VAIRAGYA SATHAKAM J K SIVAN

வைராக்ய சதகம் நங்கநல்லூர் J.K. SIVAN
ராஜா பர்த்ருஹரி

ராஜா பர்த்ருஹரி சொந்த வாழ்க்கையில் பேரிடி போல் துரோகம், ஏமாற்றங்களை சந்தித்து வெறுத்து, ராஜ்ஜியம், சொந்தம் பந்தம் எலாம் துறந்து சந்நியாசியாக ஊர் சுற்றி தெற்கே பட்டினத்தாரை குருவாக ஏற்று, தமிழில் பத்திரகிரியாராக வாழ்ந்தவன். அவனது ஸ்லோகங்கள் அர்த்த புஷ்டியானவை. கொஞ்சம் பார்ப்போம்.

भिक्षाशनं तदपि नीरसमेकवारं शय्या च भू: परिजनो निजदेहमात्रं ।
वस्त्रं विशीर्णशतखण्डमयी च कन्था हा हा तथापि विषया न परित्यजन्ति ॥

Bhikshaashanam tadapi neerasamekavaaram Shayyaa cha bhooh parijano nijadehamaatram
Vastram visheernashatakhandamayee cha kanthaa Ha ha tathaapi vishayaa na parityajanti [18]

ஆசையும் பாசமும் யாரை விட்டது. அதோ பாருங்கள் தெரிகிறதா அவனை? அவனுக்கு அடுத்த வேளை உணவு உண்டா, அது எது, எங்கே , எப்போது யாரிடம்.. கிடைக்கும்? ..ஹுஹும் ஒன்றுமே அது பற்றி தெரியாதவன். கிடைத்தாலும் அது அவனுக்கு பிடித்த ருசியாகவா இருக்கும்? தினமும் பகல் ஒரு வேளை மட்டுமே பிக்ஷை தேடுபவன். பூமியே பாய், வானமே போர்வை என்று தரையில் படுப்பவன், இருக்கும் இடுப்பு வஸ்த்ரத்தில் இனி புதிதாக கிழிய இடமே இல்லை. இப்படிப்பட்ட நிலையிலும் அவன் மனத்தில் எத்தனை எதிர்பார்ப்புகள் ஆசைகள், கனவுகள், ஐம்புலன்கள் எப்படியெல்லாம் எல்லோரையுமே வாட்டி வதைக்கிறது. பரிதாபம் இதைவிட வேறு உண்டா?

अजानन्दाहात्म्यं पततु शलभो दीपदहने स मीनोऽप्यज्ञानात् बडिशयुतमश्नातु पिशितं ।
विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान् न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा ॥

Ajaanan daahaatmyam patatu shalabho deepadahane Sa meeno’pyajnaanaat badishayutamashnaatu pishitam
Vijaananto’pyete vayamiha vipajjaalajatilaan Na munchaamah kaamaanahaha gahano mohamahimaa [20]

அந்த காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் குரல் உச்சாணிக்கிளையில் நின்று பாடும். ”விளக்கில் வீழும் பழமென மயங்கி விட்டிலாகாதே …” என்று. விட்டில் பூச்சிக்குத் தெரியுமா அது உண்ண ஆசைப்பட்டது அதன் மரணத்தை என்று? சுலபமாக விருந்து கிடைத்ததே என்று தூண்டிலில் மாட்டியிருந்த மாமிசத்துண்டை ஆகராமாக்கிக்கொள்ள ஆசையாக விழுங்கி அதுவே கடைசியில் ஒருவனுக்கு ஆகாரமான மீன் போல, நாம் உலக மாயை காட்டும் இன்பங்களை ஆசைப்பட்டு அளவிலா துன்பங்களை காசு கொடுக்காமல் வாங்குகிறோம். அடாடா! மாயை எப்படியெல்லாம் மனிதனை ஆட்டி படைக்கிறது!

मृत्पिण्डो जलरेखया वलयितः सर्वोप्ययं नन्वणु भागीकृत्य स एव संयुगशतैः राज्ञां गणैर्भुज्यते
ते दद्युः ददतोऽथवा किमपरं क्षुद्रा दरिद्रा भृशं धिक् धिक् तान् पुरुषाधमान् धनकणान् वाञ्छन्ति तेभ्योऽपि ये

Mritpindo jalarekhayaa valayitah sarvopyayam nanvanu Bhaageekritya sa eva samyugashataih raajnaam ganairbhujyate
Te dadyuh dadato’thavaa kimaparam kshudraa daridraa bhrisham Dhikdhik taanpurushaadhamaan dhanakanaan vaanchchhanti tebhyo’pi ye [25]

யோசித்துப்பாருங்கள். இந்த அகண்ட உலகை நீரும் நிலமுமாக நாம் எல்லோரும் வாழ பகவான் படைத்தான். ஆனால் இந்த அரசர்கள் சில பல ஆட்களை படையாக வைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதி சண்டையிட்டு அதைத் துண்டாக்கி, பிரித்து கூறாக்கி, தனித்தனியே ஒரு அளவு வைத்துக்கொண்டு தங்களது ராஜ்யம் என்று மேலும் அடைய ஆசைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் நிலத்தை பிரித்துக்கொண்டு நாயாக சண்டை போடும் ஈனர்கள் மற்றவர்க்கு என்ன கொடுக்கப்போகிறார்கள்?. அவர்களிடம் ஒருவன் சென்று உன்னைப்போல் இந்திரன் சந்திரன் இல்லை என்று பொய் கூறி மதித்து கையேந்தி சில பொருள்களை பெறுகிறானே அவனை என்ன சொல்வது?

पुरा विद्वत्तासीदुपशमवतां क्लेशहतये गता कालेनासौ विषयसुखसिद्ध्यै विषयिणां ।
इदानीम् संप्रेक्ष्य क्षितितलभुजः शास्त्रविमुखा नहो कष्टं साऽपि प्रतिदिनमधोधः प्रविशति ॥

Puraa vidwattaaseedupashamavataam kleshahataye Gataa kaalenaasau vishayasukhasiddhyai vishayinaam
Idaaneem samprekshya kshititalabhujah shaastravimukhaa- naho kashtam saa’pi pratidinamadhodhah pravishati [27]

கல்வி கற்பது ஆரம்பத்தில் உண்மையில் ஞானம் தேடுபவரால் மட்டுமே நாடப்பட்டது. அவர்கள் உலக இன்பம் துறந்தவர்களாக குருவிடம் பயின்றவர்கள். புலன்களிடம் அடிமையாகாதவர்கள். மனதை உறுதியாக சிறந்த முறையில் ஞானம் பெற, துயரம் துன்பத்தை விரட்ட தக்கதாக வைத்திருந்தவர்கள். ஆனால் போகப்போக என்ன ஆயிற்று? உலகமாயையில் சிக்கி இன்பம் தேடுபவர்களும் பொழுது போக்காக சாஸ்திரங்களை கற்கத் தொடங்கினார்கள். இதனால் என்ன விளைவு, பிரபுக்கள் ராஜாக்களுக்கு எல்லாம், உண்மையான சாஸ்திரங்களையும் அதை முறையாக கற்பவர்களையும் அடையாளம் காண முடியாமல் போகி விட்டது. பாண்டித்யம், கல்வி எல்லாமே கீழ் நோக்கி போக ஆரம்பித்தாகி விட்டதே என்று அப்போதே பர்த்ருஹரி அழுகிறார், இப்போதைய நிலையை வந்து பார்த்தால் என்ன சொல்வாரோ??

माने म्लायिनि खण्डिते च वसुनि व्यर्थं प्रयातेऽर्थिनि क्षीणे बन्धुजने गते परिजने नष्टे शनैर्यौवने ।
युक्तं केवलमेतदेव सुधियां यज्जह्नुकन्यापयः पूतग्रावगिरीन्द्रकन्दरदरीकुञ्जे निवासः क्वचित्॥

Maane mlaayini khandite cha vasuni vyartham prayaate’rthini Ksheene bandhujane gate parijane nashte shanairyauvane
Yuktam kevalametadeva sudhiyaam yajjanhukanyaapayah Poota-graava-gireendra-kandara-daree-kunje nivaasah kwachit [30]

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி, மேடு பள்ளம் இருக்கும். அவன் பெருமை மங்கும், மரியாதை குலையும். செல்வம் குறையும், இல்லை தொலையும் . அவனிடம் யாசிப்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். சொந்த பந்தம் நைசாக விலகிவிடும். வேலைக்காரன் வேறே எஜமானனை தேடிச்செல்வான். முதுமை, வியாதி உபாதைகள் அதிகரிக்கும். அப்போ என்ன செய்வது? போ கங்கைக்கரைக்கு. எங்காவது சிங்கம் புலி கரடி இல்லாத மலைக்குகையை தேடி உட்கார்ந்து தியானம் செய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *