GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம்.  நங்கநல்லூர்   J K  SIVAN

நைமிசாரண்யத்தில்  மிகப்பெரிய  ரிஷிகள் கூட்டம். எல்லோரும்  ஹா  என்று  வாயைப் பிளந்து கொண்டு   வாயில்  ஈ  புகுந்தது கூட தெரியாமல் சுத மஹரிஷி  ரொம்ப விறுவிறுப்பான விஷயங்களைக் கொண்ட  கருடபுராணத்தை  விவரமாக சொல்வதை கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.ரிஷிகள் நம்மைப் போன்றவர்கள் இல்லை.  அன்ன ஆஹாரம் எதிர்பார்ப் பவர்கள் இல்லை.    சுதர்  ரொம்ப விஸ்தாரமாக கருட புராணத்தை எடுத்துச் சொன்னாலும்  அது எல்லாவற்றையும், என்னால் சொல்ல முடியாதே. நான் என்ன செய்வது?

ஒன்று  நன்றாக  புரிந்து கொள்ளவேண்டும்.  நான்  உங்களுக்கு  சொல்லும்  கருட புராண விஷயங்கள் ஒரு தொடர் கதை அல்ல. அதாவது இதற்கு பின் இது என்று படிக்க வேண்டும் என்ற கட்டுக்கோப்பு  சமூக நாவகளுக்கும், துப்பறியும்  கதைகளுக்கும் தான்.  இங்கே அப்படி இல்லை. ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. எண்ணற்ற  செயல்கள் நாம் செயகிறோம், ஒரு பிறவியில் மட்டும் அல்ல, பல ஜென்மங்களில்.  அதில் பாபகார்யங்கள் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப தண்டனை உண்டு. என்ன பாபத்துக்கு என்ன தண்டனை என்கிற லிஸ்ட்  ரொம்ப பெரியது.  ஒரு மனிதன் உலகில் இறந்தபோது அவன் உடனே அடுத்த பிறவி எடுப்பதில்லை, அவன் ஒரு வருஷம் அவனது  பிள்ளை, வாரிசுகள் அளிக்கும் எள்ளும் நீரும், பிண்டங்களும்  தான் அவனுக்கு ஆகாரம். அப்புறம்  மாதாந்திர, விசேஷ கால  தர்ப்பணங்கள், வருஷாந்திர திதிக்கள்  மூலம்  ஸ்ராத்த பிண்டங்கள் மூலம் ஜீவிக்கிறான். அதற்குள் அவனது அடுத்த பிறவி தீர்மானமாகி விட்டால் பித்ருலோகத்திலிருந்து பூமியில் அடுத்த ஜனனம்.  நமது பூத உடல் எரிக்கப்பட்டாலும் எம தூதன் எடுத்துச் செல்வது ஸூக்ஷ்ம சரீரத்தை என்று முன்பே சொன்னேன். பலருக்கு இன்னும் சந்தேகம். அந்த ஸூக்ஷ்ம  சரீர ஜீவன்   பல நாட்கள் தொடர்ந்து பிரயாணப்பட்டு தான் யமலோகத்தை அடைகிறது. பல இடங்களை, கஷ்டங்களை அது அடைவது ஒரு பெரிய  லிஸ்ட் . அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் சொல்வேன்.   வைதரணி ஆறு என்கிற மோசமான தண்டனை பற்றி சொன்னேன். இதை மனதில்கொண்டு  மேலும் அந்த  ஜீவனின்  பிரயாணத்தை பற்றி சொல்கிறேன். இதெல்லாம் நாராயணன் கருடனுக்கு சொல்லி, அவன் பலருக்கு சொல்லி, நாராயணனே சிவனுக்கு சொல்லி, எத்தனையோ விதமாக பலர் காதுகளை விஷயம் அடைந்து சுத ரிஷி நைமிசாரண்யத்தில் சௌனகர் வேண்டுகோளில்  மற்ற ரிஷிகளுக்கும் சொல்கிறார்.  இது தான் முன்கதை சுருக்கம்.
ஒரே அடியாக பயமுறுத்தக் கூடாது என்பதற்காக  கருட புராணத்தில் வரும் மற்ற விஷயங்களையும் நடு நடுவே சொல்கிறேன் கொஞ்சம் விறுவிறுப்பாக ஒரு  மாறுதலாக இருக்கட்டுமே.

சுதர் மற்ற ரிஷிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது ஒரு சந்தர்ப்பத்தில் தேவதைகள், உபதேவதைகள், கணங்கள், மற்றும் துர்க்கைக்கு  எப்படி வழிபாடு செய்வது என்று விவரிக்கிறார். அஷ்ட சக்திகளான  சண்டிகைகளுக்கு எப்படி  ப்ரீதி பண்ணி வழிபடுவது என்பதை விளக்குகிறார்.    அந்த வழிபாட்டை நான் விவரிக்கப்போவதில்லை. அஷ்ட சண்டிகைகள் பேரை மட்டும் சொல்லி தூரத்தில் இருந்தே ஒரு நமஸ்காரம் பண்ணிவிடுவோம்:   ருத்ர சண்டா, ப்ரசண்டா, சண்டோக்ரா, சண்ட நாயிகா, சண்டா, சண்டாவதி, சண்டரூபா என்பவர்கள் தான் அவர்கள். துர்கையை வேண்டினால்  இவர்களது பாதுகாப்பு நமக்கு கிடைக்கும்.  

சுத மஹரிஷி   சிவ , ப்ரம்ம, வழிபாட்டை மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டு அனந்த சக்தி  பாதுகா பூஜை பற்றி சொல்கிறார்.
ஒவ்வொரு சக்தியின்  பாதுகா பூஜையை மந்திரங்களோடு விவரிக்கிறார்.  சக்திகள் யாவும் மந்திரங்களால் வசியப்படுகின்றன.  வழிபடப்படுகின்றன. யாகங்கள்  ஹோமங்கள்  எல்லாம்  காரிய சித்தி, இஷ்ட சித்திக்காகவே. 

அப்புறம்  கர ந்யாஸம் என்றால் என்ன என்று விளக்குகிறார்.  அதில் விசேஷமான  ஒரு விஷயம்   முத்திரைகள். சக்தி வழிபாடான  சாக்தத்தில் முத்திரை,  யந்திர பிரதிஷ்டை, அவற்றிக்குண்டான  மந்த்ர பூஜைகள்  ரொம்ப கவனமாக  தப்பில்லாமல் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

 கோபாலனை வழிபடுவது  ஆன்ம வளர்ச்சிக்கு  பெரிதும்  உவந்தது .  தாதா , விதாதா, கங்கா, யமுனா, சங்கநிதி,  பத்ம நிதி,  ஷரரிகன்,   ஷரபன்,  ஸ்ரீ,   பத்ரன்,  சுபத்திரா ஸ்ரீதரன்,  இவர்களும்  அவனோடு  வழிபடப்படுபவர்கள்.

அடுத்து  விஷ்ணுவை, சிவனை, இன்ன பிற தெய்வங்களை   வழிபடுவதை  சாங்கோ பாங்கமாக விளக்குகிறார் சுத மஹரிஷி .   குழந்தை பூலோகத்தில் பிறந்தவுடன் செய்யும்  புண்யாஹவாசனம்,  நாமகரணம்  போன்ற வைதிக கார்யங்களை  விளக்குகிறார். .

அகஸ்திய சம்ஹிதையில்   கருட புராணத்தை  ஸ்ரீமன் நாராயணனே  சிவனிடம் விலாவாரியாக கூறுவதை படித்தேன்.   நிறைய பெயர்கள் விவரங்கள் நமக்கு தலை சுற்றவைக்கும். இருந்தும் சில விவரங்களை தந்தால் தான் புராணம் சுவைக்கும். தொடர்ச்சிக்கு  உதவும்.

தக்ஷப்ரஜாபதிக்கு  24 பெண்கள்.   அவர்கள் பெயர் வேண்டுமா?  இதோ:   1 ஸ்ரத்தா ,2. லட்சுமி, 3.திரிதி  4.துஷ்டி, 5. புஷ்டி, 6.மேதா, 7.க்ரியா, 8. புத்தி, 9. லஜ்ஜா , 10. வபு  11. சாந்தி, 12. ரித்தி, 13.க்ரிதி, 14. க்யாதி,15. சதி , 16.சம்பூதி, 17. ஸ்ம்ரிதி, 18. ப்ரிதி  19 க்ஷமா 20. சௌனதி 21.அனசூயா 22 உர்ஜ்ஜா 23. சுவாஹா, 24. ஸ்வதா.

இந்த லிஸ்டில் நமக்கு முக்கியமானது  15வது  பெண்   சதி . அவளை பரமேஸ்வரன் சிவன்  மனைவியாக கொண்டார்.  தக்ஷன்  அஸ்வமேத யாகம் செய்தான். அதற்கு எல்லா மாப்பிள்ளைகளையும் அழைத்த  தக்ஷன்   சதியின் கணவன் பரமேஸ்வரனை அழைக்காமல் அவமதித்தான்.  சதி  கூப்பிடாவிட்டாலும் தந்தையின் அஸ்வமேத யாகத்திற்கு சென்றாள். அங்கே  அவளையும் சிவனையும்  கடிந்து அவமதித்து அவமானப்படுத்தினான் தக்ஷன்.  சதி அக்னியில் விழுந்து மாய்கிறாள்.   ஹிமவானுக்கும்  மேனாவுக்கும் மகளாக  கௌரி பிறந்து சம்பு வின் மனைவியாகிறாள்.  அவள் புத்திரர்கள்  குமரனும் விநாயகனும்.

சக்திவாய்ந்த மஹரிஷி  பிருங்கி , தக்ஷன் யாகத்தை அழிக்கிறார். அவனுக்கு சாபமிடுகிறார்  ”துருவன் வம்சத்தில் ஒரு மனிதனாக பிறப்பாய்”.   துருவன் வம்சத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்ள   அவசியமாகிறது  என்பதால்  அடுத்த  பதிவில் தொடர்வோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

  1. Please give me the sloka location on karanyasam, and paduka mantras
    I had gone thru Garuda purana but recollect much. Pl guide. Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *