KACHAALEESWARAR TEMPLE CHENNAI J K SIVAN

13.2. 2024 அன்று சென்ற நான்கு ஆலயங்கள்:
நங்கநல்லூர் J K SIVAN
கச்சாலீஸ்வரர் சிவாலயம். ஆர்மேனியன் தெரு.
சென்னை நகரத்தில், நரகத்தில் தெருவில் நடப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். சில நிபந்தனைகளும் இருக்கிறது. சின்ன குழந்தையாகவோ வயதானவர் களாகவோ, நடக்க முடியாதவர்களாகவோ, கண் தெரியாதவர்களாகவோ இருக்க கூடாது. கால், கை , கண், காது, உடம்பு எல்லாம் சரியாக இருந்தாலும் போதாது. தாவ, குனிய, தாண்ட, குதிக்க, தொங்காத தெரியவேண்டும். அப்போது தான் நடைபாதை என்ற இல்லாத ஒரு சில அங்குல பகுதியில் நடந்து முன்னேற முடியும். எது தலையில் பிடிக்குமோ, முட்டுமோ, எங்கே பள்ளம் மூடாமல் திறந்திருக்குமோ, எங்கே மின்சார கம்பிகள் தொங்குமோ, எங்கே நடைபாதை கடைகள் வழி மறிக்குமோ , எங்கே நடக்கவேண்டிய இடத்தில் வண்டிகள் நிற்குமோ, வீடுகள் கூட பட்டணத்து நடைபாதையில் இருக்கிறது, கடைகள் கையேந்தி பவன் கள் வியாபித்து இருக்கிறது. அல்லது கண்டான் முண்டான் சாமான் , நாய் குடும்பம் இருக்கலாம். ஆபத்து எந்த ரூபத்திலும் பாதசாரியை சூழ்ந்திருக்கும். இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ வண்டிகள் மயிரிழையில் நம் பாதத்தின் மேல் ஏறும்.
எப்படியோ காளிகாம்பாள் கோவிலை விட்டு நகர்ந்து ஒருவழியாக அதிக தூரத்தில் இல்லாமல் அருகேயே இருக்கும் கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு நடந்தேன். அமைதியான கோவில். மூலவர் கச்சபேஸ்வரர் என்கிற கச்சாலீஸ்வரர். அம்பாள் அழகு நிறந்தவள் . கோவிலில் ஏதேதோ மராமத்து வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. மண், சிமெண்ட், கம்பி,கரும்பு புழுதிக்கு நடுவே ரொம்ப நிம்மதியாக கூட்டமில் லாமல், ஞாயிற்றுக்கிழமை காலையில் எட்டு ஒன்பது மணிக்கு கச்சாலீஸ்வரர் தரிசனம் தந்தார். அம்பாள் பெயருக்கேற்றபடி அழகாம்பிகை. ஸ்தல விருக்ஷம் கல்யாண முருங்கை. சிவதீர்த்தம் எனும் குளம் பேவார்ஸ் நிலையில் இருக்கிறது. பராமரிக்க வேண்டியவர்கள் கவனம் பணத்தின் பக்கமே திரும்பி இருப்பதால் பொறுப்புணர்ச்சியை எதிர் பார்க்க வழியில்லை. மாற்றம் தேவை. தக்கநேரத்தில் கச்சாலீஸ்வரரே தருவார்.
வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம்.
இங்கு சதுர வடிவ மேடையில் எல்லா நவகிரஹங் களும் நின்ற வடிவில் இருக்கிறார்கள். நடுவே சூரியன் உஷா, ப்ரத்யுஷா ஆகியோர் சமேதராக நிற்கிறார். அழகாம்பிகைக்கு இருபுறமும் லக்ஷ்மி சரஸ்வதி. கச்சாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்னால் சித்தி புத்தி சமேத பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் சந்நிதி. ரொம்ப அழகான விநாயகர். இங்குள்ள ஒரு தனி மண்டபத்தில் அறுபத்து நாயன்மார்களும் கூடி நிற்கிறார்கள்.
கிழக்குப் பார்த்த கோவில். நுழைவாயிலை ஒட்டி அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி, மூலகணபதி, ஸ்ரீ வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியர் சன்னிதிகள். அர்த்தமண்டபம், மஹா மண்டபம், மூலவர் கச்சாலீஸ்வரர் சன்னிதி. கோஷ்டங்களில் சித்தி மற்றும் புத்தி உடனான ஐந்து முகங் கொண்ட ஹேரம்ப விநாயகர் மற்றும் சுப்பிர மணியர் அருள்பாலிக்கின்றனர்.
கச்சபம்,கூர்மம், என்றால் ஆமை. மஹாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மந்திரமலையை தாங்கி திருப்பாற்கடலில் அம்ருதம் உருவான கதை தெரியுமல்லவா. ஆனால் சிவன் கூர்ம உருவில் கச்சபேஸ்வரர் உருவில் காண்பது அதிசயம்.
இங்கே லிங்கம் ஆமை, நாகம்,சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மேல் காணப்படுகிறது.
கச்சாலீசுவரர் கோவில் என்னும் மாபெரும் கச்சாலி பகோடா (Great Kachali Pagoda) சென்னை மாநகரம், ஜார்ஜ் டவுன், ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். கி.பி. 1725 ஆம் ஆண்டில் ஆர்மீனியன் தெருவில் உள்ள துபாஷ் கலவை செட்டிக்குச் (dubash Kalavai Chetty) சொந்தமான இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
கலவை செட்டி ஒரு சிவ பக்தர். அடிக்கடி காஞ்சிபுரத் திலுள்ள கச்சாலீசுவரர் கோவிலுக்குச் சென்று கச்சாலீசு வரரை வணங்கி வருவது வழக்கம். கலவை செட்டியும் அவர் மனைவி சௌந்தரம்மாளும் கச்சாலீசுவரருக்கு மதராஸில் ஒரு கோவில் கட்ட முடிவு செய்தனர். கோவில் திருப்ப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த காலத்தில் ஒரு சமயம் கலவை செட்டியும் அவர் மனைவியும் கச்சாலீசுவரரை வணங்கிய பின்னர் காஞ்சிபுரத் திலிருந்து மதாராசிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. குறித்த நேரத்தில் சென்னை திரும்ப இயலவில்லை. வெள்ளம் வடிய ஒரு வாரம் ஆனது. மதராசில் கோவில் திருப்பணிகள் தடையுற் றதை எண்ணிப் புலம்பியவாறு சென்னை வந்து சேர்ந்த அவருக்கு அதிசயம் காத்திருந்தது. கோவில் பணிகள் யாவும் நிறைவுற்றிருந்தன. இறைவனின் திருவிளை யாடலை எண்ணி கலவை செட்டி உளமகிழ்ந்தார்.
மூன்று வருடங்களுக்குள் இக்கோவில் கட்டி முடிக்கப் பட்டது. கி.பி. 1728 ஆம் ஆண்டு இக்கோவில் கும்பா பிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. கோவில் இருக்கும் தெரு முதலில் “கச்சால பகோடா தெரு” என்றும், கோவில் “மாபெரும் கச்சாலி பகோடா” என்றும் அழைக்கப்பட்டன. கோவிலில் இந்த விவரங்கள் பலகையில் இருக்கிறது.
அன்றைய மதராஸ் நகரில் இடது கை மற்றும் வலது கை சாதிப்பிரிவுகளும் (left and right-handed castes) இடம் பெற்றிருந்தன. இப்பிரிவுகளுக்கிடையே பல மோதல் களும் நிகழ்ந்தன. முதன்முதலில் இங்குதான் இப்பிரிவு களுக்கிடையேயான மோதல் நிகழ்ந்தது.
அதென்ன வலங்கை இடங்கை பிரிவு? ரொம்ப நல்ல கேள்வி இது. பிற்காலச் சோழர் காலச் சமுதாயம் சாதியின் அடிப்படையில் அமைந்திருந்தது. பல்வேறு தொழில்கள் அடிப்படையில் சாதிகள் பலவாகப் பெருகிக் கிடந்தன. கலப்பினங்கள் உருவாக்கிய சாதிகளும் பலவாக இருந்தன. சாதிகளில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கப்பட்டது. இதன் விளைவாகப் பிற்காலச் சோழர் காலத்தில் வலங்கை–இடங்கை என்னும் இரு பெரும்பிரிவுகள் உருவாயின.
பிராமணர், கம்மாளர் (கொல்லர்), வேளாளர், வாணிகர் போன்றவர்கள் இடங்கையினர். சோழ அரசு இவர்களுக்கு அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியிருந்தது. இதனால் இவர்கள் வசதியுடன் வாழ்ந்தனர்.
உழுதொழில் செய்து அதனால் வரும் கூலியில் வாழ்க்கை நடத்துவோர் மற்றும் குயவர், வண்ணார், நாவிதர் போன்றவர்கள் வலங்கை பிரிவினர் என பிரிக்கப்பட்டு சலுகைகளும், உரிமைகளும் பெறாதவர்கள். இவர்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப அரசு இவர்களுக்கு வரிகளை விதித்தது. இதனால் இவர்கள் இடங்கையரைப் போல வசதியுடன் வாழ முடியவில்லை. ஆகவே வலங்கையர், இடங்கையர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும் பெற வேண்டிப் போராடினர். இதனை இடங்கையர் எதிர்த்தனர். இதனால் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே பல பூசல்கள் ஏற்பட்டன. இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பல உள்ளன.
முதலாம் குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சி யாண்டில் (கி.பி. 1071இல்), இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊரில் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே ஒரு பெரிய கலகம் நடைபெற்றது. இக்கலகத்தின்போது, கலகக்காரர்கள் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினர்; கோயில்களை இடித்துத் தள்ளினர். இக்கலகம் முடிந்த பின்னர் ஊரை மீண்டும் சீரமைக்கவும், கோயில்களை மீண்டும் எழுப்பவும் ஊர்ச்சபையினர் கோயில் பண்டாரத்திலிருந்து ஐம்பது கழஞ்சு பொன்னைக் கடன் வாங்கினர். இக்கலகம் பற்றிய செய்தியை முதலாம் குலோத்துங்கனின் பதினோராம் ஆட்சியாண்டில் திருவரங்கக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று விரிவாகத் தெரிவிக்கிறது.
ஆங்கிலேயர் அரசாட்சியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் தீவிரம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இவ்விரு பிரிவினர்க்கு இடையே நடந்த பூசல்கள் காரணமாகச் சென்னை நகரின் தெருக்களில் மனித இரத்தம் சிந்தப்பட்டது உண்டு. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை – இடங்கை வேறுபாடுகள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு அப்பெயர்களின் பொருள்கூட இன்னதென விளங்குவதில்லை. இதை தான் மேலே இடங்கை வலங்கை சமாச்சாரம் என்று குறிப்பிடப் பட்டது. சென்னைப்பட்டணம் கிழக்கிந்தியுங் கம்பெனி, ஆங்கிலேயர் அரசாங்கத்தின் தலைநகரம். பிரித்தாளும் கொள்கையில் நிபுணர்கள் ஆங்கிலேயர்கள்.
“பிளாக் டவுனின்” ”கருப்பு நகரம்” என்று தான் ஆங்கி லே யர்கள் நமது சென்னை மாநகரத்துக்கு பேர் வைத்தி ருந்தார்கள். முதல் சாதிச் சர்ச்சைகளுக்கு இடமளித்த கோவிலாக இக்கோவில் கருதப்படுகிறது. இடது கைப்பிரிவு சாதியைச் சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்ட கோவில் இதுவாகும். அன்றைய ஆங்கில அரசின் தலையீட்டால் வலது கைப்பிரிவைச் சேர்ந்தவர் களது சொத்துக்களை ஆக்கிரமிக்காதாவாறு புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
கோவில் மண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்தி ரங்கள், 12 ராசிகள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அட்டதிக்குப் பாலர்கள் .ஆகியோர் சிற்பங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். 63 நாயன்மார்கள், சைவக் குரவர்கள் நால்வர், தத்தாத்ரேயர், துர்க்கை, ஆதி சங்கரர், மூலகேஸ்வரர், கச்சியப்ப சிவாச்சாரியார், ஹரதத்தர் ஆகியோர் சன்னிதி கொண்டுள்ளனர். அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம். நான் தொகுத்த ”நடராஜ பத்து ” புத்தக பிரதிகளை .சிவாச்சார் யாருக்கு வழங்கினபோது சந்தோஷமாக கச்சாலீஸ்வரர் பாதங்களில் வைத்து பெற்றுக் கொண் டார்.
மூன்றாவது கோவில் பற்றி அடுத்த பதிவில் சொல்கி றேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *