PUNNAI NALLUR MAARIAMMAN. J K SIVAN

புன்னை நல்லூர் மாரியம்மன் — நங்கநல்லூர்  J K  SIVAN
நான் அடிக்கடி  நினைத்தால்  மனதளவில் தஞ்சாவூர் போகிறவன்.  வண்டியில் காரில் போக முடிந்தது எப்போதாவது தான். ஒரு  சிவராத்திரியை ஒட்டி நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு ஒரு சில இடங்கள் க்ஷேத்ராடனம் செய்தபோது அதிருஷ்டவசமாக தரிசித்தது புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன் ஆலயம்.
1680 வாக்கில் மராட்டிய ராஜா வெங்கோஜி ஒருநாள்   சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய சென்றார். ப்ரம்மானந்தமாக தரிசனம் செய்து அன்றிரவு அங்கே தாங்கினார். ராத்திரி கனவில் சமயபுரம் காளி தோன்றி ”அடே வெங்கோஜி, நீ இருக்கும் தஞ்சாவூருக்கு வெளியே மூன்று மைல் தூரத்தில் ஒரு காட்டில் நான் இருக்கிறேனே. என்னை அங்கே பார்க்காமல் இவ்வளவு தூரம் வந்தாயே. முதலில் அங்கே வந்து என்னைப் பார்” என்றாள்
 ராஜா வெங்கோஜி ஓடினான்.  அம்பாள்  சொன்ன இடத்தில் ஒரே புன்னை மரக் காடு. வெட்டி வீழ்த்தினான் . வெள்ளெறும்பு புற்று   உருவில் காளியைக்  கண்டு பிடித்தான். இப்போது நாம் தரிசிக்கும் முத்து மாரி அங்கே கோவில் கொண்டாள். பின்னால் வந்ததஞ்சாவூர்  மராத்தி  ராஜாக்களின்  துளஜா மகாராஜாவின் பெண்,   ஏதோ நோய் வாய்ப்பட்டு  கண்ணை இழந்தவள், இங்கே அம்மனை வேண்டி கண் பெற்றாள் .   அக்காலத்தில் இந்த ஊர் பெயர் மாரியம்மா புரம்.

மகா தவ யோகி அவதூதர் சதாசிவ பிரம்மேந்திரர் (‘மானஸ சஞ்சரரே” பாடியவர்) அந்த புற்றை மாரியம்மனாக உருமாற்றினார். ஜனாகர்ஷணம் சக்ரம் பிரதிஷ்டை செய்தார். வெள்ளமாக பக்தர்கள் வருகிறார்கள். இன்றும்  கணக்கிலடங்கா கூட்டம்.

தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் ஐந்து கி.மீ தூரத்தில் பிரம்மாண்டமான புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் ஜே ஜே என்று கும்பலோடு வரும் பக்தர்களுக்கு ஆசி அருள்கிறாள். அங்கே அற்புத தரிசனத்துக்கு வழி செய்து கொடுத்தவர் எனது அருமை நண்பர்  காலஞ்சென்ற,  கரந்தை பிரபல மன நல மருத்துவர் டாக்டர் கே. தியாகராஜன் அவர்கள். ஸ்ரீ கிருஷ்ணார்ப் பணம் சேவா டிரஸ்ட்  நூல்கள் வெளியிட நிறைய உதவியர். தர்மிஷ்டர். இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை எனக்கு அளித்தவன் ஸ்ரீ கிருஷ்ணன் தான்.

கைலாஸத்தில்  பரமேஸ்வரன் கடும் கோபத்தில் இருந்தான்.  தனது மனைவி   தாக்ஷாயணி  அப்பா  அவமதித்ததால்  அவன் வளர்த்த யாகத்தீயில் குளித்து மறைந்தது தான் கோபத்தின் காரணம்.  அவள் மறைவுக்கு காரணம் அவள் தந்தையின் அலக்ஷ்யம் என்று கோபம் கொண்ட சிவன் தக்ஷனை அழித்தார். கோபத்தில் இறந்த பார்வதியின் உடலை தோளில் சுமந்து ஆடினார். அவள் உடலை 51 பாகங்களாக ஸ்ரீ விஷ்ணு பாரத தேசமெங்கும் விழச்செய்து அவை உயர்ந்த சக்தி பீடங்களாயின. அவற்றில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்/புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் ஆலயம்.

மாரி அம்மன் தமிழ் மக்களை வாழவைக்கும் காக்கும் தெய்வம். மண்ணையும் மக்கள் மனமும் குளிர வைக்கும் கருணை தெய்வம். வேப்பிலைக்காரி. எத்தனையோ லக்ஷ மக்கள் மனம் மகிழ வைப்பவள் . அருள்மாரி பொழிபவள்.
சமயபுரம் செல்ல விழைந்தோம்.  அப்போது நடைபெற்ற  கும்பாபிஷேக கூட்டம் ஆலயத்தை அணுக வாய்ப்பை தரவில்லை. காவல் துறையினர் தெருவையெல்லாம் மடக்கி வாகனங்களை கிட்டே வராமல் விரட்டி அடித்தனர். நடக்க வழியில்லை. அடுத்த முறை அம்மன் வரவழைப்பாள் என்ற நம்பிக்கை மனதில்  எப்போதும்  உண்டு.   சமயபுரத்தாளே புன்னைநல்லூர் மாரியம்மன் அம்சம் தானே.

புன்னைநல்லூர் ,முத்து மாரியம்மன்  கோவில் `மராட்டிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வம்சம் தஞ்சைக்கு வந்த காலத்தில் ( ஏகோஜி 1676-1684) கட்டப்பட்டது என்கிறார்கள்.

கிழக்கு பார்த்த சந்நிதி. ஐந்து கோபுரங்கள். நாலு பிரகாரங்கள். கோவிலில் முகப்பில் ஒரு நுழைவாயில் கோபுரம். பிரபல நடிகை வைஜயந்திமாலா கட்டிக்கொடுத்தது. நல்ல காரியங்களை நடிகர்  நடிகைகளும் செய்யும்போது வணங்குகிறோம். ரெண்டாம் சிவாஜி காலத்தில் கல்லும் காரையுமாக இருந்த கோவில். இப்போது 7 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது.

ஒரு ஆதி சைவ சிவாச்சாரியார் குடும்பம் துக்கோஜி மஹாராஜா காலத்திலிருந்து வழிபாட்டை திறம்பட நடத்தி வருகிறது. நிறைய குருக்கள் இந்த தலைமுறையில் தொடர்ந்து வழிபாடு செயதுவருகிறார்கள்.

மாரியாம்மனோடு பேச்சியம்மனும் ஒரு சந்நிதியில் இருக்கிறாள். சரஸ்வதி அவதாரம். குழந்தைகள் உடல் நலத்திற்கு இன்றும்  பல தாய்மார்கள் நாடும்  சிறந்த டாக்டர் பேச்சியம்மன்  தான். . தஞ்சாவூரில் மட்டுமல்ல, மற்றும் இவளைத் தெரிந்த எண்ணற்ற குடும்பங்களுக்கு இவளே டாக்டர்.

அம்மன் ஸ்வயம்பு. புற்று வடிவமாக இருந்தவள். ஐந்து வருஷங்களுக்கு ஒரு தரம் ஒரு மண்டல காலம் சாம்பிராணி தைல காப்பு.

நாங்கள் புன்னைநல்லூர் மாரி அம்மனை தரிசித்த அன்று அமாவாசை. எங்களை தற்போதைய ஆதிசைவ சிவாச்சாரியார் அருமையான தரிசனம் செய்வித்தார். கணீர் குரல் அவருக்கு. கர்பகிரஹத்தில் அம்மனுக்கு தமிழில் அர்ச்சனை செய்தது அர்த்தம் புரிந்தது. கண்கொள்ளா காட்சி. ஆலயத்தில் அருகே இருந்த அவர் இல்லத்திற்கு அழைத்து சென்று சூடான இட்டலி தேங்காய் சட்னியோடு அளித்தது ஒரு எதிர் பாராத சம்பவம்.

அவரது தகப்பனார், பாட்டனார் படங்கள் வீட்டில் முந்தைய  அர்ச்சகர்  தலைமுறையை நினைவு படுத்தின. அவர் தகப்பனார் தென்னிந்திய அர்ச்சகர் சங்க தலைவராக இருந்திருக்கிறார்.

தஞ்சை சென்றால் தரிசிக்க வேண்டியவள் புன்னைநல்லூர் மாரியம்மன். சென்றால் எனக்கும் வேண்டிக்கொள்ளுங்கள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *