WRITING RAMA NAMA – J K SIVAN

‘ஸ்ரீ ராம ஜெயம்” எழுதுங்கள் ..நங்கநல்லூர் J K SIVAN

நேற்று காலை என்ன கலர் சட்டை போட்டிருந்தேன்? மத்தியானம் என்ன சாப்பிட்டேன்? இதெல்லாமே ஞாபகத்தில் இருக்காதபோது, பலர் இரவும் பகலும் மண்டையைக் குடைந்துகொண்டு ராமர், கிருஷ்ணன், பிறந்த நாளை நேரத்தை கணித்து கண்டு பிடித்து நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஜோசியர்கள் மற்றும் சரித்திர வல்லுநர்கள் எண்ணற்ற . அதன்படி, ஸ்ரீ ராமநவமி ஜனவரி 10, 5114 BC அதாவது இன்றைக்கு 7137 வருஷங்களுக்கு முன்னர். ராமன் பிறந்த நேரம் ராத்திரி 12.30 க்கு.

காலம் மாறி விட்டது. நாம் ராமநவமியை சித்திரை மாதம் அதாவது ஆங்கில மாதம் ஏப்ரலில் ஏதோ ஒரு பஞ்சாங்கம் காட்டும் நாளில் கொண்டாடுகிறோம்.

சக்தி வாய்ந்த விண் நோக்கும் கருவிகளை பூதக்கண்ணாடிகளை எல்லாம் உபயோகித்து, பட்நகர் என்கிற சரித்திர நிபுணர் தான் கண்டுபிடித்த உண்மைகளை சொல்கிறார்.

”அதி சக்தி வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி இயந்திரங்களையும் கணினி உபகரங்களையும் உபயோகித்து பார்த்ததில் ராமன் பிறந்த நாள் அன்று இருந்த கிரகங்களின் நிலை பாடுகள் சரியாக ராத்திரி 1230 க்கு கிமு 5114 ஜனவரி 10 அன்று ராமன் உதித்ததை துல்லியமாக நிருபணம் செய்கின்றன.

அந்த நாளிலிருந்து மெல்ல நகர்ந்து 25 வருஷங்களைப் பரிசோதித்ததில் ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளின் தேதிகள், நேரங்கள் சரியாக பொருந்துகிறது. மேலும் நகர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை தொடர்ந்ததில் ராமரின் வனவாசம் 13 வது வருஷம், 10வது மாதத்தில் அமாவாசை அன்று சூரிய க்ரஹணம் நடந்தது தெரிகிறது. அன்றைய (அதாவது 7.10. 5077 BC ) ஆகாயத்தில் தோன்றிய கிரகங்கள், நக்ஷத்ரங்களை ஆராய்ந்தபோது ராமாயணத்தில் சொன்னது வாஸ்தவம் என்று அறியப் படுகிறது. அடுத்து வந்த ரெண்டு க்ரஹணங்களையும் சரியாகக் கணக்கிட்டு ராமாயணத்தில் வால்மீகி முனிவர் எந்த உபகரணமும் இல்லாமல் எப்படிச் சரியாகவே சொல்லிஇருக்கிறார் என்போது ஆச்சர்யம்.

ராமனின் தூதனாக ஹனுமான் இலங்கையில் சீதையை சந்தித்தது எப்போது, என்றைக்கு தெரியுமா?, தெரியாது என்று தான் விழிப்போம். ஆராய்ச்சியாளர்கள் வால்மீகி ராமாயணத்தை நன்றாக கூர்ந்து கவனித்து அதிலிருந்து விண் ஆராய்ச்சி தடயங்களை வைத்து அது 12th September, 5076 BC அன்று நடந்தது என்கிறார்கள். அடேயப்பா!!

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ராமாயணம் புருடா இல்லை. பட்நகர் போன்றோர் பலர் சோதித்து, ஆராய்ந்து கண்டறிந்து ஒப்புக்கொண்ட உண்மை நிகழ்வு தான் ராமாயணம். ஒவ்வொரு கால கட்டத்திலும் வால்மீகி கூறும் நாள், நேரம் காலம் எல்லாமே ஆதார பூர்வமாக இருக்கிறது..”

அப்படியும் சிலர் அது தப்பு, இது தவறு என்று சில சம்பவங்களையும் கால கட்டத்தையும் தங்களது கணக்குகளோடு சில ஆதாரமற்ற புஸ்தகங்களை மனதில் கொண்டு எதிர்ப்பதோ, மாறுபடுவதோ தவிர்க்கமுடியாதது. ஆனால் நமக்கு என்ன சந்தோஷம் என்றால், ஏதோ ஒன்று இருந்ததை ஒப்புக்கொண்டு தானே அது அப்படி யில்லை என்கிறார்கள். அதுவே போதும். நாஸ்திகர்கள் வாழ்க!

”ராமா, எந்த புஸ்தகம் எது வேண்டுமானாலும் சொல்லட்டுமடா. நீ என்றுமே கோடானுகோடி என் போன்ற மனசு ”புஸ்தகங்களில்” நிலையாக இருக்கிறாய். அன்றாடம் அவைகளில் எங்களோடு உலவுகிறாய். அது போதும்.

ராமன் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஏன் பல மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் த்ரேதா யுகத்தில் பிறந்தான். ஸ்ரீமத் பாகவத புராணம் ராமனை திரேதா யுக ராஜா என்கிறது. ( பாகவத புராணம் 9.10.51). த்ரேதா
யுகம் 1,200,000 வருஷங்கள் கொண்டது. அதற்கு மேலும் கூட இருக்கலாம்.

அப்புறம் தோன்றிய கிருஷ்ணன் வாழ்ந்த த்வாபர யுகம் 864,000 வருஷங்களைக் கொண்டிருந்தது. படிக்கும்போது உங்களுக்கும் எழுதும்போது எனக்கும் கூட, தலை சுற்றுகிறது. எப்படி எல்லாம் கணக்கு போடுகிறார்கள்? வாயு புராணம் இதை சொல்கிறது. இதை யார் பரிசோதித்து ஆராய்ச்சி செய்து அபிப்ராயம் சொல்ல முடியும்.?

ஒரு வேடிக்கை விஷயத்தை மட்டும் சொல்கிறேன். வாயுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் (70.47-48- published by Motilal Banarsidass) லங்கேஸ்வரன் ராவணனது வாழ்க்கையை விவரிக்கிறது. ராவணனின் தவ வலிமை குன்றியபோது தான் அவன் தசரதன் மகன் ராமனை சந்தித்தான். இது 24வது த்ரேதா யுகத்தில் நடந்த ராம- ராவண யுத்தம் பற்றியும் அதில் ராவணனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிந்ததை விவரிக்கிறது :

त्रेतायां वर्तमानायां काल: कृतसमोऽभवत् । रामे राजनि धर्मज्ञे सर्वभूतसुखावहे ॥ ५१ ॥
tretāyāṁ vartamānāyāṁ kālaḥ kṛta-samo ’bhavat rāme rājani dharma-jñe sarva-bhūta-sukhāvahe

”ஸ்ரீ ராமன் த்ரேதா யுகத்தில் ராஜாவானான். அவனது நல்லாட்சியால் ராம ராஜ்யம், சத்ய யுகத்தில் இருப்பது போல் எல்லோருக்கும் மனநிறைவைக் கொடுத்தது. மக்கள் எல்லோரும் பகவத் சிந்தனையில் ப்ரம்மானந்தமாக வாழ்ந்தனர்”.

நான் மேலே குறிப்பிட்ட விண்வெளி நக்ஷத்திர க்ரஹ ஆராய்ச்சி ராமன் த்ரேதா யுகத்தை சேர்ந்தவன் என்று காட்டுகிறது. மத்ஸ்ய புராணம் (47/240,243-246) மகாவிஷ்ணுவின் அவதாரங்களை குறிப்பிடு கையில் பகவான் ராமனாக அவதரித்தது 24வது திரேதாயுகத்தில் என்கிறது.

ராம நாமம் எழுதுவது உலக இன்பங்கள் மட்டுமல்லாமல் ஆத்ம திருப்தி என்ற முக்கிய காரணத்துக்காகவும் மிகவும் பயன்படும். ராம என்பது தாரக மந்திரம். இதை திரும்ப திரும்ப ஜெபிப்பதன் மூலம், எழுதுவதன் மூலம் உள்ளே கிடக்கும் தீய குணங் களையும், எண்ணங்கள் அழியும். வெளியே இருந்து தீய சக்திகள் நம்மை நெருங்காமல் அரணாக பாதுகாக்கும். இது போதாதா நம்மை புனிதப்படுத்த.

‘ராம” என்ற மந்திரத்துக்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. ‘மரா” என்று விடாமல் சொல் என்று வால்மீகிக்கு நாரதர் உபதேசித்தார். நமக்கு ராமாயணம் கிடைத்தது. சீதைக்கு ஒரு பெயர் ரமா. ராமா எனும் சொல்லுக்குள் சீதை எனும் ரமா, லக்ஷ்மி தேவி அடக்கம். ஆகவே ராம என்று ஜபித்தால் எழுதினால் லக்ஷ்மி கடாக்ஷம் பெறுகும் . எடுத்த காரியம் யாவினும் வெற்றி. கற்போர்க்கும், கேட்போர்க்கும், கற்பிப்போர்க்கும் இவ்வாறு பெறும் பயன் தரும். ஜெய்ராம் சீதாராம் என்று சொல்லிக்கொண்டே எழுந்திருப்போர், உட்காருவோர், சாப்பிடுவோர் தூங்குவோர் கோடானுகோடி ஹிந்துக்கள். மஹாத்மா காந்தியின் கடைசி வார்த்தை ”ஹே ராம்”.

என் தாய் வழி தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதியார் ”ஜெய்ராம் ஸ்ரீ ராம்” என்று சொல்லாத நேரமே கிடையாது. ராமனைப் பற்றியே பாடிய, பேசிய, வம்சம் எங்களுடையது. எல்லோருக்கும் குடும்பத்தில் ஜெயராமன், சுந்தரராமன் சீதா ராமன், ரகு ராமன், சிவராமன் வெங்கட்ராமன், கல்யாணராமன்,ராமரத்னம் போன்று ராமன் பெயர்கள் நிச்சயம் உண்டு.

‘ரா” என்றால் ‘இல்லை” என்று அர்த்தம். ‘மன்’ என்றால் ‘தலைவன்’. ராமனைப் போல ஒரு தலைவன் இல்லை என்று பொருள் போடும் நாமம் ராமனுக்கு. மஹா பெரியவா கூட முடிந்த போதெல்லாம் ”சிவ சிவா, ராம ராமா”என்று சொல்லுங்கள் என்று உபதேசித்தவர்.

ராம ராவண யுத்தம் முடிந்தது. ராவணனை ராமன் கொன்றுவிட்டான். இந்த செய்தி சீதைக்கு எப்படி தெரிந்தது? காற்றைக் காட்டிலும் வேகமாக பறக்கும் ஹனுமான் தான் சீதையிடம் சென்று சொன்னது. சந்தோஷத்தில் ஹநுமானுக்கு எப்படி சீதையிடம் ராமனின் ஜெயத்தைப் பற்றி சொல்வது என்று தெரியாமல் பேச நா வரவில்லை. சட்டென்று சீதை எதிரில் தரையில் மண்ணில் பெரிதாக ”ஸ்ரீ ராம ஜெயம்” என்று சுருக்கமாக எழுதினர். சொல்லின் செல்வன் அல்லவா?

ஆகவே முதன் முதலாக ராம ஜெயம் எழுதியவர் மாருதியாகிய ஹனுமான் தான். ராவணனுடன் யுத்தத்தில் ராமனுக்கு ஜெயம் என்று சீதைக்கு அதால் தெரிந்தது. ஆகவே அன்று முதல் ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார்கள். எழுதியவர் படிப்பவர் அனைவருக்குமே ஆனந்தம்.

ராம பாணம், ராமனின் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு சென்றால், இலக்கை அழித்துவிட்டு தான் திரும்பும். அது போல் ராம நாமம் எனும் ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் எப்போதும் ஜெயத்தையே தருவது.

லங்கை சென்று திரும்பிய ஹனுமானிடம் ராமர் ”சீதை எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டபோது, ”ப்ரபோ, சீதா தேவி துளியும் கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப் படாதீர்கள். ராம நாமத்தை ஜபித்துக் கொண்டே இருக்கிறார். ராம நாமத்தை மறப்போருக்கு தானே துன்பமும் கஷ்டமும்” என்றான் ஹனுமன் ..

ராமநாமத்தை கோடிக்கணக்கான ஜபித்தவர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள். ராமர் ப்ரத்யக்ஷமாக அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பார்வதி தேவியிடம் ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்ரீ ராமா என்று மூன்று தடவை சொன்னாலே போதும் விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்களை சொல்வதற்கு ஈடு என்கிறார்.

செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்னை நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, நோய் விலக, ஆரோக்யம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை கூட, கண் த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம் கிடைக்க, சனி தோஷம், தசா புத்தி தோஷம், நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி அதிகரிக்க, மனத்தில் பயம் நீங்க, திக்கு வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலித்வம் கிடைக்க, எதிலும் வெற்றி அடைய, அரசு வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு பலிதம் ஆக, கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக, இவை அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள். இன்னொரு விஷயம் நான் கொடுத்த லிஸ்டில் இல்லாத விஷயங்களும் ராமஜெயம் எழுதுவதால் பெறலாம்.

ஒவ்வொரு குடும்பமும் எப்படியும் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும். தெரிந்தவர்களுக்கும் எடுத்து சொல்லி ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டலாம்..அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும் அந்த புண்ணியம் அதைச் சொன்னவர்களும் வந்து சேரும். இதை சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஒரு சிலர் ஆச்சர்யமாக, அனால் துரதிர்ஷ்டவசமாக, ராம நாமம் எழுதினால் வீட்டில் கஷ்டங்கள் ஏற்படும், ராமன் துன்பப்பட்டவன், சீதையை பிரிந்தவன், ஆகவே எழுத கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதுநம்பியார் வீரப்பா வேலை. அப்படி நினைப்பதே மஹா பாபம். ராமஜெயம் எழுதி துன்பங்கள் அனுபவித்தவர் எவரும் இல்லை. பூர்வ ஜென்ம பாபங்கள் ராம ஜபத்தால் தீரும் போது ராம நாமம் எழுதினால் சொன்னால் எப்படி பாபங்கள் சேரும்.? நல்ல காரியங் களுக்கு தடை சொல்வது ரொம்ப தவறு. அப்படி யாராவது சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் நீங்களே சிந்தித்து பார்க்கவேண்டும். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்வது போல் இருக்கிறது இது. பக்தர்கள் இதை நம்புகிறீர்களா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *