THIRUPPAAVAI 19 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! –  நங்கநல்லூர்    J K  SIVAN திருப்பாவை
மார்கழி 19ம்   நாள்
19.   ” மலர் மார்பா”

மாதங்களில்  அந்த மாதவன் மார்கழியாக உள்ளவன்.  மார்கழி ஒரு உன்னதமான தெய்வீகத்துக்கு மட்டுமே   சொந்தமான  மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும்  இந்த நாளில்  உண்டு.  அவனை வணங்கி, இந்த மார்கழி 19ம் நாள் நாம் ஆயர்பாடிக்கு மனதால் பறந்து செல்வோம்.    இதுவரை நமது பயண சுகானுபவமானதற்கு  கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வோம்.

மார்கழி 19வது நாளில் ஆயர்பாடி சிறுமி ஆண்டாள் என்ன செய்தாள் என்பது தான் இன்றைய கட்டுரையின் நோக்கம்.

அந்த கிராம சிறுமிகள் கள்ளம் கபடமில்லாத, கல் மிஷமில்லாத. தூய மனம் கொண்ட  படிக்காத பாமர சிறுமிகள். உள்ளே சுத்தமாக இருப்பினும் புறமும் சுத்தமாக இருக்க யமுனை ஆற்றில் நீராடி விரதமிருந்து மனத்திலும் வாக்கிலும் கண்ணன், நாராயணன், என்ற திருநாமங்களே நிரம்பி வழிய, இந்த தனுர் மாதம் பூரா தங்களை பகவத் சிந்தனையில் ஈடுபடுத்திக் கொண்டதே பாவை நோன்பு என்பது தெரிந்தது தானே?

திரும்ப திரும்ப அந்த சிறு கிராமத்தில் வேறு எங்கு செல்ல வழி இருக்கிறது ?

ஆண்டாளும் அவளுடைய   இடைச்சிறுமி தோழிகளும் ஆயர் பாடியிலே மிகப்பெரியதான — ”பெரிய கடவுள்” — உள்ளே இருக்கும், நந்த கோபன் மாளிகைக்கு இன்று காலையும் வந்து விட்டார்கள். எதற்கு?  சர்க்கரை இருக்கும் இடத்தில் எறும்பு சுற்றாதா? வழக்கம் போல்  கண்ணனைத் துயிலெழுப்பவே!!

நப்பின்னை பிராட்டியுடன் தலைவன் உறங்குகின்ற அழகை அந்தப் பெண் ஆண்டாள் எவ்வளவு விவரமாக வர்ணிக்கிறாள் பாருங்கள். அவள் குரல் அந்த விடியற் காலையில் எங்கும் சஞ்சரித்து, அருகே யமுனையின் நீர் பரப்பின் மேல் மோதி எதிரொலிக்கிறதே  உங்களுக்கு  காதில் விழுகிறதா?  எனக்கு கேட்கிறது.  அதைத் தொடர்ந்து பின் பாட்டு பாடுவது போல் எண்ணற்ற பறவைகளும் உயர்ந்த குரலில் இன்னிசை கீதம் இசைக்கின்றனவே.ஆண்டாளின் குரல் கணீரென்று எப்போதும் முழங்குமே . பாடுகிறாள் கேளுங்கள்:

‘குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்”

பாரதத்தின் தென்கோடியில்  வில்லிப்புத்தூரில்  இருந்தாலும்  விஷ்ணுசித்தரின்  மனம் ஆயர்பாடியில் இருக்கிறது.   அவர் தேகம் இதோ ஆஸ்ரமத்தில், வில்லிப்புத்தூரில் ஒரு தூணில் சாய்ந்தவாறு விளக்கொளியில் தெரிகிறது.

அந்த விடியற்காலை நேரத்திலும் அருகே கோவிலில் அர்ச்சனை செய்யும் பட்டாச்சார்யர் அவரைத் தேடி ஆஸ்ரமத்தில் நுழைகிறார். உள்ளே கோதை அன்றைய மேற்கண்ட பாசுரத்தைப்   பாட ஆரம்பித்து விட்டாள் .  ஆண்டாள் குரல்  கோதை குரல்  .ரெண்டுமே  ஒன்று தானே.
விஷ்ணு சித்தரும்   பட்டரும், உட்கார்ந்து கோதை பாடிகொண்டிருக்கும் பாசுரத்தின் இனிமையிலும் அவள் பாடிய இனிய குரல் இன்பத்திலும் லயித்து சுகானுபவம் பெறுகிறார்கள்.

”மைத்தடம் கண்ணினாய் நீ” என்கிற இடத்தில் கோதை வெகு அனாயாசமாக ஆத்மபூர்வமாக ஆலாபனம் விஸ்தாரமாக பண்ணி அவர்களை வைகுண்டத்திற்கே கொண்டு செல்கிறாள்.

பட்டாச்சார்யர் விஷ்ணு சித்தரைக் கண்டு வணங்கினார்

”விஷ்ணு சித்தர் சுவாமிகளே, சமீபத்தில் உங்களை அடியேன் தரிசிக்க நேரவில்லை. நேற்று சாயங்காலம் ஊரிலிருந்து வந்ததிலிருந்து உடனே உங்களை தரிசித்து பாவை நோன்பு பாசுரங்களின் விளக்கம் கேட்க ரொம்ப ஆவலாக இருக்கிறது. இதோ இப்போது உங்கள் மகள்  கோதை பாடினாளே  அந்த  பாசுரத்தின்  விளக்கத்தை எனக்கு உங்கள்  வாயிலாக அளிப்பீர்களா?

‘ ஸ்வாமின்,   என் பெண் என்பதற்காக சொல்லவில்லை. மற்ற சில பாசுரங்களை விட என் கோதை அருளிச்  செய்கிற இந்த திருப்பாவை பாசுரங்கள் புரிந்து  கொள்ள அவ்வளவு கடினமில்லை.   எதையும் நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் சூக்ஷ்மம் இருக்கிறது. அவரவர் மனத்திற்கு, எதிர்பார்ப்புக்  கேற்ப பொருள் விளங்கும்” என விஷ்ணு சித்தர் நெஞ்சம் தழு தழுக்க சொன்னார்.

வில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவில் பட்டாச்சார்யார் பரம சந்தோஷத்தோடு விஷ்ணுசித்தர் வாயிலாக என்ன அறிந்து கொண்டார் என்பதை நாமும் தெரிந்து கொள்ள  வேண்டாமா ?

”குத்து விளக்கு சாதாரண பெட்ரூம் விளக்கோ, அகலோ, அல்ல. பஞ்ச பூதங்களையும் காத்தருளும் பரமனின்  ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கொளியில் நறுமண அகில் புகை கம கமக்க சப்ர மஞ்ச கட்டிலிலில் அருகே நப்பின்னை உறங்க தானும் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

மெதுவாக ஆண்டாள் கதவைத்  தட்ட நப்பின்னை விழித்துகொண்டு கிருஷ்ணனைப்  பார்க்கிறாள். யார் முதலில் எழுந்து கதவை திறப்பது?

வெளியே ஆண்டாள் குரல் கேட்கிறது—

 ‘ஹே துளசியும் வண்ண,மணமிக்க மலர்களும் மார்பில் புரள நப்பின்னை அருகிருக்க துயில்பவனே, கொஞ்சம் வாயைத்  திறந்து அருள்வாயா? மையிட்ட கண்களால் வையம் குளிர வைக்கும் நப்பின்னையே, கொஞ்சம் அவனை எங்களுக்காக வெளியே விடுவாயா? நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்கே அவன் வாய் திறந்து இதோ வருகிறேன் என்று சொல்லி எழுந்து வந்து  விடுவானோ” என்ற சந்தேகத்தில் அவனை ஒரு கணமும் பிரிய விரும்பாத நீ நாங்கள் அவனை எழுப்ப விட   மாட்டாய் என்று ரொம்ப நன்றாகவே எங்களுக்கு தெரியும். நீ செய்வது தகுமா, ஞாயமா, முறையா? இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உன்னருளும் அவனருளுடன் எங்களுக்கு கிடைத்து எங்கள் பாவை நோன்பு பலனளிக்க செய்வது உன் தயவால் தானே   அம்மா ! ” என்றவாறு அவளை வணங்கிவிட்டு அந்தப் பெண் கூட்டம் அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பியது”
இது தான் அந்த பாசுரத்தின் சாராம்சம்  என்று ஆண்டாள் பாடியதாக அமைந்துள்ளது இந்த அழகிய கற்பனை வளம் நிறைந்த  பாசுரம்.

” நாராயணனின் காருண்யத்தைச் சோதிக்க ஒரு முறை தாயார் என்ன சொன்னாள்  என்று நினைவிருக்கிறதா?

”உங்கள் பக்தன் என்றுசொல்லிக்  கொள்கிறீர்களே, இவனைப் பாருங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறான் என்று ஒருவனைச் சுட்டிக்  காட்ட, பெருமான் சிரித்துக்கொண்டே ‘’என்னைத் தூய மனத்தோடு வேண்டுகின்ற   எனது  பக்தன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டான், எந்தத் தவறுக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான். அப்படி அவன் செய்யும் எந்தச் செயலாவது தவறாகத் தென்பட்டாலும் அது யாரோ ஒருவரின்  நன்மைக்காகவே  செய்ததாக இருக்கும்” என்றான்  நாராயணன்.

விஷ்ணு சித்தரை நமஸ்கரித்து பட்டர் கோயிலுக்கு மீண்டார்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *