THIRUPPAAVAI 14 J K SIVAN

அழகிய ஆழ்வாரே ,  ஆண்டாளே !       #நங்கநல்லூர்_J_K_SIVANதிருப்பாவை
மார்கழி 14ம் நாள்.
14. பங்கயக் கண்ணான் பரம தயாளன்

ஒரு  தலைமுறைக்கும்  மேலாக  ஆசையும் வேகமும் வாழ்வில் குருக்கிட்டதால்  வாழ்க்கையின்  போக்கு  மாறி, நமது முன்னோர்  பலர்  அமைதியான கிராமங்களை விட்டு என்று அவசரமான ஆரவாரம் மிகுந்த பட்டணங்களைத் தேடி ஒடின தாள்  சுபிக்ஷம்  மங்கியது. அமைதி குலைந்து விட்டது. பணம் பக்தியையும்  பாரம்பரிய  பண்பாட்டையும்  தின்றுவிட்டது.
கிராமங்களில் மனிதர்கள் வாழவே, பிழைக்கவே முடியாது என்ற தப்பான முடிவெடுத்ததன்  விளைவாக  அநேகர் அருமையான கிராமங்களை விட்டு வெளியேறி விட்டோம். கிராமங்கள் தான் நகரத்தின், நாட்டின் உயிர் நாடி என்பது ஏனோ  படித்திருந்தும் நமக்கு  மறந்து போய் விட்டது. கெட்டப்பறம் பட்டணமா, பட்டணம் போய் கெட்டுப்போனோமா? சுவற்றுக்கு அந்தப்  பக்கம் உள்ள ஆளை இத்தனை வருஷமாகியும் தெரிந்து கொள்ளாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
”ரிட்டையர் ஆனவுடன் கிராமத்திலே போய் அக்கடான்னு போய் செட்டில் ஆகிட்டு கோவில் குளம்னு காலத்தை சுகமா கழிக்கப்போறேன்” என்று பிளான் போடுகிறவர்கள் பல பேர். இப்போது அதிக பணம் சேர்த்து கிராமங்களில் சென்று வாழ முயல்கிறோம்.!!
கர்ப்பத்தின் இருட்டறையில் அதிகமாக இடமின்றி கைகால்களை குறுக்கிக்கொண்டு முழங்காலோடு தலை சேர்த்து குனிந்து கொண்டுதான் முதலில் உருவானோம். பிறகு தான் பெரிய பங்களா, கார், ஏரோப்ளேன், ஐந்து ஆறு ஏழு எட்டு நக்ஷத்திர ஹோட்டல். அது இல்லை யென்றால் இது இல்லை.
நல்ல வேளை அந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மீண்டும் அநேகர் கிராமங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது சுபிக்ஷத்தின் அறிகுறி. ஆரம்பத்தில் பட்டணம் ஸ்வர்க பூமியாக காட்சியளித்தது. கை நிறைய காசு. வசதிகள், நாகரிக வாழ்க்கை, சொகுசு என்று கனவில் மிதந்து இங்கே நாளாக நாளாக நகரவே இடம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், மின்சாரம் குறைந்து, வெட்டப்பட்டு, திருடும் கொலை கொள்ளையும் அதிகரித்து பயத்தில் வாழ்ந்து, ஒன்றுக்கு பத்தாக பணம் இறைத்து நகர வாழ்க்கை நரக வாழ்க்கை யாகி விட்டது. நட்பு, பிரேமை, அன்பு எல்லாம் பறிபோனது. மனிதாபிமானம் ஏட்டுக்குள் அடங்கி விட்டது. வியாதிகள் மலிந்து  வெள்ளை கோட்டுக்காரர்களுக்கு  வாரி  வழங்குகிறோம். இப்போது கண் கெட்டுப் போனபின் சூரிய நமஸ்காரம் செய்ய தோன்றி இருக்கிறது.
‘ காசு கொடுத்து இந்த ஜென்மத்தில் இனிமேல் கத்திரிக்காய் கொத்தமல்லி கூட வாங்க மாட்டேன். குழாய் தண்ணீருக்கு சண்டைபோடமாட்டேன். தோட்டத்தில் எல்லா காய் கறிகளும் விளையும். குளத்தில் நீஞ்சுவேன்”  என்ற சத்தம்  காதில் விழுகிறது.
” சாரி, நாம் ரொம்ப லேட். கிராமங்களும்  பட்டணக்கார்களின் வருகையால் கெட்டுப் போக ஆரம்பித்துவிட்டன. நமது தவறான முடிவால் அவசர வாழ்க்கை முறை அங்கும் பரவிவிட்டது…. போகட்டும்…. இருந்தாலும் மீண்டும் அவற்றை புனருத்தாரணம் செய்வோம். ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த , அவர்கள் பெற்றோர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்களை நாடுவோம், திரும்ப அவற்றை பரிமளிக்க உதவுவோம். கோவில்கள் குளங்கள் எல்லாம் காணாமல் போகிறது. மீட்போம்.
கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய் விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை அங்கே கொழிக்கிறது . இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்பு ஆயர்பாடி கிராமம் எவ்வளவு தேவ லோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே கிருஷ்ணனாக அங்கே வாழ்ந்தபோது!

அதற்குள் மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டுவிட்டதே .ஆண்டாள் ஒரு இயந்திரம் மாதிரி. சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள். அவள் தோழியர்கள் அனைவருமே  ஏறக்குறைய வந்தாகி விட்டதே. ஒரு சிலரைத் தவிர. ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.?
”ஆண்டாள், இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார். இந்த அல்லிக் குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பி  விட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. பார்த்தாயா?”
ஆண்டாள் தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டி எழுப்புகிறாள்.
”அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள் யோகிகள் செல்வதை வெளியே வந்து பாரடி பெண்ணே! வெள்ளையாக தாடி, மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு. அதன் ஓசை மூலம் பெருமாளை துயில் எழுப்ப, பெருமாள் முன் நின்று பரவசத்தோடு அவர்கள் வெண் சங்கை ஊதி சுப்ரபாத சேவை பண்ணப் போகிறார்கள். ”வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு நாமும் பெருமாள் கோவிலுக்கு செல்வோம்”
ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, தென்கோடியில் வில்லி புத்தூரில் விஷ்ணு சித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது.
நேற்றைய குளிர் இன்று இன்னும் அதிகமாகிவிட்டது. எனினும் அதி காலையில் எழுந்து ஸ்நானம் முடிந்து நித்ய பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதையும் ஆவலாக ரசித்து படித்தாகி விட்டது. அவரது மனம் அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாளை நினைவில் கொண்டு நிறுத்தியது.
மார்கழி மாதத்தில் 29 நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. ஒருவேளை அப்படி இருந்தால் நமக்கு தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற பேராசை!
மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து கோதையின் வார்த்தைக் கோர்வை அழகைப் படித்தார்.
” உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
மேலெழுந்தவாரியாக இதில் இயற்கையின் வர்ணனையாக வார்த்தைகள் தென்பட்டாலும் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது. ஞானத்தினாலும்  கண்ணன் மீதுள்ள பற்றினாலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம், கோதை எழுதியது கோதோபநிஷதம் . என்ன ஞானம் அவளுக்கு! நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின் பெருமையைப் பாடுவதற்காகவே தரப்பட்டுள்ளது.
‘வா, வந்து க்ரிஷ்ணனைத் துதி செய்’ என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல, அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே, நீவிர் உய்வீர்களாக என்று உலகத்தில் வாழும் நம் போன்றவர்களுக்கு அல்லவோ  ஒரு வரியில் வழி காட்டுகிறாள் !”அப்பா”
கோதை அழைக்கும் குரல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றார் விஷ்ணு சித்தர். மீண்டும் மார்கழி 15ம் நாள் தான் அவரை சந்திக்கமுடியும். 175 வருஷங்களுக்கு முன்னால் நமது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி ஆலயம் எப்படி இருந்தது என்று படத்தை பார்த்தால் தெரியும்…

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *