Kaaradaiyan Nonbu – J.K. SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN

இன்று இந்த வருஷம் காரடையான் நோன்பு. அதற்கும் சரடுக்கும் சம்பந்தம் உண்டு. சரடு கட்டிக்கொள்ள , விடுவதற்கல்ல. சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது. சரடு கட்டிக் கொள்வது ஒரு புனிதமான விரதம். சுமங்கலிகள் மாங்கல்ய பலத்துக்காக, சௌபாக்கியத்திற்காக அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பு .மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் கூடும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்து தலை வாழையிலை பரப்பி அதன் மேல் அரிசி அக்ஷதை தூவி, அதில் ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் சரடை , கயிறைக் கட்ட வேண்டும். சரடில் புஷ்பம் முடிந்து வைத்திருப்பார்கள். இஷ்டதேவதையாக அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக்கருதி வழிபடுவது வழக்கம். சங்கல்பம்அத்ய பூர்வோக்த ஏவங்குன ஸகல விசேஷேன விசிஸ்ட்டாயாம் அஸ்யாம் வர்த்தமாணாயாம் வ்யவஹாரிகே சுபக்ருத்   நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ௫தெள மீன மாஸே  கிருஷ்ண பக்ஷே  அஷ்டம்யாம் சுபதிதெள வாஸர: வாஸரஸ்து செளம்ய வாஸர யுக்தாயாம் மூலா நக்ஷத்திர யுக்தாயாம் ஸித்தின் நாமயோக  கெளலவ கரண   சுபதிதெள மம ஸக குடும்பானாம் சர்வாபிஷ்டா ஸித்யர்த்தம் , தீர்க செளமங்கல்ய அவாப்தி ஸித்யர்த்தம், ஸ்ரீ காமாக்ஷி , ஸ்ரீ சாவித்திரி ப்ரஸாத ஸித்யர்த்தம் , தன தான்ய அஷ்ட லக்ஷ்மி ப்ரஸாத ஸித்தியர்த்தம் சாவித்திரி விரத ப்ரதிசர (சரடு) பூஜாம் அத்ய கரிஷ்யே.” என்று வாத்யார் மந்திரம் சொல்லி பூஜை நடக்கும்.
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள்.
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்ளவேண்டும். ( சுமங்கலிகளுக்கு கணவரும் , குழந்தைகளுக்கு பெரியவர்களும் கட்டிவிடலாம்)சரடு கட்டிகொள்ளும்போது சொல்கிற ஸ்லோகம்; ”தோரம் க்ருஹ்னாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் ;
பர்த்து ஆயுஷ்ய ஸித்தியர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா :காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.
பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான் காமாட்சி நோன்பு. சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.
காரடையான் நோன்பு அன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது: 76- 77 வருஷங்களுக்கு ஒரு காரடையான் நோன்பு அன்று சூளைமேட்டில் நாங்கள் வசித்தபோது அம்மா காராமணி அடை தட்டி காரடையான் நோன்பு பண்ணிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு திடீர் என்று ஏதோ ஒரு அடக்கமுடியாத நடுக்கம், பயம் ஏற்பட்டது. உடல் வியர்த்தது.தலை சுற்றியது. என் அப்பாவுக்கு ஏதோ பேராபத்து நிகழ்வது போல் மனதில் பட்டதால் , கதறினாள். நாங்கள் சகோதரர்கள் மூவரும் சிறுவர்கள். ஜம்பாவதி அம்மா அம்பாளை எல்லாம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் . அன்று இரவு தான் விஷயம் தெரிந்தது. என் அப்பா ஸ்ரீ J. கிருஷ்ணய்யர் நுங்கம்பாக்கம் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் உதவி ஹெட்மாஸ்டர். அவருக்கு அன்று காலை திடீர் என்று மார்பு வலி வந்து துடித்து, வகுப்பிலேயே விழுந்து விட்டார். நுங்கம்பாக்கம் கார்ப் பரேஷன் பள்ளிக்கூடத் திலிருந்து கோடம்பாக்கம் ஸ்டேஷன் அருகே இருந்த டாக்டர் கோபாலமேனன் வீட்டுக்கு/அதுஇவ் ஆஸ்பத்திரி, அழைத்து போனார்கள். கார் டாக்ஸி டெலிபோன் எதுவுமில்லாத காலம். குதிரை வண்டியில் தான் பிரயாணம். டாக்டர் அவருக்கு முதல் உதவி செய்தார் ஏதோ மருந்து கொடுத்தார். அதற்கு பிறகு என் அப்பா 85-86 வயது வரை வாழ்ந்தார். எப்படி எங்கோ கோடம்பாக்கம், சூளைமேட்டில் இருந்த அம்மாவுக்கு நுங்கம்பாக்கத்தில் அப்பாவின் உடலுக்கு வந்த ஆபத்து தெரிந்தது?. நிச்சயம் அவள் மாங்கல்ய பலத்தால் தான் அப்பா பிழைத்ததாக நம்பினாள். இன்றுவரை நாங்களும் அவ்வாறே நம்புகிறோம். அசையாத நம்பிக்கை தான் பக்தி. இவ்வித பக்தி நிச்சயம் பலன் தரும். இது அனுபவ பூர்வமாக எனக்கு தெரியும்.
காரடையான் நோன்பின் தாத்பரியம் மாங்கல்ய பலம். தீர்க்க சுமங்கலியாகத் திகழவேண்டும் என்பது திருமணமான எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமான ஆசை. ”தீர்க்க சுமங்கலி பவ:” இது தானே பெரியோர்கள் ஆசீர்வாதம். அந்த பாக்கியத்தை பெறவே ஸ்த்ரீகள் மேற் கொள்ளும் ஸ்பெஷல் விரதம் இது .கோவில் என்றால் அதற்கு ஒரு ஸ்தல புராணம் இருக்கும். நோன்பு பண்டிகை என்றால் ஒரு ராக்ஷஸன் கதை சம்பந்தம் இருக்கும். ஆகவே இந்த காரடையான் நோன்பு விரதத்துக்கு பின்னால் இருக்கும் ஒரு அற்புதமான கதை இருப்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்.
நான் மஹா பாரதத்தை முழுமையாக ”ஐந்தாம் வேதம்” என்ற குழந்தைகளுக்கான கதையாக எழுதும்போது விவரமாக தெரிந்து கொண்டது சாவித்ரி சத்யவான் சரித்ரம். அதைச் சுருக்கமாக சொல்கிறேன்.

அஸ்வபதி எனும் ஒரு ராஜாவின் பெண், சாவித்ரி, தனக்கு ஏற்ற கணவனைத் தேட முயற்சி செய்து அவள் தந்தை அஸ்வபதி கடைசியில் ஒரு சுயம்வரம் நடத்தினபோது வந்த எந்த ராஜ குமாரனையும், ராஜாவையும் சாவித்திரிக்கு பிடிக்கவில்லை. ”சாவித்ரி நமக்கு எட்டாக்கனி” என்று வந்த ராஜாக்களும் கொண்டு வந்த பையோடு ஊர் திரும்பினார்கள்.”இது என்னடா வம்பு. எவனையும் என் பெண்ணுக் கு பிடிக்கவில்லையே என்று அஸ்வபதி வருந்தினான். அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை யார்? கவலை மனதை அரித்தது. சாவித்ரி தனக்கேற்ற மணாளனைத் தானே தேடிக் கொள்ளப் புறப்பட் டாள். உள்ளுணர்வு வழி நடத்த அந்த ராஜ்யத்தின் காட்டுப் பகுதிக்குச் சென்றாள். சத்யவான் என்ற ஒரு மரம் வெட்டியைப் பார்த்த கணத்திலேயே ”இவனே என் கணவன்” என முடிவெடுத்தாள் .

சத்தியவான் சால்வ நாட்டு ராஜகுமாரன். எதிரிகள் நாட்டைக் கைப்பற்றியதால் ராஜா, தன் மனைவி, குழந்தை சத்யவானோடு காட்டுக்குத் தப்பி ஓடி வந்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தான். அஸ்வபதியின் அரண்மனைக்குத் திரும்பிய சாவித்ரி ”அப்பா, நான் சத்யவானைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொன்னதும் அஸ்வபதி மகிழ்ந்தான். சத்யவான் மரம் வெட்டுபவன் அல்ல, விதிவசத்தால் நாடிழந்த ராஜகுமாரன் என்றறிந்ததும் மன நிம்மதி.
சத்தியவான் சாவித்ரி கல்யாணத்தில் ஒரு சிக்கல். ஒரு ஜோசிய முனிவர் அஸ்வபதியிடம் சொன்னபடி சத்யவானுக்கு ஆயுசு இன்னும் ஒரு வருஷம் தான். (நண்பர்களே, எனக்கு தெரிந்து நிறைய கல்யாணங்கள், நல்ல இடத்து சம்பந்தங்கள் சில ஜோசியர்களால் நின்று போகிறது. தடை படுகிறது. ஜோசியர் தப்பா, ஜோசியம் தப்பா என்பது இதை நான் எழுதும் வரையிலும் கண்டுபிடிக்கமுடியாத ப்ரம்ம ரகசியம்.) அஸ்வபதிக்கும் ராணிக்கும் கலக்கம், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னா லும் சாவித்ரி கேட்கவில்லை. சாவித்ரி விரும்பியபடியே சத்யவானின் மனைவியானாள். மனைவி கணவனுடன் தானே தங்கி வாழ வேண்டும்? ஆகவே, சாவித்ரி, மரம் வெட்டும் கணவனுடன் காட்டில் போய் வசித்தாள். ராஜகுமாரியாக வாழ்ந்தவள் சந்தோஷமாக காட்டு வாசியானாள். விடாமல் காமாட்சி விரதம் காரடையான் நோன்பு மேற்கொண்டாள் .கணவனுக்கு ஆயுள் இன்னும் ஒரு வருஷம் தான் என்ற சங்கடம் நாளுக்கு நாள் அவள் மனதை உறுத்தினாலும் தன் மாங்கல்யத்துக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று திடமாக நம்பினாள் . ஒரு வருஷம் முடிந்ததும் சத்யவான் உயிரைப் பறிக்க யமன் வந்தான்.பொதுவாக யமனோ, அவன் ஆட்களோ யார் கண்ணிலும் படுவதில்லை. ஆனால், யமனின் வருகை சாவித்ரிக்குத் தெரிந்துவிட்டது.
‘ யம தர்மா, மனிதர்கள் உயிரைப் பறிக்க உன்னுடைய தூதர்கள் தானே வருவார்கள். நீ எதற்கு வந்தாய்?”
”ஆம், வழக்கமாக என் தூதர்கள் தாம் வருவர். மிகச் சிறந்த மனிதர்களை, உன் கணவன் சத்யவான் போன்ற அப்பழுக்கற்ற நற்குணங்கள் கொண்ட , பெற்றோருக்கு பணிவிடை செய்து, கடமை தவறாமல் வாழ்ந்த உயிர்களைப் பறிக்க நானே மரியாதை நிமித்தமாக வருவேன்.” என்றான் யமன்.
சத்யவானின் உயிர் ஒரு சிறு கட்டை விரல் அளவில் எமனின் பாசக் கயிற்றுள் அடங்கியது. உடல் கீழே கிடந்தது. யமன் சத்யவான் உயிரோடு தெற்கு நோக்கி செல்ல, சாவித்திரியும் பின் தொடர்ந்தாள் .

‘பெண்ணே நீ எதற்கு என்னைப் பின் தொடர்கிறாய். இந்த எல்லை தாண்டி நீ வரக்கூடாது. உனது கணவன் உடலுக்கு வேண்டிய கிரியைகளைச் செய். திரும்பிப் போ. ஏதாவது கேட்கவேண்டுமானால் சீக்கிரம் கேள். பெண்ணே. என்னை டிலே பண்ணாதே. நிறைய பேர் எனக்காக காத்திருக்கிறார்கள் நான் போகவேண்டும்” என்றான் யமன்.’
‘எமதர்மா, ஏழு அடிகள் சப்தபதி தொடர்ந்து நடந்தாலே வாழ்க்கையில் நட்பு உண்டாகிறது. நான் உன்னோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். பக்தையாகவும் தொடர்ந்து வந்திருக்கிறேனே. எனக்கு உதவ வேண்டாமா?””உனக்கு ஒரு வரம் தருகிறேன் உன் கணவன் உயிரைத் தவிர வேறு ஏதாவது கேள் ””என் கிழ மாமனாருக்கு கண் பார்வை திரும்ப வேண்டும்.. ”
”சரி அப்படியே” இனி நீ போகலாம் ”மேலும் யமனைப் பின் தொடர்ந்து சாவித்ரி சென்றாள்.’ இன்னும் எதற்கு என்னை தொடர்கிறாய்.””இல்லை தர்மராஜா. ஆத்மா, தன்வசம் இல்லாமல் எவனும், பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்நியாசி ஆகமுடியாது. அந்தந்த ஆச்ரமத்துக்குண்டான கடமைகள், ஞானம், இன்றி வாழ்க்கை நிறைவு இல்லாமல் போகும். என் கணவன் என் ஆத்மா. அவன் எங்கு இருக்கிறானோ, எங்கு செல்கிறானோ அங்கே நானும் போவேன். அவனோடு இருப்பேன்””பெண்ணே, உன் கற்பு, தியாகம், நேர்மை, பண்பு எனக்கு பிடிக்கிறது. உன் கணவன் உயிரைத் தவிர வேறு இன்னும் ஒரு வரம் கேள். தருகிறேன்.
”நன்றி தர்மராஜா, என் தந்தைக்கு நான் ஒரு பெண்ணாக பிறந்தேன். அவருக்கு புத்திர பாக்கியம் வேண்டும்”
‘அடாடா, அதுவும் கொடுத்தாகிவிட்டது. இனியும் தொடராதே. வரக்கூடாத இடத்துக்கு வெகு தூரம் என்னோடு நடந்து வந்து விட்டாய். பூலோகத்தில் வாழும் எவரும் இங்கே உடலோடு வரக்கூடாது. இங்கிருந்து உடனே சென்றுவிடு”’
‘என் கணவனின் தந்தை மீண்டும் ராஜ்யத்தை பெற்று அவர் அரசனாக தனது கடமையை புரிய அருள வேண்டும்”
‘ஆஹா. அவ்வாறே. ராஜ்யமும் திரும்பப் பெற்று உன் தந்தை ராஜ்ய பார கடமையும் புரிய வரம் தந்தேன் . இனியும் இங்கு நிற்காதே திரும்பிச் செல். உனக்கு ஸ்பெஷலாக இன்னுமொரு வரமும் தருகிறேன் உன் புருஷன் உயிரைத் தவிர. வேறு ஏதாவது கேள்.”
”என் கணவனைத் தொடர்வதில் எனக்கு எந்த களைப்பும் கஷ்டமும் இல்லை. தர்மாத்மா, நீங்கள் விவஸ்வானின் புத்திரன். அதனாலேயே வைவஸ்வதன் என்ற பெயரும் கொண்டவர். உங்களைப்போல், உலகில் எல்லோரையும் போல், தர்மம் கடைப்பிடிக்க எனக்கும் சத்யவானுக்கும் வம்சவ்ரித்திக்கு புத்ரபாக்கியம் வேண்டும். அனுக்ரஹம் செய்யவேண்டும். என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் போட்டுக் கொஞ்சுவதை நான் பார்க்கவேண்டும்,’ நல்லவேளை, தன் கடமையில் இவள் குறுக்கே வரவில்லை என்று ‘நிம்மதி’ கொண்ட யமன் யோசிக்காமல் அந்த வரத்தைத் தந்தான். அவனுக்கு எத்தனையோ இடம் போகவேண்டும். நிறைய பேரை அன்று பிடிக்கவேண்டும். ஆகவே இந்த சாவித்திரி நம்மை விட்டால் போதும்’ என்று அவள் கேட்டதற்கு ”சரி” என்று சொல்லி விட்டான். யோசிக்க நேரமே இல்லை அவனுக்கு.
‘பெண்ணே, தர்மத்தை நன்றாக அறிந்துகொண்டவள் நீ. உனது பரோபகார சிந்தனையை மெச்சி உனக்கு நீ வேண்டிய வரம் அளிக்கிறேன்” என்றான் யம தர்மன். சாவித்திரி யமனை வணங்கி நன்றி கூறி நின்றாள்.
”ஏன் இன்னும் நிற்கிறாய். நீ கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டேனே. செல் இங்கிருந்து”– யமன்
‘அப்படியென்றால் என் கணவனை எனக்குத் திருப்பித் தா’” ”என்ன உளறுகிறாய்?” திடுக்கிட்டான் யமன். கடமை உணர்விலேயே தான் ஒன்றி இருந்துவிட்டதில் அவள் கோரிய வரத்தின் பின்விளைவை அவன் எதிர்பார்க்கவில்லை.”தர்ம தேவதையே, நீங்கள் சற்று முன்பு அளித்த வரம் எவ்வாறு என் கணவன் இன்றி நிறை வேறும்? அவருக்கு உயிர் பிச்சை கொடுத்து உங்கள் வரம் நிறைவேற அருள் புரியவேண்டும்”
யமன் கொடுத்த வரம் பலிக்க வேண்டுமென்றால், சாவித்ரிக்கு குழந்தை பிறக்கவேண்டும்; அப்படி குழந்தை பிறக்க, அவளுடைய கணவன் வேண்டுமே! வேறு வழியில்லாமல் சத்யவானைத் திரும்பக் கொடுத்தான் யமன்.
”சாவித்திரி, நீ ஒரு பதிவ்ரதை, சத்தியவானுக் கேற்ற சத்யவதி. இதுவரை நடக்காதது இப்போது நடக்கும். உனது தர்மம் வென்று அதன் மூலம் சத்தியவான் உயிர் பெறுவான். நீயும் அவனும் இன்னுமொரு நானூறு ஆண்டுகள் புத்திர பௌத்ரர்களோடு வாழ்வீர்கள்” என்று அருளினான் யமதர்மன்.
சாவித்ரிக்கு இப்படி ஒரு தைரியமும், யமனையே பின்பற்றிப் போகக்கூடிய அருளும் கிடைத்த தற்கு அவள் மேற்கொண்டிருந்த காரடையான் நோன்புதான் காரணம்.

கணவனின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் எந்தக் குறையும் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு சுமங்கலிப் பெண்கள் இந்த காரடையான் நோன்பு மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற கணவன்மார்களும் நீண்ட நாள் சேர்ந்து வாழ்ந்து நல்லபடியாகக் குடும்பத்தை நடத்திச் செல்வார்கள் என்பது ஐதீகம். இந்த விரதத்தை காமாட்சி விரதம் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அம்பிகை காமாட்சியும் இப்படி ஒரு விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டிருக்கிறாள்.
காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து காமாக்ஷி தியானத்தில் ஆழ்ந்தாள். கம்பா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்துத் பிடித்துவைத்திருக்கும் லிங்கம் கரையக்கூடாதே என்று காரடையான் நோன்பை மேற்கொண்டாள். அதாவது தெய்வமே மனித ரூபத்தில் இப்படி விரதம் மேற்கொண்டு மனிதர்களுக்கு வழி காட்டி யிருக்கிறது! காமாக்ஷி அம்மனின் விரத மகிமையால் மண் சிவலிங்கம் கரையவில்லை, குறைய வில்லை. நதி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியபோதும் மணல் சிவலிங்கத்தை நெருங்காமல் சுற்றி சென்றது. விரதம் முடிந்ததும் சிவபெருமான் தோன்றி அவளைத் திருமணம் செய்துகொண்டார். இதுதான் காமாட்சி விரத மஹிமை.
காரடையான் நோன்பு அன்று சுமங்கலிகள் அதிகாலையில் நீராடி, நெற்றியில் குங்குமத் திலகத்தோடு விரதம் நல்லபடியாக நடந்தேற விநாயகரை பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு சுத்தமான சொம்பில் நல்ல நீரை நிரப்பி ,மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைக் கொத்து செருகி, தேங்காயைக் குடுமி மேலே பார்த்தபடி சொம்புக்கு கிரீடமாக வைப்பது தான் பூஜா கலசம். நீர் தெளித்து துடைத்து கோலம் போட்டு அதன் மேல் கலசம் வைத்து புஷ்பம் சார்த்துவார்கள். கழுத்தில் கட்டிக்கொள்ளத் தோதாக சற்றே தடிமனான கயிறை எடுத்து அதற்கும் மஞ்சள் தடவி தயாராக வைத்துக் கொள்வார்கள். வீட்டில் இருக்கும் சுமங்கலிகள் கன்னிப் பெண்கள் எல்லோருக்கும் ஆளுக்கு ஒன்று நடுவிலே பூ கட்டிய மஞ்சள் சரடு. விரதத்துக்கு நைவேத்யமாக காரடையைத் தயாரித்து, கூடவே வெண்ணெயும் இருக்கும். வெல்ல அடை, உப்பு அடை இரண்டு வகை தயாரித்து ஒரு வாழை இலையில் வைத்து, அடைகளுக்கு மேல் கொஞ்சம் கெட்டியாக வெண்ணை வைத்து கலசத்துக்கு முன் படைப்பார்கள். வெற்றிலை-பாக்கு, பழம், பூ, மஞ்சள் சரடு எல்லாவற்றையும் வைத்து கும்பத்தில் ஆவாகனமாயிருக்கும் அம்மனை நோக்கி, ‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் வைத்தேன். ஒரு நாளும் என் கணவன் எனைப் பிரியாத வரம் தருவாய் தேவி’ என்று மனமுருகச் சொல்லி வேண்டிக்கொள்வது வழக்கம். கூடவே உங்களுக்குத் தெரிந்த அம்மன் ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் கூட தாராளமாக சொல்லலாம்.இப்படி ஸ்லோகம் சொல்லி, நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி, பூஜையை முடித்ததும், இந்த கும்பத்துக்கு எல்லாரும் நமஸ்காரம் செய்து மஞ்சள் சரடை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொள் வார்கள். பிறகு காரடை, வெல்லஅடை பிரசாதத்தை வெண்ணெயோடு சேர்த்து சாப்பிடுவோம். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துண்டு, காரடை கொடுத்து உபசாரம் செய் வோம். அவர் களுடைய மன சந்தோஷம் சுமங்கலிகள் மாங்கல்யத்தை மேலும் பலமுள்ளதாக்கும்.
‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்று ஒரு பழ மொழி. அதாவது, மாசி மாதத்தில் வரும் இந்த காரடையான் நோன்பு நாளன்று பழைய தாலிச் சரடுக்கு பதிலாகப் புது தாலிச்சரடை மாற்றிக்கொள்வது. மாங்கல்ய பலத்தை அதிகரிக் கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளும் இந்த நாளைவிட, தாலியை புதுப்பித்து மாற்றிக் கொள்வதற்கு வேறு நல்ல நாள் இருக்க முடியுமா? நைவேத்யம் செய்த அடைகளில் சிலதை எடுத்து வைத்து மறு நாள் பேப்பர், பிளாஸ்டிக், தின்பதற்கு வரும் ஒரு பசுமாட்டுக்கு கொடுத்து அந்தப் பசுவையே அம்மனாக நினைத்து வழிபடலாம். காரடையான் நோன்புக்கான ஒரு ஸ்லோகம் தருகிறேன். நம்பிக்கையோடு துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.”சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலாபாங்கலீலாம், குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூதப்ருங்காம்மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம்தீபயந்தீம்,காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே”
”பிறைச் சந்திரனை சிரசில் ஆபரணமாக சூடியவளே, அம்பா, அழகு வதன முடையவளே , மனக் கிலேசம் சஞ்சலம், கொண்டவர் வேதனையை உன் கடைக்கண் பார்வையால் தீர்ப்பவளே, குந்த புஷ்பம் போல பேரழகியே, அழகிய மனம் கவரும் சரீரத்தைக் கொண்டவளே, மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே, வாக்தேவி, கவிகளின் வாக்கில் கல்பவல்லியே , காமாக்ஷி , தாயே உன் திருவடிகளுக்கு நமஸ்காரம்”
சாவித்ரி தான் மேற்கொண்ட கௌரி விரதத்தினை முடிக்க மண்ணால் அடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. இன்று காரடையான் நோன்பு கொண்டாடும் பெண்களின் கணவர்களும் குடும்பங்களும் ஒரு நூறு ஆண்டுகளாவது வாழட்டும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *