THIRUPALLIYEZHUCHCHI 2 J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி -2    நங்கநல்லூர்   J K  SIVAN      மணி வாசகர்
மார்கழி 22ம் நாள்
”அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!
அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே.!

முதலில்  இந்த  திருப்பள்ளி எழுச்சி  பாடலில்  மணி வாசகர்  என்ன  சொல்கிறார் என்று புரிந்து கொள்வோம்.  அப்புறம் இந்த பாடல் பெற்ற  ஸ்தலத்தை பற்றி அறிவோம்: மிகவும் அற்புதமான க்ஷேத்திரம்.

”சிவ பெருமானே, ஆவுடையார் கோவில் என்று அறியப்படும் இந்த   திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற ஆத்மநாதா,  அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே!  கண்  திறந்து பார். சூரியன் தேர்ப் பாகன்  அருணன் இதோ  இந்திரன் திசையாகிய கீழ்த்திசை வந்து அடைந்து விட்டான்.  எங்கும் கவிந்து இருக்கும்  இருட்டு, இருள், வேகமாக  நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்றுகின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழும்போது  உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந்திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற எத்தனையோ வண்டுகள்   ரீங்காரம் பண்ணுவது காதில் விழுகிறது இல்லையா. கேள்.  அது ஒரு தனி ராகம், இசை. எழுந்திரு  மஹேஸ்வரா,  உன் பக்தர்கள் நீ துயிலெழுவதைக் காண  ஆர்வத்தோடு நிற்கிறதைப் பார்.  பார்த்து அருள் புரிவாய்.
திருப்பெருந்துறைக்கு இப்போது ஆவுடையார் கோவில் என்று பெயர். ரொம்ப ரொம்ப அருமையான சிவஸ்தலம். இதைப் பற்றி  எவ்வளவு வேண்டுமானாலும்  எழுத முடியும். ஏனென்றால்  அவ்வளவு விஷயம் நிறைந்தது. நான் இப்போது சொல்லப்போவது கொஞ்சூண்டு தான்.
திருப்பெருந்துறை எனும்  ஸ்தலத்துக்கு  இன்னொரு பெயர்  ஆவுடையார்கோவில்.   இந்த   ஆலயத்தில் சிவன் பெயர் ஆத்ம நாதர். அம்பாள் யோகேஸ்வரி.  யோகாம்பாள். மூர்த்தி மாணிக்க வாசகர். இங்கு, சிவதீர்த்தம், அக்னி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத் தொட்டித் தீர்த்தம் போன்றவை இருக்கிறது.  காமதேனு வழிபட்ட மகிழமரம்  தான்  ஸ்தலவிருக்ஷம் .

மற்ற சிவாலயங்களில் இருப்பதைப்  போல் இங்கே இராஜ  கோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, கொடிமரம்  எல்லாம் பார்க்க முடியாது.  நாதசுரம், மேளம், பேரிகை, சுத்த  மத்தளம் முதலிய வாத்தியங்கள் இங்கே   வாசிக்கும்  வழக்கம்  இல்லை.    இங்கு ஒலிப்பது திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே..

ஆத்மநாதர் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (ஸ்தலவிருக்ஷம்) உருவமாக மாணிக்க வாசகராகவும் காட்சி தரும்  க்ஷேத்ரம்.   குருந்த மரம்  தான்  இங்கே சிவன்.  மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்கா பிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்  மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது. குவளை உடலாகவும்,  குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால் “ஆத்மநாதர்” என்ற பெயர்.

ஆறு கால பூஜையின்  போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு. தக்ஷனின் யாகத்திற்கு   தனது  கணவன் சொல்லை  மீறிச் சென்றதற்கு மன்னிப்புப்  பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரஹம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதி பலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால் சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்ரஹ சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரஹத் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரிய, சந்திர கிரகணங்களின்  போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலில் கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது.

ஆவுடையார் கோவிலில்  தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார். இங்குள்ள தேர் தமிழகத் திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். ஸ்ரீவில்லிப்புத்தூர்,  திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்  தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் பெரிய தேர்கள்.

 ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும்,தேர்  திருவிழாவுக்கு  இதற்கென்றே எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் கூட்டம்  திரண்டுவிடும் .

இங்கே உள்ள சிற்ப அதிசயங்கள்: டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், கல்லாலான சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையை மட்டும் காட்டுவது. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள். ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள். பல   நாட்டுக் குதிரையின் சிற்பங்கள். அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள். நடனக்கலை முத்திரை பேதங்கள்.   சப்தஸ்வரக் கற்தூண்கள்.      கூடல்  வாய் நிழல் விழும் பகுதி பசு மாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *