VITTAL STORIES – EKNATH – J K SIVAN

தெவிட்டாத விட்டலா  –  நங்கநல்லூர்  J K  SIVAN ஏக்நாத்தின் கோபம்

முன்பெல்லாம்  சீட்டாடுவது, சீட்டியடிப்பது, ஓட்டலில் சாப்பிடுவது, கடையில் டீ  குடிப்பது எல்லாம் ரொம்ப  கெட்ட பழக்கம்.  சீட்டாடுவது அந்தக் காலத்தில்  மட்டும் அல்ல எந்தக்  காலத்திலும் எல்லா ஊர்களிலும்  மக்களிடமும் காணப்பட்ட ஒரு பழக்கம். காசு வைத்து ஆடுவது அதில் ஒரு கெட்ட விஷயம் என்பது தெரிந்தாலும் அது என்னவோ இன்று  வரை தொடர்கிறது. காசு வைத்து இழப்பது, சில நாள் சில பேர் ஜெயிப்பது. ஜெயித்தவர் மகிழ்வது. இழந்தவர் மற்றவர்களை உசுப்பி விடுவது எல்லாம் நாம் அறிந்த விஷயம். இது பாண்டுரங்க பக்தர் ஏக நாத் காலத்திலும் இருந்தது.,நமது கதையில் வரும் ஒரு சிலர் அவ்வாறு அடிக்கடி  பொது இடங்களில்  சந்தித்துக்  கொள்வது , சீட்டு  விளையாடுவது மட்டுமல்ல அவர்கள் ஊர்  வம்பு  பேச்சும் அதோடு  வளரும்!! . ஒருநாள் அவர்கள் சீட்டு விளையாடும்போது எவனோ தோற்று விட்டான். அவனுக்கு கோபம் பீரிட்டு வந்தது. தோற்றவனுக்கு கோபம் தான் அதிகம் வருமே!. ஏதோ அவர்கள் பேச்சு வளர்ந்தது. சண்டையில் முற்றியது.
“நீ கோப படாமல் இரேன்!” என்று  மற்றொருவன்  அட்வைஸ் கொடுத்தான். “டேய் நான் என்ன ஏக் நாத்தா, பேசாமல், கோபப்படாமல் இருக்க? ” என்று  தோற்றவன் சொன்னான் . பேச்சு திசை திரும்பியது.”அப்படி என்ன ஏக்  நாத்  கோபப் படாமல் இருப்பதற்கு, அவர் என்ன பயந்தாங் கொள்ளியா?  என்றான் ஒருவன். ”ஏக் நாத் மனிஷன் தானே,.  கோபம் வராமலா இருக்கும்?  எங்கே  கோபமே படாத ஒருத்தனைக்  காட்டுபார்க்கலாம் ?”என்றான் இன்னொருவன்.”ஏக் நாத்துக்கு  சூடு சுரணை இல்லையோ என்னவோ” என்று ஒருவன் ஏக்நாத்தை கேலி செய்து  சிரித்தான்  .
” நீ என்ன வேணுமானாலும் சொல்லிக்கொள். ஏக்  நாத்துக்கு  கோபமே வராது ” என  ஆணித்தரமாக அடித்துச் சொன்னான் ஒருவன். அவனுக்கு பாண்டுரங்க பக்தர்  சாது  ஏக் நாத்தை நன்றாக  தெரியும்.  பழக்கம்.
“எங்களால்  அதெல்லாம் நம்ப முடியாது. மனிதன் என்றால் கோபம் இல்லாதவனே கிடையாது.ஏக் நாத்துக்கும் கோபம் வரத்தான் செய்யும். மனுஷன் தானே ” என்று பதில் வந்தது.
” நிச்சயம் அப்படியில்லை எனக்கு  ஏக் நாத்தை  நன்றாகவே தெரியும். நான் அவரை பார்த்திருக்கிறேன் அவர் கோபப் பட்டதே இல்லை” என்றான் அவரைத் தெரிந்தவன்.
” நான் இல்லை என்கிறேன். அவருக்கும் கோபம் வரும்”
” நிச்சயம்  இல்லை. அவருக்கு கோபமே கிடையாது.” சீட்டாட்டக்  குழு அல்லவா. அந்த தோரணையிலேயே பேச்சு தொடர்ந்தது
“என்ன பெட் வக்கிறே அவருக்கு கோபம் வரும். அப்படி இல்லை என்றாலும் கோபத்தை நான் வரவழைக்கிறேன்?”
” உன்னால் தலை கீழே நின்றாலும் முடியாது!”
” சரி, ஆளுக்கு நூறு நூறு ரூபாய் வையுங்கடா. நான்  சீட்டாட்டத்தில் தோத்ததை இதிலே எடுக்கிறேன்!!”எல்லோரும் ஒப்புக்கொண்ட பிறகு பெட் வைத்தவன் மறு நாள் காலை அவர்கள் திட்டப் படியே நேரே ஏக் நாதர் வீட்டுக்கு அருகே போய்  நின்றான் . மற்றவர்கள் அருகே நின்று அவனைப்  பார்த்துக் கொண்டே இருக்க, ஏக் நாதர் வீட்டை விட்டு அதிகாலை கோதாவரி ஆற்றங்கரைக்கு ஸ்நானத்துக்கு வழக்கம்போல புறப்பட்டார். அவர் வாயினின்றும் விட்டல நாமம் தேனாக பொழிய நேராக கோதாவரி ஆற்றங்கரைக்கு சென்றார். ஸ்னானனம் முடிந்து ஏக்நாத் வீடு திரும்பிக்  கொண்டிருந்தார்.வீட்டுக்குள் அவர் நுழையும்  முன்பு வாயில் தாம்பூலம் குதப்பி தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்த  அந்த சீட்டாட்ட கும்பல் ஆள், பெட் வைத்தவன்,  அவர் முகத்தில் எச்சிலோடு தாம்பூலத்தை உமிழ்ந்தான். ஒரு நிமிஷம் அதிர்ந்து போன ஏக்நாத், ஒரு க்ஷணம் திகைத்து விட்டு, மீண்டும் ஒன்றும் பேசாமல் கோதாவரிக்கு திரும்பி மறுபடியும் ஸ்நானம் செய்து விட்டு திரும்பினார்.
மறுபடியும் அதே நடந்தது. மீண்டும் சளைக்காமல் அவர் கோதாவரி ஸ்நானம் தொடர்ந்தது.
இது போல் மூன்று நான்கு முறை நடந்தும் துளிக்கூட பதட்டப்படாமல், உணர்ச்சி வசப் படாமல், விட்டல நாமத்தை விடாமல்  உச்சரித்துக் கொண்டே ஏகநாதர் திரும்ப திரும்ப ஸ்நானம் செய்து திரும்பினதைக் கண்டதும் அந்த கும்பல் அப்படியே அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது.
ஏக்நாத் அவர்களைக்  கட்டி தழுவி “உங்களில் யாரப்பா என் மீது தாம்பூலம் உமிழ்ந்த மகான்” என்று பதவிசாக கேட்டதும் அந்த பெட் வைத்த மனிதன் துடித்து போய் விட்டான். கைகளை தலை மேல் கூப்பி அவர் காலில் கண்ணீர் மல்க தடால் என்று விழுந்தான்.
“ஸ்வாமி நான் மகா பாவி. தங்களுக்கு எவ்வளவு பெரிய தீங்கை இழைத்து விட்டேன். இனி இந்த ஜன்மத்தில் யாருக்குமே தீங்கு செய்ய மாட்டேன் ” என்றான். அவன் குரலில் தெளிவு இருந்தது.
அப்போது ஏக்நாத் என்ன சொன்னார் தெரியுமா?
“அப்பா மகானுபாவா, உனக்கு கோடி புண்யம் உண்டப்பா. கவலையே  துளியும்  படாதே. நீ அவ்வாறு செய்ததால் இன்று ஏகாதசி, விட்டலனை நான் நான்கு ஐந்து முறை புண்ய நதி கோதாவரி ஸ்நானம் செய்து வழிபட முடிந்தது . நன்றி நான் சொல்லவேண்டியவன்” என்று அவன் காலைத் தொட்டு வணங்கினார்
பெட் வைத்தவன் பணம் வென்றானா? மற்றவர்கள் அவனுக்கு தத்தம் பங்கு பணம் தந்தார்களா? என்று ஆராய்ச்சி செய்து எழுதினால் ஏக்நாத்துடைய சிறந்த குணத்தை பற்றி பேசாமல் சீட்டாட்டம் ஆடுவதில் புத்தி போய்விடும் அல்லவா. மேலும் ஏக்நாத் மகிமையை இகழ்ந்ததாகும் அல்லவா?
அவர்கள் சீட்டாட்டம் விட்டு திருந்தி அவருடைய பக்தர்களானார்கள் என்று எழுதி முடிப்பது அல்லவோ சால சிறந்தது!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

One comment

  1. A beautiful post. I have read about என்னத்தை and Tukaram. Will be grateful if you can enlighten about Gnandev, Muktabhai and other devotees of Panduranga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *