EESAVASYA UPANISHAD – J K SIVAN

சிந்திக்க ஒரு விஷயம். நங்கநல்லூர் J K SIVAN

ஈசாவாஸ்ய உபநிஷத்.

என்னை சூழ்ந்து கொண்டு ஒரு அருமையான நண்பர்கள் குழாம் இருக்கிறது. எத்தனையோ நல்ல விஷயங்களை அவர்களோடு சேர்ந்து நான் யோசிக்கிறேன். பகிர்கிறேன். நேரம் நன்றாக செலவிடப்படுகிறது. சத் சங்கம் என்பது இப்போது நேரில் எதிரில் உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய அவசியம் இல்லை, டெலிபோன், யூட்யூப், வாட்ஸாப்ப், வீடியோ என்று பல வசதிகள் இருப்பதால் அவர்களோடு சேர்ந்து செயல்பட முடிகிறது. வயது கடந்து போவது கவனத்தில் வருவதில்லை. ஆனால் உடல் ஒத்துழைக்காமல் பல வித இன்னல்களை விடாமல் கொடுத்துக் கொண்டு வருகிறது.தற்போது என்னை பிடித்துக்கொண்டு, அல்ல, பீடித்துக் கொண்டு இருப்பது விடாமல் இருமல். பாட ஆசை இருந்தாலும் பேசவே முடியவில்லை என்கிறபோது இனி எப்போது பாடுவேன் என்று தெரியாது. பரவாயில்லை, பாடியது எல்லாம் பரமனைப் பற்றி தான். அவன் எப்போது மீண்டும் பாடச் செயகிறானோ அன்று பாடினால் போதுமே.

உலகில் மனிதனை அதிகமாக நடுங்க வைப்பது மரணம் என்ற சொல். உடனே ஆஸ்பத்திரி, ICU, எண்ணற்ற குழாய்கள் மூக்கில் வயிற்றில், கையில் காலில், ரொக்கமாக பணம் கரைவது. உறவு எட்டிப்பார்க்க கூட வழியில்லை என்றெல்லாம் . கற்பனை மனதில் ஓடுகிறது. பற்றில்லாதவன் மரணத்தை பற்றி கவலைப்படுவதில்லை. ஞானியைப் பொறுத்தவரையில் அவனுக்கு தான் தெரியுமே . மரணம் என்று தனியாக எதுவும் கிடையாது. என்றோ ஒருநாள் மூச்சு விட மறந்து போய் ஒரே தூக்கம். அதை தவிர்க்க வழியில்லாத போது எப்போது வேண்டுமானாலும் வரட்டுமே.

மரணத்தை பற்றிய பயத்தை நாம் மெதுவாக விலக்கவேண்டும். அதுதான் உயர்ந்த ஆன்மீக சாதனை.

ஈசாவாஸ்ய உபநிஷத்தில் இருந்து சில ஸ்லோகங்கள் ருசிகரமானவை. முக்தி பெற சூரியனையும் அக்னியையும் ப்ரார்த்திப்பவை. சூரியன் ப்ரத்யக்ஷ தெய்வம். சூரியன் ஆத்மா. சந்திரன் மனஸு .சூரியன் உத்தராயண காலத்தில் பிரயாணிக்கும்போது மரணமடைந்தால் மோக்ஷம். பீஷ்மர் அதற்கு தான் காத்திருந்தார்.

”சூர்யா, உன்னை கண்ணால் பார்க்க முடியாது. உன் ஒளிமயம் ஒன்றே தெரிகிறது. உன் பொன்னிற ஒளிக்குள் இருக்கும் சத்யம் கண்ணுக்கு தெரியவில்லை. உன்னை நம்பி வாழும் ஜீவன் நான். பொன்னொளி உன்னை மறைக்கும் ஆடை. அதை நீக்கி உன் உண்மையான சத்ய உருவை எனக்கு காட்டு, சத்யம் தர்மம் எல்லாவற்றையும் கண்டு நான் வணங்க வேண்டாமா?.

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् । तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥ १५॥
hiraṇmayena pātreṇa satyasyāpihitam mukham, tat tvaṁ pūṣan āpāvṛṇu satyadharmāya dṛṣṭaye (15)

पूषन्नेकर्षे यम सूर्य प्राजापत्य व्यूह रश्मीन् समूह तेजः । यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि ॥ १६॥
pūṣann ekarṣe yama sūrya prājāpatya vyūha raśmīn samūha tejaḥ, yat te rūpaṁ kalyāṇatamaṁ tat te paśyāmi yo sāv asau puruṣaḥ so’ham asmi (16)

புஷ்டி எனும் ஓட்டத்தை ஜீவன்களுக்கு அளிக்கும் புஷனே , சூர்யா தேவா, ப்ரபஞ்சம் முழுதும் திரிபவனே காலத்தை நிர்ணயிப்பவனே, பிரஜாபதி புத்ரா, உன் ஒளிக்கதிர்களை பரப்பு, எங்கும் இருளை நீக்கி ஒளியை வீசு. நான் ஆத்மன், உன்னில் இருந்து ஒளிவீசுவேனாக.

वायुरनिलममृतमथेदं भस्मांतꣳ शरीरम् । ॐ क्रतो स्मर कृतꣳ स्मर क्रतो स्मर कृतꣳ स्मर ॥ १७॥
vāyur anilam amṛtam athedam bhasmāntaṁ śarīram, aum krato smara kṛtaṁ smara krato smara kṛtaṁ smara (17)

பிராணன் என்பதே வாயு, காற்று, என் பிராணன் எங்கும் நிறைந்த காற்றோடு கலக்கட்டும் . சாஸ்வதமான பரமாத்மாவோடு ஐக்யமாகட்டும். என் தேஹம் எரிந்து சாம்பலாகி பஞ்சபூதங் களோடு சேரட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

अग्ने नय सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् । युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नमौक्तिं विधेम ॥ १८॥
agne naya supathā rāye asmān viśvāni deva vayunāni vidvān, yuyodhyasmaj juharāṇam eno bhūyiṣṭhāṁ te nama-uktim vidhema (18)

தீ, நெருப்பு, என்ற பெயரால் வணங்கப்படும் அக்னியே, நிறைந்த செல்வம் அருள்பவனே . ஆனந்தம், முக்தி, ஆசீர்வாதம் அருள்வாய். நல்வழி காட்டுவாய். ஞானம் நிறைந்தவனே, என்னில் படர்ந்திருக்கிற பாபங்களை சுட்டெரிவாயாக . உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

சூரியனை வேண்டி வணங்கும் இந்த மந்த்ரம் மனதையும் விளித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஹே மனமே, எல்லாவற்றையும் நோக்கி தாவாதே. கட்டுப்பாட்டோடு ஒரே நிலையில் ஈஸ்வரனை நாடு. பற்றற்ற நிலையில் உன்னை சீர் படுத்திக்கொள். உலகை அடிமைகொள்.

சூர்யதேவா , யமம் நியமம் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவன் நீ. உள்ளும் புறமும் ஒழுக்கம் நிரம்ப செய்பவன். பிரஜாபதி புத்ரா, உன் கடமை சத்ய தர்ம ரஹஸ்யத்தை எனக்கு உபதேசி. எல்லாவற்றையும் பரிசுத்தமாக்குபவன் நீ. என் முடிவில் நான் நிற்கிறேன். என் முன் காலன் தெரிகிறான். உன் வெளிப்பாடாக நான் ஒரு விளையாட்டுப்பொருளாக நான் ஆகாமல் உன்னையே அறியும் ஞானம் எனக்கு வேண்டும்.

ஒரு சின்ன விஷயம். வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் இப்படி எழுதும்போது படிப்பவர்கள், இது என்ன பேத்தல் என்று அழித்து விடுவீர்கள், அல்லது மூடிவிட்டு சுண்டல் சாப்பிடவோ, டிவியில் 20-20,பட்டிமன்றம் பார்க்க போய்விடலாம். ஆனால் இவை அத்தனையும் ரிஷிகள் பல ஆண்டுகள் தவமிருந்து ஆய்ந்து ,ஆராய்ந்து, அனுபவித்த உண்மைகள். வார்த்தை புரியவில்லை என்பதால் அதன் சத்து, வலிமை, தத்வம், வீரியம், குறைந்து போகாது. நாம் கடிக்காவிட்டாலும் மிளகுக்கும் மிளகாய்க்கும் காரம் இருந்து கொண்டே தான் இருக்கும். புரியாத தெல்லாம் பேத்தல் இல்லை. கண்ணில் படாததெல்லாம் இல்லாமல் இல்லை. புரியாததெல்லாம் புருடா இல்லை, அறியாமை தான் புரியாமை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *