APPAIYA DEEKSHIDHAR J K SIVAN

அப்பைய தீக்ஷிதர்    நங்கநல்லூர்  J K SIVAN
அடையபலம் அளித்த அபூர்வ மஹான்

அடைய பலம்  அப்பைய  தீக்ஷிதரை இதுவரை தெரியாதவர்கள் ஒரு மஹானை தெரிந்து கொள்ளவில்லை என்பதால் கிடைத்த நஷ்டத்தை இப்போது தெரிந்து கொண்டு  கைமேல்  லாபமடைவதற்காக  எழுதுகிறேன். நமது தொண்டைமண்டலம்  தான் துண்டீர மண்டலம்.   அதில் தான் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்ரநாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு அருள் புரிய கோயில் கொண்டிருக்கிறார்கள். அருகே இன்னொரு ஊர். ஆரணி. பட்டுக்கு பெயர் போனது. அங்கே ஒரு சின்ன கிராமம் அடையபலம். சில பிராமணர்கள் ஆசாரம், அனுஷ்டானம்,அக்னிஹோத்ரம், இஷ்டி, யாகம், அதிதி ஸத்காரம் என்று பல புண்ணிய காரியங்களைச் சிரத்தையுடன் செய்துவருபவர்கள் வாழ்ந்தார்கள். நன்றாக வேத சாஸ்த்ர புராண ஸமஸ்க்ரித ஞானம் உள்ள பண்டிதர்கள் வித்வான்கள் அவர்களில் உண்டு கிட்டத்தட்ட  ஐநூறு வருஷங்களுக்கு முன் ஒரு மஹான் அங்கே வாழ்ந்திருந்தார். ( 1520–1593) அவர் பெயர் தான் அப்பைய  தீக்ஷிதர். அத்வைதி. யாக யஞங்கள் பண்ணுபவர்.  மினி வசிஷ்டர், விஸ்வாமித்ரர் பிருஹஸ்பதி என்றால் அது அடையபலம் அப்பய்ய தீக்ஷிதர் தான்.அப்பா அம்மா வைத்த பெயர் விநாயக சுப்ரமணியன். அப்பா பெயர் ரங்கராஜாத்வரி . ராமகவி என்ற குரு அவருக்கு சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் கற்பித்தார். சிறு வயதிலேயே சகல வித்யைகளும் பாடமாகியது .
அங்கே உள்ள விநாயகர் வக்ஷஸ்தல கணபதியை உபாசிக்கும் பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆச்சார்ய தீக்ஷீதர் என்பவர் விஜயநகர ராஜா கிருஷ்ணதேவராயரின் ஆஸ்தான வித்வான். அவருக்கு எட்டு பிள்ளைகள். மூத்த பையன் ரங்கராஜாத்வரி.  ‘அத்வைத வித்யா முகுர விவரணப்ரகாசம்’ இன்னும் பல கிரந்தங்கள் இயற்றியவர். அம்மா வழி தாத்தா ஸ்ரீ வைகுண்டாசார்யர். அப்போது பிராமணர்களுக்கும் ஸ்மார்த்த-வைஷ்ணவ பேதமில்லை .
தொண்டைநாட்டுக்கு அப்போது சின்னவீரப்ப நாயகரின் புத்ரர் சின்னபொம்ம ராஜா தான் மன்னன். . சிற்றரசர்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீவேங்கடகிரி, கார்வேடி முதலிய தேசத்து ராஜாக்கள் வித்வான்களை ஆதரித்து வந்தததால் ரங்க ராஜாத்வரியையும் ஆதரித்தனர். ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு கல்யாணமாகி குழந்தை இல்லை என்பதால் பெற்றோர் தமது குல தெய்வமான விரிஞ்சிபுரம் ஆலயத்தில் ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாய சிவ பெருமானை வேண்டிக் கொண் டார்கள்.
”குழந்தாய்,  சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிவேன் .நீ அங்கு வா ” என்று அருளியதால் உடனே மனைவியுடன்  ஸ்ரீரங்க ராஜாத்வரி சிதம்பரம் போகிறார். தினமும் சிவகங்கையில் ஸ்நானம், மூன்று வேளையும் நடராஜ சிவதரிசனம். ஐந்து  வருஷம் ஓடியது. “ஹே மஹேஸ்வரா, நடராஜ மஹா ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைப்பீர்கள்?” என மனமுருகி வேண்டினார்கள்.

ஒருநாள் இப்படி வேண்டியபிறகு ஆகாசத்தில் ஒரு அசரீரி பேசியது அவர்களுக்கு மட்டும் கேட்டது. “ஹே பக்த சிகாமணி, உன் தவத்தை மெச்சினேன். உனக்கு ரெண்டு பிள்ளைகள், ஒரு பெண் பிறப்பார்கள்” என்று நடராஜ பெருமான் அருளினார். சில நிமிஷங்களில் சிதம்பரம் ஸ்ரீநடராஜரின் அர்ச்சகர் உருவில் நடராஜரின் அபிஷேக தீர்த்தம், பழரசம் தருகிறார். தம்பதிகள் நடராஜப்பிரசாதம் உண்கிறார்கள்.
ஒரு பிரமாதீச வருஷத்தில், (கி.பி 1554) புரட்டாசி மாதம், சோமவாரம், கிருஷ்ணபக்ஷம் பிரதமை உத்திரட்டாதி நக்ஷ்த்ரத்தில் ஸாத்விக வேளையில் கன்யா லக்னத்தில் அப்பய்ய தீக்ஷிதரின் அவதாரம் இப்படி நிகழ்ந்தது. அற்புதமான ஜாதகம். கன்யா லக்னத்தில், சூரியனும்-புதனும் இருக்க, மகரத்தில் மாந்தியும், மீனத்தில் சந்திரனும், விருஷபத்தில் சனியும்-ராஹுவும், தனுஸில் குருவும், மிதுனத்தில் செவ்வாயும், துலாவில், சுக்கிரனும், விருச்சிகத்தில் கேதுவும் கூடிய ஜாதகம். நடராஜ பிரசாதமாக இப்படி புத்ர ஜனனத்தை கொண்டாட ஸ்ரீரங்கராஜாத்வரி கோதானம், பூதானம் செய்து, ஜாதகர்மா வைதிக முறையில் பண்ணி, பதினொன்றாம் நாளில் ‘விநாயக சுப்ரமணியன்’ என்று நாமகரணம் செய்தாலும் அம்மையப்பன் அருளால் பிறந்தால் ‘அப்பய்ய, அப்பய, அப்ப’  என்று அழைத்தார்கள். ரெண்டு வருஷம் கழித்து ஆச்சார்ய தீக்ஷிதர் என்ற ரெண்டாவது குழந்தை பிறந்தது. அப்புறம் இரண்டு வருடங்கள் கழித்து நடராஜன் அருளியபடி ஒரு பெண் குழந்தை. ஞானாம்பிகை என்று பெயர்.
ஸ்ரீரங்கராஜாத்வரி தானே அப்பைய  தீக்ஷிதருக்கு அக்ஷராப்யாஸம் செய்து, காவ்யம்-நாடகம்-அலங்காரம்-ஸாஹித்யம் எல்லாம் கற்க குரு  ராமகவி என்ற கவிச்ரேஷ்டரை நியமித்தார். ஐந்து வயதிலேயே அப்பையர்  ஸகல எழுத்து பாஷா ஞானமும், ஸாஹித்யம் செய்யும் திறமையும் பெற்றார். ஏழாவது வயதில் அப்பய்ய தீக்ஷிதருக்கு உபநயனம், வேதாத்தியயனம் கற்பித்தார்.
ரங்கராஜாத்வரி அடைய பலம் கிராமத்தில் சோம இத்யாதி யாகங்களைச் செய்து ஒரு நாள் தனது ரெண்டு புத்ரர்களையும் அழைத்து, ‘குழந்தைகளே! நீங்கள் வித்யா சம்பத்துடன் அஹங்காரமற்றவர்களாய் என்றும் சந்திரசேகரக் கடவுளைப் பூஜித்து வாருங்கள். அனவரதமும் நீங்கள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்தும், விபூதி ருத்ராக்ஷதாரணம் செய்பவர்களை சிவபிரானாகவே எண்ணி அவர்களை வணங்குங்கள். யக்ஞபதியான பரமேச்வரனை யாகங்களால் ஆராதியுங்கள்” என்று உபதேசம் செய்து சிவசாயுஜ்யம் அடைந்தார். அப்போது அப்பையதீக்ஷிதருக்கு பதினாறு வயது. தந்தையாரின் கட்டளைப் படி நடந்து கொண்டு அடைய பலத்தில் வசித்து வந்தார்.
ராஜா சின்னபொம்மன் ஸ்ரீ ரங்கராஜாத்வரி இல்லாது தனது சபையின் சோபை குறையக்கூடாது என்று அடையபலத்தில் வசித்த அப்பைய தீக்ஷிதரையும் அவர்  தம்பியையும் தனது அரச சபை வித்வான் களாக்கினான். பதினாறே வயதான ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் வைணவ எதிர்ப்புகளை லக்ஷியம் செய்யாமல் சிவபெருமானையும் சிவபக்தர் களையும் கொண்டாடி சாஸ்திர வாயிலாகச் சபையில் பிரகடனம் செய்தபோது ,தஞ்சாவூர், ஸ்ரீகாளஹஸ்தி, வேங்கடகிரி, கார்வேட்டி நகர் போன்ற இடங்களில் உள்ள அரசர்களும் ஸ்ரீமத் அப்பைய  தீக்ஷிதரின் சிவபக்திப் பெருமையைக் கேட்டுத் தத்தம் நகர்களுக்கு அழைத்து அவரைப் பெருமைப்படுத்தித் தக்க சன்மானங்கள், பிருதுக்கள் போன்றவைகளால் கெளரவித்தனர்.
தீக்ஷிதர் எழுதிய ஸ்தோத்திரங்கள் காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை. எல்லாமே மணிமணியானவை. மார்கபந்து ஸ்தோத்ரம் ரொம்ப பிரபலமானது. திருவண்ணாமலை அம்பாள் அபித அபீதா ப்ரஹத் குஜாம்பாள் மேல் அபீத குஜாம்பாஸ் தவம் எனும் ஸ்தோத்ரம் புகழ் வாய்ந்தது. எல்லா வியாதிகளையும் போக்கும் கைவல்யம்.
தீக்ஷிதர் நிறைய நடந்தார். வேலூர், வேங்கடகிரி,, தஞ்சாவூர், விஜயநகரம் எல்லா இடத்திலும் ராஜாக்கள் ஆதரவு. கௌரவம் மரியாதை. பரிசு. தர்க்க வாதங்களில் வெற்றி. சைவ மத பெருமைகளை வேத சித்தாந்தங்களை சென்ற இடம் எங்கும் எதிரொலித்தார்.
தீக்ஷிதரை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருவார்கள். பிரசாதம் போஜனம் அவர்களுக்கு உண்டு. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பக்தர்கள் வந்து பந்தி பந்தியாக போஜனம் நடந்தது. சமையல் அறையில் அன்னம் குறைந்து விட்டதே ? உள்ளே அரிசி இல்லை. கடையில் இருந்து வாங்கி சமைத்து பரிமாற நேரம் இல்லையே. ‘சாப்பாடு இல்லை. போய் வாருங்கள்’ என்று சொல்ல முடியுமா? விஷயம் தீக்ஷிதர் காதை எட்டியது. நேராக சமையல் அறைக்கு வந்தார். நிலைமை தெரிந்து கொண்டு அன்ன லக்ஷ்மியை வணங்கினார் . ஸ்தோத்ரம் உச்சரித்தார்.
”இருக்கும் சாதத்தை எல்லோருக்கும் பரிமாறுங்கள்” என்கிறார்
அள்ள அள்ள குறையாமல் சாதம் நிறைந்து கொண்டே இருந்தது. அன்னம்  வைத்திருந்த   தவலை  அக்ஷய  பாத்திரமாகவே மாறிவிட்டது. அன்ன பூரணி ஸ்துதிக்கு இவ்வளவு சக்தியா ?
தீக்ஷிதர் ஒரு முறை திருப்பதி சென்றபோது பாலாஜி அவருக்கு சிவனாக காட்சியளித்தார் என்று சொல்வதுண்டு.
தீக்ஷிதர் ஒரு சித்த புருஷர் . ”என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா?” தானே இதை அறிந்து கொள்ள ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். சீடா்களை அழைத்தாா்.
”என் கையில் இருக்கும் ஊமத்தைச் சாற்றை குடிக்கப் போகிறேன். தன்னிலை மறந்து உன்மத்தம் ஆகிவிடுவேன். பைத்தியம் பிடிக்கலாம். அப்போது என் உடலிலே ,உள்ளத்திலே, உணா்விலே, பேச்சிலே ஏற்படும் மாற்றங்களை ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளுங்கள். ரெண்டு மூணு மணிக்கு அப்பறம் இதோ இந்த சீசாவில் இருக்கும் மாற்று மருந்தை எனக்கு கொடுங்கள். நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்”
ஊமத்தஞ் சாறு தீக்ஷிதரை உன்மத்தராக்கியது. அப்பைய  தீக்ஷிதா் குதித்தார், ஆடினாா் பாடினாா், உருண்டாா்,அழுதாா். எல்லாம் சிவனின் புகழைப் பாடிக்கொண்டே. ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பிறகு மாற்று மருந்தால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.”என்னை மறந்த நிலையில் நான் எப்படி இருந்தேன்?”
” ப்ரபோ, நீங்கள் முழுக்க முழுக்க சிவனின் புகழையே பாடி வழிபட்டீா்கள். அந்த ஸ்தோத்திரங்களை இதோ நாங்கள் எழுதி வைத்துள்ளோம்”
பரவசமடைந்து ”ஹர ஹர மஹாதேவா” என உள்ளன்போடு சிவனை வணங்கினார் தீக்ஷிதர். உன்மத்த நிலையில் அவர் இயற்றியது ” ஆத்மாா்ப்பண ஸ்துதி “. அவருடைய இன்னொரு ஸ்தோத்ரம் “சிவாா்க்க மணிதீபிகை”
தீக்ஷிதரின் சிவ பக்தி சேவையை கௌரவித்து வேலூரை ஆண்ட ராஜா சின்ன பொம்ம நாயக்கன் தனது அரச சபையில் அவருக்கு தங்கத்தினால் ஆன புஷ்பங்களினால் கனகாபிஷேகம் செய்தான்.
”இது என்னத்துக்கு எனக்கு? அடைய பலத்தில்  விநாயகருக்கும்  வரதராஜ பெருமாளுக்கும்  ஸ்ரீகாலகண்டேஸ்வரருக்கும்  கோயிலைக் கட்டுங்கோ. சிவாா்க்கமணி தீபிகையை அனைவரும் படிப்பதற்கும் ஏற்பாடுபண்ணலாமே” என்றார்.
தீக்ஷிதர் எழுதியது தான் சித்தாந்த லேஷ சங்கிரகம் என்ற விசேஷ தர்க்க நூல். இதில் ஏக ஜீவ வாதம், நானா ஜீவ வாதம், பிம்ப ப்ரதிபிம்ப வாதம், ஸாக்ஷித்வ வாதம், எல்லாம் விமர்சிக்கப்பட்டுள்ளது. எல்லா ஆச்சார்யர் களும் தமக்கு உரித்தான முறையில் ஒரே விஷயத்தை போற்றி வெவ்வேறு விதமாக உரைக்கிறார்கள். விஷயம் ஒன்று தானே யார் எப்படி சொன்னால் என்ன? என்கிறார்.
தீக்ஷிதரின் ப்ரம்ம சூத்ர ஸ்ரீ கண்ட பாஷ்யம் ஆதி சங்கரரின் பாஷ்யத்தை அடி ஒற்றி இருக்கிறது. சகுணோபாசனை மூலம் நிர்குண உபாசனை பெறுவது சுலபம் என்று விளக்கினார். தீக்ஷிதரின் ஆனந்தலஹரி சந்திரிகா ஒரு அற்புத படைப்பு.
நான் அறிந்த இன்னொரு அதிசய விஷயம் சொல்கிறேன். தீக்ஷிதரின் அந்திம காலத்தில் பொறுக்கமுடியாத வயிற்று வலியால் துடித்தார்.
”இது என் பிராரப்த கர்மா. என்ன செய்யமுடியும்? என்னுடைய அன்றாட சிவ பூஜைக்கு இந்த தாங்கமுடியாத வயிற்று வலி குந்தகமாக இருக்கிறதே என்பது தான் குறை”.
சிவபெருமானின் அருளால் ஒரு துண்டை எடுத்து இறுக்கி வயிற்றின் மேல் கட்டிக் கொண்டு தனக்கு எதிரே ஒரு தாம்பா ளத்தில் நீர் நிரப்பி வயிற்றில் இருந்த பெரிய கட்டியை அதில் வெளியே கொண்டு வந்தார். அது ஒரு சேனைக்கிழங்கு போல் நீரில் மிதந்தது. தீக்ஷிதர் நிம்மதியாக பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் ரத்தக் கட்டி வயிற்றுக்குள் பழையபடியே சென்றுவிடும். இது அன்றாடம் தொடர்ந்தது.
”குருநாதா, தங்களால் அந்த கட்டியை வெளியே கொண்டுவர முடிகிறதே. அதை அப்படியே வெளியே விட்டுவிட கூடாதா?
”சிஷ்ய சிகாமணிகளே , வாஸ்தவம்.நல்ல யோசனை தான். என்னால் அதை வெளியேற்ற முடியும். அப்புறம் சேனைக் கிழங்கு பரங்கிக்காயாகி என்னை அடையும் போது அதை எப்படி பொறுத்துக் கொள்வது. இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டியதை சிவன் அருளோடு இப்போதே பொறுத்துக் கொண்டு அனுபவிக்கிறேனே”
16ம் நூற்றாண்டில் தான் தென்னிந்தியாவில் லேசாக சைவ வைணவ பேதம் தலை தூக்கியது. ஒருபக்கம் தொடடா சாரியார் வைணவத்தை மட்டும் பிரபலப்படுத்திக் கொண்டிருக்க அப்பைய  தீக்ஷிதர் சைவ வைணவம் இரண்டையும் போஷித்தார். அப்போது தான் நிலைமையை உத்தேசித்து தீக்ஷிதர் “சிவார்க்கமணி தீபிகா, ”சிகாரி ணிமாலா ” சிவதத்வ விவேகா” சிவகர்ணாம்ருதா” , ”சிவமஹிமா காலஸ்துதி” “சிவாத்வைத நிர்ணயா ” — எல்லாமே சிவன் புகழும்,அத்வைத சாரமும் தான். ராஜா சின்ன பொம்மு அவரை முழுதும் ஆதரித்து உதவினான். நான் சைவத்தை ஒரு தலை பக்ஷமாக ஆதரிக் கவில்லை. காலத்தின் கோலம் நான் சற்று அதிகமாக சைவத்தை பிரபலமடையச் செய்ய ஒரு நிர்பந்தம் என்கிறார் அவர்.
வேதாந்த தேசிகனின் யாதவாப்யுதய நூலுக்கு அற்புதமாக வியாக்யானம் எழுதியவர் அப்பைய  தீக்ஷிதர்.
அப்பைய  தீக்ஷிதர் ஹரி- ஹரன் இருவரையுமே இரு கண்களாக உபாசித்தவர். காஞ்சி வரதராஜன் மேல் வரதராஜஸ்தவம் ஸ்தோத்ரம் இயற்றி வைணவர்களால் பெரிதும் போற்றப்படுபவர். குவலயானந்தா” எனும் ஸ்லோகம் முகுந்தனின் அருளாசியைப் பெற இயற்றியது. சிதம்பரம் நடராஜர், கோவிந்த ராஜர் இருவருமே விஜயநகர ராயர் ஆட்சியில் துதிக்கப் பட்டனர். இது அப்பைய  தீக்ஷிதருக்கு பரமானந்தத்தை கொடுத்தது. அப்போது எழுதியது தான் ஹரிஹரஸ்துதி ஸ்தோத்ரம்.  தீக்ஷிதரின் பரந்த மனப்பாங்கு அவருடைய ”சாதுர் மடசார” வேதாந்த முறை ஸ்தோத்ரத் தில் புலனாகும். வேதாந்தத்தில் வைணவமேது சைவமேது என்ற கோட்பாடுடையவர் தீக்ஷிதர். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வழிபட வேண்டும் என்று நினைப்பவர். அவரது பேரும் புகழும் எண் திசையிலும் பரவியிருந்ததால் அந்தந்த ஊர் ராஜாக்கள் பிரபுக்கள் அவரை தமது சபைகளுக்கு அழைத்து கௌரவித்து சன்மானங்கள் அளித்தார்கள். எங்கு சென்றாலும் தனது அடைய பலத்துக்கு திரும்பி எளிமையான தனது வாழ்க்கையை தொடர்ந்தார் தீக்ஷிதர். அவருடைய புத்திரர்கள் சிஷ்யர்கள் பெரும் பண்டிதர்களாக விளங்கினார்கள் என்பதை சரித்ரம் கூறுகிறது.
அந்திம காலம் சிதம்பரத்தில் கழிந்தது. தீக்ஷிதருக்கு வயது 73.
ஒருநாள் காலை சிதம்பரம் நடராஜனை அர்ச்சிக் கும் தீட்சிதர்கள் அப்பைய  தீக்ஷிதர் மெதுவாக பஞ்சாக்ஷர படிகளி லேறியதைப் பார்த்தவர்கள், நடராஜனை தரிசித்து ஸ்லோகம் சொல்லி அப்படியே நடராஜனோடு ஐக்கியமாகி மறைந்ததை அறிகிறார்கள்.
அப்படி அவர்கள் பார்த்த நேரம் அப்பைய  தீக்ஷிதர் உண்மையில் அவர் கிரஹத்தில் இருந்து, அங்கே அவர் பிராணன் தேகத்தை பிரிகிற சமயம் சிதம்பரம் நடராஜனோடு அவர் ஐக்யமாவதை கண்கூடாக பார்த்திருக் கிறார்கள்.. அவர் கடைசி யாக சொல்லிக் கொண்டிருந்த ஸ்லோகத்தின் அர்த்தம்:
“ஆகாசத்தில் பொன் ஒளியோடு சூர்யன் திகழ்வதைப் போல் ஸ்ரீ நடராஜாவின் திவ்ய பொற்றாமரை திருவடிகளின் அழகு என் கண்ணைப் பறிக்கிறது…….” இந்த ஸ்லோகத் தின் மீதி பாதியை பிற்காலத்தில் அவறது பேரன் ஸ்ரீ பாலமடை நீலகண்ட தீக்ஷிதர் நிறைவு செய்தார். …..
……..”சூரியன் உதயமாகி மேலே எழும்பியது போல், இந்த உன்னத ஆத்மா மோக்ஷ சாம்ராஜ்யத்தில் ஜொலித்து க்கொண்டே ப்ரவேசமாகி, சம்சாரமாகிய இருள் விலகியது……

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *