THIRUPPALLI EZHUCHCHI 10 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –   நங்கநல்லூர் J K  SIVAN
மணி வாசகர்

திருப்பள்ளி எழுச்சி  10வது பாடல்
மார்கழி தெய்வீக மாதம் முடிந்து கல்யாண மாசம்  தை  நாளைமுதல்  பிறக்கிறது. சைவமும்  வைணவமும் ஹிந்துக்களின் இரு கண்கள். மார்கழி மாதம்   ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களையும்  விளக்கி எழுதினேன். அது வைணவ நண்பர்களுக்கு மட்டும் என்று எடுத்துக் கொண்டால்  சைவ நண்பர்களுக்கு  மணிவாசகரை விட சிறந்த பக்தி பாடல்களை யாரால் தரமுடியும் என்பதற்காக  திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி 10  பாடல்களோடு  என் பக்தி காணிக்கையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
10  புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி
திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே.!

”திருப்பெருந்துறையில் வீற்றிருந்து  அருள் புரியும்  ஆத்மநாதா,   திருமாலாகிய  மஹா  விஷ்ணு, ப்ரம்மா  இருவருமே  ”அடடா,  சிவனருள் பெற்ற  பூமியில் நாமும் பிறக்கவில்லையே,  அதனால் வாழ்நாள் வீணாளாகி விட்டதே”என்று எண்ணுகிறார்கள்.  இந்த பூமியில் பிறக்க  விருப்பம் கொள்கிறார்கள்.    எங்களுக்கு  அப்படிப்பட்ட  பாக்யத்தை கொடுத்தவனே , உன்னுடைய பாதங்களை அர்ச்சிக்க  உனது திருவருள் சக்தியை போற்றிப்பாட வகை  தந்து, நீ பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளி யினின்றும் எழுந்தருள்வாயாக.
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
ஆவுடையார் கோயிலில் ஒரு கல்வெட்டு  என்ன சொல்கிறது தெரியுமா?  

”ஆவுடையார் கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்த  விளம்பரமாவது-

”இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட சாயர¬க்ஷ கட்டளைத் தர்மமானது.  கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம வரிசரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப் பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது  முதல் வருஷம் 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது.  மேற்படி  (ஷ ) மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின் படி சென்னப் பட்டணத் திலிருக்கும் ஜெனரல் திரேசரி GENERAL TREASURY  என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கிஷ த்தில் வைக்கப் பட்டிருக்கின்றது.   ஷ தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தை யுள்ளவர் ஷ சபையாரவர்களுக்குத் தெரியப் படுத்த வேண்டியது.”  

எவ்வளவு  பொறுப்பாக   இந்த கல்வெட்டு  பச்சையப்ப முதலியார் அளித்த நன்கொடை பற்றிய   விவரம் தருகிறது.
 ஒரு லக்ஷம் வராகன்  என்பது ஒருலக்ஷம் சவரன் தங்கம். அதன் இன்றைய விலை என்ன என்று  நீங்களே பெருக்கி பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய  சைபர்கள்  போட்டுக்கொள்ளவேண்டி வரும்.   எவ்வளவு தாராளமான மனது இருந்தால்  முதலியார் இப்படிப்பட்ட  தர்ம கைங்கர்யம் பக்தி பூர்வமாக  செயதிருப்பார்? இது போல் இன்னும் எத்தனையோ ஆலயங்கள், பள்ளிகளுக்கு செய்த வள்ளல் அவர்.

இதெல்லாம்  சொல்லாமல்  அவர் சிலைக்கு  பச்சையப்பன்  என்று   அவர் பெயர் இருப்பதால்  வெறுமே, பச்சை வர்ணம் மட்டும்  அடித்து காட்டுவது வெறும் பச்சை துரோகம்  என்று மனதை வாட்டுகிறது. எத்தனையோ மஹான்களின் புண்ய காரியங்கள் வெளியே வரவில்லை, வரச்செய்வதில் ஆர்வமும் இல்லை. அவர்கள் அரசியல் தெரியாத பரோபகாரம் மட்டும்  சிந்தனையில் உள்ள  பரம புருஷர்கள்.

ஆவுடையார் கோவில் பஞ்சாக்ஷர மண்டபத்தில் (கனகசபை  என்றும் பெயர் ) முந்நூறு  வருஷங்களுக்கு முன் செதுக்கப்பட்ட புவன அக்ஷரங்களை காணலாம்.   ஒரு தூணில்  ரெண்டு தலை ஒரு உடல்  பாம்புகள் , நவ கிரஹங்கள் காணலாம்.   நவகிரகம் தனியாக இல்லை.  27 நட்சத்திர வடிவங்கள் , பல வித குதிரைகள், சப்தஸ்வர தூண்கள், செதுக்கியிருக்கிறார்கள்.  உருவச்சிலைகளின்  கால்  நரம்பு  தெரிகிறது. தலைமுடி கூட சன்னமாக நீட்டி  அளவோடு  அல்லவா நீவி விட்டிருக்கிறான் சிற்பி..

 நிருத்த மண்டபம் தான் நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத்  தெரிகிறது. வேடன் வேடுவச்சி சிற்பங்கள்  பாண்டிய சிற்பிகளின் பெருமையை பறை சாற்றுகிறது.

தேவசபை – சுந்தர பாண்டிய மண்டபத்தில்  மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி கொண்டுள்ளார். இவரைப்பார்த்த பிறகு தான்  ஆத்மநாதர் தரிசனம். சிவனும் அம்பாளும் தெற்கு பார்த்தபடி அருவமாக இருக்கிறார்கள்.   திருமேனி இல்லை.   பாணம்  இல்லாத  ஆவுடையார் மட்டும்.  சத தள பத்ம பீடத்தில் – 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் – யோகாம்பாளின் திருவடிகள்  மட்டும் தங்கத்தில் செய்த யந்திர வடிவம். உள்ளே செல்ல முடியாது.   அம்பாளின்  திருப் பாதங் களை கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் பண்ணமுடியும்.  

எல்லாச் சிவாலயங்களிலும் உள்ள சிவலிங்கம்  இங்கே  இல்லை.    இங்கே  நடுவில் உள்ள சக்தி பீடம்  மட்டும்,
அதற்கு மேலே  ஒரு குவளையை  கவிழ்த்து சாற்றியிருப்பார்கள்.  சக்தி பீடத்தில் ஞானஒளியாக ஆன்மநாதர் இருக்கிறார். உருவம் அற்ற அருவம்.  சக்தி பீடம் மட்டுமே இருப்பதால்  உலகமே ப்ரம்ம சக்தியால் இயங்குகிறது என்ற தத்துவம் புலனாகிறது.    எதிரே  உள்ள  சதுர  கல்மேடையில்  புழுங்கலரிசி அன்னத்தை ஆவி ததும்ப பரப்பி  அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை என்று  பல  பக்ஷணங்கள் வைத்து நைவேத்தியம். ஆவியிலுள்ள நறுமணமே ஆத்மநாதருக்கு  நிவேதனம்.    கொடி  மரமோ, பலி  பீடமோ, நந்தியோ   இல்லாத  விசேஷ விசித்ர சிவன் கோவில்.  

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மறக்காமல்   காணவேண்டியது  கல்லில் வடித்துள்ள குருந்தமரம்  அடியில் ஆத்மநாதர் கிழ பிராமண  குருவாக இருக்கும்   சிற்பம்.  பவ்யமாக  மாணிக்கவாசகர்  உபதேசம் பெறும்  சிலை.

இப்போதும் கூட  பழைய கால  கெத்து வாத்தியம்  தினமும் சாயரட்சை முடிந்ததும்  வாசிக்கிறார்கள்.  மண்டபங் களில் கல்வெட்டுக்கள் நிறைய  படிக்கமுடியாமல்  இருக்கிறது.

மணிவாசகரை வணங்கி  அவர்  அளித்த  திருப்பள்ளி எழுச்சிக்காக  இன்னொரு முறை நமஸ்கரித்து இந்த பதிவுடன் விடை  பெறுகிறோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *