KAALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்   –    நங்கநல்லூர்  J K  SIVAN
ஸர்வமும்  பகவானே   –
ப்ரம்மா  விநோதமானவர். ஏதோ அவருடைய  போறாத காலம்  சிவனைச் சீண்டி, அதனால்  ஐந்து தலைகளைக் கொண்ட  அவருக்கு ஐந்து தலைக்கும்  வந்த பெரிய  ஆபத்து ஒரு  தலையோடு போயிற்று.  அதற்குப் பிறகு தான் அவர் நான் முகனானார்.  ப்ரம்மாவின்  ஐந்தாவது தலையைக் கொய்தவர் சிவனிலிருந்து தோன்றிய  காலபைரவர்.  சிவன் தாமிர நிறம். கால பைரவர் கருப்பு.  ”காலா’ பைரவர்.  நல்லவேளை  விஷ்ணு குறுக்கிட்டு  சிவனின் கோபத்தை அடக்கினார்.  ப்ரம்மாவின் சிரத்தைக் கொய்ததால் உண்டான  பாபம் காலபைரவனை ஒரு பெண்ணுருவத்தில் நிழலாக துரத்தியது. ஐந்தாவது தலையும்  காலபைரவனை விட்டு  அகலவில்லை. இந்த பாபம் தொலைய  காலபைரவர் காசிக்கு போனார். காசிக்குள் சென்ற காலபைரவர்  அங்கே  காசிக்கு காவலனாகிவிட்டார்.  அவருக்கு உரு துணையாக  ஒரு  நாய்.  காசிக்குப் போகிறவர்கள்  காலபைரவரை தரிசிக்காவிட்டால்  காசிக்கு போய் புண்ணியமில்லை.
புராணத்தில் காலபைரவரைப் போல்  இப்படி இன்னொரு  தலைவெட்டி தம்பிரானும் உண்டு. அவர்  வீரபத்ரர்.  தக்ஷ பிரஜாபதி என்ற அசுரர் ராஜாவின் மகள் தாக்ஷாயணி.  பரமேஸ்வரன் மனைவி.  தக்ஷன் ஒரு பெரிய யாகம் வளர்த்து மற்ற தேவர்களை அழைத்து சிவனை  அழைக்காமல் அவமதித்தான்.  அந்த யாகத்திற்கு அவன் மகள் தாக்ஷயணி சென்றாள் .  அவளையும் அவள் கணவன் சிவனையும்  அனைவர் முன்னிலையில் அவமதித்து பேசினான் தக்ஷன்.  தனது ஆசைக் கணவனை இழித்துப் பேசியதால் மனம் உடைந்த  சதி எனும் தாக்ஷா யானை அந்த யாக கொண்ட ஹோமத்தில் இறங்கி எரிந்து கருகினாள். விஷயமறிந்த  சிவனின் அவதாரமான  வீரபத்திரன் தக்ஷனின் சிரத்தைக் கொய்தான்.   உக்ரமாக  சிவன்  சதியின்  கருகிய உடலை சுமந்து தாண்டவமாடினான்.
சதியின்  உடல் 51 துண்டுகளாக பூமியில் விழுந்த ஸ்தலங்கள் தான் சக்தி பீடங்கள்.ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் வெளியே  ஒரு பைரவன் கோவில் உண்டு.
சம்ஹாரமூர்த்தி சிவனின்  அம்சமான காலபைரவர் தான் நமக்கெல்லாம் காலத்தை நிர்மாணிக்கிறவர். அவரை வேண்டினால் பாதுகாப்பு உண்டு. காலபைரவாஷ்டகத்தை ஆதி சங்கரர்  இயற்றி அதை இன்றும் தினமும் காசியில்  பாராயணம் செய்கிறார்கள்.
நாம் அனைவரும் எப்போதும் சந்தேகப்பிராணிகளாகவே வாழ்கிறோம், நல்லது எது கெட்டது  எது ஒன்றுமே தெரியவில்லை.  பகவான் மேல் நம்பிக்கை வைத்து அவன் வழிகாட்டலால் நாம் இதிலிருந்து விடுபடலாம். அதை தான் சரணாகதி என்று பெயர் வைத்து  புரிந்து கொள்கிறோம்.  ராகம்  என்றால்  எதன் மேலோ நாம் கொள்ளும் பற்று. விராகம் என்றால் அதை விடுவது.   அப்படி பற்றினை விடும் விராகம் தான் வைராக்யம்  எனப்படுவது.  திட சித்தம் கொண்டவர்களால் இது முடியும். நாமும் திட சித்தர்களாகவும் முடியும். பகவான் மேல் மனதை நிலையாக வைப்பதன் மூலம்  திட சித்தம், ஞான வைராக்யம் பெற முடியும்.  ஆத்மநாதன் கண்முன் தோன்றுவான். எங்கும்  அவனை பல ரூபங்களில் காண முடியும். அதைத் தான் அங்கிங்கு  எனாதபடி எங்கும் பிரகாசமாய் என்று  தாயுமானவர் பாடி இருக்கிறார்.  பார்க்குமிடமெல்லாம் நீக்கமற  நிறைந்திருப்பவன்.
தூக்கம் விழிப்பு நிலை ரெண்டிலேயும் நமக்கு  ஆத்ம சிந்தனை இல்லை.   ரெண்டுமே  ஆத்மஞானம் பெற தடைகளாகவே ஆகிவிடுகிறது. .  வருஷத்தில்  ஒரு நாளாவது  தூக்கமின்றி சிவனை நினைக்க தான் மஹா சிவராத்ரி.
யஜுர்வேதத்தில் சத ருத்ரீயம் அற்புதமானது. சிவனை அற்புதமாக ஸ்தோத்ரம் செய்வது. பொருள் செறிந்தது.  சுய கட்டுப்பாட்டுக்கு உகந்தது.    ”அனந்தவை  வேதா:” என்றால்  சர்வமும்  வேதமயம். ஒருவன் குழந்தையாக இருந்தவன், அண்ணன்  தம்பி, அப்பா, சித்தப்பா பெரியப்பா,  மாமா, தாத்தா என பல வேஷங்கள் போடுகிறான். எல்லாம் ஒருவனே தான். பதவி, பெயர் தான் வேறு. அது மாறிக்கொண்டே வரும். சர்வமும் சிவன், பெயர்கள் அடையாளம் தான் வேறாக காண்கிறோம்.  வேத மந்த்ரங்கள்  பகவானை நம்மிடம் இணைப்பவை.  சரியாக உச்சரிக்கப்படவேண்டியவை. இல்லாவிட்டால் பலன் தராது.   கிருஷ்ணசாமியை    கூப்பிட  வேண்டும் என்றால்  அவன் பெயரை சொல்லி அழைத்தால்  தான் திரும்பி பார்ப்பான்.  அவனை  கோபாலசாமி என்று கூப்பிட்டால்  கண்டுகொள்ளவே மாட்டான், திரும்பிப்பார்க்கவே மாட்டான்.  போய்க்கொண்டே  இருப்பான்.  வாய் வலிக்க கத்தினது தான் மிச்சம்.   ஓம்  நமசிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரம் உச்சரிக்க எளிமையானது. பலன் தரக்கூடிய கை கண்ட ஒளஷதம்.  ருத்ரம் பாராயணம் 108 ரித்விக்குகளுடன் பண்ணும்போது  எல்லோரும்  மந்த்ர உச்சாடனம் பண்ணுவது கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.   உடலிலும் மனத்திலும் அதிர்வலைகள் தோன்றும். அனுபவித்தவர்களுக்கு புரியும்.அவனை மனதில் காட்டும். நான் நிறைய  மஹா ருத்ர,அதி ருத்ர பாராயணங்கள் பண்ண பல கோவில்களுக்கு  சென்றிருக்கிறேன். ஆனந்த அனுபவம் அது.  சிவபுராணம் தமிழில் அதே போல் அற்புதமானது. சக்தி அதிகம் கொண்டது.  புலன்களை கட்டுப்பாட்டில் வைத்தால் எல்லாமே முடியும்.
புத்தர்  மாதிரி  சூன்யவாதம், அதாவது, எதுவுமே இல்லை என்பதோ,  சர்வம் சிவமயம் என்பதோ எதுவாக இருந்தாலும் ரெண்டுக்கும் நடுவே  சத்யம் இருக்கிறது.  சர்வேஸ்வரனுக்கு  ”ஆசுதோஷ் ”என்று ஒரு நாமம். அதாவது எளிதில் சந்தோஷம் அடைபவன்.  கேட்ட வரம் உடனே  கொடுத்துவிடுபவன்.  இருட்டிலிருந்து தான் ஒளி, ஒளிதான் இருள்.  அதிக வெளிச்சத்துடன் ஒரு கார் எதிரே வந்தால் கண் தெரியவில்லை அல்லவா.  ‘அஸதோமாம் ஸத் கமய’   அஸத்யத்திலிருந்து பிறப்பது சத்யம், தமஸோமாம் ஜோதிர் கமய’  அஞ்ஞான  இருளிலிருந்து தான் ஞான ஒளி பிறக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *