13.2.2024 FOUR TEMPLES DHARSAN. J K SIVAN

13/2/2024  அன்று  நான்கு கோவில் தரிசனம்.    நங்கநல்லூர்    J  K  SIVAN      

கந்தகோட்டம்
எனது மூத்த மகன் க்ரிஷ்ணஸ்வாமியோடு  நான்கு  கோயில்களுக்கு சென்றதில்  காளிகாம்பாள் கோவில்,  கச்சாலீஸ்வரர் கோவில் ஆகிய  ரெண்டைப் பற்றி ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்தேன் . இன்னும் ரெண்டு கோவில்களை பற்றி சொல்ல வேண்டுமல்லவா?  மூன்றாவதாக  சென்ற கந்தகோட்டம் பற்றி இன்று எழுதுகிறேன்.

கச்சாலீஸ்வரர் கோவிலிலிருந்து கந்தசாமி கோவில் நடப்பது கஷ்டமல்ல.  அதிக பக்ஷம் பத்து நிமிஷம் ஆகலாம். ஆனால் நடக்க முடியாதே!  நடைபாதை இல்லை, நடக்க வழி இல்லை. வண்டிகளும்  இடையூறுகளும் குறுக்கிட்டால்  பறக்கத் தெரியாத நாம் எப்படி நடக்கமுடியும்? ஒரு ஆட்டோ ரிக்ஷாகாரர்  நூறு ரூபாய் கேட்டார்.  பேச்சு கொடுத்தபோது தான் அவர் எவ்வளவு கெட்டிக்காரர்  என்று புரிந்தது. ”ஐயா,  நீங்கள் சொல்வது போல் இது ஒன்றும் ரொம்ப தூரம் இல்லை. இருந்தாலும் யாரும் காலை வேளைகளிலோ, மாலை வேளைகளிலோ வெயிலில் இந்த பகுதியில்  நடக்க  விரும்புவதில்லை, மற்றும் அவர்களுக்கு நேரம் தான் முக்கியம். பணம் கொஞ்சம் அதிகம் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே  நான் இந்த பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறவன். சந்து பொந்துகளில் ஆட்டோ தான் போகமுடியும். மைலாப்பூர், திருவல் லிக்கேணி என்று எதற்காக  பெரிய ரோடுகளில் சுற்றி வாடகைக்கு ஆள் வருமா என்று காத்திருக்க வேண்டும். நிமிஷத்தில் இங்கே எங்களுக்கு பக்தர்கள் கிடைக்கிறார்கள். சவாரி கிடைக்கிறது.  கேட்பதைக் கொடுக்கிறார்கள்”  என்றார். அவர் பேசி முடிப்பதற்குள்  ஆட்டோ நெளிந்து வளைந்து குதித்து தாவி  ராசப்ப செட்டி தெரு வந்துவிட்டது.   எங்கு திரும்பினாலும் இரும்புக் கடைகள். செட்டிமார்கள் அநேகர்  வியாபாரிகளாக  காணப்படும் இடம் இது.  தெருவையே  வளைத்துப் போட்ட  பந்தல்.  தடுப்புகள். கவண்டிகள் எதுவும்  அங்கே  போகவோ வரவோ முடியாது.   உள்ளூர் செட்டியார்கள் முருக பக்தர்கள்.  கந்தசாமி ஆலயத்துக்கு  நிறைய செய்கிறார்கள்.   நான் சென்ற  13ம் தேதி பிப்ரவரி ஒரு  செவ்வாய்க்கிழமை. ஜேஜே என்று கூட்டம். இருந்தும்  கந்தனை தரிசித்தோம்.
ப்ரஹாரத்தில் ஒரு பஜனை  கோஷ்டி அருட்பா பாடல்களை பாடிக்  கொண்டிருந்தார்கள்.  ஒரு  தெரிந்த முகம் என்னை கை  க ட்டி அழைத்து  முருகன் மேல் பாட சொன்னபோது பரம சந்தோஷம்.  ரெண்டு பாடல்கள் முருகன் மேல் பாடினேன்.

வள்ளலாரால்  பாடப்பட்ட கந்தகோட்டம் முருகன் கோயில், இச்சாலையில் உள்ள  ராசப்ப  செட்டி தெருவில் அமைந்துள்ளது. இன்றும் அநேக பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ  கந்தசாமியை  வந்து தரிசிக்கிறார்கள். இதற்கு  ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் நிர்வாகம். கந்த கோட்டம் என்று பெயர். சென்னை மாநகரத்தின் ஒரு புராதன  ஆலயம்.

17ம் நூற்றாண்டில் ரெண்டு தீவிர  முருக பக்தர்கள். ஒருவர்  மாரி செட்டியார், இன்னொருவர்  கந்த பண்டாரம். இருவரும் சென்னை-மத்ஹகாபலிபுரம் சாலையில் உள்ள  திருப்போரூர்  கந்தசாமி ஆலயத்துக்கு ஒவ்வொரு மாசமும் கிருத்திகை நக்ஷத்ர  தரிசனத்துக்கு ம் விடாமல் நடந்து செல்பவர்கள்.   1672ல்  திருப்போரூர்  சென்றபோது  ரொம்ப   களைத்துப்  போய் ஒரு குளத்தங்கரையில் வேப்ப  மர  நிழலில் ஓய்வெடுத்தார்கள். தூங்கிப் போனார்கள்.  கனவில் முருகன் வந்தான். ”எழுந்திருங்கள், குளத்தங்கரையை ஒட்டி நடந்தால் ஒரு புற்று தெரியும். அதில் என் விக்ரஹம்  உங்களுக்கு கிடைக்கும்.அதை உங்கள் ஊருக்கு, மதராசுக்கு எடுத்துச் சென்று வழிபடுங்கள்.  ஆச்சர்யமாக  ரெண்டு  பேரும்  எழுந்தார்கள், இருவருக்கும் ஒரே மாதிரியான கனவு வந்தது தெரிந்ததும்.  புற்று எங்கிருக்கிறது என்று நடந்து தேடினார்கள். புற்றை  கலைத்து  அதனடியில் இருந்த  சுப்ரமணியசுவாமி விக்ரஹத்தை   மாரி  செட்டியார் தன்  வீட்டுக்கு அருகே ஒரு சிறிய கோயில் கட்டினார்.  அதில் சுப்பிரமணியனை பிரதிஷ்டை பண்ணினார். அந்த கோவில் நாளடைவில் சிதிலமாகி இப்போதுள்ள கந்தசாமி கோவில் 200 வருஷங்களுக்கு முன்பு  உருவானது. கோவில்  கல்வெட்டில் இந்த விபரம் உள்ளது. பின்னர்  காளி  ரத்ன  செட்டியார்  உபயத்தில் கோபுரம்  உயரமாக எழும்பியது. கோவிலுக்கு  எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. திருப்போரூரிலிருந்து மாரி செட்டியார் கொண்டுவந்த  வள்ளி தேவசேனா சமேத  கந்தசாமி ரெண்டு அடி உயரம்.   சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.   இன்றும் நாம் தரிசித்து அருள்பெறுகிறோம். வள்ளி தேவசேனா சமேத  ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தான் உத்ஸவர்.  கோவிலை ஒட்டி  குளம் இருக்கிறது. குலத்துக்கு எவரும் செல்லமுடியாது. மூன்று பக்கம் வீடுகளின்  சுவர்கள். கோவில் பக்கம் கம்பி க்ரில்.  அதன் வழியாக  குளத்து மீன்களுக்கு  பக்தர்கள் எதையெல்லாமோ  வீசுவதை தவிர்த்து குளம் புனிதமிழந்து குப்பை சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பெத்தநாயக்கன்பேட்டை என்றழைக்கப்பட்ட இத்தலம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்’ என மாறியது.
சென்னை கந்தகோட்டம் முருகன் கோயில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இது பாரிமுனை பகுதியில்,  அமைந்துள்ளது  என்பதால்  யார்  வேண்டுமானாலும் முடிந்தபோது முருகனை தரிசிக்கலாம்.   மூலவர் கந்தசுவாமி, உற்சவர் முத்துக்குமாரர். அம்மன் வள்ளி, தெய்வானை. தலவிருட்சம் மகிழம், தீர்த்தம் சரவணப் பொய்கை ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ளது.  தைப்பூசம் கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களில்  உள்ளே செல்வது நம்முடைய  சாமர்த்தியத்தை பொறுத்தது.

வள்ளலார் தினமும் இங்கே  வந்து தரிசிப்பார். அவர்  இந்த  கந்தகோட்ட  கந்தசாமியின் மேல் பாடிய  பிரபலமான பாடல் திருவருட்பாவிலிருந்து  ஒன்றோடு முடிக்கிறேன்:

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே
இவ்வளவு எளிமையாக, எப்படி  நான் இருக்க விரும்புகிறேனோ அப்படி  இருக்க எனக்கு அருள்வாய் என்று கந்தசாமியை,  வள்ளலாரைத்  தவிர வேறு  யாரும் கேட்டதில்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *