GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

நம்மில் பலர்  தாம்  ரொம்ப படித்தவர்கள்,  சிந்திப்பவர்கள், பகுத்தறிவோடு  எல்லாவற்றையும்  பார்க்கிறவர்கள்  என்று மார் தட்டிக் கொள்பவர்களுக்கு   கருட புராணம் ஒரு கட்டுக்  கதை. பேத்தல்.  நரகம்,  ஸ்வர்கம் என்று எதுவுமே கிடையாது. புருடா  என்பார்கள்.
பல  ரிஷிகள்  கண்டறிந்த உண்மையை  புறக்கணிப்பார்கள். அவர்களுக்காக  அல்ல  நான் எழுதுவது.  நமது சாஸ்திரங்களை மதிப்பவர்களுக்கு, முன்னோர்களின்  நம்பிக்கையை மதிப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.  ஆத்மாவுக்கு நரகமும் இல்லை  ஸ்வர்கமும் இல்லை.  தப்பு செய்யக்கூடாது.  தர்மத்தை மீறி செயல்கள் புரிந்தால் அதற்கு தண்டனை உண்டு. அதிலிருந்து தப்ப முடியாது என்ற எண்ணம் போதுமானது. கடோபநிஷத்  நசிகேதஸ் என்ற சிறுவன் யமலோகம் சென்றது பற்றி, யமனோடு அவன் தர்க்கம் செய்தது பற்றி சொல்கிறது.
நரகம்  ஸ்வர்கம் ரெண்டுமே  இருக்கிறது என்று பல மஹான்கள் நம்பித்தான் நமக்கு நிறைய  எழுதி வைத்திருக்கிறார்கள். பாபம்  புண்யம்  நிச்சயம்  இருக்கிறது.

மது சூதனன்  ஒரு பெரிய விருக்ஷம். அதன் வேர் தர்மம் நீதி.   அதன் தண்டு  வேதங்கள்,கிளைகள் புராணங்கள். பூக்கள்  வெவ்வேறு தியாகங்கள்.  அதன் கனி, பழம் தான்  முக்தி, மோக்ஷம்.

நைமிசாரண்ய வனத்தில் ரிஷிகள் கூடுகிறார்கள். சுதர் மஹரிஷி அமர்ந்திருக்கிறார். ”குருநாதா,  எங்களுக்கு யமனைப் பற்றி சொல்லுங்கள்.  உலகம் எதனால் யமனைப்பற்றிய பயத்தில் நடுங்குகிறது?  கருடனுக்கு  மஹா விஷ்ணு சொன்னதை தான் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.

கருடனின் கேள்விகளுக்கு  மஹா விஷ்ணு சொன்னது இது. பாபங்களை புரிந்தவர்கள் செல்ல வேண்டிய இடம் நரகம். அதற்கு பொறுப்பானவன் யமன். மரணத்துக்குப் பிறகு  ஒரு ஜீவன் என்ன தண்டனை பெருகிறான் என்பது அவன் செய்த பாபச் செயல்களை பொறுத்தது.   உயிரோடு இருக்கும்போதே  பல வியாதிகள் ஒருவனை வாட்டுகிறதே அதுவும் ஒரு தண்டனை தான்.  வாதம் பித்தம் கபம் மூன்றும் அவனை வாடுகிறதே அதுவே  நன்றாக வேதனை தான். வாழ்க்கை முடியும்போது தான் யமதூதர்கள் வந்து அவனை கூட்டிச்செல்கிறார்கள். இறந்தபிறகு உடல் நீத்த பிறகு  ஜீவன் ஒரு கட்டை விரல்  அளவாக செல்கிறான்.

தன்னுடைய  சுற்றத்தார்  அவன் உடலை அவனாக கருதி அழுவதைப்  பார்க்கிறான்.  யமதூதர்கள் அவனை இழுத்துச் செல்கிறார்கள். அவனுக்கு அப்புறம்  அவன் வாரிசு அளிக்கும் பிண்டம், எள்ளும் நீரும் தான் ஆகாரம்.  

 

அவனது அடுத்த உடல் அவனுக்கு அளிக்கப்படும் பிண்டத்திலிருந்து பெறப்படுகிறது.  முதல் நாள் பிண்டம் அவனுக்கு தலையை தருகிறது. அப்புறம்  கழுத்து தோள்கள். அப்புறம் ஹ்ருதயம். அப்புறம் முதுகு அப்புறம் வயிறு பகுதி,தொப்புள், அப்புறம் இடுப்பு தொடை. முழங்கால் . பாதம்.  பத்தாம் நாள் அளிக்கும் பிண்டம்  அவன் பசியையும்  தாகத்தையும்  கிளப்பிவிடுகிறது.11ம் நாள்  12ம் நாள் அவனுக்கு  பசியைப் போக்கும் ஆகாரம் கிடைக்கிறது.13ம்  நாள்  யமதூதர்கள் அவனை பிடித்துச் செல்கிறார்கள்.  யமலோகத்துக்கு அவன் செல்லும் பாதையின் நீளம்  86000 யோஜனை . ஒவ்வொரு நாளும்  இரவும் அவன் பிரயாணம்  செல்வது 247 யோஜனை தூரம்.  16 நகரங்களை தாண்டி செல்கிறான். அந்த ஊர்களை பற்றி கருட புராணம் சொல்கிறது:

சௌம்யா, சௌரிபுரம், நாகேந்திர பவனம், கந்தர்வம்.சாளிக்ராமம்,க்ரூர புரம், விசித்திர பவனம், பஹ்வ பதம், துக்கபதம்,நானாக்ரந்த புரம் , சுதப்த பவனம், ரௌத்ரம், ப்யோவர்ஷணம், ஷீதா த்யம், பஹு பீதி,  கடைசியில்  யமபட்டணம்..


”ஓஹோ, அப்படியா,  மகாவிஷ்ணுவே, எனக்கு  யமன் பற்றி சொல்லுங்கள்” என்கிறான் கருடன்.
”அங்கே நிழல் தரும் மரங்கள் எதுவுமில்லை. வழியில் உணவு எதுவுமில்லை. நீரில்லை தாகம் தீர்க்க. 12 சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல வெப்பம் அங்கே உண்டு. பாபிகள் உடலைத் துளைக்கும் சில்லென்ற  குளிர் காற்றில்  வேறு வாடுவார்கள்.  கூரான முட்கள் காலை குத்தும்.  பல  விஷ சர்ப்பங்கள் கடிக்கும்.  சிங்கம் புலி போன்ற  கொடிய விலங்குகள் தாக்கும். தேள் பாம்புக்கு பஞ்சமே இல்லை.  இலை கள் செடிகளில் ஈட்டிபோல் உடலை கிழிக்கும்.  காகம், ஆந்தை, கழுகு, வண்டுகள், கொசு, காட்டுத்தீ  போன்றவை அவனை எதிர்கொள்ளும். அவனைப் பிடுங்கி தின்ன அலையும்.தரையோடு தரையாக  இருக்கும்  படுஆழமான கிணறுகளில் விழுவான்.  ஈட்டி முனைகள் அவனை பதம் பார்க்கும். எங்கும் இருள்.  அட்டை புழுக்கள், நிறைந்த  சேறும் சகதியும்  அவன் கடந்து போகவேண்டும். சில இடங்களில் கொதிக்கும் மணலில் நடக்க வேண்டும். உருகி ஓடும் தாமிரம், சிவப்பாக  தணல் அக்னி, மூச்சை திணறச்செய்யும்  புகை மண்டலம். கல்லும் கூரான ஆயுதங்களும், கொதிக்கும் தண்ணீரும் அவனை தாக்கும்.  மலையும்  காடுமாக அவன் இவ்வாறு செல்கிறான். வைதரணி எனும்  ஆறு. ஐயையோ , அது நிறைய சீழும், ரத்தமும் கோழையும் அவனை துர்கந்தமாக  இழுக்கும்.  அதில் எங்கும் முடிகள் பந்து பந்தாக இருக்கும்.  கொடிய  முதலைகள் வேறு. பிணந்தின்னும் பறவைகள் சுற்றிக்கொண்டே இருக்கும்.  பாபம் செய்தவனை  இவை வரவேற்கும். நெருப்பும்  புகையும் கண்ணை மறைக்கும்.  கதறிக்கொண்டே அதை அவன் கடக்கிறான். கருநாகங்கள், தேள்கள் அவனை துன்புறுத்த  அவனுக்கு அங்கே எந்த உதவியும் இல்லை.  இவை எதற்காக  என்றால்  பாபிகளுக்கு தண்டனையாக இவை உள்ளன. எம தூதர்கள் அவனை சாட்டையால் அடித்து விரட்ட அவன் இவற்றை கடக்க வேண்டும். அவன் உடல் சங்கிலியால் கட்டப்பட்டு  பழுக்க காய்ச்சிய  இரும்பு அவனை பாளம் பாளமாக தோல் உரிக்கும். யமதூதர்கள் அவன் மண்டையில் கனமாக  சுத்திகளால் அடிப்பார்கள். ரத்தம் கக்கிக் கொண்டே  செல்வான்.

மனிதப் பிறப்பு கிடைப்பதே அபூர்வம். அதை சரியாக  வாழாமல் தவறுகள் செய்பவனுக்கு இதெல்லாம் தண்டனை. எவருக்கும் உதவவில்லை, தான தர்மங்கள் செய்யவில்லை..ஆகவே இதெல்லாம் அவனுக்கு கிடைக்கும் பரிசுகள்.

ஐயோ நான் எவருக்கும் தானம் தர்மம் செய்யவில்லையே,  விரதம் எதுவும் இருந்ததில்லையே.  முன்னோர்க்கு கடமைகளை செய்யவில்லையே.  எனக்கு உடம்புக்கு பிடித்த சுகத்தை மட்டுமே தேடினேன். என்று வருந்துகிறான்.

காற்றுவாக்கிலே  17 நாட்கள் இவ்வாறு பாபி செல்ல வேண்டும். 18ம் நாள் சௌம்யா நகரத்தை அடைகிறான். எண்ணற்றோர்  அங்கே  உள்ளனர்.  பெரிய நிழல் தரும் அத்திமரம்.  அங்கே  சற்று ஒய்வு பெறுகிறான். யமதூதர்களும் அவனோடு அங்கே உள்ளனர்.

அவன் சேமித்த பணம் இப்போது உதவுமா? அவன் பேணி வளர்த்த மக்கள், சுற்றம், மனைவி உதவுவார்களா? எத்தனை  மஹான்கள், முன்னோர்கள் இதெல்லாம் பற்றி சொன்னபோது நான் லக்ஷியம் செய்யவில்லையே? பதறுகிறான், கதறுகிறான். அவனை மீண்டும்  யமதூதர்கள் சங்கிலியில் பிணைத்து இழுத்து செல்கிறார்கள். அடி  உதை வேறு. பள்ளத்தில் மேட்டிலும் விழுந்து வாரி எழுந்து ஓடவேண்டும்.

அவன் பிள்ளை வாரிசு அளிக்கும் மாதாந்திர பிண்டம் அவனுக்கு உணவு. சௌரிபுரம் அடைகிறான்.  அதற்கு ராஜா பெயர் ஜங்கமன். மரணத்தின் உருவானவன் . அவனைக் கண்டு ஜீவன் நடுங்குகிறான். 45 நாட்கள் ஆனபிறகு கொடுக்கப்படும்  நீரும் உணவும் அவனுக்கு அப்போது ஆகாரம்.

அங்கே இருந்து நாகேந்த்ர பவனம் செல்கிறான். இருண்ட காட்டு பிரதேசம். அங்கே பயத்தால் கதறுகிறான். ஓட ஓட  அவனை யமதூதர்கள் கடத்தி செல்கிறார்கள்.

அங்கே அவனுக்கு  வாரிசு, பிள்ளைகள் கொடுத்த பிண்டம் உணவாகிறது. தண்ணீர்  வஸ்திரம் தானம் செயது அவன் பிள்ளைகள், உறவு அவனை பசியாற செய்கிறது. அங்கிருந்தும் அவனை யமதூதர்கள் இழுத்து செல்கிறார்கள் . அவன் பூமியில் இறந்து மூன்று மாத காலம் ஆகிவிட்டது. அவன் கந்தர்வலோகம் வருகிறான். மூன்றாம் மாதம் பூமியில் அவனுக்களிக்கப்பட்ட பிண்டம் அவன் ஆகாரமாகிறது.

நான்காவது மாதம்  சைலாகம நகரம் வந்து சேர்கிறான். அங்கே கல்மழை அவனுக்காக காத்திருக்கிறது.

நான்காவது மாதம் அவனுக்கு இட்ட  பிண்டம் அவனை கொஞ்சம் சந்தோஷம் அடையக வைக்கிறது.

ஐந்தாவது மாதம் க்ரௌஞ்ச நகரம் அடைகிறான். ஐந்தாவது மாதம் அவனுக்கு பூமியில் அவன் பிள்ளை உறவு இட்ட பிண்டம் அவனுக்கு இப்போது ஆகாரமாக கிடைக்கிறது.

அடுத்த நகரமான க்ரூர புரம்  வந்து சேர்கிறான். ஆறாவது மாதத்தில் அவனுக்கு இடைப்பட்ட பிண்டம், ஜலபாத்ரத்தில் அளிக்கப்பட தீர்த்தம் அவனை கொஞ்சம் சிரம பரிகாரம்  பெற வைக்கிறது. இதோ அடுத்த சித்ர பவனம்வந்து சேர்ந்துவிட்டான்.   அந்த ஊர்  ராஜா  விசித்ரன்.  யமனின் தம்பி அவன். ஆஜானுபாகுவாக அவனைப் பார்த்ததும் இறந்த ஜீவன் நடுங்குகிறான். அவன் எதிரே அப்போது சில மீன் பிடிக்கும்  படகு காரர்கள் தென்படுகிறார்கள். ”இங்கே வா, எங்கள் படகில் உன்னை எதிரே தெரியும் வைதரணி ஆற்றை கடக்க செய்கிறோம் என்கிறார்கள்.  பசு தானம் செய்தவன் அந்த ஆற்றை கடக்க முடிகிறது. புண்யம் செய்யாத பாபிக்கு  வைதரணி ஆற்றை கடக்க வழியில்லை. அதில் இறங்கி தத்தளிக்க வேண்டும். ஐயோ என்று அலறுகிறான். மீன் எப்படி  பறவைகளின் அலகில் மாட்டிக்கொள்கிறதோ அப்படி  யமதூதர்கள் அவனை அதில் தூக்கி போட்டு கடத்துகிறார்கள்.  ஆறாவது மாதம் அவனுக்கு பூமியில் இடைப்பட்ட பிண்டம் கொஞ்சம் அவனுக்கு சிரமபரிகாரமாக, பசிக்கு உணவாக அமைகிறது.

ஏழாவது மாதம் வந்துவிட்டது.  பஹ்வபதம் ஊர் வந்துவிட்டது.  ஏழாவது மாதம் அவன் பிள்ளைகள் இட்ட  எள்ளும் நீரும், பிண்டமும் அவனுக்கு உணவு. அவன் பிரயாணத்தில்  அடுத்த ஊர்  துக்கதம்.  எட்டாவது மாத பிண்டம்  எள்ளும் நீரும் தான் அவனுக்கு உணவு.

ஒன்பதாவது மாதம் வந்துவிட்டது  நானாக்ரந்தம் . ஓவென்று அலறுகிறான் ஜீவன்.  பத்து மாதம் கடந்தாகிவிட்டது. இப்போது  பத்தாவது மாதம். அவன் இருப்பது சுதபபவனம். இத்தனை மாதங்களாக அவனுக்கு உதவியது அவன் பிள்ளைகள் இட்ட  பிண்டங்கள் எள்ளும் நீரும் தான்.பதினோரு மாதங்கள் இப்படி ஒட்டிவிட்டான் அந்த பாப ஜீவன்.  இப்போது அவன் இருப்பது ரௌத்ர நகரமா, நரகமா?

அடுத்த நகரம்  பயோவர்ஷணம். இதோ பன்னிரண்டு மாதங்கள் முடிந்து அவன் பிள்ளைகள் அவனுக்கு பூமியில்  ஸ்ரார்த்தம் செயகிறார்கள். அப்பாடா, இதோ பன்னிரண்டு மாதம், ஒருவருஷம் முடிந்துவிட்டது. அவன் இப்போது இருப்பது சீதாத்யம். ஹிமாலயத்தை விட பல  நூறு மடங்குகள் குளிரும் பிரதேசம்.  குளிர் உடலைத் துளைக்கிறது. பசியும் தாகமும் அவனை வாட்ட  பல திசைகளில் பார்க்கிறான். எனக்கு யாராவது பிண்டம் எள்ளும் நீரும் இறைக்கமாட்டார்களா என்று தேடுகிறான்.

இதிலிருந்து புரிகிறது என்ன?  நமது முன்னோர்களுக்கு நாம் ஸ்ரத்தையோடு  காலாகாலத்தில்  பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். அப்போது தான் நமக்கு, பின்னால்  நமது பிள்ளைகள் இதை அளிப்பார்கள்.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *