SOME OBSERVATIONS – J K SIVAN

சில  ஆராய்வுகள்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம்  நல்லவர்களா? கெட்டவர்களா?  நான் அறிந்தவரை, என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். யாரும் தாம் நல்லவர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. நான்  ”ரொம்ப நல்லவன்”  என்று சொல்பவன் எவனாவது கண்ணில் பட்டால்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவன் தான் நம்பர் ஒன்  கெட்டவனாக  இருக்க வாய்ப்பு  உண்டு. எலெக்ஷன் சமயத்தில் சிரித்து பல்லைக்  காட்டிக்கொண்டு பாக்கெட்டில் யாரோ ஒருவர் படம் ஏதோ வெளியில் வெள்ளைச் சட்டை வழியாக  தெரிய, இரு கரம் கூப்பி நெற்றியில்  விபூதி பூசிக்  கொண்டிருப் பவன் மேலே சொன்ன ” ரொம்ப நல்லவன்”  வகையறா. அவன் அப்படி  பட்டவன் என்று தெரிந்தோ தெரிஹயாமலோ தேர்ந்தெடுத்து விட்டு  பிறகு கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை அனுபவம்.  யாரும் நம்மை நன்றாக  நேர்மையாக ஆண்டு நமக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்  பதவி தேடுவதில்லை.அரசியல் அதன் பதவிகள்  ரொம்ப பலன் தரும் லாபகரமான சுலப பணக்காரனாகும் வழி என்பதால் அநேகர் அதைத் தேடுகிறார்கள் என்பதைத் தவிர சமூக நலனுக்காக  என்று எண்ணினால் நீங்கள் இன்னும்  க்ளாக்ஸோ   அமுல் பால் பாட்டில் தான் குடிப்பவர்.
நம்மிடையே  சில  கெட்ட பழக்கங்கள் இருக்கிறது.  ரொம்ப கெட்டது  என்றும் சொல்லமுடியாது. அது நல்ல தாகவும் இருக்கலாம். எப்படியா?  இதோ சொல்கிறேன்.

நகத்தை கடிப்பது. -எச்சில் பண்ணாதே என்று  நிறைய  தலையில் என்னைப் போல் கூட்டு வாங்கியவர் கள் இன்னும்  இருப்பீர்கள்.  ஸார் , நகம் கடிப்பது இன்று நேற்று வந்த பழக்கம் இல்லை.  மனிதனுக்கு நகம் முதலில் வளர்ந்த நாள் முதல் இருக்கிறது.  நகத்தைக்   கடிக்காமல் வெட்ட  ஆரம்ப காலத்தில் கத்தி கத்திரிக் கோல் கண்டுபிடிக்கவில்லை . நகத்தை  வெட்டாமல் இருந்தால் நீளமாக, கூராக  வளர்ந்து நம்மையே  தாக்கும்.  உடம்பை, கண்ணை சேதப்படுத்திவிடும்.   அழுக்கு பாக்டீரியா இடுக்கில் சேர்ந்து சாப்பிடும்போது வயிற்றுக்குள் போய்விடும். நகம் கடிக்கும்போது சில பாக்டீரியாக்கள் உள்ளே போய் நமக்கு  எதிர் வினை ஆற்றி நோய்வராமல்  காக்கிறது.

ரொம்ப  டென்ஷனாக  இருக்கும்போது, யோசிக்கும்போது  நகம் கடித்து  கொஞ்சம்  ஆறுதல் அடைகிறோம்.  ”நீ நாசமாகப் போக, கட்டைல போறவனே ”   என்று வார்த்தைகள் இளம் வயதில் நிறைய  விஷமம் செய்து  வாங்கி காட்டிக்  கொண்டவர்கள் பலர் .   நாசமாக போகாமல், கட்டையில் போகாமல்,   தொண்ணூறு வயதைத் தாண்டி  வாழ்கிறவர்கள் இன்றும் உண்டு.  இப்படி  திட்டுபவர்களுக்கு  இதய நோய் வருவதில்லை யாம்.   கத்தி,  திட்டுவதால்  டென்ஷன் குறைந்து நார்மல் ஆகிவிடுகிறார்களாம் .  இதை நான் சொல்ல வில்லை.   அமேரிக்கா ஆராய்ச்சி டாக்டர்கள் சொல்கிறார்கள்.

பகல் கனவு காண்பது சிலருக்கு பிடிக்கும்.  ரொம்ப  கஷ்டமான பிரச்னைகள் வரும்போது கூட  தனிமையில் அமர்ந்து இப்படி பகல் கனவுகள் காண்பது  ரொம்ப  உதவுகிறதாம். எண்ணங்களை சிதற விட்டு என்னன்னவோ பகல் கனவுகள் காண்பதால்  மூளைக்கு கொஞ்சம் சீரியஸ் ப்ராப்ளம் களை  சமாளிக்க  தேவையான ஒய்வு கிடைக்கிறதாம்.  வீட்டுத்  தொந்தரவு, ஆபிசில் தொந்தரவு எல்லாம்   மறக்க  நாராயணஸ்வாமி எனும்  என் பழைய நண்பன் ஒருகாலத்தில் ஆபிசில் FILE க்கு நடுவே வைத்துக்கொண்டு    ஆனந்த விகடன், கல்கண்டு, குமுதம், குங்குமம் படிப்பான். மன நிம்மதி பெறுவான்.  ஞாயிற்றுக்கிழமை  வேறு விடுமுறை நாட்கள் ஆபீஸ்  லீவு விட்டால் அவனுக்கு பிடிக்காது. நேரு இறந்தபோது ஒரு நாள் லீவு விட்டார்கள். அன்று வழக்கம் போல் ஆபிஸ் வந்து ஆபிஸ் லீவு விட்டு கதவுகள் மூடி இருந்ததால் வெளியே மரத்தடியில் பகல் வரை புத்தகம் படித்து விட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டு வழக்கம்போல் சாயந்திரம் வீட்டுக்கு நடந்து போனான்.

வம்படிப்பது  கெட்ட பழக்கம் தான்.   இல்லை என்று  நான் சொல்லவில்லை.  நண்பர்களோடு  குறைந்தது இருபது நிமிஷமாவது  கிசுகிசு பேசுவது, யாரைப் பற்றியாவது  வம்படிப்பதால்  ரத்த ஓட்டம்  சீரடைகிறதாம். டென்ஷன்  குறைந்து உடல்  புத்துணர்ச்சி பெருகிறதாம்.  இதுவும் அமெரிக்க  மனோதத்துவ நிபுணர்களின் ஸ்ரிஷ்டி . நான் இதற்கு  ப்ரம்மா இல்லை. குறைந்தது நாலு மணி நேரமாவது நல்ல மூட் அப்போது  இருக்குமாம் .

சிலர் வீட்டில்  துணிகள்  கண்ட இடத்தில் இருக்கும்.  ஒட்டரை  தொங்கும்.  செருப்பு  அண்டா குண்டா, கண்ணாடி  பித்தளை  பாத்திரங்கள்,  புஸ்தகம், பேப்பர்கள்,  எல்லாம் எங்கும் கண்டபடி  இறைந்து இருக்கும், ஒரு  வித அருவருப்பைத் தரும்  சங்கடமான  இடமாக இருக்கும். அதற்கிடையே நண்பனோ சந்தோஷமாக   கட்டிலில் தூங்குவான். சில வருஷங்களுக்கு முன்பு  இதை ஆராய்ந்து  இப்படி  சுதந்திரமாக  ஒரு வித கட்டுப்பாடும் இல்லாதவர்களால் நன்றாக, ஆக்க பூர்வமாக   சிந்திக்க முடிகிறது என்று கண்டுபிடித்தி ருக்கிறார்கள்.   இதைப் படித்து விட்டு  வீட்டை அலங்கோலமாக வைத்துக்கொண்டு  நீங்கள்  திட்டு வாங்கினால், ஸார் , அதற்கு எந்த விதத்திலும்  நான் பொறுப்பில்லை.
தூங்கு மூஞ்சிகளாக இருப்பது நல்லதாம்.   விடிகாலை  ஆறரைக்கு முன் எழுந்திருப்பவர்களுக்கு  இதய நோய் வரும் என்று எவன் கண்டுபிடித்தானோ தெரியவில்லை.  எனக்கு நம்பிக்கை இல்லை. நான் தூங்குவதே இல்லையே.   ரொம்ப களைப்பாக இருந்து கண்ணை சுற்றிக்கொண்டு வந்தால் மட்டும் தூங்க போகலாம் என்கிறார்கள்.

இப்போதெல்லாம் நாலு வயசு குழந்தைக்குக்  கூட   தெரியும் அளவுக்கு மொபைல் போன்  ஆப்ஸ்  உபயோகிக்க  என்னைப்  போன்ற 80+களுக்கு  தெரியவில்லையே.   மொபைல் போன் குழந்தைகள் தொடுவது கெட்ட  பழக்கம் தான். மொபைல் போன் கையில் கிடைத்த குழந்தை தொந்தரவு செய்வதில்லை, இருக்கும் இடமே தெரிவதில்லை. விஷமம் கிடையாது.  விஷம் விஷமத்தை போக்கிவிடுகிறது. அம்மாக்கள்  FREE யாக இருப்பதற்கு  மொபைல் போனை குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் சில வீடுகளில் இருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் மூளை வளர்ச்சிக்கு நல்லதாம்.  எந்த ஊர்  ஆராய்ச்சியோ?

கத்தி கூச்சல் போட்டு ஆங்காரம்  வசைபாடுவதும்  ஆத்திரத்தைக் காட்டுவதும் கெட்ட  பழக்கம் தான்.  இல்லை என்று சொல்லவில்லை.  ஆனால்  அது இல்லாத வீடு இல்லையே.  உள்ளே பொங்கும்  உணர்ச்சி,  தாபம், கோபம் அடங்க இது ஒரு வெளிப்பாடு. குழந்தைகளின் பிடிவாதம் இத்தகையது தான். அதை உபயோகித்து காரியம் சாதித்துக் கொள்வார்கள். 

கடைசியாக ஒரு வார்த்தை.  விடியோக்கள்  குட்டி குட்டியாக பார்ப்பது நல்லதாம்.  மூளைக்கு உற்சாகம் தருகிறதாம். எனக்கு   இயற்கை காட்சிகள்,  நதிகள், மலைகள், பனி சிகரங்கள், கோவில்கள்,  அஸ்தமன உதயாதி  நேர ஆகாயம், கடல்,  மிருகங்கள் பறவைகள் மீன்கள் வாழ்வதை ப்பார்ப்பது ரொம்பபிடிக்கும்.தமிழ் சினிமா காட்சிகள் கண்ணில் பட்டால்  மெதுவாக நகர்ந்து  பாத்ரூம் சென்று  கதவைச்  சார்த்திக்  கொண்டு பாடுவது பிடிக்கும்.  அங்கே  பாடுவது  எனக்கு  ஹாலில் சினிமா பாட்டு  ரஞ்சிதமே  கேட்பதை  விட மனதுக்கு சந்தோஷம் தருகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *