KONDAPURAM PANCHALINGESWARAR – J K SIVAN

கொண்டாபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

26//2/23  ஞாயிற்றுக்கிழை அன்று  ஸ்ரீ  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனுடன்  சென்ற  புனிதப்பயணத்தில் கடைசியாக  தரிசித்த ஆலயம் பற்றி இன்று  சொல்கிறேன்.
காவேரிப்பாக்கத்தில்  சில அற்புத கோயில்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் செல்ல இயலவில்லை. காரணம்  ஒன்று கோயில்கள்  நாங்கள் பயணித்த நேரம் திறந்திருக்கவில்லை,   அல்லது  சில கோயில்களை திறப்பதற்கே  ஆளில்லை. இந்த நிலையில் பகல்  2 மணி ஆகிவிட்டது.  எங்காவது கையிலிருந்த பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு  சென்னை திரும்பலாம் என்ற உத்தேசத்தில் காவேரிப்பாக்கம்  ஸ்ரீபெரும்புதூர்  மார்க்கத்தில் பெருஞ்சாலையில் கார் ஓடியது. அது ஒரு மேம்பாலம், அதன் கீழே   காவேரிப்பாக்கத்திலிருந்து சில கி.மீ. தூரங்கள் தான் வந்திருப்போம்,  தெருவின் எதிர்பக்கத்தில் ஒரு ஆலய கோபுரம் தெரிந்தது.  என்ன கோவில்?  போய் பார்ப்போம் என்று  பாலத்தின் அடியில் கிடைத்த  இடைவெளியில் எதிர்ப்புறமாக    காரை திருப்பி  அந்த ஆலயத்தை நோக்கி சென்றோம்.  கோவில் வாசல் திறந்திருந்தது.
பஞ்சலிங்கேஸ்வரர்  ஆலயம் இருக்கும்  அந்த  இடத்தின் பெயர்  கொண்டாபுரம்.  ஒருகாலத்தில் சிவபுரம் என்று பெயர். எப்படி எதற்காக பெயர் மாறியது? எதைக்  ”கொண்டா?”?  – விவரம் தெரியவில்லை.ஈஸ்வரன்  பஞ்ச பூத காரணன் என்பதால் சிவபுரம்  பொருத்தமான பெயர். பழைய  பல நூற்றாண்டு  வருஷ கோவில்.மனித வாழ்க்கையின்  ஆதாரமான  12 ராசிகளுக்கும் இங்கே  பரமசிவன்  பஞ்ச லிங்கமூர்த்திகளாக இருப்பது இதுவரை நான் தரிசிக்காத  அற்புதம். அதிசயம். மேலும், பன்னிரு ராசிகளையும்   மூன்று ராசிகளுக்கு ஒரு லிங்கம் என  பிரித்து  நான்கு லிங்கங்களும்,  தங்களது  ராசி தெரியாதவர்களுக்கு ஐந்தாவது லிங்கம் என்று  முன்னோர்கள் இங்கே  சௌகர்யம்  ஏற்படுத்தி  கொடுத்திருக்கும்  ஸ்தலம்.   இந்த பஞ்சலிங்கேஸ்வரர்  ஆலயத்தில் ஐந்து பிரதோஷங்கள் வந்து  விரதம் இருந்து  வழிபட்டால் சகல வரங்களும் கைகூடுமாம்.
உமாதேவி  பூமிக்கு வந்து சிவனை அடைய தவமிருந்த போது தேவி பூலோகத்தில்  பத்ரிகாச்ரமத்துக்குக் குழந்தையாய் வந்தாள்; காத்யாயன முனிவரிடம் வளர்ந்தாள். குறிப்பிட்ட பருவம் வந்ததும், அவளிடம் சில பொருட்களைத் தந்த முனிவர், ‘காசிக்குச் சென்று சில காலம்  தான தர்மம் பண்ணு   அப்புறம்  தெற்கு திசை  நோக்கி  போ,  எங்கோ  ஓரிடத்தில் தான் கொடுத்த  இந்த பொருட்கள்  உருவம்  மாறும். அங்கே தன உனக்கு சிவனருள் கைகூடும்’ என்று காத்யாயன முனிவர்  கூறி, வழி யனுப்பிவைத்தார்.அம்பாள் காசிக்கு சென்றாள்.  அன்னபூரணியாக,  அறம் வளர்த்த நாயகியாக, சில காலம் இருந்து  தெற்கே  வந்தவள்,  மாங்காட்டில் பஞ்சாக்னியின் நடுவில், ஊசி முனையில் தவமியற்றினாள்.  மாங்காட்டு  காமாக்ஷி அற்புதமானவள். ஸர்வ சக்தி. அப்புறம்   மாங்காட்டிலிருந்து  காஞ்சிபுரம்  வந்தாள். அங்கே தான்  காத்யாயன முனிவர் அவளிடம் கொடுத்த பொருட்கள்  உரு  மாற்றம் அடைந்தன.
புலித்தோல் சோம விருத்தமாகியது.  குடம் குட தீபமாகியது.  ருத்ராட்சம் வில்வ மாலையாகியது.  குடை நாகா பரணமாகவும்  யோக தண்டம் திரிசூலமாகவும்,  மணல் சிவலிங்கமாகவும்  மாறின.காஞ்சிபுரத்தில் கம்பா நதி தீரத்தில்  சிவ பூஜை செய்த அம்பாளுக்குப் பல சோதனைகளுக்குப் பிறகு  ஈஸ்வர தரிசனமும் கிடைத்தது.
அன்னை எண்ணிவந்த காரியம் இன்னும் முழுமை பெறாததால்  அதைப் பூரணமாக்கும் விதமாக சிவகட்டளை பிறந்தது.
”ராவண வதம் முடிந்து, நமது திருக்கல்யாணக் காட்சியை தரிசிக்க வேண்டி தகடூரில் காத்திருக்கிறான் ராமன்.
நீ அங்கு செல்” என்று பணித்தார் சிவனார். அதன்படி, தகடூருக்கு (தற்போதைய தர்மபுரி) அவள் வரும் வழியில் ஓரிடத்தைக் கண்டாள். உலகை உய்விக்க உகந்த இடம் அதுவே என்று உணர்ந்தாள்.
உலகின் மாற்றங்களுக்கும், உயிர்களின் துயரங்களுக்கும் பஞ்ச பூதங்களின் முரண்பட்ட செயலாற்றல்களே காரணம் அல்லவா? ஆகவே, ஐம்பூதங்களையும் ஆற்றுப்படுத்தும் விதமாகவும், அவர்களால் நல்லன மட்டுமே விளையும் படியாகவும் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள் மீண்டும் அவளுக்கு சிவதரிசனம் கிடைத்தது.
பஞ்சபூதங்களின் பேராற்றலால் பூமியும் உயிர்களும் செழிக்கும்படி, தாங்கள் இங்கேயே கோயில் கொண்டருள வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள்.
அதை ஏற்று பரமேஸ்வரன் பஞ்சலிங்கேஸ்வரராக அங்கே கோயில் கொண்டார். அது தான் நாங்கள் சென்ற  கொண்டாபுரம் என்ற ஒருகால சிவபுரம்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 75 கி.மீ.தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கொண்டாபுரம். ஆமாம், சிவபுரத்துக்கு தற்போது வழங்கப்படும் பெயர் இதுதான்.
வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது திருக்கோயில். உள்ளே நுழைந்தால், முதலில் பிள்ளையாரைத் தரிசிக்கிறோம். உருவில் மட்டுமல்ல, அருள்வதிலும் பெரியவரான இவரை வணங்கி, பஞ்ச லிங்க தரிசனத்துக்குத் தயாராகிறோம்.

கோவிலில் இருக்கும்  பஞ்ச லிங்கேஸ்வரர்கள்  தனித்தனி சந்நிதியில்  அருள் பாலிக்கிறார்கள்.அப்பு லிங்கம்:(நீர், ஜலம் ) சிவன்   வாமதேவ அம்சம்.  மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய அப்பு தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவது சிறப்பு!
அப்புலிங்கம் சந்நிதிக்கு அருகிலேயே நடராஜர் சந்நிதியும், காமாட்சி அம்பிகை சந்நிதியும் உள்ளன. இந்தத் தலத்தில் இரண்டு காமாட்சிகள். மூலவருக்கான காமாட்சி, பிரதான மூலவர்  ஆகாச லிங்கேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் சந்நிதி கொண்டிருக்கிறாள்.
விசேஷமாக  இந்தக்கோயிலில் கோஷ்டத்திலும் பிராகாரத்திலுமாக இரண்டு தக்ஷிணா மூர்த்திகள்.அமைதியான  இந்த சிவஸ்தலம்  குரு வழிபாட்டுக்கு உகந்தது. தவிர, தேவியருடன் முருகன், பைரவர், நவகிரக மூர்த்தியரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.வாயு லிங்கம்: (தத்புருஷ அம்சம்)  மிதுனம், துலாம், கும்பம் ஆகிய வாயு தத்துவ ராசிக்காரர்கள் வழிபடுவது விசேஷம்!
அக்னி லிங்கம்: (அகோர அம்சம்). மேஷம், சிம்மம், தனுசு ஆகிய அக்னி தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதால், வாழ்க்கை சிறக்கும்.
ப்ருத்வி லிங்கம்: (சத்யோஜாத அம்சம்) அருளும் இவரை ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்கள் வழிபட்டு வளம் பெறலாம்.
ஆகாஸ  லிங்கம்:
ஈசான அம்சமாக அருள்கிறார் ஆகாயத்துக்கான லிங்க மூர்த்தி. இவரே இக்கோயிலின் பிரதான மூலவர். அனைத்து ராசி அன்பர்களும் இவரை வழிபட்டு வளம் பெறலாம்.  தனது ராசி இன்னதென்று தெரியாத அன்பர்களுக்கு இவர்  பிரதானமான  ஈஸ்வரன். அம்பாள்  பிரதிஷ்டை செய்து வழிபட்ட  புராதன புதுப்பிக்கப்பட்ட  சிவாலயம்.  சிறப்பு  பரிகார பூஜைகள்  பக்தர்களுக்காக  நடைபெறுகிறது.  நக்ஷத்ர தீப வழிபாடு சிறப்பு. ஞ்சலிங்க சந்நிதிகள் ஒவ்வொன்றிலும் 27 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட, எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.இங்குள்ள   பஞ்ச லிங்க மூர்த்திகள் சந்நிதியில்  ஐந்து பிரதோஷங்களுக்கு  வந்து பிரதோஷ பூஜையில் பங்கேற்று வழிபட்டுச் சென்றால், சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்கிறார்கள்.

இன்னுமொரு  விஷயம் கேள்விப்பட்டேன்.   மஹா  பெரியவாளின் அபிமான  சிவ க்ஷேத்ரங்களில் இதுவும் ஒன்று.  1950களில் சிதிலம் அடைந்து கிடந்தது இந்த ஆலயம். அப்போது,   விஜய யாத் திரை மேற்கொண்டிருந்த மகாபெரியவா இந்த பகுதிக்கு வந்தபோது  கோயில் இருந்த திசையை நோக்கி நமஸ்கரித்தாராம். அருகில் இருந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அம்பாள் தவமிருந்து வழிபட்ட தலம்’ என்ற  மஹா பெரியவா, புதர்கள் மண்டிக்கிடந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்ட, அங்கே இந்த ஆலயஹம்  புதையுண்டு சிதிலமடைந்து இருப்பதை அறிந்து  சிவபக்தர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
தொழிலதிபர் பி.ஆர்.பிர்லா மூலமாக மகாபெரியவா இக்கோயிலுக்குத் திருப்பணி செய்து  வைத்த தகவலை கல்வெட்டுக் குறிப்புகளில் இருந்து அறியலாம்.
கோயிலின் மூலவர் சந்நிதிக்கு எதிரில், கரம் குவித்து ஸ்வாமியை வணங்குவது போன்ற காஞ்சி மகா பெரியவாளின் அபூர்வ திருவுருவப்படத்தையும் இங்கே தரிசிக்கலாம். கோயிலுக்கு அருகில், மகாபெரியவா பெயரில் தியான மண்டபமும் உண்டு.

மகா சிவராத்திரி, திருவாதிரை, நவராத்திரி, பிரதோஷம் முதலான வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வரும் இந்த ஆலயத்தில், வெகுநாட்களுக்குப் பிறகு தற்போது உபயதாரர் களின் உதவியுடன் புனரமைப்புத் திருப்பணி கள் நடைபெற்று வருகின்றன.
கோவிலை பராமரிக்க யாரும்  இல்லாத  காரணமாக  ரவி என்ற  பக்தர்  இங்கே  முழு நேரமும்  சேவைக்கு தன்னை அர்பணித்துக் கொண்டு பரிபாலனம் செய்கிறார். அவர்  திரட்டும்  நன்கொடையில்  தனது  குழந்தைகளோடும், பக்தர்கள் குடும்பத்தோடும்  முடிந்த  பணிகள்  செயது வருகிறார்.  நாங்கள் சென்ற அந்த ஞாயிற்றுக்கிழமை  சாயந்திரம் ஏதோ பூஜை என்பதால்   பஞ்ச லிங்கத்த்துக்கும்  அலங்காரத்தில்   நைவேத்திய பிரசாதம் தயாரிப்பதில்  ஈடுபட்டிருந்த  ரவி கோவிலை திறந்து வைத்திருந்ததால் உங்களுக்கு இந்த அற்புத ஆலயத்தை தரிசித்து அறிவிக்க எனக்கு பாக்யம் கிடைத்தது.ராஜகோபுரம் மற்றும் மதில்களுக்கான புனரமைப்புப் பணிகள்  நிறைய  இருக்கிறது.  பக்தர்களும்  அன்பர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தால், திருப்பணி விரைவில் பூர்த்தியாகும் என்கிற நிலை./கோவிலுக்கு தெரிக்கே  புஷ்கரணி  உள்ளது.   சோழ  பல்லவ காலத்து தூண்கள், அதில் சிற்பங்கள், கல்வெட்டுகள் நிறைந்த பழமையான ஆலயம்.
ரவி  யின்  டெலிபோன்   95977 12495 .  கோவில் விவரங்களை அறிந்து  கோவிலை தரிசியுங்கள், உங்களாலான நிதி உதயவி அளித்து, கோவில் பராமரிப்பு உதவுங்கள்.
கோவிலில் எடுத்த படங்கள், தவிர  ரவி அனுப்பிய சில அலங்கரிக்கப்பட்ட  பஞ்சலிங்கங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்..கோவில்  வளாகத்துக்குள்  நிறைய விருக்ஷங்கள், வில்வத்துக்கு பஞ்சமே இல்லை.  புறாக்கள் நிறைய  மரங்களில் வாழ்வது போல் பூனைகளும் நாய்களும் அங்கே  வாழ்கின்றன. திடீரென்று ஒரு புறாவின் அலறல். அடுத்த கணம் அதைப்  பிடித்து வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஒரு பூனை கண்ணில்பட்டது.  முக்தி அடைந்த  அந்த  புறாவின் கடைசிக் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *