MAKARA SANKRANTHI 15.1.2024 J K SIVAN

2024  சக்ரந்தி – சங்கராந்தி,  பொங்கல்…. நங்கநல்லூர்  J K  SIVAN

ஜனவரி 15,  2024   திங்கட்கிழமை  சோபக்ருத்  வருஷ தை 1 ம் தேதி  சோமவாரம்  திதி : 02:16 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி  நட்சத்திரம் : சதயம் 08:07 AM வரை பிறகு பூரட்டாதி 06:10 AM வரை பிறகு உத்திரட்டாதி  யோகம் : வரியான் 11:11 PM வரை, அதன் பின் பரீகம். கரணம் : பவம் 03:35 PM வரை பிறகு பாலவம் 02:17 AM வரை பிறகு கௌலவம்.    ராகு காலம் 08:03 AM முதல் 09:28 AM வரை. சூலம் கிழக்கு
 பொங்கல் பானை வைக்க  சிறந்த நேரம்   காலை 6.30 முதல்  7.30 வரை. பிறகு  9.30 -10.30 வரை  தை பொங்கல் கொண்டாடலாம் . இனி சங்கராந்தி பற்றி சிறிது அறிவோம்.
வறட்சியை போக்க மழை அவசியம். மழை பொழிய  இந்திரனை கொண்டாடுவது தான் இன்று  14.1.24 போகி .  பொங்கல்/சங்கராந்திக்கு முதல் நாள். வடக்கே இதை   இந்திர விழா என பல பகுதிகளில் கொண்டாடுகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலுக்கும் மரியாதையோடு வரவேற்பு. பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று ஒவ்வொருவரும் வாழ்த்தும் நாள். இந்த பொங்கல்  பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே  சங்க காலத்திலேயே கொண்டாடப் பட்டது.

‘சக்ரந்தி’ என்றால் சுழல்வது. சக்கரம் சம்பந்தப்பட்டது சுழலத்தானே செய்யும். உலகம் உருண்டை, எல்லா க்ரஹங்களும்  உருண்டை.  எனவே  எல்லாமே  பிரபஞ்சத்தில் சுழன்றுகொண்டே இருக்கிறது. உருளும் பூமியின்மேல் வாழும் நம் வாழ்க்கையை அதனால் தான் வாழ்க்கை சக்கரம் என்கிறோம். நம்மை வாழ்க்கை சுற்றி சுற்றி அடிக்கிறது

சங்கராந்தியை உத்தராயணம் என்று சொல்வது தவறு என்று சில தர்க்கங்கள் உண்டு. கி.பி. 1000 மாவது வருஷம் சங்கராந்தி டிசம்பர் மாதம் 31 அன்று வந்தது. இன்னும் 9000 வருஷங்கள் கழித்து பொங்கல் ஜூன் மாதம் தான் வரும் என்கிறார்கள். என்ன கணக்கோ? சுழற்சியில் நாள் தேதி நேரம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி தள்ளி தான் வரும். முன்பெல்லாம் ஜனவரி 1 கேலண்டர் ஜனவரி 1 மார்கழி 14 என்று காட்டியதை பலபேர் கவனம் வைத்திருப்பீர்கள். இப்போது மெதுவாக நகர்ந்து 1 – 17 இந்த வருஷம். எனவே ஜூன் மாதத்தில் பொங்கல் வர வாய்ப்பிருந்தாலும், நாம் அதை பார்க்கப் போவதில்லையே .  கொண்டாடும் விதம் மாறினாலும் கோட்பாடு ஒன்றே தான்.

இந்த நாள் உத்தராயண புண்யகாலம். புனிதம் வாய்ந்தது  சூரியன் வட கோள யாத்ரை போவது உத்தராயணம்,  சூரியனின் மகன் சனீஸ்வரன். மகர ராசிக்கு அதிபதி. தந்தை மகனது இல்லத்துக்கு செல்கிறான் என்றும்  வழிபடுகிறோம்.  சூரியன் இன்றி நமக்கு ஒளியோ, சக்தியோ, உணவோ கிடையாது.

பொங்கல் என்று தமிழ் தேசத்தில் இதை சிறப்பாக வரவேற்கிறோம். மகிழ்ச்சி சுபிக்ஷத்தால் உண்டாகிறது.  இறைவன் இயற்கை உற்பாதங்களை நீக்கி நிறைய மழை பொழிந்து ஏரி, குளம், குட்டை, ஆறு எல்லாம் (இன்னும் இருந்தால் ) நிரம்பி பூமியை வளமாக்கி, விளைச்சல் அமோகமாகி விலை வாசி குறைந்து, மக்கள் வேண்டிய பொருள்களை வரிசையில் நின்று கிட்டே வரும்போது தீர்ந்து விட்டது அடுத்த வாரம் வந்து பார் என்ற வார்த்தை கேளாமல் பெறுவதற்கு, இறைவனுக்கு நன்றி கூறும் நாள்.

 சங்கராந்தி சூரிய நாராயணனை வணங்கும் நாள். இன்று தான்  மகா விஷ்ணு அனைத்து அசுரர்களையும் அழித்து அவர்கள் தலைகளை மந்திர மலையின் கீழே வைத்தார் என்று புராணம் சொல்கிறது. தீய சக்திகளை ஒழிக்க, தீய எண்ணங்கள் நீங்கி, நல்லெண்ணங்கள் நெஞ்சில் குடிபுக ஒரு பண்டிகையாக  நாம்  சங்கராந்தியை  மகிழ்ச்சி பொங்கும்  பொங்கல் நாள் என்று நன்றியோடு கொண்டாடி நல்லவை உள்ளத்தில் பொங்கட்டும்.  இந்த பொங்கல் பண்டிகையை சங்கராந்தியை வரவேற்போம்.

சூர்ய கிரணம் அக்னிப் பிழம்பு. ஒவ்வொரு கிரணமும் அண்டமுடியாத, நெருங்க இயலாத அக்னி.  ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் உடனே அதில் தீப்பற்றிக் கொள்கிறது. சிறு  வயதில் லென்ஸ் வைத்து காகிதத்தை பற்ற வைத்து விளையாடிஇருக்கிறேன்.
லென்ஸ், குவி ஆடி,  குழி ஆடி,  convex /concave  லென்ஸ்  சயன்ஸ் வாத்யார்   கற்றுக் கொடுத்தி ருக்கிறார். லென்ஸை பூதக் கண்ணாடி என்கிறோம். பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிற  மாதிரி எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய கோவில்கள் தான்  பூதக் கண்ணாடி.   ஐம்பூதங்களையும் உள்ளடக்கம் செய்து வைத்திருப்பவனின் ஹ்ருதய ஆலயம் பூதக் கண்ணாடி என்பதில் சந்தேகம் இல்லை.  

சங்கராந்தி எனும்  பொங்கல் பண்டிகை  என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை.

பொங்கல்  தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக் கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ்  என  ஹிந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது  விவசாயத்தில் உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும்,  இயற்கைக்கும், விவசாயத்திற்கு  வாய் திறக்காமல் முணு முணுக்காமல் சலிக்காமல்   வயலில் உழைத்த  மாடுகள்,மற்ற உயிர்களுக்கும் நன்றி  தெரிவித் தல்.  மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டா டப்படும் பொங்கல் விழா.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் இயல்பான  விழா  பொங்கல். இயற்கைக்கு, மாடுகளுக்கு, காக்கைகளுக்கு  கூட  மரியாதை செயகிறோம்… காக்கா பிடி  கன்னு பிடி காக்காய்க்கெல்லாம் கல்யாணம்….84 வருஷம்  இது வரை கேட்டிருக்கிறேன்.

நாளை  15.1.2024  சங்கராந்தி அன்று  சூரியநாராயணனை வணங்கி ஆசி பெற்று அனைவரும் இன்புறுவோமாக .
சிறியவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள், பெரியோர்களுக்கு சங்கராந்தி நமஸ்காரங்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *