UTHTHARAKOSA MANGAI J K SIVAN

பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN
உத்ரகோச மங்கை

அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான் அதற்கு திருவாசகத்துக்கு உருகாதார் வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்கிறார்கள். மணிவாசகர் தமது வாழ்வை யே சிவனுக்கு அர்ப்பணித்த மஹா பக்திமான்.

மணிவாசகரைப் பற்றி எழுத நினைத்தால் முதலில் என் மனக்கண் முன் தோன்றுவது அவர் தரிசித்த மரகத நடராஜர் உள்ள உத்ர கோசமங்கை க்ஷேத்ரம் தான். பாண்டி நாட்டில் ராமநாதபுரம் அருகே இருக்கும் புனித க்ஷேத்ரம் உத்ரகோச மங்கை. மணி வாசகர் நடந்தே சென்றிருக்கிறார். மதுரையிலிருந்து 85 கி.மீ . ராமநாதபுரத்திலிருந்து 18 கி.மீ. ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலையில் உள்ளது.அந்த க்ஷேத்ரத்தை தரிசிக்கும் பாக்யம் எனக்கு சில வருஷங்களுக்கு முன்பு கிட்டியது. ஆருத்ரா அன்று ஒருநாள் அந்த க்ஷேத்ரத்தில் மரகத மேனியனாக மகேஸ்வரன் காட்சி தருவான். மற்ற நாட்களில் சந்தனப் போர்வை.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் வயதான இந்த ஆலயத்தில் சிவனுக்கு 7 நிலை ராஜகோபுரம். அம்பாளுக்கு ஐந்து நிலை கோபுரம். சிவன் பெயர் மங்களநாதர், மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர். அம்பாளுக்கு மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள்.

பாண்டிய ராஜாக்கள், அச்சுதப்ப நாயக்கர் (1529–1542), மற்றும் சில ராமநாதபுரம் ராஜாக்கள் நிர்மாணித்த ஆலயம். இங்கே சேது மாதவ தீர்த்தம் லக்ஷ்மண தீர்த்தம் என இரு புஷ்கர ணிகள் பிரசித்தம். எல்லாவற்றையும் விட புகழ் சேர்ப்பது இங்குள்ள அற்புத மரகத நடராஜர் சிலை தான்.

ரொம்ப புராதனமான இந்த உத்ர கோசமங்கை மங்கள நாதர் கோயில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவாலயம். முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடிய ஸ்தலம். 20 ஏக்கர் பரப்பு. இந்த க்ஷேத்திரத்தின் வேறு பெயர்கள்: சிவபுரம், தக்ஷிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்திகைப் பள்ளி, பத்ரிகா ஷேத்ரம்,பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சதரம், ஆதி சிதம்பரம் . நவகிரஹங்
கள் தோன்றுவதற்கு முன்பே சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு க்ரஹங்கள் என்பது ஒரு விசேஷம். மங்களாம்பிகைக்கு சிவன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டிய க்ஷேத்ரம்.

”உத்ரம்” = உபதேசம். ”கோசம்”= இரகசியம் அதாவது பிரணவ மந்திர ரஹஸ்யத்தை மங்கையாகிய மங்களாம்பிகைக்கு உபதேசித்ததால் ”உத்ர கோச மங்கை”.

ஸ்தாணுவாகி நின்ற சிவனின் அடி முடி தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் அலைந்த போது ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவைக் கண்ட பிரம்மன், ”என்னோடு சிவனிடம் வந்து நான் அவன் முடியை நான் கண்டேன் என்று நீ சாக்ஷி சொல்” என்றதும் சரி என்று தாழம்பூவும் அப்படியே பொய் சொல்லி சாபம் பெற்றது. அதனால் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லை. சாபம் நீங்க தாழம்பூ உத்தர கோச மங்கையில் வெகுகாலம் தவம் செய்து, சாபம் நீங்கியது. உத்தர கோச மங்கையில் சிவனுக்கு தாழம்பூ சாத்துகிற வழக்கம் உள்ளது.

ராவணன் மனைவி மண்டோதரி உலகத்திலேயே சிறந்த சிவ பக்தனையே எனக்கு கணவனாக அருளவேண்டும் என உத்ரகோச மங்கையில் மங்கள நாதரை வேண்டி தவமிருந்தாள். அவள் பக்தியை மெச்சி சிவன் மண்டோதரி முன்பு ஒரு குழந்தை உருவில் தோன்ற, அப்பொழுது அங்கு வந்த ராவணன், ஆசையாக குழந்தை உருவில் இருந்த சிவபெருமானைத் தொட முயன்றான். சிவபெருமான் அக்னி பிழம்பாக மாறி விட, அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிய தொடங்கின. சிவன் தேவர்களுக்கு அளித்த வேத நூல்களும் எரிய, அவற்றைக் காக்க முயன்ற தேவர்கள் முயன்றும் தோல்வி யடைந்து தீயில் மாண்டனர். பின்னர் மாணிக்க வாசகர் மூலம் வேத நூல்கள் மீண்டது . அக்னியில் விழுந்த தேவர்களும் மீண்டனர். சிவபக்தன் ராவணனும் மண்டோதரியை இங்கே தான் மணந்தான் என்று சுபமான முடிவு.சிவனருளால் மாணிக்கவாசகர் இங்கே லிங்க வடிவத்தில் உள்ளார்.

இந்த ஆலயத்தில் இரட்டை பைரவர், சுப்ரமணியர் ஸ்படிக லிங்கம் ஆகியவைகளும் விசேஷம். இங்குள்ள மரகத நடராஜா ஐந்தரை ஆடி 5 1/2 அடி உயரம். உலகத்திலேயே பெரிய மரகதக் கல் சிலை. மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விசேஷம். அன்று மட்டுமே பூஜை அபிஷேகம். மரகத நடராஜனை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் விக்ரஹம் முழுவதும் சந்தனக் காப்பு மட்டுமே. ஆதி நடராஜா என்று பெயர். சிரித்த முகம்.

ஒரு விஷயம் ரொம்ப கெட்டிக் காரத்தனமாக மரகத நடராஜா சந்தனக் காப்பு மூலம் வெள்ளைக்கார, கொள்ளைக் காரர்களிடமிருந்து தப்பி இருக்கிறார். மரகதக் கல் என்று தெரிந்திருந்தால் நாம் நடராஜரை இழந்திருப்போம். இது தான் சாமர்த்திய சந்தன டிமிக்கி. சந்தன மரத்தையே திருடி விற்பவர்கள் மரகதச் சிலையை விட்டு வைப்பார்களா? இப்போது ஹிந்து சமய அறங்காவல் துறை அதிகாரிகள் வசம் ‘ஜாக்கிரதையாக’ ! இருக்கிறார். பக்தர்கள் அடிக்கடி கவனித்துக் கொள்ளவேண்டும். மாணிக்க
வாசகர் உத்தரகோச மங்கையில் 9 பாடல்கள் பாடி இருக்கிறார்.

‘தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர் எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்உத்திர கோச மங்கை ஊர்.. . .’ என்கிறார்.

நமது பழைய கோவில்களில் மட்டுமே யாளி உருவம் பார்க்கலாம். விசித்ர பெரிய உருவம். இங்கே இரண்டு யாளிகள் வாயில் உருளையாக கல் உருண்டை உருளுவதை அற்புதமாக சிற்பி செதுக்கி இருப்பதை காணலாம். கையை விட்டு உருளைக் கல்லை தொடலாம், சுழலும். உருளும். வெளியே எடுக்க முடியாது. பெரிய தெப்பகுளம். வற்றாத உப்பு கரிக்கும் தண்ணீர். அதில் நிறைய கடல் மீன்கள் வகை. திருவிளை யாடலில் சிவன் மீனவனாக வலைவீசி சுறா மீன் பிடித்த ஸ்தலம் உத்ர கோசமங்கை. ஒரு காலத்தில் கடல் இந்த ஆலய வாசல் வரை இருந்து பின்னர் பின் வாங்கிவிட்டது.

உத்ர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் உண்டாம். சிதம்பரம், ராமேஸ்வரம், சௌதி அராபியாவில் இருக்கும் மெக்காவில் மெக்கேஸ்வரன் கோவில் வரை செல்கிறதாம். இப்போது முஸ்லிம்கள் தொழும் மெக்கா ஒரு காலத்தில் சிவாலயமாக இருந்ததாக நிறைய படங்கள் விஷயங்கள் கேட்டும் பார்த்தும் படித்துமிருக்கிறேன். சிவனை யார் எப்படி தொழுதால் என்ன? தாஜ்மஹால் தேஜோமய ஈஸ்வரன் கோவில் என்கிற மாதிரி சென்ஸிட்டிவ் பழங்கதை. மனித முயற்சி இல்லாமல் தானாகவே உள்ள சுயம்பு சுரங்கப் பாதை போல் இருக்கிறது. ரிஷிகள் முனிவர்கள் மஹான்கள் மட்டுமே உபயோகித்த பாதை.
இங்கே முருகனுக்கு யானை வாகனம். இந்திரன் கொடுத்த ஐராவதம் என்று ஆதி சிதம்பர மஹாத்மியம் சொல்கிறது. .

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உள்ள க்ஷேத்ரம் உத்தரகோசமங்கை. மாணிக்கவாசகர் சிவனுக்கு அன்னாபிஷேகம் இங்கே செய்வதாக ஐதீகம். மணிவாசகர் லிங்கம் , மரகதலிங்கம் அபிஷேகம் செய்யும் இடம், உமாமஹேஸ்வர் சந்நிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் இங்கே இருப்பதை கவனிக்கவேண்டும்.

அதெல்லாம் சரி, எப்படி மரகத லிங்க நடராஜா உருவானார் என்று தெரியவேண்டாமா?

ராமேஸ்வரம் போகும்போது வழியில் மண்டபம் என்ற ஊர். அங்கே மரைக்காயர்கள் என்ற வகுப்பை சேர்ந்தவர்கள், மீனவர்கள். ஒரு மரைக்காயர் தினமும் மங்களேஸ்வரனை வணங்கி மீன் பிடிக்க கடலில் போவார். ஒரு சமயம் அவர் படகு சூறாவளியில் சிக்கி ஒரு பாசி படிந்த பச்சை பாறை மேல் மோதியது. மோதிய பாறை மூன்று துண்டாக, ரெண்டு சின்னப்பாறை, ஒரு பெரிய பாறையாக படகில் விழுந்தது. மழையும் பேய் காற்றும் நின்றது. மங்களேஸ்வரனை வேண்டிக் கொண்டிருந்த மரைக்காயர் மெதுவாக படகைச் செலுத்திக் கொண்டு வழி தெரியாமல் தடுமாறி, ஒருவழியாக ஒருநாள் மண்டபம் வந்து சேர்ந்தார். அந்த 3 பாறைகளையும் வீட்டுக்கு வாசலில் படியாக போட்டுவிட்டார். சூரிய வெளிச்சத்தில் பாசி நீங்கி ஒருநாள் காலை பாறை பளபளவென்று மின்னியது. அந்த பாறையை ராஜாவிடம் கொடுத்து வறுமையைப் போக்கிக்கொள்ளலாம் என்று ஒரு சின்ன பாறையோடு ராஜாவின் அரண்மனைக்கு போனார். அரண்மனையில் நவரத்தினங்கள் பரிசோதிக்கும் ஒரு நிபுணர் இந்த பச்சைக் கல்லை சோதித்துப் பார்த்து ”ராஜா, இது உலகிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வமான, விலைமதிப்பற்ற மரகதக்கல் ” என்கிறார். ராஜா பொற்காசுகள் கொடுத்து மரைக்காயரை அனுப்பினான். வண்டி அனுப்பி மரைக்காயர் வீட்டு வாசலில்கிடந்த பெரிய பச்சைக் கல்லை எடுத்து வந்து அதில் தான் வணங்கும் நடராஜர் விக்ரஹம் சிலை வடிக்க ஆசைப்பட்டான். இதற்கான சரியான சிற்பி லங்கை ராஜா கயவாகுவிடம் இருப்பதை அறிந்து ரத்ன சபாபதி என்ற சிவபக்த சிற்பியை வரவழைத்தான். அவர் மரகதக்கல்லை பார்த்துவிட்டு மயங்கி விழுந்தார். ”ராஜா என்னால் நடராஜர் சிலை இதில் செதுக்கமுடியாது” என்று சென்றுவிட்டார். கண்ணீருடன் ராஜா மங்களேஸ்வரரை வேண்டி கதறினான்.

”ராஜா, நீ கவலைப்படாதே, நான் மரகத நடராஜா செய்து விடுகிறேன்” என்று ஒரு குரல் கேட்டது. சித்தர் ஷண்முக வடிவேலர் அங்கே நின்றுகொண்டிருந்தார். எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார்? அந்த சித்தர் தான் நாம் காணும் 5 1/2 அடி உயர மரகத நடராஜனை சிலையாக்கியவர். ஒண்ணரை அடி உயர பீடத்தில் ராஜ கோலத்தில் நடராஜா. பால் அபிஷேகம் செய்யும்போது நடராஜாவின் கைகளில் நரம்பு ஓடுவது தெரிகிறது.

முதலில் நடராஜா. அப்புறம் கோவில் தயாராகியது. பல லக்ஷம் கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நடராஜா என்றும் பெர்மனண்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது நமது கடமை. .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1408

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *