CHENNAI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN

13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கந்தசாமி கோவிலிலிருந்து நடக்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது என்பதால் எப்படியோ சாமர்த்தியமாக நடந்து சென்றுவிட்டோம்.  பார்க்/பூங்கா  எனும் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக  இதை அடையலாம்    எங்கும்  வடக்கத்திய குடும்பங்கள். குஜராத்திகள், மார்வாரிகள், ஜைனர்கள் அதிகம்.  அநேகர்  வியாபாரிகள். ஹிந்தி தான்  எங்கும் காதில் விழும் தலம்.  சமணமதத்தவர்கள் உள்ளதால்  ரெண்டு சமணர் ஆலயங்களும் இங்கே உண்டு.  

ஏகாம்பரேஸ்வரர் கோயில் 1680 களில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் துபாஷ் பணியாளரான அலங்காரநாத பிள்ளை கட்டியது.  பிள்ளை  காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரரின்  தீவிர பக்தர்.  ஆகவே அவருக்கு சென்னையிலும்  ஏகாம்பரேஸ்வர் ஆலயம் அமையவேண்டும் என்று  தீராத தாகம்.
ஒரு நாள் தாமதமாக  காஞ்சிபுரம்  கோவிலுக்கு புறப்பட்ட அவர், வழியிலேயே களைப்படைந்து இந்த இடத்தில் ஓய்வெடுத்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்து அவருக்கு அம்பாளுடன் காட்சி தந்த சிவ பெருமான், இனி தன்னை காண சிரமப்பட்டு காஞ்சிக்கு வர வேண்டாம். தான் சுயம்புவாக இங்கு தோன்றி காட்சி தருவதாக கூறியதாகவும், அந்த இடத்தில் சிவ பெருமானின் ஆணையின் பேரில் அலங்காரநாதர் கோவில் எழுப்பியதாகவும் தல புராணம் சொல்கிறது. காமாக்ஷி அம்பாள் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. சிவனில் சக்தி அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதால் இங்கும்  அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார்.

துபாஷ் என்பவர்கள் ரெண்டு பாஷை பேசுபவர்கள். தமிழ் தெலுங்கு தவிர ஆங்கிலமும் தெரிந்தவர்கள் சக்கை போடு போட்டார்கள். அவர்கள் தயவால் தான்  வெள்ளைக்காரர்கள் மற்றவர்களோடு உள்ளூர்  மொழியில்  பேச முடிந்தது. வேலை வாங்க முடிந்தது.  வெள்ளைக்காரர்கள் அலங்கார நாத பிள்ளை கட்டிய கோவில் என்பதால்  “அல்லிங்கன்  பகோடா” என்று  ஆவணங்களில் குறிப்பிட்டார்கள்.
மூலவர் ஏகாம்பரநாதர். அம்பாள் காமாக்ஷி.மூலவர் சுயம்பு மூர்த்தி. திரிதள விமானமும் ஏழு நிலை ராஜ கோபுரமும் கொண்டது. ஹிந்து  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மேற்கொண்டு   சொல்ல எதுவுமில்லை.சென்னை ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம். இக்கோவிலில் உள்ள சப்த நாகத்தின் முன்புறம் விநாயகரும், பின்புறம் முருகனும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.
சென்னையில் பஞ்ச பூத ஸ்தலங்கள் இருக்கிறது. அவற்றைப் பற்றி கூறுவதற்கு முன் பஞ்சபூத ஸ்தலத்தில்  நிலம், மண், ப்ரித்வி எனப்படும்  ஸ்தலம் இந்த  தங்க சாலைப் பகுதியில் உள்ள  ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.   காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் காமாக்ஷி தான் இங்கும். பணம் புழங்கும் இடம்  என்பதால்   சுபிக்ஷமாக இருக்கிறார் ஏகாம்பரேஸ்வரர்.  ஏகாம்பரேஸ்வரர் லிங்கமயம். காமாக்ஷி நின்ற திருக்கோலம். ஸ்தல விருக்ஷம் வன்னி மரம். சென்னையில் வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப் பது இங்கே மட்டுமே!

நாமெல்லாம்  யார்??.  மண், விண், காற்று, நீர், நெருப்பு  இதன் சேர்க்கை தான்.  நாம் மட்டுமல்ல,  நாம் காணும் எதுவும் அதுவே.  ஆகவே  தான் நாம்  இவற்றை  தெய்வமாக கொண்டாடி வழிபடுபவர்கள்.  ஒவ்வொன்றும் ஒரு தெய்வம் நமக்கு.   பிரபஞ்ச காரணமாக இருக்கும் இவற்றை தான் பஞ்சபூதம் என்கிறோம்

பஞ்சபூதங்கள்  வெவ்வேறு  க்ஷேத்திரத்தில் விசேஷமாக  வணங்கப்படுகிறது.  அவற்றை பஞ்சபூத
 ஸ்தலங்கள்  என்கிறோம்.  தெற்கே  சோழமண்டலத்தில்  இருப்பது போல் தொண்டைமண்டலம் எனும்  நமது பகுதியில்  சென்னையிலேயே ஐந்து ஆலயங்கள்  பஞ்சபூத ஸ்தலங்களாக சிவாலயங்கள் உள்ளன.  நிறைய பேருக்கு இது தெரியாது என்பதால், நான் ஏற்கனவே  பலமுறை தரிசித்த  இந்த ஆலயங்களை பற்றி சொல்ல விருப்பம்.

பஞ்ச பூதங்களை பற்றி  நாம் அறிவது வேதங்கள் புராணங்கள் மூலம்.  அவை  எப்படி இந்த  ப்ரபஞ்சம்  உருவானது என்று விவரிக்கிறது.  பிரபஞ்சம் உருவானது என்றால் நாமும்  எல்லா  ஜீவராசிகளும் உருவானது  என்று தானே அர்த்தம். பஞ்சபூதங்களில் பகவான் இருக்கிறார், அந்த பஞ்சபூதங்களின் கலவையே நாம் என்றால் பகவான் நம்முள்ளும்  இருக்கிறார் என்று புரிகிறதா?  இது தான் ஸார்   ”அஹம்  ப்ரம்மாஸ்மி”  

 இந்த  பஞ்சபூத  பகவானை சிறப்பாக  ஐந்து பூத  க்ஷேத்திரங்களாக வழிபடுவது நமது பண்பாடு.  காலம் காலமாக வரும் வழக்கமா பழக்கமா?  இரண்டுமே.  

இந்த  பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் முக்கியமாக  சிதம்பரத்தில் ஆகாசம், திருவானைக்காவில் நீர், காள ஹஸ்தியில் காற்று,  காஞ்சிபுரத்தில் ப்ரித்வி, திருவண்ணாமலையில் அக்னி க்ஷேத்திரம். எல்லோராலும்  ஒவ்வொரு இடமாக    வெகுதூரம்  பிரயாணம் செய்து  இவற்றை தரிசிக்க இயலாது. ஆகவே  அந்த காலத்தில்  நமது முன்னோர்கள் தாங்கள் வாழ்ந்த ஒவ்வொரு மண்டலத்திழும் பஞ்ச பூத க்ஷேத்ரங்கள் அமைத் திருந்தார்கள்.    

சென்னையில் நமது வசதிக்கேற்ப பல நூற்றாண்டுகளாக  பஞ்ச பூத க்ஷேத்ரங்கள் ஸ்தாபித்திருக்கிறார்கள். அவற்றை அறிந்து அங்கெல்லாம் சென்று வழிபடாதவர்களுக்கு இனி அந்த கஷ்டம் வேண்டாம். அவை யாவை எங்கே என்ன க்ஷேத்ரம் இருக்கிறது என்று இந்த கட்டுரை சொல்லும். டக் கென்று ஒரு வண்டியை எடுத்துக் கண்டு ஞாயிறு, விடுமுறை தினங்களில் குடும்பத்தோடு சென்று தரிசிக்க இது உதவினால் எனக்கு என்ன லாபம் என்றால் பலரை பஞ்சபூத க்ஷேத்ரத்துக்கு அனுப்பிய  புண்யம்.    யமனின் எண்ணெய் கொப்பறை யிலிருந்து நான் தப்பித்துக் கொள்வேனே.

ஆகாச க்ஷேத்ரம். விண்.     சூளை என்று ஒரு ஊர்  புரசைவாக்கத்திற்கு அருகே சூளை பேருந்து நிலையத் திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கே அவதானம் பாப்பய்யர்  தெருவில் இருக்கும்  இருநூறு வருஷ சிவன் கோவில் பெயர்  சிதம்பரேஸ்வர் ஆலயம்.அவருக்கு இன்னொரு பெயர் திருமூலநாதர்.    அம்பாள்  சிவகாமி, மற்றும் உமையம்மை. இங்கே உள்ள நடராஜர் சிதம்பர நடராஜரை போல்  உலோகத்தில் உருவானவர் இல்லை. கல்லால் வடிக்கப்பட்டவர்.  கிழக்கு பார்த்த சந்நிதி. சிதம்பரத்தை போலவே இங்கும்  காலை மாலை இருவேளைகளிலும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை.  சிதம்பரத்தில் இருப்பது போலவே இங்கும் ஸ்ரீ கோவிந்தராஜன் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.  ஸ்தல
விருக்ஷம்  வில்வம்.  தெற்கே  சிதம்பரம் சென்று ஆகாச க்ஷேத்ர லிங்கம்  தரிசிக்க முடியாதவர்களுக்காக
குட்டி சிதம்பரமாக  யாரோ ஒரு புண்யவான் வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டியது.  ஒரு முக்கிய குறிப்பு. இந்த  ஆலயமும் ஹிந்து அறநிலைய  ”பாதுகாப்பில்” இருப்பதால்  க்ஷீண நிலையில், பல வருஷங்களாக கும்பாபிஷேகம் கூட செய்யாத நிலையில், யாராவது செய்ய முன்வந்தால்,  அது தடைபட்டு  நிறைவேறாத நிலையில் உள்ளது வியப்பில்லை.
ப்ரித்வி ஸ்தலம்  மேலே சொல்லிவிட்டேனே.  இந்த  ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.
ஜம்புகேஸ்வரர்  –  நீர்  ஸ்தலம்.  சென்னையின் நீர்ஸ்தலம் தெற்கே  திருவானைக்கோவில் போல் இங்கே
புரசைவாக்கத்தில்  கங்காதீஸ்வரர் ஆலயம்.  அம்பாள்  பங்கஜாம்பாள்.  பழமையான  ஆலயம்.  ராமர் காலத்துக்கும் முன்னே, பகீரதன் இங்கே பிரதிஷ்டை செய்த சிவலிங்கம். பின்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுப்பப்பட்ட இப்போதைய ஆலயம்.  பகீரதன் வரம் பெற  1008 சிவாலயங்கள் ஸ்தாபிக்க வேண்டும். 1007 கட்டிவிட்டான். கடைசி 1008 வது எங்கே கட்டுவது என்று இடம் தேடி கஷ்டப்பட்டபோது  பரமேஸ்வரன் கனவில் வந்து ”சென்னையில்  நடந்து கொண்டே போ.   எங்கே  நிறைய  புரசை மரக்காடுகள் தென்படுகிறதோ அங்கே கட்டு” என்றார்.  புரசைவாக்கம் அப்போது புரசைவனம் , புரசை பாக்கமாக இருந்தது. கங்காஜலம் பகீரதன் கொண்டுவந்ததல்லவா? பகீரதன் கங்காஜலம் கொண்டு சிவனை அபிஷே
கித்து வழிபட்ட இடம். அதனால் சிவன் இங்கே கங்காதீஸ்வரர்.சரியான பொருத்தமான அப்புலிங்கம், ஜம்புலிங்கம் அல்லவா கங்காதீஸ்வரர்!  வடக்கத்திக்காரர்கள் ஸ்வாமியை தொட்டு வழிபடுபவர்கள் எனவே அவர்களுக்காக பிரஹாரத்தில் குறுந்த மரத்தடியில் நந்தியோடு குறுந்தமல்லீஸ்வரர் ஸ்தாபிக்கப் பட்டிருக் கிறார்.   ஒரு பெரிய குளம்  கோவிலை ஒட்டி இருக்கிறது. நல்லவேளை இன்னும் பாழ் படவில்லை.
அக்னி ஸ்தலம்.   சென்னையிலும்  திருவண்ணாமலை போல்,  அருணாச்சலேசுவரர் + அபீதகுசாம்பாள் திருக்கோவில் உள்ளது.  இது  சௌகார் பேட்டையில் பள்ளியப்பன்தெருவில் உள்ளது. யானைகவுனி  காவல் நிலையம் வரை பஸ்ஸில்  சென்று   அண்ணா பிள்ளை தெருவழியாக நடந்தால் இந்த ஸ்தலத்தை  அடைய லாம் .வடலூர்  வள்ளலார்  அடிக்கடி வந்து  வழிபட்ட ஆலயம் இது.  சிவலிங்கம் பெரிய உருவம்.  அம்பாள்  நின்ற  கோலத்தில் ஆறு அடி உயரம்.  250 வருஷங்களுக்கு முற்பட்ட ஆலயம். அவசியம் சென்று பார்க்க வேண்டிய ஒன்று.
வாயு ஸ்தலம்.  காற்று :     ஆந்திர தேசத்தில்   காளஹஸ்தியில்   காளஹஸ்தீஸ்வரர்  + ஞான பிரசன்னாம் பிகை அம்மன் திருக்கோவில் இருப்பது போல  சௌகார்பேட்டையில்,  பவளக்கார தெரு கடைசியில்  அதே பெயரில் ஒரு வாயுஸ்தலம் உள்ளதே. தெரியுமா? சென்னை உயர்நீதிமன்றம் எதிரே தெற்குவடக்காக செல்லும் பிரதான  சாலைகளில் ஒன்று பவளக்கார தெரு. coral  merchant  street .  அதில் உள்ள ஆலயம்.  இது.   யார் மீதும் இடிக்காமல்  வாகனங்களில் நசுங்காமல் நடக்கும் திறமை இருந்தால்  போதும்.  இன்னொரு வழி,  ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத் தெருவுக்குள்  நுழைந்தவுடன்  இந்த திருக்கோவிலை அடையலாம். இங்கு கால பைரவ வழிபாடு சிறப்பானது.

நான் மேலே குறிப்பிட்ட  பஞ்சபூத ஸ்தலங்கள்  பல நூற்றாண்டுகளாக ஏராளமாக பக்தர்கள் சென்று வழிபடுபவை.  ஒரு சௌகரியம்  இந்த  ஐந்து ஸ்தலங்களும் ஒன்றை ஒன்று எங்கோ வெகு தூரத்தில் சென்று அடைய வேண்டியவை அல்ல.  நெரிசலில்  ஒரு அரை நாளில் கூட  இதெல்லாமே  காலை  7 மணியிலிருந்து 11 மணிக்குள்  பார்த்து முடிக்கலாம். அல்லது மாலை நான்கு முதல் ஒன்பது மணிவரை எல்லாவற்றையும் தரிசிக்க மனதில் வழி உண்டு. தெருவில் வழி கொஞ்சம் பார்த்து தான் செல்லவேண்டும். நெரிசல் என்று சொன்னேனே.இத்துடன்  13.2.24 அன்று  நான் சென்று  தரிசித்த  நான்கு ஆலய விஜய விவரங்கள் நிறைவு பெறுகிறது. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *