THIRUPAACHUR SIVA TEMPLE – J K SIVAN

திருப்பாசூர்  வாசீஸ்வரர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம்  கிடைத்தற்கு அரிய  மானிட பிறப்பை அடைந்து அதுவும் ஹிந்துவாக பிறந்து, இறைவனை நன்றியோடு நினைப்பவர்கள்.
 கடவுளை நினைக்க என்ன வேண்டும்?
மனது,
அது  அலைபாயாமல்  இதன் மீதாவது நிலைக்க என்ன வேண்டும்?
விக்ரஹம்
என்ன விக்ரஹம்?
எது பிடிக்குமோ அது.
எங்கே போய் பார்ப்பது?
எவ்வளவு விகிரஹங்கள் வேண்டுமோ அத்தனை விகிரஹங்களையும்  கோவில்களில் பார்க்கலாம்?
கோவில்கள் எங்கே இருக்கிறது?
பகவான் அருளால் தமிழ்நாட்டில் ஏராளமான கோவில்கள் கவனிக்கப்பட்டும் , கவனிப்பாரற்றும் இருக்கிறது.
அப்படி ஒரு கோவில் பற்றி சொல்லுங்களேன்?
இதோ சொல்கிறேன்.

ஊர்   திருப்பாசூர்.  திருவள்ளூர்க்கு வடக்கே 5-கி. மீ.. நிறைய பஸ்  வசதி .சிவன் பெயர்:   பாசூர்நாதர், வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர்.   அம்பாள்: பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை நாச்சியார், தம்காதலி (தங்காதலி).  தல மரம்:     தீர்த்தம் :  சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம். சோழ தீர்த்தம்  வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், அம்பிகை, திருமால்,  சந்திரன்   கடைசியில் நான், முதலியோர்
திருப்பாசூர் திருவாசீஸ்வரர் திருக்கோயில் ஸ்தலமரத்தின் பெயரால், அமைந்தது. (பாசு – மூங்கில்).அம்பாள் வழிபட்டதலம்.  திருமால் மத்ஸ்யாவதாரத்தில் நேர்ந்த தோஷம் போக இத்தலத்தில் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார்.சந்திரன் வழிபட்டதலம். ஒருகாலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்திருக்கிறது.சோழ அரசன் காட்டை அழித்து, நாடாக்கிய போது, வாசு என்னும் மரம் வெட்டும் கருவிகொண்டு மூங்கிலை வெட்டியபோது, ஒரு புதரிலிருந்து குபுகுபு என்று ரத்தம் பீறிட்டது.   ராஜா வெட்டுவதை நிறுத்திவிட்டு,  சோதித்துப் பார்த்தான்.  ஆஹா  இங்கே  ஒரு சிவலிங்கம்  அல்லவோ இருக்கிறது.  தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக  ஒரு பெரிய கோயிலை   கட்டினான்.  இன்றும்  மூப்ளவர்  வாசீஸ்வரர் சிவலிங்கத்தின் மீது   வெட்டுக்காயம் பட்ட  தழும்புகள்  இருக்கிறது.
குறும்பர் அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள், கரிகால்சோழன் மீது ஏவிய பாம்பை இறைவன் எழுந்தருளித் தடுத்தார். இதை, அப்பர் இத் தலத்திற்குரிய தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்.கரிகாலன்  கட்டின கோவில் என்கிறார்கள். கரிகாலன் காளி உபாசனை பெற்ற, இப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னன் ஒருவனுடன் ஒருமுறை போர் செய்தான் போரில்  அந்த ராஜாவுக்கு  உதவ  கரிகாலனோடு போரிட  காளியே  நேரில் வந்தாள் . கரிகாலன் எப்படி வெற்றி பெறுவான்? சிவபக்தன் என்பதால்  கரிகாலன் வாசீஸ்வரரை வேண்டினான். நந்தியைத் துணையாக வாசீஸ்வரன் அனுப்ப, மீண்டும் கரிகாலனுடன் போரிட  காளி  வந்துவிட்டாள் .   நந்தியைப் பார்த்ததும் காளி  வலிமை குன்றினாள் .  கரிகாலன் வென்றான்.   கோயிலில் வெளிப்பிராகாரத்தில் சிதைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் ‘விலங்கு இட்ட காளி’யின் சிற்பம் உள்ளது. அப்பர்  சுந்தரர்  சம்பந்தர்  சேக்கிழார்  ஆகியோர்  பாடல்கள் பெற்ற  ஸ்தலம்.  சோழர்காலத்து கல்வெட்டுகள் நிறைய இருக்கிறது.   சோழர்கள் நிறைய  தான தர்மங்கள்,  காணிக்கைகள்  வழங்கியிருக்கிறார்கள்.  ராஜராஜன் பூஜைக்காக 47 பொன்காசுகள், விளக்கிற்காக 32 பசுவும், முரசுவாத்தியத்திற்காக 1 எருது  அளித்தான். குலோத்துங்கன் கால மாது  ஒருத்தி திருஆபரணத்திற்காக 30 பொன்காசும், நாள் ஒன்றுக்கு 2 படி அரிசியும் கொடுத்தாள்.  ஒரு காளிங்கராயன் பத்து விளக்குக்களுக்காக எழுபத்தெட்டு காசு தந்தான். வீரகம்பணன் ஆள்  ஒருவன் ஒரு தோட்டத்தைக் கொடுத்தான். தொண்டைமண்டலம், ஈக்காடு கோட்டம், காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர் என்று சொல்கிறது.   1200 வருஷ கோவில்.இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும்  ஏகாதச  விநாயகர் சபை உள்ளது.  வழிபட்டால் நிறைய பலனளிக்கக்
கூடியது.
நான் அடிக்கடி  திருத்தணி போக வேண்டி இருந்தது.  ஒவ்வொரு முறையும்  திருப்பாசூரை தாண்டி தான்  போகவேண்டும். ஒருநாள் இந்த கோவில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வெகுநாள் நிறைவேறாமல் திடீரென்று ஒரு நாள் கிடைத்தது.

சென்னையில் இருந்து  50 km   தூரத்தில்  திருப்பதி செல்லும் பாதையில்,  திருவள்ளூர் – திருத்தணி சாலையில் இந்த ஆன்மீக பொக்கிஷம் இருக்கிறது.  திருவள்ளூர்   ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ.  தூரம்.  பஸ் வசதி உண்டு.   பஞ்சாராணிய  க்ஷேத்ரங்கள் என்று புகழ் பெற்ற ஐந்து காடு சம்பந்தப் பட்ட கோவில்களில் இது ஒன்று. பெயர்  திருப்பாசூர். ஏற்கனவே திருவாலங்காடு பற்றி சொல்லி இருக்கிறேன். இன்று மூங்கில் காடு பற்றி  தெரிந்து கொள்வோம். காமீகம் என்ற ஆகம விதிப் பிரகாரம்  பூஜைகள் . அம்பாள்  தங்காதலி. மூங்கில் காடுகள்  நிறைந்த இடமாக ஒரு காலத்தில்  இருந்ததை  ஸ்தல விருக்ஷம் மூங்கில்.

சைவ சமய குரவர்கள் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற ஆலயம்.  மாணிக்க வாசகர் இன்னும் வரவில்லை.  தொண்டை மண்டல  பிரதான பாடல் பெற்ற சிவாலயங்களில்  இது ஒன்று.

வழக்கம் போல்  பசு  புற்றின் மேல் பால் தானாகவே கறந்து ராஜாவிடம் விஷயம் போய், தோண்டிப் பார்க்கும்போது  புற்றில் தானாகவே தோன்றிய தலையில் வெட்டுப் பட்ட  ஸ்வயம்பு லிங்க சரித்ரம் பல கோவில்களுக்கு சொந்தமானதால் இதற்கும் அதே.  

கோவில் அருகில்  சோமதீர்த்தம் கவனம் பெறாமல்   இருக்கிறது.  வாசீஸ்வரர் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில். உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் காட்சி தருகிறார்.  தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

மூங்கில் காட்டில் தோன்றியதால் “பாசுரநாதர்’ என்றும்  பெயர். (பாசு=மூங்கில்), “பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன்’ என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார்.   சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் அம்பாள் சன்னதி.  சிவன், அம்பாள் திருமணம் செய்த கோலம் என்பதால் இருவருக்கும்  இடையே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன்  முருகன் – ஒரே வரிசையாக சிவ குடும்பம் உள்ள இந்த கோவில் ஒரு அபூர்வ கோவில்.  ராஜகோபுரத்திற்கு நேரே நடராஜர் சன்னதி.  பழைய  கோவில்  என்பதால்  சிவன் சன்னதி  விமானம் கஜபிருஷ்ட அமைப்பில். அம்பாள் விமானம், கோபுர வடிவில். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையின் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை. இது ஒரு விசித்ரம் இங்கு.  
தன்  காதலி என்று ஏன் அம்பாள் பெயர்  என்பதற்கு ஒரு வரி கதை.  அப்பா  தட்சனின் யாகத்திற்கு சென்ற பார்வதி  சிவனின் சாபத்தால் பூமியில் பெண்ணாக பிறந்து இங்கு வந்து சிவனை வேண்டி தவம் செய்து  பிறகு மனம் இரங்கிய சிவன், அம்பாளை “தன் காதலியே!’ என்று அன்போடு அழைத்துகொண்டதால் இந்த பேர்.  

நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நிற்கிறாள் .கால்களில் விலங்கு போட்டிருக்கிறது.  சிவ பக்தர்கள்  அவசியம் தரிசிக்க வேண்டிய  ஒரு ஆலயம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *