VARAHA PURANAM – J K SIVAN

வராஹ புராணம். – நங்கநல்லூர் J K SIVAN

ஸ்வேத வராஹ புராணத்தை சுருக்கமாக தந்தால் என்ன என்று தோன்றி அதில் சில முக்கியமான பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது திருப்பதி திருமலை விவரங்கள், ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாண ஸ்வாரஸ்ய விஷயங்கள் இனித்தது. அதுவே இது.

ரிஷிகளுக்கு பிடித்த இடம் காசி, கங்கை. தவம் செய்ய புனித இடம் என்று பல யுகங்களாக கருதப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் சில ரிஷிகள் காஸ்யப ரிஷி தலைமையில் கங்கைக்கரையில் ஒரு ஆஸ்ரமத்தில் ஒரு பெரிய யாகம் செய்ய தீர்மானித்தார்கள். அப்போது நாரதர் அங்கு வந்தார். ”ரிஷிகளே யாரை பிரதான தெய்வமாக திருப்திப்படுத்த இந்த யாகம் நடக்கப் போகிறது? என்று கேட்டார். ரிஷிகளால் இதற்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை. ரிஷிகளில் முக்கியமானவரான ப்ருகு மும்மூர்த்திகளைக் கண்டு ஆலோசித்து அவர்களில் யாரைத் த்ரிப்திப் படுத்த இந்த யாகம் செய்யலாம் என அறிந்து வருகிறேன் என்று விண்ணுலகம் சென்றார்.

ப்ருகு சத்யலோகம் சென்று ப்ரம்மாவைப் பார்த்தார். அங்கே நாராயணனைப் பிரார்த்தனைசெய்து கொண்டு நான்கு தலைகளினாலும் நான்கு வேதங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் ப்ரம்மா. சரஸ்வதி தேவி அவருக்கு சேவை செய்து கொண்டிருந்தாள். இருவருமே ப்ருகுவை லக்ஷியம் பண்ணவில்லை என்று ரிஷிக்கு கோபம். கோபத்தோடு விர்ரென்று நேராக கைலாசம் சென்றார்.

கைலாசத்தில் பரமேஸ்வரன் பார்வதியிடம் எதையோ ஆர்வமாக பேசிக் கொண்டிருந்ததால் ரிஷியை வரவேற்க வில்லை. சிவனை சபித்து விட்டு ரிஷி வைகுண்டம் சென்றார்.

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த நாராயணனின் கால்களை லக்ஷ்மி தேவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். தன்னை வா என்று கூட கூறாமல் விஷ்ணு அவமதித்தார் என்று கோபமடைந்த ப்ருகு பள்ளி கொண்டிருந்த நாராயணனின் மார்பில் காலால் உதைத்தார். மார்பில் மஹாலக்ஷ்மி உறைகிறாள் அல்லவா?
மஹாவிஷ்ணு பிருகுவை அப்போது தான் கவனித்தார்.

”அடாடா ப்ருகு ரிஷியா. வாருங்கள். என்னை உதைத்ததால் உங்கள் கால் நோகுமே என்று ரிஷியின் கால்களை பிடித்து விட்டு சமாதானம் செய்தார் விஷ்ணு. பிருகுவின் கால்களில் உள்ள கண் தான் சகல தேவர்களையும் வெல்லும் சக்தியை ரிஷிக்கு கொடுத்திருந்தது. அந்தக் கண்ணை மெதுவாக மஹாவிஷ்ணு பிருகுவின் காலைப் பிடித்து விடும்போது அகற்றி விட்டார். மஹா விஷ்ணுவின் இனிய குணத்தில், தன்மையில், மகிழ்ந்த ப்ருகு ரிஷி கங்கைக்கரைக்கு திரும்பி வந்து மஹா விஷ்ணு ஒருவரையே யாகத்தில் பிரதான தெய்வமாக வழிபட்டு வேண்டிக்கொண்டு திருப்தி படுத்தலாம் என்று அறிவித்தார்.

ஸ்வேத வராஹ கல்பம் துவங்கிய சமயம் பிரளயத்தில் பிரபஞ்சம் முழுதும் ஜலம். மஹா விஷ்ணு ஒரு வெள்ளை நிற காட்டுப் பன்றியாக உருவெடுத்து கடலில் மூழ்கி ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விட்டு அவன் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். ப்ரஹ்மாதி தேவர்கள் பூவராஹனைப் போற்றி மலர்களால் அர்ச்சித்தார்கள். பூமியில் சில காலம் வெள்ளைப் பன்றியாக ஸ்வேத வராஹனாக சில காலம் விஷ்ணு இருந்தார். மேலே சொன்னபடி வராஹ கல்பம்அப்போது தான் துவங்கியது.

இதற்கிடையில், ப்ருகு விஷ்ணுவின் மார்பில் உதைத்தும் மார்பில் இருந்த தன்னை உதாசீனப்படுத்தி, உதைத்தும் ரிஷியை உபசரித்த விஷ்ணுவிடமிருந்து விலகி மஹா லக்ஷ்மி பூமிக்குச் சென்றுவிட்டாள். அவளைத் தேடிக்கொண்டு மஹாவிஷ்ணு பூலோகத்தில் வேங்கடமலைக்கு வந்து அங்கே ஒரு புஷ்கரணி அருகே இருந்த புளியமரத்தடியில் புற்றில் உறைந்தார். அவர் மேல் அன்பும் பாசமும் கொண்ட ப்ரம்மா மகேஸ்வரன் இருவரும் பசுவும் கன்றுமாக உருவெடுத்து புற்றின் மேல் பால் சொரிந்து சேவித்தனர். சூரியன் இந்த சேதியை மஹா லக்ஷ்மிக்கு தெரிவித்து ”அம்மா நீ ஒரு கோபியாக சென்று அந்த பசுவையும் கன்றையும் சோழ ராஜாவிடம் ஒப்படைத்து விடு” என்றான். அவ்வாறே சோழனை அடைந்த பசுவும் கன்றும் வேங்கடமலையில் மேய்சல்களில் ஈடுபட்டு அங்கே புற்றில் விஷ்ணு இருப்பதை அறிந்த பசு தினமும் தனது மடியில் சுரந்த பாலை முழுதும் அந்த புற்றின் மேல் சொரிந்தது. சோழ ராணி பசுக்களை மேய்ப்பவனிடம் ”ஏன் இந்த பசு பாலே தருவதில்லை” என்று கேட்க அவன் காரணம் அறிய அதைப் பின் தொடர்ந்தான். பசு வழக்கம்போல் புற்றின் மேல் பால் முழுதும் சொரிவதைப் பார்த்தான். கோபத்தால் கையில் இருந்த கோடாலியால் பசுவின் தலையைத் தாக்கினான். பசுவைக் காப்பாற்ற புற்றிலிருந்து விஷ்ணு தோன்றி அவன் அடித்ததை தனது தலையில் வாங்கிக்கொண்டு ரத்தம் கொட்டுவதைக் கண்ட மாடு மேய்ப்பவன் அங்கேயே அதிர்ச்சியில் கீழே விழுந்து மாண்டான். மேய்ப்பவன் இறந்தாலும் பசு வழக்கம் போல் சோழனின் மாட்டுத் தொழுவம் திரும்பியது. அதன் உடலில் ரத்தக் கறையைக் கண்ட சோழன் பசுவோடு வேங்கட மலைக்கு சென்றான். மாடு மேய்ப்பவன் இறந்து கிடப்பதையும் அருகே கோடாலி ரத்தக்கரையோடு கிடப்பதையும் பார்த்தபோது புற்றிலிருந்து விஷ்ணு எழுந்து ராஜாவின் வேலையாள் செய்த தவறுக்காக ராஜாவை வனை தண்டிக்க அவன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மன்னிக்க வேண்டியபோது , ”சரி ஆகாசராஜாவால் உன் தலையில் கிரீடம் ஏறும், பத்மாவதியை மணம் புரியும் நேரத்தில் உன் சாபம் விலகும்” என்று வரமளித்தார். சோழன் ஸ்ரீனிவாசனாக பிறந்து வராஹ க்ஷேத்ரத்தில் வசித்து வராஹனை பூஜித்தான். இன்றும் ஸ்ரீனிவாசனை திருமலையில் தரிசிக்க வருபவர்கள் முதலில் அருகே உள்ள புஷ்கரணியில் ஸ்னானம் செய்து வராஹஸ்வாமியை முதலில் தரிசித்து வணங்கிய பிறகே வேங்கடாத்ரியில் ஸ்ரீனிவாசனை தரிசிக்கவேண்டும் என்பது முறையாயிற்று.

த்வாபர யுகத்தில் வ்ரஜபூமியில் தேவகி மகனாக பிறந்த ஸ்ரீ கிருஷ்ணன் யசோதையிடம் வளர்ந்தான். ”உனக்கும் ருக்மணிக்கும் நிகழ்ந்த கல்யாணத்தை நான் பார்க்கவில்லையே. உன் தாய் நான் உனக்கு கல்யாணம் பண்ணி கண்ணால் கண்டு மகிழ இயலாதவளாகிவிட்டேனே” என வருந்தி கிருஷ்ணனிடம் அழுதாள். ”வருந்தாதே அம்மா, அடுத்த பிறவியில் நீ வகுளாதேவியாகவும் , நான் உன் வளர்ப்பு மகன் ஸ்ரீனிவாசனாகவும் தோன்றி எனக்கு நீயே திருமணம் செய்விப்பாய்” என கிருஷ்ணன் வாக்களித்தார்.

ஆகவே வராஹஸ்வாமி அருளால் வகுளா தேவி வேங்கடமலையில் ஸ்ரீனிவாசனை மகனாக வளர்த்தாள். சில காலத்தில் தொண்டை மண்டலத்துக்கு ஆகாசராஜன் அரசனானான். புத்ரப்ராப்தி இல்லாத ஆகாசராஜன் யாகம் செய்தான். யாகம் செய்யப்போகும் இடத்தை உழுதான். அப்போது ஒரு தாமரை தோன்றியது. அருகே சென்று பார்த்தபோது தாமரையில் ஒரு அழகிய பெண் குழந்தை. ஆசையோடு எடுத்துச் சென்று தனது ராணியிடம் கொடுத்தான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ”ஆகாச ராஜா, இந்த பெண்ணை உன் மகளாக வளர்ப்பாய். பெரும் செல்வம் உன்னை வந்தடையும்” தாமரையில் தோன்றிய அந்தப் பெண் ”பத்மாவதி” யாக வளர்ந்தாள் . யுவதி பத்மாவதி நந்தவனத்தில் விளையாடும்போது ஒருநாள் நாரதர் தோன்றி அவளை வாழ்த்தி ”உன் ஜாதகப்படி உனக்கு மகாவிஷ்ணுவே கணவனாக வருவார்” என்கிறார்.

பத்மாவதி அரண்மனை நந்தவனத்தில் ஒருநாள் காட்டு யானை ஒன்று நுழைய , யானையைக் கண்டு பத்மாவதியும் தோழியரும் பயந்து ஓட ,யானையைத் துரத்தி குதிரை மேல் வந்த ஸ்ரீனிவாசன் அவர்களை யானையிடமிருந்து காப்பாற்றி அவள் மனம் கவர்ந்தான். ஸ்ரீனிவாசனும் தன் மனதை பத்மாவதியிடம் இழந்தான். வகுளாதேவிக்கு தனது மகன் ஸ்ரீனிவாசன் மனம் இப்போது காதல் வயப்பட்டுள்ளான். அன்ன ஆகாரம் ஏன் பிடிக்கவில்லை என்று ஊகித்து அவனிட மிருந்து விஷயம் அறிகிறாள்.

காட்டில் முன்னொரு காலத்தில் மஹாலக்ஷ்மி வேதவதியாக ஒரு ரிஷி ஆஸ்ரமத்தில் இருந்தாள். அவளைக் கண்ட லங்கேசன் ராவணன் அவளை கவர முயலும்போது அவளால் தான் அவனுக்கு மரணம் நிகழும் என்று சபிக்கிறாள் .
பின்னர் ராவணன் மாய சீதையை பஞ்சவடியில் கடத்திச் செல்கிறான். வேதவதி தான் சீதையாக பிறந்தவள். சீதை தான் பத்மாவதியாக பிறந்து ஆகாசராஜன் மகளாக வளர்ந்தவள்.

ஆகாச ராஜனும் அவன் மனைவி ராணியும் பத்மாவதியின் விருப்பத்தை அறிகிறார்கள். வகுளாதேவி ஆகாசராஜனிடம் பெண் கேட்க போகிறாள். இதற்கிடையில் ஸ்ரீனிவாசன் ஒரு குறி சொல்லும் பெண்ணாக தானே பத்மாவதி அரண்மனைக் குள் செல்கிறான். தோழிகள் குறி சொல்பவளை பத்மாவதியிடம் அழைத்துப் போக, குறி சொல்பவள் பத்மாவதியை மனக்கப்போகும் ஸ்ரீனிவாசன் மஹா விஷ்ணு அவதாரம், அவளை பெண்கேற்க ஸ்ரீனிவாசனின் தாய் வகுளா தேவி எந்த நேரமும் அரண்மனைக்கு வருவாள் உடனே திருமணம் செயது வையுங்கள் என்று சொல்கிறாள். சிறிது நேரத்தில் இதை அறியாத வகுளாதேவி ஆகாச ராஜன் அரண்மனைக்கு வருகிறாள். ஸ்ரீனிவாசனுக்கு பெண் கேட்கிறாள். ஆகாச ராஜன் ப்ருஹஸ்பதி அறிவுறை கேட்கிறான். சுக மகாமுனி தூது செல்கிறார். தேவாதி தேவர்கள் வாழ்த்த சுபமுகூர்த்ததில் குபேரன் நிதி உதவி செய்ய ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாணம் நிறைவேறுகிறது. குபேரன் கொடுத்த கடன் பணம் இன்னும் திருப்பி தரவில்லை. வட்டி செலுத்தவே வருமானம் போதவில்லை… பக்தர்கள் கோடி கோடியாக காணிக்கை செலுத்துகிறார்கள். ஸ்ரீனிவாசன் உதவி செய்த அவர்களுக்கு கருணையை வாரி வழங்கும் கலியுக வரதனாக ஏழு மலை உச்சியில்நிற்கிறான்.

ஒரு முறை ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் பலபரிக்ஷை நடந்து ஆதிசேஷனை பிரம்மாதி தேவர்கள் வாயுவுக்கு விட்டுக்கொடு என்று சொல்லி, வாயு வெற்றிபெற்று, ஆனந்த மலை காற்றில் தூக்கிச்செல்லப்பட்டு ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் விழுகிறது. ஆதிசேஷன் தலை பாகம் ஆனந்தகிரியை வெங்கடாத்ரியுடன் இணைந்த வெங்கடாத்திரி மலையாகி சேஷாத்ரி ஆகிறான். ஆதிசேஷனின் நடுப்பாகம் அஹோபிலமாகி, வால் பாகம் ஸ்ரீசைலமாகிறது. இது முடிந்து பல யுகங்கள் கடந்துவிட்டது. ஆதி வராஹன் சதுர்புஜங்களோடு, வெண்மையான முகத்தோடு பூதேவியுடன் திருமலையில் வெங்கடேசன் ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு வழி காட்டியாக முதலில் தரிசனம் பெறுபவராக காக்கும் ரக்ஷகனாக நிற்கிறார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *