THIRUPPAAVAI 28 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே !    நங்கநல்லூர்   J  K  SIVAN திருப்பாவை
மார்கழி 28ம்  நாள்
28   குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா

என் கம்ப்யூட்டருக்கு  திடீரென்று    மூன்று நாள் ஓய்வுக்குப் பிறகு  வேலைசெய்யவோ, எனக்கு  ஒத்துழைப்பு தரவோ மனமில்லை, ஏன் என்னை  விட்டு விட்டு  ஊருக்குப் போனாய் என்ற கோபமோ?    மெதுவாக  அதை தட்டிக் கொடுத்து, குட்டியாக அதற்கும்  ஒரு கிருஷ்ணன் கதை சொல்லி நல்ல பிள்ளையாய் இப்போது தான் சொன்னபடி கேட்கிறது.  ஆகவே    இனி மேலே தொடர்வோம்.
 கருப்பன் என்கிற ஓரு நாய் ஒரு கிராமத்தில் கொஞ்சம் கர்வத்தோடு அலைந்து கொண்டிருந்தது. எங்கோ யாரோ வெளியாட்கள் கிராமத்தில் நுழைந்த போது பார்த்துவிட்டது. குலைத்தது. விடாமல் யார் வந்தாலும் இப்படி குலைத்தது. ஊர்க்காரர்கள் அதன் குலைப்பில் ஏதோ பிரயோ ஜனம் இருக்கிறதே. திருடர்கள், கொள்ளைக்காரர்கள் வந்தால் தெரிகிறதே என்று அதற்கு நிறைய ரொட்டி, பழைய சோறு போட்டு வளர்த்தார்கள். அதற்கு மற்ற நாய்களை விட அந்தஸ்து வந்து விட்டதாக கர்வம் வந்து ஒரு நாள் ஒரு முக்கியமான விசேஷம் நடக்கும் இடத்தில் வித்யாசமாக குலைப்போம் என்று அழுதது. நல்ல காரியம் நடக்கும் இடத்தில் இந்த நாய் அழுவது அபசகுனம் என்பதால் அதை ஓட ஓட விரட்டினார்கள். அதைப்  பார்த் தாலே யாரும் சீந்துவதில்லை. ” இது அழுகிற நாய் வீட்டில் சேர்க்காதே. நாய்  அழுதால்   வீட்டில் ஏதோ ஒரு தலைக்கு  மரணம் நிச்சயம்”  என்று  சொல்வதால்  அதை வெளியே  விரட்டி விட்டார்கள்.
கருப்பன் ஒழுங்காக தனது லிமிட் தெரிந்து நடந்து கொண்டிருந்தால் இன்னும் எத்தனை வீட்டு பழைய சோறு கிடைத் திருக்கும்!

ஆகவே தான் நான்  ஏதோ எழுதுகிறோம் நாலு பேர் படிக்கிறார்கள் என்று பெருமிதம் இல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக ஆண்டாளைப்  பற்றி பக்தி சிறிதும் குன்றாமல் பெருமை குறையாமல் மனதில் பயபக்தியோடு இதுவரை எழுதி வருகிறேன் இன்னும் ரெண்டுநாளில் பாசுரங்கள் முடிந்து ஆண்டாளுக்கு விடை கொடுக்கும் வரை எழுத்து அவ்வாறே தொடரும்.
++++
தினமும் நம்மை மகிழ்விக்கும் ஆண்டாள்  இன்று  28வது  நாளாக  நம்மை சந்திக்கிறாள். ஆண்டாள் என்று நான் சொல்லும்போது  அவளைப்   படைத்த கோதையையும்  சேர்த்து தான் சொல்கிறேன்.  இன்று  பாசுரத்தில் இருந்தே ஆரம்பிப்போம்.

28.   ”கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தனோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தனை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்”

வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் என்கிற சாது  வைணவ ஆழ்வாரின் வளர்ப்பு மகளாக அவதரித்த கோதை நாச்சியார், தாம் வாழும் வில்லிப் புத்தூரையே மனதளவில் கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடியாக, கோகுலமாக பிரிந்தாவனமாக, , வில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்ர சாயியையே, ரங்கமன்னாரையே, கண்ணனாகவும் அந்த சிறு கோவிலையே — (அவள் வாழ்ந்த காலத்தில் இருந்ததைச் சொல்கிறேன், இப்போது தமிழக அரசு தனது அரசியல் சின்னமாக எடுத்துக்கொண்டு பெருமை யளிக்கும் பெரிய அழகிய கோபுரம் கொண்ட கோவிலை அல்ல)—-  கண்ணன் வாழ்ந்த நந்தகோபனின் மாளிகையாக கற்பனை செய்து இந்த பின்னணியில் அற்புதமாக 30 பாசுரங்களை காலத்தால் அழியாத காவியமாக அளித்துள்ளாள்.
தன்னையும் தன் தோழியரையும் ஆண்டாளாகவும் அவளது தோழிகளாகவும் காட்டுகிறாள். பதினைந்து  வயதே வாழ்ந்த அவள் பன்னிரண்டு ஆழ்வார்களில்  அழகிய  பெண்ணாழ்வாராக ஆண்டாளாக  நிலை பெற்று விட்டாள்.

மேலெழுந்தவாரியாக படித்தால் திருப்பாவை என்பதில் ஆண்டாள் என்கிற ஆயர்பாடி சிறுமி, அவள் தோழிகள் , கண்ணனது வளர்ப்புத் தந்தை,  நந்தகோபனின் அரண்மனை, அதன் வாயில்  காப்போனாகிய காவலாளி, கண்ணனை வளர்த்த அன்னை யசோதை, கண்ணனின் தந்தை நந்தகோபன், சகோதரன் பலராமன், நப்பின்னை, இவர்களைச் சுற்றியே முப்பது பாசுரங்களும் பிணைக்கப்பட்டிருக்கிறது.
எல்லோரையும் விடியற்காலை துயிலெழுப்பி, கண்ணபிரானை அவனுடைய சிம்மாசனத்தில் அமரச்செய்து அவனிடம் தங்களது நோன்புக்கான வேண்டுகோளை அருள்வாயாக என்று உரிமையோடு கேட்கிறாள். கண்ணன் மறுவார்த்தை பேசாமல் கேட்டதைக் கொடுத்துவிட்டான். நன்றியோடு அவனைப் போற்றிப் புகழவேண்டாமா ?

ஏற்கனவே 26வது பாசுரத்தில் நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதை குறிப்பிடுகிறாள் கோதை. ஆமை போன்று புலன்களை உள்ளிழுக்க முடிந்தவன் யோகி. ஏகாதசி விரதம் போன்ற கட்டுப்பாடுகள்,   நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ,  ஐம்புலனில் ஒருசிலவற்றின் மேல் வைக்கும் கண்ட்ரோல்.

உடம்புக்கு எதற்கு சிங்காரம்? பகட்டான பளபளக்கும் ஜிலுஜிலுக்கும் உடை தேவையா.? மற்றவன் அறுத்துக்கொண்டு ஓடுவதற்காக நாம் நிறைய நகைகளைச் சுமக்கவேண்டுமா?

காசு கொடுத்துக் கண்ணைக் கெடுக்கும் ரசாயன படைப்பில் மை, சருமத்துக்கு எந்த விதத்தி லாவது தீங்கு செய்யும் வாசனைப் பொடிகள், பவுடர், இந்த விரதத்தின் போதாவது அவசியமில்லையே” என்கிறாள் ஆண்டாள் வாயிலாக அந்தச் சிறுபெண் கோதை.

ஒரு விரதம் என்று எடுத்துக்கொண்டால் நாக்கை அடக்கவேண்டும்,  உணவு பசிக்குமட்டுமே, ருசிக்காக வயிறை நிரப்ப    இல்லை , என்பதைத் தெளிவாக அறிவுறுத்துகிறாள்.  பால், நெய் கலந்தவற்றை சாப்பிடவேண்டாம். விரத காலத்தில் பூவைச்சூடவேண்டாம். நாம் விரதத்தில் இருக்கிறோம் என்று  நமக்கு நாமே  ஞாபகப்படுத்திக் கொள்ளத்தான்  இது.

சத்சங்கம், இறைவனைப் பற்றியே பேசுவது, பாடுவது, கேட்பது, நினைப்பது என்பதால், அது  ஒன்றே குறியாக இருக்கலாமே. உடலின் நினைப்பை மறந்து உள்ளத்தைத் திறந்து அவனை உள்ளே ஆட் கொள்வோமே. இதால் நமக்கு மன அமைதி கிட்டும். பேச்சு குறையும். வம்பு கிட்டேயே வராது. அதை வெளியே தள்ளி விட்டு, அன்பு கிட்டே வரும்.

காலம் செல்லச் செல்ல, அடிக்கடி இப்படி விரதமிருந்தால் உடல் வலிமை பெருமை. வாய்மை, பொறுமை எல்லாம் தானாகவே வந்து சேரும். வியாதி நெருங்காது.

கள்ளம் கபடம் அறியாத உள்ளம் கொண்ட ஆண்டாளும் அவள் தோழியரும் எவ்வளவு உண்மையான பக்தி கொண்டவர் களாக இருந்தால் அந்த பரந்தாமனிடம் “என்னவேண்டும்?” என்று அவன் கேட்டபோது, கொடி கொடு, துணி கொடு, தம்பட்டம் கொடு, என்று குழந்தைத் தனத்தோடு கேட்டார்கள்.

நம்மிடம் அதனால் தான் இறைவன் உனக்கு என்னவேண்டும், என்று கனவில் கூட கேட்பதில் லை!!! நாம்  ஹை கோர்ட் பில்டிங்  மட்டுமல்ல, மரீனா பீச்சையே  நம் வீட்டுக்கு பின்னால் கேட்கக் கூடியவராகில் என்று கண்ணனுக்கு தெரியுமே. 

தேவையில்லாததைக்  கேட்டுப்  பெறுவதை விட தேவையானதை அறிந்து அவனே கொடுப்பானே. தப்பாக கேட்டுப் பெற்று அவதிப் படுவதையும் தவிர்க்கலாமே. கும்பகர்ணனை ஞாபகம் இருக்கிறதா?. ”நிர்தேவஸ்ய” (தேவர்களே இருக்கக்கூடாது ) என கேட்கப் போய் நாக்கு உளறி, வாய் குளறி ”நித்ரே அவஸ்ய” (தூக்கத்தைக் கொடு ) என்று கேட்டு ஆறுமாதம் தூங்கியவன். ஹிரண்யன் அப்படித்தானே ரொம்ப ரொம்ப சாமர்த்தியமாக வரம் கேட்பதாக நினைத்து இல்லாத கண்டிஷன் கள் போட்டு அற்புதமாக அவன் கேட்ட கண்டிஷன்களுக்கு உட்பட்டே  அவ்வாறே அவனை முடித்தார் நரசிம்மனாக  வந்த  நாராயணன்.
ராவணன் எந்த மனிதனாலும் தனக்கு முடிவு கனவிலும் இருக்க வழியில்லை  என்று  இறுமாப்போடு,  மார் தட்டினான். அவன் மார்பில்,   ராமன் என்ற மனிதனாக அவதரித்து,   நாரயணன் பாணத்தை செலுத்த   ராவணன் மாண்டான்.

கிருஷ்ணன் ஆண்டாளிடம் “ஏ! சிறு பெண்ணே, இதுமட்டும் தான் வேணுமா, இந்த அழியும் அல்ப வஸ்துகள் தவிர வேறு பெரிசாக எதாவதும் கேளேன்,தருகிறேன் ” என்றான்.

” கிருஷ்ணா, பெருமானே, நாங்கள் சிறுமிகள், யமுனை ஆத்துக்கு அந்தபக்கம், கீழண்டை பனந்தோப்புக்கு அடுத்து இருக்கிற கிராமத்துலே, அதோ தெரியுதே அந்த வேலங்காட்டுக்கு வடக்கே, கூட என்ன இருக்கு என்று தெரியாத மாடு மேய்க்கிற அறிவிலிகள். உன்னோடு சேர்ந்து சாப்பிடணும் என்கிற ஆசையிலே உன்னை மரியாதைக் குறைவாக பேசியிருந்தோ   மானால் எங்களை கிருஷ்ணா, நீ கொஞ்சம் மன்னித்து விடு . நீ உலகையே படைத்துக் காக்கிறவன். வேதங்கள் கூறும் பரம்பொருள், குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன். இவ்வளவு பெரிய உன்னை, ஒண்ணுமே தெரியாத சிறிசுகள் நாங்கள் தப்பாக பேசியிருந்தால் எங்கள் மேலே கோபம் வேண்டாம். மன்னித்து காப்பாற்று . உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் இல்லையே” .

ஆண்டாள் தனது பக்தியை எவ்வளவு சிம்பிளாக வெளிப் படுத்தியிருக்கிறாள் பார்த்தீர்களா?  . இன்னும் ரெண்டு நாள் மட்டுமே பாக்கியிருக்கு இந்தமார்கழி 28ம் நாளோடு..இன்று அந்த ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தங்க பல்லக்கில் வீற்றிருந்த கோலத்தில் நமக்கு காட்சி தருகிறாள்!!

++
வில்லிப்புத்தூரில் :
”அம்மா கோதை நீ இந்த ஆண்டாள் மூலமாக  பக்தி, சரணாகதி என்றால் எப்படி பண்ணவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருக்கிறாய். எப்படியம்மா உன்னால் இது முடிந்தது.?

”அப்பா, நான் நினைப்பது, பேசுவது, பார்ப்பது, பாடுவது சகலமும் அந்த அரங்கனை மட்டுமே   என்ற ஒரு பழக்கத்தை, ஏன் ஒரு வழக்கத்தை, ஏற்படுத்திக்கொடுத்ததே நீங்கள்தான், என்று இருக்கும்போது நான் எழுதியவற்றில் உங்களிடமிருந்து தெரிந்து கொண்டது மட்டும் தானே இருக்கும்? இதில் என்ன ஆச்சர்யம்!” என்று சிரித்தாள் கோதை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *