம்,  சந்தவேளூர்,  அமரம்பேடு, பிள்ளைப்பக்கம்,  மொளச்சூர்,  சுங்குவார் சத்திரம் நீர்வளூர், ஆட்டு புத்தூர்  என்று என்னென்னமோ ஊர்களை எல்லாம் கடந்து  காவேரிப்பாக்கம் வந்தபோது மத்தியானம் 12 மணிக்கு மேல்.   நிச்சயம்  முக்தீஸ்வரர் ஆலயம் திறந்திருக்காது, தரிசனம் கிடைக்காது என்று தீர்மானமாகிவிட்டது. இருந்தாலும் பார்ப்போமே என்ற  அசட்டு தைர்யம்.  அமைதியான எளிமையான ஊர். கோவில் கம்பி கதவு பூட்டி இருந்தாலும் உள்ளே பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன.  கோவில் எதிரே ஒரு சிறிய  வீட்டில் ஒரு பெண்மணி உட்காரச் சொன்னாள்.  அவளிடம்  நாங்கள் எப்படியாவது கோவில் தரிசனம் பெறவழி இருக்கிறதா இவ்வளவு தூரம் வந்திருக் கிறோம், மறுபடியும் வருவது துர்லபமாயிற்றே, என்று  வருத்தமாக சொன்னபோது, ஒரு சொம்பு  தண்ணீர்  குடிக்கக்  கொடுத்தவள் .இந்தக்  கோவிலை ஒரு பையன் நாராயணன்  என்பவன் தான் பார்த்துக் கொள்கி றான் என்று வாசலில் அங்குமிங்கும் எதையோ  தேடியவள்  அதோ அவன் ஸ்கூட்டர் நிற்கிறது. இங்கே தான் எங்கேயோ இருப்பான் கூப்பிடுகிறேன் என்று அவனை   டெலிபோனில் அழைத்தாள் . அரைமணிக்குள்  நாராயணன் சாவியோடு வந்தான்.   சந்நிதிகளுக்கு  அழைத்து சென்று  தரிசனம் செய்வித்தான்.  சேஷாத்ரி ஸ்வாமிகள் அருள்,  எங்கள் வயிற்றில் பால் வார்த்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய பழைய சம்பவம்  ஞாபகப்படுத்திக் கொள்வோம்: காஞ்சிபுரத்தில்  ஏகாம்பரேஸ்வரர்  ஆலயம் அருகே  சர்வ தீர்த்தத்தில்  வடக்கத்திய  பால யோகி பாலாஜி ஸ்வாமிகளிடம் சன்யாச தீக்ஷை பெற்ற சேஷாத்ரிக்கு அவருடைய  அப்பா ஸ்ரார்த்தம்   நடந்தது.”அது முடியற வரைக்குமாவது வீட்டில் இரு”   என்று சித்தப்பா  ராமசுவாமி ஜோஸ்யர்  ஸ்வாமிகளை ஒரு அறையில் விட்டு கதவைப் பூட்டிவிட்டார். ஸ்ரார்த்தம் முடிந்து கதவைத் திறந்து பார்த்தால்  அறை  காலி.  பூட்டி இருந்த அறையிலிருந்து ஸ்வாமிகள் எங்கே மறைந்து விட்டார்?
காஞ்சிபுரத்திலிருந்து  25 கிமீ. தூரத்தில் காவேரிப்பாக்கத்தில் இந்த  முக்தீஸ்வரர் ஆலயத்தில் நாராயண மண்டபம் என்று ஒரு மண்டபம் இருக்கிறது . சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு அந்த இடமே தெரியாதே. அவ்வளவு  சீக்கிரம்  அதில்  எப்படிப் போய் உட்கார்ந்தார்? அவ்வளவு தூரம் வழி எப்படி தெரிந்தது? அந்த ஊரில் இருந்த ஸ்வாமிகளுடைய பெரியம்மா பிள்ளை சேஷய்யர்  வழக்கம்போல்  முக்தீஸ்வரரை தரிசனம் செய்தவர் கண்களில் தாடியும் மீசையுமாக சேஷாத்திரி மண்டபத்தில் உட்கார்ந்திருந்தது  அடையாளம் தெரிந்து சித்தப்பா ராமஸ்வாமி  ஐயருக்கு  சேதி சென்று  அவர்  ஓடிவந்தார். அவர்கள் வரும்போது  சேஷாத்ரி ஸ்வாமிகள் கோவில் வளாகத்தில் பின்னால்  இருக்கும் புன்னை  மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். நம்மைப்  போல் சும்மா இல்லை?  நீளமான பெரிய  கருநாகம் ஒன்று  புன்னைமரத்திலிருந்து இறங்கி  படம் விரித்து எதிரே ”உஸ்” என்று  சீறிக்கொண்டு   நின்று கொண்டிருந்தது. தியானம்  பண்ணிக் கொண்டிருந்த சேஷாத்ரி  அதைக் கண்டு மகிழ்ந்து அன்போடு  ”என்கிட்டே வா”என்று அழைக்க, அது சர சர வென்று அவர் மீது ஊர்ந்து அவரது மார்பின் வழியாக கழுத்தை மூன்று முறைச் சுற்றிக் கொண்டு பின் தலையின் மேல் ஏறிக்கொண்டு  நின்று படம் எடுத்தது. அதற்குள் கோவிலில் இந்த ஆச்சர்யத்தைக்  கண்டு பெரிய கூட்டம் கூடிவிட்டது. கும்பல் சேர்ந்தவுடன் ஸ்வாமிகள் ”நீ போடா’ என்று சொல்ல, சர்ப்பம்  அவர் மீதிருந்து இறங்கி  புதர்களுக்குள்  மறைந்தது.
காவேரிப்பாக்கம்  முக்தீஸ்வரர்  கோவிலில்   ந்த நாராயண மண்டபத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.  நாகம் இருந்த  புன்னை மரம் இன்னும் இருக்கிறது. பார்த்து வணங்கினேன். வாழும் பாம்பு இன்னும் அங்கே புற்றில் இருப்பதாக  நாராயணன் சொன்னான்.
சேஷாத்ரி  ஸ்வாமிகள் வருவதற்கு முன் காவேரிப்பாக்கம் சிவன் கோவிலில் சிவன் பெயர்  வேதபுரீஸ்வரர், ஸ்வாமிகள் முக்தி அடைய காரணமாக இருந்ததால்  முக்தீஸ்வரர் என்ற பெயர் பரவலாகி இன்றும் அவரை முக்தீஸ்வரராக வழிபடுகிறோம்.  அம்பாள் அழகிய  அலங்காரவல்லி.  பழைய  ஆயிரம் வருஷ  ஐந்து நிலை  ராஜகோபுர கோவில். மஹா  மண்டப தெற்குப்புற வாசல்.  பலிபீடம், கொடிமரம்,  ரிஷபம் ஜம்மென்று கால் மடக்கி உட்கார்ந்திருக்கிறது.  கோஷ்டத்தில்  விநாயகர்,  வள்ளி தேவசேனா சமேத முருகன், தக்ஷிணா மூர்த்தி,  லிங்கோத்பவர்,  ப்ரம்மா,  சண்டிகேஸ்வரர், துர்க்கை.பைரவர்  காட்சி தருகிறார்கள்.  லிங்கம் ஸ்வயம்பு.கோவில் வளாகத்தில் ஒரு புற்று மண்டபம் இருக்கிறது. அதில்  அநேக வண்ண சிலைகள் பார்க்க அழகாக  இருக்கிறது.நவகிரஹங்களில் ஒரு விசேஷம்  ராகு  ஆமை வாகனத்தில்,  சனைஸ்வரர் கருடவாகனத்தில். தனி சந்நிதியில் அலங்காரவல்லி.  இந்த  கோவிலில் சில அற்புத விஷயங்களை  நாராயணன் சொன்னான்.
நாராயணன் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி. ஒரு க்ஷத்ரிய வாலிபன்.  இளம் வயதிலேயே  இந்த முக்தீஸ்வரர் ஆலயத்தின் மேல் ஒரு  ஈர்ப்பு.  கோவிலில் மடப்பள்ளியில்   தங்கி சேவை புரிபவன். கோவிலே மூச்சு என்று தன்னை அர்பணித்துக்  கொண்டிருக்கிறான். அவன் மூலம் சிலர் உதவியோடு தான் முத்தீஸ்வரர் ஆலயம் ஊர்ந்து  கொண்டிருக்கிறது  என்று அறிய முடிந்தது.  மிகப் புராதனமான ஆலயம்,  சேஷாத்ரி ஸ்வாமிகள் சம்பந்தப்பட்டது என்று பலர்  அறிவதால்  அடிக்கடி பக்தர்கள் வருகிறார்கள். நிச்சயம் ஏதோ ஒரு நிர்வாகம் இதை பராமரிக்க இருக்கவேண்டும்.  ஆனால்  பெரிதாக  ஆலயம்  வளரா விட்டாலும்இருப்பது பறிபோய் விடக்கூடாதே  என்ற  கவலையைத்  தருகிறது அதன் தோற்றம்..
நாராயணன் மூலம் அறிந்த விஷயங்கள்:
ஸ்ரீமந்  நாராயணனே  பூஜிக்கும்  சிவலிங்கம்  சிலை அற்புதமாக உள்ளது.அழகான  துர்க்கை எதிரே கண்ணாடியில் தன் அலங்காரத்தை பார்த்து மகிழ்பவள். அவளும் ஒரு அலங்கார வல்லியாக இருக்கிறாள்.  தசாவதார தூண்  பழமை வாய்ந்தது.  அதன் மேல்  பாகத்தில் காமாக்ஷி  மண்ணில் சிவலிங்கம் வடித்து அணைத்துக்  கொண்டிருப்பது,  கீழ் பாகத்தில்  ஒற்றைக்காலில் தவமிருப்பது  ராவணன் எதிரே  ஹனுமார்  வால்  கோட்டை மேல் அமர்ந்திருப்பது  போன்ற  சிற்பங்கள்  தத்ரூபம்.  தசாவதாரமூர்த்திகள்   சிவனை வழிபடுவது அபூர்வமான காட்சி. சிற்பங்கள் அபாரம்.  நிறைய கோவில்களில் நமக்கு இவற்றையெல்லாம் யாரும் தெரிவிப்பதில்லை, அநேக அதிசயங்களை, அற்புதங்களை நாம் அறியாமல் திரும்புகிறோம். விவரங்கள் எழுத்திலுமில்லை.
கோவிலிலேயே தங்கும் நாராயணனுக்கு அடிக்கடி  இரவுகளில் விடிகாலையில் அம்பாள் அலங்காரவல்லி, துர்க்கையின்  நடமாட்டம் தென் படுகிறதாம், கொலுசு சப்தம் கேட்கிறதாம்.
கோவிலில்  சில  பசுக்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் நாராயணனின்  நெருங்கிய உறவினர்கள், எல்லோருக்கும் பெயர்கள் உண்டு. அவன் கூப்பிட்டால் ஓடி வருகிறது. அப்படியே சில பைரவர்களை அவனோடு வாத்சல்யமாக இருக்கிறார்கள்.  அவர்களோடு நான்  ஒரு பயம் கலந்த மரியாதையோடு நெருங்கி உறவு கொண்டாடவில்லை.
கோவிலை யார் பராமரிக்கிறார்கள் என்ற கேள்விக்கு  சரியான புரியும்படியாக பதிலில்லை.  நாராயணன் பொறுப்பில் இருப்பதால் அவன் தனது வங்கிக் கணக்கில் நண்கொடை பெற்று செலவு செய்து வருவ தாக புரிந்து கொண்டேன்.  அவன் வங்கிக் கணக்கு விபரம் இணைத்துள்ளேன்.  இவ்வளவு பெரிய  புனிதமான  கோவிலுக்கு யாரேனும் பொறுப்பாக இருப்பார்களே? இல்லையா? உள்ளூர்க்காரர்கள் நிர்வாக விஷயமாக  எந்த விவரமும் ஆலயத்தில்  கண்ணில்  படவில்லை.
எது எப்படியோ,  என்னைப்  பொறுத்தவரை எத்தனையோ புராதன ஆலயங்கள் கேட்பாரின்றி,  அகல் விளக்குகள் கூட  எரியாமல், விகிரஹம் கோவில்சுவர்கள்  தூண்கள் சிதிலமடைந்து கண்ணில் ரத்தம் வரும் நிலையில், ஒரு சில நாராயணன்கள்  ஏதோ தினமும் கோவிலைத் திறந்து,விளக்கேற்றி,ஏதோ நைவேத்தியம் அர்ப்பணித்து, அபிஷேகம்  அர்ச்சனை செய்து நம்மைப் போல் வரும் பக்தர்களுக்கு  சந்தோஷத்தோடு  விஷயங்கள் எடுத்துச் சொல்லி அற்புதங்களைக் காட்டுவதற்காகவாவது  என்றோ ஒருநாள் யாரோ பொறுப்பேற்கும் வரை  அவர்களுக்கு சிறிது நிதி உதவி செய்து கோவிலை சிறப்பாக  பராமரிக்க உற்சாகம் அளிக்கவேண்டியது அவசியமாகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

  1. உங்களுடைய தெரியாத கோயில்களைப்பற்றி விவரங்கள் தரும் பணி செவ்வனே நடக்க, இறைவன் அருள் புரியட்டும் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *