THE QUESTIONS AND ANSWER J K SIVAN

பகவான்  ரமண  மஹரிஷி  – நங்கநல்லூர்  J K  SIVAN 

மஹரிஷி  ரமணர் வித்யாசமான ஒரு  துறவி.  அவரை  ஒரு  சாதாரண  வயதான கோவணதாரி என்று மட்டும் தான்  முதலில் பார்ப்பவர்கள் எடை போடுவார்கள்.  அவர் மௌனமாக வேறு இருப்பதால்,  வேலையில்லாத பொழுதுபோகாத  கிழவர் போல் தான் தோற்றம் அளிப்பார்.   அதே சமயம்  அவரைப் புரிந்து கொண்டவர்கள் பிரமிப்படைவார்கள்.
மௌனமாக  இல்லாத  நேரத்தில் யார் வேண்டுமானாலும் பகவான்  மகரிஷி ரமணரை அணுகி என்னவேண்டுமானாலும் கேட்கலாம்.  ஒரு தடையும்  போடமாட்டார்.   ஒருநாள்   ஒரு   அமெரிக்க யாத்ரி  தனது நண்பர்களோடு  திருவண்ணாமலை வந்தவர்   நேராக  ரமணாஸ்ரமம் வந்தார்.  ராமணரைப்  பற்றி  அவரது நண்பர்கள்  சொல்லி இருந்தபடியால், அந்த  ஆத்ம ஞானியைப் பார்க்க வேண்டும் , அவரோடு பேசவேண்டும் என்று அமெரிக்கருக்கு  விருப்பம்.  ரமணாஸ்ரமத்தில் நுழைந்தவர்   மஹரிஷியை தரிசனம் செய்துவிட்டு   எதிரே  மற்றவர்களோடு அமர்ந்தார்.  சமயம் கிடைத்தால் பேச ஆசையோடு காத்திருந்தார்.   கிட்டத்தட்ட  ஒரு மணி நேரத்திற்கு பிறகு  மஹரிஷியின் பார்வை  அமெரிக்கர் மேல் விழுந்தது.  அருகில் வந்து அமர்ந்தார்.  என்ன என்று தலை  அசைத்தார் மகரிஷி. அமெரிக்கர்  தனது கேள்விக்கணைகளைத்  தொடுக்க  ஆயத்தமானார்.

”மஹரிஷி,  உங்களிடம்  என் சந்தேகங்கள் சிலவற்றை  தீர்த்துக் கொள்ள  விரும்புகிறேன்.கேள்வி  கேட்க அனுமதிக்க வேண்டும்”. ”  ஆஹா,கேள்”  என்று  பதில் வந்தது.” கடவுள் என்று ஒருவர் நமது இஷ்ட தேவதையாக  இருக்கிறாரா?’
”ஓ, ஈஸ்வரன் இருக்கிறாரே”
”நம்மைப் போல  கண்கள், மூக்கு, காதுகள் எல்லாம் கொண்டவராகவா?ஆச்சர்யமாக இருக்கிறதே”
”இதில் என்ன ஆச்சர்யம்?  உங்களுக்கு இருக்கும்போது அவருக்கு இருக்கக்கூடாதா?”
”புராணங்களில்  இதெல்லாம் படிக்கும்போது சிரிப்பு வருகிறது என்கிறார்கள் ஸ்வாமி ”
” கண் காது மூக்கெல்லாம்  இருப்பதற்கு   நீயே  உன்னைப்பார்த்து  சிரிக்கலாமே ”
”சரியாக  சொன்னீர்கள் சுவாமி”சில நிமிஷங்களில்  அமெரிக்கரின் சந்தேகங்கள் விலகியது.  கேள்விகளுக்கு ரத்ன  சுருக்கமாக  மஹரிஷி  விடையளித்தார்.
வெள்ளைக்காரருக்கு  அருணாசல மலை  ஆஸ்ரமத்தில் சில  நாள் தங்கியிருந்தது சந்தோஷமாக இருந்தது.  அந்த  மலையின் புனிதத்தை பற்றி,  சித்தர்கள்  சூக்ஷ்ம  சரீரத்தில் விஜயம் செய்வது பற்றி கேட்டது  ஆர்வமாக இருத்தது.  அந்த மலையை நன்றாக சுற்றி பார்க்கவேண்டும், யாரவது சித்தர் நமது கண்ணில் படமாட்டாரா  என்று எண்ணம் வேறு மனதில் இருந்தது. இருளில் மலைப்பாதைகளில் நடப்பது சிரமம் என்று தெரிந்தும் நடந்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இப்படி  ஏதாவது செய்தால்  அவர்களை பாதுகாக்கவேண்டும்  என்ற கவலையில் மகரிஷி சிலரிடம் லாந்தர் விளக்குகள் கொம்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு அந்த வெள்ளைக்கார  கோஷ்டியைத் தேடி சென்று  ஜாக்கிரதையாக  பாதுகாக்க  கட்டளையிட்டார். மலை மேல் ஏறிச்சென்ற  அமெரிக்கரை ஜாக்கிரதையாக  அழைத்து வந்தார்கள்.
மலையில் திடீரென்று மழை.  தொப்பமாக நனைந்த அமெரிக்கரை  ஆஸ்ரமத்தின்  ஹாலுக்கு அழைத்து வந்தார்கள்.  மஹரிஷிக்கு எதிரே ஒரே ஒரு பிரம்பு நாற்காலி இருக்கும். அதில் அந்த அமெரிக்கர் உட்கார்ந்தார்.
மகரிஷியிடம் தனது  மலைப்   பயணத்தை  விவரித்து கூறினார் அமெரிக்கர். திடீரென்று
”மஹரிஷி, எனக்கும்  நீங்கள் ஆத்ம   சோதனை  அனுபவம் கொடுங்களேன். நான் ரொம்ப நன்றியுள்ளவனாக இருப்பேன்”  என்றார் .
”ம் ம் ம்.”
”நான் நாளைக்கு  ஊர் திரும்புகிறேன் சுவாமி. உங்களை மறக்கவே  மாட்டேன்”
”நீ எங்கே போகப்போகிறாய்? எங்கும்  போகவே மாட்டாய்.”
அமெரிக்கருக்கு பயம் வந்துவிட்டது. ஒருவேளை  இந்த மந்திரம் மாயம் தெரிந்த  சந்நியாசி நம்மை இங்கேயே கட்டிப்  போட்டு விடுவாரோ?”
‘இல்லை மகரிஷி, நான் கட்டாயம் புறப்படுகிறேன். அமெரிக்காவில் சில முக்கியமான வேலைகள் இருக்கிறது. கடவுச்சீட்டு ரெடி. கடற்பயணம்  ஏற்பாடாகிவிட்டது.  நீங்கள் எப்படி  நான் போகமாட்டேன் என்று சொல்கிறீர்கள்?”
”நான் சொன்னதே உனக்கு புரியவில்லை.  நீ எங்கும் போகமுடியாது.  நீ எங்கே எப்படி வந்தாய் இங்கே? கார், கப்பல், ரயில் அதெல்லாம் தானே  அசைந்து உன்னை தூக்கி வந்தது. பேசாமல் உட்கார்ந்திருந்தவன் தானே நீ. அப்படித்தானே இப்போதும்.”
அமெரிக்கர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.  ”அப்படிச் சொல்கிறீர்களா”  என்றார்.

இன்னொரு சம்பவம்.
கோடைகாலம் வெயில் சுள்ளென்று கொளுத்திய பகல் நேரம்.  ஆஸ்ரமத்தில் வந்து உட்கார்ந்த   ஒருவர்  அரைமணி நேரம்  பேசாமல் இருந்தார்.  அவர் மூச்சு விடுவது,  உடல் அசைவு,  முகம்  எல்லாம் ஏதோ அவர் மனதில் ஒரு குழப்பம் இருப்பதை உணர்த்தியது.  தமிழ் நாட்டை சேர்ந்தவர் தான் அந்த பக்தர் என்றாலும் ஆங்கிலத்தில்  தான் பேசினார்.
 ”Swami, we ignorant people read so much, hoping to have an inkling of Truth, but, alas, the more we read the  more Truth recedes from our ken. I have read all the Western Philosophers from Descartes to Bertrand Russell – they are all useless. But our Rishis differ among themselves. Shankara says, “Go on repeating ‘I am Brahman’ and you become Brahman.” Madhvacharya says that the Soul is ever separated  from Brahman. You say “Enquire ‘who am I’ and you will arrive.” Many other teachers gave many other solutions. Is this not puzzling? Which of you is right?
 Swami, which way am I to go? ”

ஸ்வாமி , எவ்வளவு படித்தாலும் தெரிந்து கொண்டாலும் அஞ்ஞானிகளான எங்களுக்கு  சத்யம், ஞானம்  என்பது  தேறவே இல்லையே.  நான்  மேலை நாட்டு  அறிஞர்கள், டெஸ்கார்ட்டஸ்,  பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  போன்றவர்களை படித்தேன். ஒண்ணும்  பிரயோஜனம் இல்லை.   நமது தேசத்து  ரிஷிகள்  ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொல்கிறார்கள்.
ஆதி சங்கரர் நான் தான் பிரம்மன் என்று திரும்ப திரும்ப சொல், நீ ப்ரம்மமாகிவிடுவாய் என்கிறார்.
மத்வாச்சாரியாரோ, ப்ரம்மத்திலிருந்து எப்போதும்  ஜீவன் பிரிந்தே, தனித்தே,  தான் இருக்கிறது என்கிறார்.
 மஹரிஷி  நீங்களோ  ”நான்”   யார் என்று விடாமல் உன்னையே நீ அலசி தேடு,   நீ தான் அந்த ஆத்மா என்று புரியும் என்று சொல்கிறீர்கள்.  பல ஆசார்யர்கள் இப்படி பலவாக சொல்கிறார்களே. புதிராக இருக்கிறதே, எது சரி? நான் எந்த பக்கம் போகவேண்டும்?”
மகரிஷி அவரைப் புன்னகையோடு பார்த்து ‘ நீ வந்த வழி தெரிந்து கொண்டு  அதிலேயே போ ” என்கிறார்.
ஒரு நாள் சில ஐரோப்பியர்கள் வந்து மகரிஷியை வணங்கிவிட்டு  எதிரே   முன்னாலே அமர்ந்தார்கள்.  அவர்கள்  கிருஸ்துவ மதபிரசாரகர்கள்.  சில கேள்விகளை கேட்டார்கள்.  பகவான் அவர்களை  வழக்கம்போல்  ஆத்ம சோதனை செய்யுங்கள் நான் யார்  என்பதை உள்ளே  தேடி ஆன்மாவை உணருங்கள் என்றார்.

 மதபோதகர்கள்  பைபிளிலிருந்து  நிறைய  பாடல்களை மொழிகளை எடுத்து விளாசி  கிருஸ்துவ மத தத்வம் ஒன்றே  உண்மை, நம்பகமானது என்று  அனல் கக்குகிறார்கள்.  மகரிஷி மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்தார்.  மகரிஷி  அருகே அப்போது  சாது அருணாசலா   என்கிற வெள்ளைக்கார துறவி  கையைக் கட்டிக்கொண்டு  இதெல்லாம் கேட்டுக்கொண்டு  அமர்ந்திருந்தார்.  அவர் நிஜப்பெயர்  மேஜர் சாட்விக் என்கிற வெள்ளைக்கார  கிறிஸ்தவராக இருந்தும் இப்போது  ரமண  பக்தரானவர், கணீரென்ற  குரலில்  அந்த மத போதகர்களும் பதிலளித்தார்.  அவருடைய ஆங்கிலம்,  பைபிளை கரைத்துக் குடித்த  ஞானம், அவருடைய  குரலில் இருந்த  திண்மை,  ”என்னுடன்  முதலில் பேசுங்கள்.  அப்புறம்  மகரிஷியிடம் பேசலாம்” என்று சொல்லிய  வலிமை  அந்த மத போதகர்களை  அடக்கி ஒடுங்கி  வணங்கி விடைபெற்று செல்ல வைத்தது.  சாது அருணாசலா  நிறைய  ஆத்ம தத்துவங்களை  மஹரிஷியின்  சிஷ்யனாக  கற்று   ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியவர்.  ஒரு சில  என்னிடம் இருந்து படித்திருக்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *