PAZHAIYA SEEVARAM J K SIVAN

ஒரு பழைய நரசிம்மர் –  நங்கநல்லூர் J K SIVAN
திருமுக்கூடல்  ஆற்றை கடந்து பாலத்தில் அக்கரை  சென்றால்  குட்டியாக ஒரு மலை. அந்த கிராமத்துக்கு பெயர்  பழைய சீவரம்.   அதன் மேல் கார் எளிதாக  செல்ல முடிகிறது. கார் நிறுத்தும் வசதிக்காக  20 ரூபாய் கலர் சீட்டுக்களோடு ஒருவர் திரிந்து கொண்டிருப்பதைக்  கண்டபோதே  இது  நமது பெருமைக்குரிய  அறநிலைய பாதுகாப்பில் உள்ள ஆலயம் என்று புரிந்தது. ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்தில் ஆகிருதியோடு, ஒரு நரசிம்மர்  கோரைப் பற்களுடன் மடியில் லக்ஷ்மியோடு காட்சி தருகிறார்.
நமது  தேசத்தில், குறிப்பாக  தமிழகத்தில்  பெயர்கள் மாறுவது ரொம்ப சகஜம்.  பழைய சீவரம் என்றால்  என்ன  என்று யோசிப்பவர்களே,  அது முதலில் புராண காலத்தில்  ஸ்ரீபுரம் என்று இருந்த கிராமம்.  லக்ஷ்மி  வாசம்  செய்யும் இடம்.    காலப்போக்கில்  தேய்ந்து சீவரமாகி விட்டதே தவிர  ஸ்ரீ இன்னும்  அன்று போல் இன்றும், என்றும், நரசிம்மனோடு இருக்கிறாள்.பழைய சீவரம் கிராமம்  செங்கல்பட்டு -காஞ்சிபுரம் மார்கத்தில் பாலாற்றங்கரையில் உள்ளது. ஆயிரக் கணக்கான வருஷங்களாக  இருப்பதால்  ”பழைய”  அடைமொழி.    லட்சுமி நரசிம்மர்  ஆலயம் ஒரு குட்டி மலையின் மேல் இருக்கிறது.  அந்த மலையின் பெயர்  ”பத்மகிரி”புராணம்  அறிந்தவர்களுக்கு  இந்த விஷயம் தெரிந்திருக்கும்.  அதவாது நைமிசாரண்யம் எனும்  வனத்தில் நிறைய யோகிகள், மஹான்கள் , ரிஷிகள் முனிவர்கள்  கூடுவார்கள், தவம் செய்வார்கள், சந்தேக நிவர்த்தி பண்ணிக் கொள்வார்கள்.  விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார் இல்லை) என்ற  ஒரு ரிஷி மற்ற ரிஷிகளிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.
”எங்கே சென்று  ஸ்ரீ மந் நாராயணனை  சிலாரூபத்தில் பூஜித்தால் மோக்ஷ பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு ஸ்தலம் எனக்கு சொல்லுங்கள்?”
மரீச  முனிவர்  ”நான்  பதிலளிக்கிறேன். தெற்கே  காஞ்சிபுரம் செல்லுங்கள், போகும் வழியில் பாலாறு வேகவதி, செய்யாறு மூன்று நதிகளும் ஒன்று கூடும் நதிக்கரையில்   லக்ஷ்மி  நரசிம்மர் அருள்  பாலிக்கும் ஒரு ஸ்தலம் இருக்கிறது என்று இந்த பழைய சீவரத்தை  அடையாளம் காட்டி அங்கே போகச் சொல்கிறார். ”ஆஹா  அப்படியா?”ஆமாம்,  முன்னொரு காலத்தில் அத்ரி மகரிஷி அவர் மனைவி  அனசூயா இருவரும் வெகு நாளாக தவம் செயதும் பகவான் காட்சி கொடுக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும்போது ஒரு அசரீரி  ”நீங்கள் இருவரும்  தெற்கு நோக்கி சென்று  பாலாற்றின் கரையில் பத்மகிரியில் கிழக்கு  நோக்கி தவம் செய்தால் பலன் கிடைக்கும்  என்று சொன்னது. உடனே  ரிஷி தம்பதிகள்  பழைய சீவரத்துக்கு நடக்க ஆரம்பித்தனர்.  இங்கே வந்து தவம் செய்த அத்ரி முனிவருக்கு  அவர் தவத்தை மெச்சி  ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹன் காட்சி தந்தார். அவருக்கு தந்த  காட்சி இன்னும்  அவரைத் தொடர்ந்து வந்த, இன்னும் வரும்   பல பக்தர்களுக்கும் கிடைக்கிறது.  ஆகவே தான் எங்களுக்கும்  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன்  அற்புதமாக  ஞாயிற்றுக்கிழமை 12.2.2023 அன்று  தவம் செய்யாமலேயே  தரிசனம்  கொடுத்து  அருள் பாலித்தார். பிரம்மாண்ட புராணம்  17ம் அத்யாயம்  அத்ரி மகரிஷிக்கு   ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்ம  தரிசனம் இங்கே  கொடுத்ததையும்,  நம் எல்லோருக்கும் அது  தொடர்வதையும்  பற்றி சொல்கிறது. இங்கே  தாயாரின் பெயர்  ரொம்ப பொருத்தமாக  அஹோபில வல்லி.பத்மகிரிக்கு அருகிலேயே  இன்னொரு  சிறு குன்று. 160 படி என்று சொன்னதும்  நான் மானசீகமாக மேலே  கோயில் கொண்டுள்ள  வைத்யநாதனை வேண்டிக்கொண்டேன். அது ஒரு மூலிகைகள் நிறைந்த  குன்றாக  இருந்தது. எந்த வியாதியும் குணமாகும் என்பதால் சிவனுக்கு வைத்திய நாதன் என்று பெயர். அம்பாள் தையல்நாயகி. இன்னொரு ஆச்சர்யமான  விஷயம்.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்  ஒரு காலத்தில்  அத்திமரத்தில்  செதுக்கப்பட்ட மூலவராக  இருந்து  இஸ்லாமிய  ஆதிக்கத்தின் போதோ, அல்லது  காலபோக்கிலோ  பல நூறு ஆண்டுகளுக்கு முன்  பின்னமாகி,  இந்த பழைய சீவரத்தில்  பத்மகிரியில் தான் கல் எடுத்து  பெருமாள் விக்ரஹம்  ஸ்ரிஷ்டித்து  காஞ்சிபுரம் எடுத்துக் கொண்டு போய் வரதராஜாக  பிரதிஷ்டை செயதார்களாம்.   வருஷா வருஷம்  மாட்டுப் பொங்கல் அன்று  பார்வேட்டை உற்சவத்துக்கு    காஞ்சி வரதராஜர் இங்கே  வருகை புரிந்து  பத்மகிரி மண்டபத்தில் தங்கி தரிசனம் தருகிறார்.  பழைய சீவரம்  நரசிம்மர் கோயில் பராந்தக சோழன் காலத்தில் இருந்திருக்கிறது என்று கல்வெட்டு சொல்கிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம், த்ரிபுவன வீர சதுர்வேதி மங்கலமாக  மாறி, சிறிது காலம்  ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டு பின்னர்  இந்த நரசிம்மருக்கு   ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என  ஒரு நாமம் இருந்தது. லக்ஷ்மி நரசிம்மர்  மேற்கு பார்த்து இடது காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டு  பத்மாசனத்தில்  சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வாறு  காட்சி தருகிறார். மேல் வலக்கரத்தில் கத்தரி முத்ரையில் சக்கராயுதமும்  மேல் இடக்கரத்தில்  கத்தரி முத்ரையில் சங்கும்,  கீழ்  வலக்கரம் அபயஹஸ்தமாகவும்  கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங் கனம் செய்தபடியும்  அமைந்துள்ளது. நரசிம்மரின்  தலையில்  கிரீடம்,  திருமார்பில் மகர கண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.
எப்போதெல்லாம்  முடிகிறதோ மீண்டும்  பழைய சீவரம் செல்ல  ஆர்வம் மேலிடுகிறது. இதுவரை செல்லாதவர்கள் இனியும் தாமதிக்கவேண்டாம்.    சென்னையிலிருந்து  ரெண்டு மணி நேரம் தானே. புண்யம் இவ்வளவு கிட்டே  இருக்கும்போது யாராவது விடலாமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *