RASA AASWATHA NISHANGINI J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி நங்கநல்லூர் J K SIVAN
ரஸ நிஷ்யந்தினி

யாரிந்த ராமன் தெரியுமா உனக்கு ?

நண்பர்களே, பருத்தியூர் பெரியவா பற்றி நான் அறிந்து கொண்டதே அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி என்பவரிடமிருந்து. அவர் என் நண்பர். அப்புறம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி பரிவாரத்தை சேர்ந்தவர்களிடமிருந்து அற்புதமாக அவரது நூற்றாண்டு விழாவில் வெளியிட்ட ஓம் சர்வம் ராம மயம் என்கிற இலவச புத்தகத்திலிருந்து நான் அறிந்ததை தான் சொல்கிறேன்.

ஸ்ரீ பருத்தியூர் பெரியவா ஒரு அற்புதர். பருத்தியூரில் சொந்தமாக நிலம் வாங்கி பெருமாள் கோவில் உருவாகியது. கட்டுமான வேலைக்கு காண்ட்ராக்ட் இப்போது போல் கிடையாது. தினக்கூலி. ஆகவே அன்றாடம் செல்வார். வேலை செய்யும் சித்தாள் பெண் ஒருத்தி கிழிந்த புடவையை முடிந்து கொண்டு வேலை செய்வதை பார்த்து கண்ணில் ரத்தம் வந்தது பெரியவாளுக்கு. வீட்டிற்கு சென்றவர் கொடியில் மடியாக மனைவி உலர்த்தியிருந்த மாற்று புடவையை எடுத்து அந்த பெண்ணுக்கு கொடுத்து விட்டார். அவளுக்கு கொள்ளை சந்தோஷம். மனதார வாழ்த்தமாட்டாளா?
வீட்டில் மனைவிக்கு மாற்று புடவை இல்லை. வருவதை எல்லாம் தானம் தர்மம் என்று செய்பவர் ஆயிற்றே.
”என்னது இது எனக்கு மாற்று புடவை இல்லாமல் செய்துவிட்டீர்களே?” என்ற மனைவிக்கு ”எல்லாம் ராமன் அருள்வான் ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஆச்சர்யமாக அன்று பிரவசனம் முடிந்தபின் யாரோ தட்டு நிறைய பழங்கள், பணம், பட்டு வேஷ்டி, புடவைகள் சகிதம் வீட்டுக்கு வந்து வணங்கி அளித்துவிட்டு சென்றார். ”ராமன் தந்தானா இல்லையா, நமக்கு தருவானா இல்லையா?”

நமக்கு தெரியாமல் எவ்வளவோ விஷயங்கள் நடந்திருக்கிறதை சரித்திரம் தெரிந்து வைத்திருக்கிறது என்பதை விட சரித்திர விஷயங்கள் நிறைய நமக்கு தெரியவில்லை என்று சொல்வது தான் பொருத்தம்.

ரஸ நிஷ்யந்தினி பற்றி சொல்லும்போது பருத்தியூர் பெரியவா, ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளை வணங்கி நினைவு கூறவேண்டியது கடமை. அவர் முன்னோர்கள் தஞ்சாவூர் பங்காரு காமாட்சியை ஜாக்கிரதையாக திப்பு சுல்தான் போன்ற மதவெறியர்களிடமிருந்து காப்பாற்றி இன்றும் நாம் வழிபட உதவிய மஹான்கள்.
இதோ நான் அறிந்து மகிழ்ந்த விஷயத்தை உங்களுக்கும் அளிக்கிறேன்

பருத்தியூர் பரம்பரையில் சுமார் முன்னூறு வருஷங்களுக்கு முன்பு சீதாலக்ஷ்மி -சேஷாத்திரி சாஸ்திரி (1740-1810) தம்பதியருக்கு ரெண்டு பிள்ளைகள். வெங்கடேச சாஸ்திரிகள் (1765-1837) தான் அண்ணாவாள் , இளையவர் கிருஷ்ண சாஸ்திரி ( 1768-1842) அய்யாவாள் . அண்ணாவாள் சிவபக்தர். அய்யாவாள் விஷ்ணு பக்தர். அப்போது கும்பகோணத்திலிருந்த காஞ்சி ஆச்சார்யர், மருதாநல்லூர் சதகுரு ஆகியோரிடம் பக்தி, நட்பு, சங்கீதமும் பஜனை சம்பிரதாய பாடல்களும் கற்றுக்கொண்டார்கள். வேத சாஸ்திரத்தில் ஜோசியத்தில் நிபுணர்கள். தஞ்சாவூர் ராஜா சாஸ்திரி சகோதரர்களை வரவேற்று ஆதரித்தான்.

கலைகளுக்கும், பக்திக்கும், மூலாதாரமாக இருந்த தஞ்சாவூரின் அரசாட்சி கைமாறிக்கொண்டே இருத்தது.
சோழர்களிடமிருந்து, பாண்டியர்களிடம் வந்து மீண்டும் சோழர்களை அடைந்து, சிலகாலம் நாயக்கர்கள் ஆதிக்கத்தில் இருந்து, அப்புறம் விஜயநகர ராயர்களிடம் சில காலம் இருந்து ஒரு காலத்தில் சிவாஜியின் தளபதி வெங்கோஜிராவ் வசம் தஞ்சை ராஜ்ஜியம் இருந்து அவன் வம்சத்தில் வந்த மராத்திய ராஜாக்கள் ஆண்ட காலம்.

ஒருபக்கம் பிரெஞ்சு காரர்கள், மற்றொருபுறம் வெள்ளைக்காரர்கள் இடையே உண்டான போட்டியில் உள்ளூர் ராஜாக்கள், நவாப்புகள் இங்கு மங்குமாக சேர்ந்துகொண்டு யுத்தம். காஞ்சி மாநகர் திப்பு சுல்தான் வசம் சிக்கி அங்கிருந்து விக்ரஹங்கள் கோவில்கள் எல்லாம் இடி படாமல் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டிய நிலைமை.

காஞ்சியிலிருந்து காமகோடி பீடம் தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் இடம் மாறியது. காமகோடி ஆச்சார்யர்கள் ”……இந்திர ஸரஸ்வதி ” பட்டம் கொண்டவர்கள் ” 62வது ஆச்சார்யர் ஸ்ரீ 5வது சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி தஞ்சாவூர் ராஜா பிரதாப் சிம்மன் அழைப்பை ஏற்று காவேரிக்கரையில் கும்பகோணத்தில் மராத்திய ராஜாவின் மந்திரி டபீர் பந்த் அமைத்துக் கொடுத்த இடத்தில் காமகோடி மடம் இடம் பெயர்ந்தது. இந்த டபீர் பெயரில் ஒரு தெரு கும்பகோணத்தில் இன்னும் இருக்கிறது. ஆச்சார்யர் இங்கே முக்தி அடைந்தார்.

ஆங்கிலேய மைசூர் யுத்தம் தீவிரமடைந்து திப்பு சுல்தானுடன் வேலூர் அருகே கடும் யுத்தம். காஞ்சிபுரம் அருகில் இருந்ததால் பாதிப்பு கலவரம் அதிகம். தங்க விக்ரஹமான பங்காரு காமாக்ஷியை ஜாக்கிரதையாக அப்புறப் படுத்தவேண்டுமே? ..

காஞ்சி மடாதிபதி ஆச்சார்யர் சொல்லியபடி, காமாக்ஷி கோயில் பிரதம அர்ச்சகர், இந்த பொறுப்பை பருத்தியூர் அண்ணாவாள் ஐயாவாள் சகோதரர்களிடம் ஜாக்கிரதையாக ஒப்படைத்தார்.

அண்ணாவாள் அய்யாவாள் மற்றவர்களோடு சேர்ந்து ஸ்வர்ண காமாக்ஷியை வைக்கோலில் சுற்றி மூங்கில் கட்டையில் தென்னை ஓலை வைத்து பிணம் பயணிக்கும் பாடை மாதிரி சுமந்து சென்றார்கள். அதனால் ஏதோ பிரேதம் என்று யாரும் சந்தேகப்படாமல் நகர்ந்தார்கள். எட்டு பேர் மாற்றி மாற்றி சுமந்தார்கள். கொள்ளைக்கார்கள், முஸ்லிம்கள் வெள்ளைக்கார்களிடமிருந்து தங்கள் உயிர்களையும், தங்க காமாக்ஷி விக்ரஹத்தையும் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டுமே. திப்புவிடம் ஆங்கிலேய தளபதி கர்னல் பிரெய்த் வெய்ட் அன்னகுடி எனும் ஊரில் தோற்றான். எங்கும் கொள்ளை, அக்கிரமம், களேபரம்.

வந்தவாசி, செஞ்சி, உடையார்பாளையம், கடலூர், திருவாரூர் என அண்ணாவாள் அய்யாவாள் கூட்டம் மெதுவாக கடைசியில் தஞ்சாவூர் வந்தாயிற்று காமாக்ஷியும் 200 வடம குடும்பங்களும் ஜாக்கிரதையாக தஞ்சாவூர் இடம் பெயர்ந்தன

தஞ்சாவூர் அரசர் துளஜா மஹாராஜா பங்காரு காமாக்ஷிக்கு மேல மாசி வீதியில் கோயில் அமைத்தார் . சங்கீத மும்மூர்த்தி சியாமா சாஸ்திரிகளின் அப்பா விஸ்வநாத சாஸ்திரி காமாட்சிக்கு பரம்பரை சிவாச்சாரியார் ர்ச்சகர் ஆனார். இன்றும் நமக்கு அங்கே காமாக்ஷி தரிசனம் தருகிறாள் .

மஹா பெரியவா வ்யாசபூஜைக்கு முன் தஞ்சாவூர் ஸ்வர்ண காமாக்ஷி பிரசாதம் பெற்றபின் தான் துவங்குவார்.

அடுத்து சரபோஜி தஞ்சாவூர் ராஜாவானார். பங்காரு காமாட்சிக்கு ராஜகோபுரம் உயர்ந்தது. சரபோஜியோடு 3000 பண்டிதர்களோடு காசிக்கு விஜயம் ஏராளமான ஓவியங்கள், நூல்கள் சேகரித்தனர். ஸரஸ்வதி மஹாலில் இன்னும் இருக்கிறதே. ராஜா தன்னுடன் பருத்தியூர் அண்ணாவாள் ஐயாவாள் சகோதரர்களையும் அழைத்து சென்றார்.

வழக்கமாக அண்ணாவாள் சாஸ்திரிகள் சகோதரர்கள் பருத்தியூர் குடமுருட்டியில் ஸ்னானம் செய்ய போவார்கள். விடிகாலை ஒருநாள் அப்படி போகும்போது காலில் ஏதோ ”ணங்” என்று இடித்தது. அது என்ன என்று பார்த்த போது ஏதோ விக்ரஹம் புதையுண்டு இருப்பது தெரிந்து தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே வரதராஜ பெருமாள் கோயில் கொண்டார். பருத்தியூர் ஆலயங்கள் தோன்ற காரணமாக இருந்தவர்கள் அண்ணாவாள் சாஸ்திரி சகோதரர்கள்.

பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் முன்னோர்கள் பற்றி கொஞ்சம் சொன்னதற்கு காரணம் எப்படிப்பட்ட வம்சம் ஸ்ரீ ”ராமாயண சாஸ்திரிகள் பருத்தியூர் கிருஷ்ணசாஸ்திரிகள் என்று நினைவூட்ட….

இனி ”ரஸ நிஷ்யந்தினி தொடர்வோம்;;

”தசரதா, ராமனையும் லக்ஷ்மணனையும் என்னோடு காட்டுக்கு அனுப்பு” என விஸ்வாமித்ரர் கேட்ட போது தயங்கிய தசரதனுக்கு விஸ்வாமித்ரர் உண்மையில் ராமன் யார் என்று விளக்குகிறார். பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் நூறு ஸ்லோகங்கள் இந்த விளக்கத்தை பற்றி அற்புதமாக சமஸ்க்ரிதத்தில் வடித்தது தான் ரஸ நிஷ்யந்தினி. அம்ருத ஊற்று. இன்று 6வது ஸ்லோகம் முதல் 10வது ஸ்லோகம் வரை ரசிப்போம்.

6. अयं भूलोकं पालयितुमुत्पन्न इति त्वम्; अयं सर्वान लोकान पालयितुमवतीर्ण इत्यहम्।
”அயம் பூலோகம் பாலயிது முத்பன்ன இதித்வம்; அயம் ஸர்வான் லோகான் பாலயிது மவதீர்ண இத்யஹம் ”

‘தசரதா ,நீ உன் மகன் ராமன் இந்த நாட்டை ஆளுவதற்காக பிறந்தவன் என்று தான் நினைக்கிறாய். அப்படியில்லை, அவன் என்னை பொறுத்தவரை, இந்த மூவுலகையும் பிரபஞ்சத்தையும் அதன் அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆளுமையில் ரக்ஷிப்பதற்காகவே பிறந்தவன்”.

7. अयं सर्वान् वेदान् जानातीति त्वम्; इमं सर्वे वेदाः न जानन्तीत्यहम्।
அயம் சர்வான் வேதான் ஜானாதீதி த்வம்

உன்னை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவன் வேதம் எல்லாம் கற்றவன் என்று பெருமைப்படுகிறாய். அப்பனே, எனக்கு தெரியும், அனைத்து வேதங்களும் ராமனை இன்னும் முழுமையாக புரிந்து தெரிந்து கொள்ளவில்லை என்று.

8. ब्रह्मसृष्टी अयमेक इति त्वम् अस्य सृष्टौ ब्रह्माप्येक इत्यहम्।
ப்ரம்ம ஸ்ருஷ்டி அயமேக இதித்தவம் ஆசிய ஸ்ருஷ்டௌ ப்ரம்மாப்யேக இத்யஹம்

8.தசரதா, நீ நினைப்பது போல் உன் மகன் ராமன் படைக்கும் தெய்வம் பிரமனின் எண்ணற்ற படைப்புகளில் ஒருவன் அல்ல. எனக்கு மிக நன்றாகவே தெரியும் அந்த ப்ரம்மதேவனே காக்கும் கடவுளான ராமனின் எண்ணற்ற படைப்புகளில் ஒருவனாக உருவானவன்.

9. अस्मदाधारोऽयमिति त्वम् एतदाधारा ब्रह्माण्ड कोटय इत्यहम् ।
அஸ்மாதாதாரோஅயமிதித்வம் ஏததாதாரா பிரம்மாண்ட கோடய இத்யஹம்.

9. நீ நினைப்பது போல் உன்னை காப்பதற்கு பிறந்தவன் அல்ல ராமன். அவன் இந்த பிரபஞ்சத்தையே காத்தருள்பவன் என்பதை நான் அறிவேன்.

10. अयमस्मदादिवत् श्रीकाम इति त्वम् सा श्रीरपि सन्ततमेतत्कामेत्यहम् ।
அயமஸ்மதா தீவத் ஸ்ரீ காம இதித்வம் சா ஸ்ரீ ரபி சந்ததமேதத் காமேத்யஹம்

10. தசரதா, உன் மகன் ராமன் நீ நினைப்பது போல் பல ராஜாக்களை வென்று செல்வத்தை தேடிச் சேர்ப்பவன் அல்ல. சங்கநிதி பத்மநிதி முதலான அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியே சதா சர்வகாலமும் தேடும் ”ஸ்ரீ” நிவாஸன் உன் மகன் ராமன் என நான் அறிவேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *