BAJAGOVINDAM SLOKAS 13 & 14 J K SIVAN

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 13–14

13. काते कान्ता धन गतचिन्ता वातुल किं तव नास्ति नियन्ता । त्रिजगति सज्जनसं गतिरैका भवति भवार्णवतरणे नौका ॥ १३॥

kathe kanthaa, thana gatha chinthaa, vaathula kim thava naasthi niyanthaa thrijagathi sajjana sangathi reikaa bavathi bavaarnava tharane nowkaa 13

காதே காந்தா, தன கத சிந்தா, வாதூல கிம் தவ நாஸ்தி நியந்தா த்ரிஜகதி ஸஜ்ஜன சங்கதி ரெய்கா பார்வதி பாவார்னவ தரனே நௌகா

இந்த ஸ்லோகம் ஆதி சங்கரரின் சிஷ்யர் பத்மபாதரால் எழுதப்பட்டது. பத்ம பாதர் பற்றிய ஒரு வரி கதை சொல்கிறேன்.

சனந்தனன் கொஞ்சம் மந்தம் ஆனாலும் குரு பக்தி சிகாமணி. ஆதிசங்கரரின் அபிமான சிஷ்யன். மற்ற சிஷ்யர்களுக்கு பொறாமை. அவனிடம் எதற்காக எ ஆசார்யன் இவ்வளவு அபிமானமாக இருக்கிறார்? இது சங்கரருக்கு தெரியாதா? சநந்தனிடம் இருக்கும் விசேஷ குணத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்ட சங்கரர் ஒருநாள் கங்கையின் அக்கரையில் குருவின் காவி வஸ்திரங்களைத் துவைத்துக் கொண்டிருந்த சநந்தனை இக்கரையிலிருந்தபடியே ” ஹே, சனந்தனா, உடனே வா என்னிடம் ” என்றழைக்க, வெள்ளம் கரை புரண்டோடும் கங்கையைக் கடக்க ஓடமோ படகோ இல்லாவிட்டாலும் அடுத்த கணமே துளியும் சிந்திக்காமல் ‘ஓ’ வென்ற பேரிரைச்சலுடன் ஓடிய கங்கா ப்ரவாஹ நீரில் இறங்கி குருவை அடைய சநந்தனன் நடக்க ஆரம்பிக்க, அவனது குரு பக்தியை மெச்சி கங்கா தேவி சநந்தனன் அடி யெடுத்து வைத்த ஒவ்வொரு பாதத்தின் கீழேயும் ஒரு பெரிய தாமரையை வைத்து அவன் கங்கையை கடக்க உதவியதால், உயிரைத் திரணமாக மதித்த சனந்தனன் அன்று முதல் பத்ம பாதர் (தாமரை மேல் பாதம் வைத்தவர்) என்ற பெயர் பெற்றார்.

இனி மேலே உள்ள பஜகோவிந்த ஸ்லோகத்தின் அர்த்தம்: ”அடே , மூட மனிதா, செல்வத்தின் மீது இத்தனை பாசமா, மோகமா, ஆசையா உனக்கு ? அதனால் தான் அதைப்பற்றியே சதா எண்ணமா? சிந்தனையா? இதன் தீமை பற்றி சொல்ல உனக்கு யாரும் கிடைக்கவில்லையா ? புரிந்து கொள், இந்த சம்சாரம் என்கிற கடலைக் கடக்க உனக்கு எது தெரியுமா தோணி?, நல்லவர்கள் சேர்க்கை, சத் சங்கம் ஒன்றே தான். ஓடு, ”கோவிந்தா கோவிந்தா” என்று அவன் நாமத்தை பஜித்துக் கொண்டு அவர்களைத் தேடி பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள் . போகிற வழிக்கு புண்ணியத்தை தேடு. அது தான் கோவிந்தனின் திவ்ய நாமம்.

இன்றைக்கும் அப்போது போல் நேபாளம் முழுக்க முழுக்க ஒரு ஹிந்து தேசம். அங்கே கண்டகி நதியில், கரையில் சாளக்ராமங்கள் நிறைய, விதவிதமாக கிடைக்கிறது. விஷ்ணுவின் அம்சம் அவை. சங்கு சக்ரம் இயற்கையாகவே அதில் பார்க்கலாம். ஹிந்துக்களால் இல்லத்திலும் ஆலயத்திலும் பூஜிக்கப்படுபவை. காஞ்சி காமகோடி பீடத்திலும் பூஜையில் சாளக்ராமம் உண்டு. அது நரசிம்மரால் ஆதி சங்கரருக்கு அளிக்கப்பட்டது. நரசிம்ம அம்சம் கொண்ட சாளக்ராமம்.

பத்மபாதர் தான் பூரி கோவர்தன மடத்தின் முதல் அதிபதி. அவர் தான் கேரளத்தில் திரிசூரில் தெக்கே மடம் என்ற மடத்தை ஸ்தாபித்தவர். அவர் ஒரு நம்பூதிரி பிராமணன், வேமனில்லம் எனும் குடும்பத்தை சேர்ந்தவர் என்கிறார்கள். ஆனால் அவர் சரித்திரம் அவர் சோழ தேசகாரர் என்கிறது. பத்ம பாதர் பஞ்ச பாதிகா எனும் நூலை இயற்றியவர். இது சங்கரர் விருப்பப்படி பத்மபாதர் ப்ரஹ்மசூத்ர பாஷ்யத்துக்கு எழுதிய ஒரு வியாக்கியானம் ஆகும்.

14. जटिलो मुण्डी लुञ्छितकेशः काषायाम्बरबहुकृतवेषः ।पश्यन्नपि चन पश्यति मूढः उदरनिमित्तं बहुकृतवेषः ॥ १४॥

Jatilo mundee lunchhitakesah kaashaayaambara bahukritavesha pasyannapi cha na pasyati moodho udaranimittam bahukritaveshah…
ஜடிலோ முண்டி லுஞ்சித கேச: காஷாயாம்பர பஹுக்ரித வேஷ: பச்யன்னபி ச ந பச்யதி மூடோ உதர நிமித்தம் பஹுக்ரித வேஷா.

இந்த ஸ்லோகம் தோடகாசார்யர் எழுதியது.
சரளமாக நாக்கில் புரளும் இந்த ஸ்லோகத்தில் அவர் அறை கூவுவது இது தான்:
சில சாமியார்களை பற்றி அந்த காலத்திலே கூட கொஞ்சம் நல்ல சர்டிபிகேட் இல்லை போலிருக்கிறது. . (மறு
படியும் அழுத்தி சொல்கிறேன். சிலரைப் பற்றி மட்டும் தான். )

ஆனால் பொதுப்படையாக, முழுக்க முழுக்க தாடி மீசை, ஜடா முடி, சடை முடி யோடோ, அல்லது மழுங்க மொட்டையோ, இப்படியும் இன்றி, அப்படியும் இன்றி, அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் ரெண்டுங் கெட்டானாகவோ, காவி தலையிலிருந்து கால் வரை சுற்றிக் கொண்டோ இருப்பது எல்லாமே சோற்றுக் காகவும், உலக சுகபோகத்துக்காகவும் போடும் வெறும் வேஷம் தான் என்கிறார் தோடகர்.
நமது வள்ளுவரும் கூட இதே கருத்து கொண்டவர் தானே.
”மழித்தலும் நீட்டலும் வேண்டாவாம் யாக்கைக்கு உலகம் பழித்ததை ஒழுத்துவிட்டால் ” என்று. உலகம் வேண்டாம் செய்யாதே என்று ஒதுக்கும் செயல்களை புறக்கணித்தால் போதும், தனியாக தான் ரொம்ப உசத்தியானவன் என்று காட்டிக்கொள்ள வேஷம் வேண்டாமே என்கிறார்.

கண்ணும் மனதும் எதைக் காண வேண்டுமோ அதைப் பார்க்க தவறிவிட்டால், பிறகு இப்படி ஒரு வேஷத்தால் அவர்கள் எதிர்பார்ப்பது அந்த ஒரு சாண் வயிற்றை விடாமல் நிரப்பவே.

ஒரு தரமாவது அந்த கோவிந்தனைப் பாடி உண்மையைப் புரிந்து கொள்வோம். இந்த வேஷம் வேண்டாமே! பேசாமல் கோவிந்தா கோவிந்தா என்ற ஸ்மரணை இருந்தாலே போதும். சொல்லிக்கொண்டே இருந்தால் தான் பழக்கத்தில் வரும். முன்பெல்லாம், பெரியோர்கள் சாப்பிடும் போது கூட கோவிந்த, கோவிந்த, கோவிந்த’ என்று சொல்வார்கள். “சாப்பிடும் போது, கோவிந்த’ என்று சொன்னால், அந்த மனோபாவத் தோடு அன்னம் உள்ளே போனால், அது பரமாத்ம தியானம் உண்டாக அனுகூலம் செய்யும். கோவிந்த சப்தத் தோடு கூடிய அன்ன ரஸம் உடம்பில் சேரச்சேர ஈச்வர ஞாபகம் விருத்தியாகும்.

தினந்தோறும் போஜனம் பண்ணும் போது, ‘கோவிந்த’ என்ற நாமாவைச் சொல்லப் பழக வேண்டும். நான் தண்ணீர் குடிக்கும் முன்பு கூட கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லும் பழக்கத்தை வைத்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நாம் சாப்பிடாமல் இருக்கவே மாட்டோம். ஆகவே சாப்பிடும்போதும் எதையாவது பருகும்போதுமாவது ”கோவிந்தா” என்று சொல்லும் பழக்கத்தால் கோவிந்த நாமோச்சாரணமும் பழக்கமாகிவிடும். நல்லது தானே ஸார் இன்றிலிருந்து ஆரம்பிக்கலாமே!.

ஆதி சங்கரர் போன்ற மஹான்கள் ஒரு வார்த்தையைச் சொன்னால் அது கல்ப கோடி காலம் ஆனாலும், அழியாமல் வளர்ந்து விளங்கிக்கொண்டு வருகிறது’ என்பதை இதிலிருந்து நிதர்சனமாக நாம் தெரிந்து கொள்ளலாம். நாம் அநேக காரியங்களைச் செய்கிறோம். அதைச் செய்யும்போது கூடவே பகவானுடைய நாமத்தில் முக்கியமாக ஒரு கவனம் இருந்தால் அது உன்னதம். தனியாக உட்கார்ந்து பகவானைத் தியானிப்பது கஷ்டம். மனது எங்கோ ஓடிவிடும். பகவான் நமக்குக் கொடுத்திருக்கும் நாக்கைக் கொண்டே நாமாவளியைச் சொல்லிக்கொண்டே வரலாமே. சுலபாமாயிற்றே.

நம்முடைய கடைசிப் பிரயாண காலத்தில் பகவந்நாமத்தை ஒரு முறை நினைத்து விட்டால், அதுவே நமக்கு எல்லாப் பலனையும் கொடுத்து விடும். இதையே கிருஷ்ணன் கீதையில் 8-10ல் சொல்கிறான்:

प्रयाणकाले मनसाचलेन भक्त्य‍ा युक्तो योगबलेन चैव । भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्य- क्स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ १० ॥
prayāṇa-kāle manasācalena bhaktyā yukto yoga-balena caiva bhruvor madhye prāṇam āveśya samyak sa taṁ paraṁ
puruṣam upaiti divyam

எவனொருவன் மரணாந்த காலத்தில் இரு புருவங்களுக்குமிடையே (ஆக்ஞா சக்ரம்) யோகசக்தியால், பிராணனைக் கொண்டு நிறுத்துகிறானோ, பகவானை தியானிக்கிறானோ, அவன் பகவானையே அடைகிறான்.
சாகும் தருணத்தில் பகவந்நாமாவைச் சொன்னால் போதும்; அதைப்பற்றி இப்பொழுது என்ன கவலை” என்று இருந்தால், ஏமாந்து போக வேண்டியது தான். அதனால் தான் ஆழ்வார் ஒருவர் சொன்ன ஐடியா ரொம்ப அற்புதம். அப்போதைக்கு இப்போதே, இன்று முதல், கோவிந்தா கோவிந்தா என்று இந்த நாக்கைப் பழக்கிக்கொண்டு வந்தால் தான் கடைசி தருணத்தில் பகவந்நாமா நம் நாக்கில் வருவதற்கும் அதன் மூலமாய் பகவானை ஸ்மரிக்கவும் முடியும்; காந்திஜியால் அதனால் தான் துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்த போதும் ”ஹே ராம் ஹே ராம் ”என்று சொல்ல முடிந்தது.
கீதையில் (இன்னொரு ஸ்லோகம் 8-5 ) இது பற்றியே சொல்கிறதே.

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् । य: प्रयाति स मद्भ‍ावं याति नास्त्यत्र संशय: ॥ ५ ॥
anta-kāle ca mām eva smaran muktvā kalevaram yaḥ prayāti sa mad-bhāvaṁ yāti nāsty atra saṁśayaḥ

எவனொருவன் கடைசி நேரத்தில் என்னை நினைக்கிறானோ, என் நாமத்தைச் சொல்கிறானோ, அவன் என்னையே அடைகிறான்”- கிருஷ்ணனின் காரண்டீ.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *