TAGORE ‘S SHORT STORY RAICHARAN J K SIVAN

ரபீந்திரநாத்  -நங்கநல்லூர்   J.K. SIVAN
ராய் சரண்  –
அபவாதம்.
தாகூரின் வங்காள  பாத்திரங்களை தமிழர்களாக  மாற்றியதால்  அவர் எழுத்தின் ரசம் குன்றாமல் பார்த்துக் கொண்டேன். மிகவும்  உணர்ச்சி பூர்வமான ஒரு கதை இது.
திரிபுரம் பள்ளிக்கூடமே பார்க்காதவள். படிப்பு இல்லை என்று சொன்னால் தப்பு. அவளுக்கு எல்லா ஸ்லோகமும் தெரியும். ராமாயண பாரத கதைகள் அதில் வரும் பேர்கள், ஊர்கள் எல்லாம் மனப்பாடம். தேவாரம் திருவாசகம், அம்மானை, கல்யாண நலங்கு, ஊஞ்சல் பாட்டுகள் பாடுவாள். என்ன பிரயோஜனம்? கல்யாண வீடுகளில் பாட முடியாதே. 16 வயதிலேயே விதவை. கணவன் முகம் நெஞ்சில் ஒரு இளைஞனாக  புகை படிந்திருந்தது. போட்டோ கிடையாது. அவள் காலத்தில் யாரும் போட்டோ எடுப்பது இல்லை. போட்டோ எடுத்தால் ஆயுசு குறைச்சல் என்று பயம். போட்டோ எடுக்காமலேயே அவள் கணவன்  அல்ப ஆயுசில் செத்து போனான்.
சுப காரியங்களுக்கு வேண்டிய அப்பளம், வடாம், முறுக்கு, ஊறுகாய் இதெல்லாம் பண்ணுவதற்கு மட்டும் திரிபுரம் உபயோகப் படுவாள். முகூர்த்தம் சுப காரியங்களுக்கு அவள் யார் கண்ணிலும் படக்கூடாது. எனவே அவள் இருப்பிடம் ஒரு இருட்டு அறை . அப்போதைய சமூக விதி இது. 16 வயதிலேயே மொட்டைத்  தலை, காவி பழுப்பு கலரில் நார்மடி புடவை. முக்காடு, தலையையும் கழுத்தையும் சுற்றி அவளை மறைத்திருக்கும். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும். தன்னலமற்ற சேவையின் மறுபெயர் திரிபுரம். பிறருக்கு என்றே  வாழ்ந்த கற்பூர தீபம்.
அவள் எடுத்து வளர்த்தவன் ராமு. தங்கை மகன். தாயற்றவன். ராகவய்யர் வீட்டில் எடுபிடி. அங்கேயே வளர்ந்தான். ராகவய்யர் மகன் தியாகுவை சிறு குழந்தையிலிருந்தே இரவு பகல் போஷித்து வளர்த்தான் ராமு.  தியாகுவுக்கு ராமு உயிர்.   ராமு தான் சாதம் ஊட்டவேண்டும், தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பக்கத்தில் படுக்க வேண்டும். விளையாட வேண்டும். . ராமு தனக்கு தெரிந்த கதை சொல்லுவான் அது தான் பிடிக்கும். ராகவய்யர் இதெல்லாம் கண்டு ரசிப்பார். தனது மகனுக்கு இப்படி ஒரு அதிசய துணையா என்று ஆச்சர்யப்படுவார்.
தியாகு வளர்ந்ததும்  ராமு அவனை பள்ளிக்கூடம் அழைத்துக்கொண்டு போனான். தியாகு பெரியவனாகி காலேஜ் போனான். சட்டம் படித்து நீதிபதியானான். அப்போதும் எதற்கும் தியாகு ராமுவையே தேடுவான். தியாகுவுக்கு கல்யாணமாயிற்று. கல்கத்தா சென்றான். இப்போது ராமுவுக்கு இரண்டு எஜமானர்கள். தியாகுவும் அவன் மனைவி கோகிலாவும். கோகிலாவுக்கு தன் கணவன் வேலைக்காரன் ராமுவுக்கு அதிக இடம் கொடுத்து குலாவுவது பிடிக்காமல்  கோபம் வந்தது. கோபத்தை அடிக்கடி ராமுவிடம் காண்பித்தாள்.
காலம் ஓடியது. தியாகுவுக்கு ஒரு மகன் பிறந்தான். ப்ரஹ்லாத் . கிழவன் ராமுவுக்கு பழைய உத்தியோகம் மீண்டும் வந்தது. . தியாகுவை வளர்த்தது போலவே ப்ரஹ்லாதையும் வளர்த்தான். முன் போல் ஓடி ஆட முடியவில்லை. எப்படியோ சமாளித்தான். ப்ரஹலாத் ரொம்ப துரு துரு. விஷமக்கார பையன். பிடிவாதம். அவனுடைய 2 வது பிறந்த வயதுக்கு தியாகு பட்டு சட்டை, குல்லா, ஒரு நடை வண்டி வாங்கி கொடுத்தான். அதை ஒட்டிக்கொண்டு போவதில் ப்ரஹலாதிற்கு ரொம்ப பிடித்தது. பிடித்துக் கொண்டு கண் மண் தெரியாமல் வேகமாக ஓடுவான். ராமுவால் பின்னால் ஓடமுடியாது. சிறு குழந்தை விழுந்து அடிபடப்  போகிறதே என்று கிழ ராமுவுக்கு பயம்.
அவர்கள் இருந்த கல்கத்தாவின் ஒரு சிறு ஊருக்கு கிழக்கே ஒரு நதி. அந்த நதியை ஒட்டி ஒரு பாதை. அங்கு யாரும் வரமாட்டார்கள். அங்கு தான் வேகமாக வண்டி ஒட்டிச்  செல்ல வேண்டும் என்று ப்ரஹலாத் அடம் பிடித்து அங்கே போகச் சொல்வான். நதிக்கு அக்கரையில் ஒரு நாடோடி கும்பல். நரிக்குரவ குடும்பம் மரத்தடியில் வசித்தது. அந்த நதியின் கரை வழுக்கும் . சேறும் சகதியுமாக இருக்கும். சேற்றுக்கிடையில் ஒரு பெரிய கடம்ப மரத்தில் குடம் குடமாக அழகிய பூக்கள் வண்ண வண்ணமாக பூத்திருக்கும். மழைகாலம். நதியில் நிறைய நீர் ஓடியது.
ப்ரஹலாதுக்கு நதியைப்   பார்க்க பிடிக்கும். ராமு அவனை தள்ளுவண்டியுடன் அங்கே அடிக்கடி அழைத்து செல்வான்.
அன்று பிறந்தநாளுக்கு வாங்கிய புது சட்டை, குல்லாய், நகைகளுடன் ராமுவோடு வந்தவன் எனக்கு உடனே அந்த பூக்கொத்து வேண்டும் என்று கை காட்டி கேட்டான். இன்னும் சரியாக பேச்சு வரவில்லை. ”லாமு ” என்று கூப்பிட்டு ஜாடையால் பூவைக் காட்டினான். ராமு எப்படியோ பேச்சை மாற்றி வேடிக்கை காட்டினாலும் ப்ரஹலாத் கேட்கவில்லை.
”அதோ அந்த காக்கா, இதோ ஒரு கிளி பார்” இதோ பார் நான் நொண்டிக்கொண்டு உன்னை பிடிக்கிறேன் நீ ஓடு”  ” ஹுஹும்” எதுவும் மசியவில்லை. பிடிவாதத்தில் அம்மாவைக் கொண்டிருந்தான் ப்ரஹலாத். என்னதான் பேச்சை கவனத்தை மாற்றினாலும் கை அந்த மரத்தையே காட்டியது .
”ஹுஹும். ”லாமா ஊ பூ” (எனக்கு அந்த பூ தான் வேண்டும். அதை கொண்டுவந்து கொடு ராமு” என்று இதற்கு அர்த்தம். ராமுவுக்கு மட்டும் அவன் 2 வயது பாஷை புரியும்.)
என்னதான் சொல்லியும் அவன் பிடித்த பிடியிலேயே இருந்து ” கையை மரத்தில் காட்டி ”பூ. லாமா ” என்று திருப்பி திருப்பி கேட்டான்.
”சரி நீ இங்கேயே இரு நான் போய் பூ பறித்துக்கொண்டு வருகிறேன். இங்கிருந்து நகராதே” .ராமு அவனை கரையோரத்தில் தூரத்தில் நடை வண்டியை நிறுத்தி அதில் அவனை உட்கார வைத்துவிட்டு சேற்றில் இறங்கினான். முழங்காலுக்கு மேல் சேறு. எப்படியோ மரத்தை அடைந்து அதன் மீது ஏறி நிறைய பூக்கொத்துகளை பறித்து எடுத்துக் கொண்டு சேற்றில் மீண்டும் நீந்தி கரை வந்தான்.
”ப்ரஹு… ப்ரஹு .. ப்ரஹு” எத்தனை தரம் கூப்பிட்டாலும் ப்ரஹலாத் பதில் கொடுக்கவில்லை. அவன் தள்ளு வண்டி நதிக்கரை யோரம் நின்று கொண்டிருந்தது. ப்ரஹலாத் ராமு சொன்னதை கேளாமல் வண்டியை விட்டு இறங்கி, தானும் ராமுவைப் பின் தொடர்ந்து சேற்றில் இறங்கி புதையுண்டு இறந்திருக்கிறான். ஆற்றில் வெள்ளத்தில் கலந்து அடித்துக் கொண்டு போகப்பட்டானோ? என்னவோ, தெரியவில்லையே.
எவ்வளவோ கதறியும் கத்தியும் ப்ரஹு கிடைக்கவில்லை. இரவு ஆகிவிட்டது. குழந்தை இன்னும் வரவில்லையே என்று கோகிலா, தியாகு இருவரும் எங்கெங்கோ தேடி நதிக்கரை வந்தபோது ராமு மட்டும் அழுது கொண்டு  ”ப்ரஹு ப்ரஹு”  என்று பைத்தியமாக கத்திக் கொண்டிருந்தை கண்டனர்.
ராமுவுக்கு ப்ரஹலாத் நினைவு வந்தது. அவனோடு ஓடிப்பிடித்து விளையாடியது. அவன் நாலு கால் யானையாக தவழ்ந்தது. அவன் மேல் ப்ரஹலாத் அமர்ந்து வீடு முழுதும் யானை சவாரி செய்தது. பெஞ்சில் உட்கார்ந்து  தனது இரு பாதங்களின் மீது அவனை நிற்க வைத்து கையைப் பிடித்துக்கொண்டு தூக்கி கீழே இறக்கி ஊஞ்சல் ஆடியது, அவனுக்கு டான்ஸ் ஆடிக் காட்டி பாடியது எல்லாம் நினைவுக்கு வந்து அழுதான். என்ன பயன். மாண்டார் மீண்டு வருவரோ மாநிலத்தீர்?
கோகிலா தியாகுவைக்  கண்டதும் கண்களில் நீரோடு அழுதுகொண்டே ராமு அவர்கள் கால்களில் விழுந்தான். நதி தங்கள் அருமைக் குழந்தையை சாப்பிட்டு விட்டது என்று பெற்றோர் புரிந்து கொண்டு கதறினார்கள். கோகிலா மட்டும் தனது மகன் இறந்ததாக நம்பவில்லை. அவள் கண்கள் ஆற்றுக்கு அக்கரையில் கும்பலாக இருந்த நரி குறவர்கள் கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.
”ப்ரஹு, நகையெல்லாம் போட்டுக்கொண்டிருந்தானே, அதற்காக ஆசைப் பட்டு ஒருவேளை ராமு குழந்தையை நரிக்குறவர்கள் கடத்தி எடுத்துச் செல்ல உதவி இருப்பானோ. பணத்திற்காக எதுவும் செய்வானோ?”
எவ்வளவோ சொல்லியும் கோகிலா ராமுவை நம்பவில்லை. தியாகு சிலையாக நின்றான். இளம் வயதிலிருந்து தன்னை எடுத்து வளர்த்த ராமு காசுக்காக குழந்தையை கொலையோ, கடத்தலோ செய்திருப்பான் என்று கனவிலும் நம்பவில்லை.’ துயரம் அவனை வாட்டியது. ராமு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான்.
திரிபுரம் காலமாகி பல வருஷங்கள் ஆகிவிட்டன. ராமு அனாதை. எங்கோ பூர்வீக கிராமத்தில் புதிதாக வாழக்கை ஆரம்பித்தான். அவனுக்கு யாரும் வேலை கொடுக்க வில்லை. வயதும் ஆகி விட்டதே என்ன வேலை செய்வான்.
புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் ஒரு தனி வீட்டில் வேலையாளாக அமர்ந்தான். ஒரு இளம் விதவை. புற்றுநோய். உறவு யாருமில்லை. அவளுக்கு ஒரு குழந்தை. கிருஷ்ணா என்று பெயர். ப்ரஹலாத் ஞாபகம் வந்து விட்டது ராமுவுக்கு. அதே வயது இந்த குழந்தைக்கும். அவனிடம் பிரியமாக விளையாடி தனது துயரத்தை போக்கிக் கொண்டான். பையன், அந்த இளம் பெண், ராமு என்று குடும்பம் வளர்ந்தது. வருஷங்கள் ஓடியது. பையனுக்கு 12 வயது. ராமு தொண்டு கிழவன். ஒரு நாள் அந்த இளம் விதவை வியாதி முற்றி இறந்து விட்டாள். பையனும் ராமுவும் தான். ராமுவால் அந்த பையனை மேலே உயர் வகுப்பில் படிக்க வைக்க முடியவில்லை. ஒரு வழியும் தெரியவில்லை. ஒருநாள் இரவு அவனுக்கு ஒரு திடீர் எண்ணம் தோன்றியது. அந்த பையனை அழைத்துக்  கொண்டு கல்கத்தா சென்றான். எப்படியோ விசாரித்துக்கொண்டு தியாகு வீட்டுக்கு போனான். கோகிலா அவனை அடையாளம் கண்டு கொண்டு எதிரே ”என்ன விஷயம்?” என்று கேட்டவள் அவன் அருகே நின்ற பையனை கவனித்தாள் . தனது மகன் ப்ரஹலாத் இருந்தால் அதே வயது தானே இருக்கும் என்று ஒரு கணம் எண்ணும்போது அவள் கண்கள் நீரால் நிரம்பின. தியாகு ராமுவையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான். பையனையும் மாறி மாறி பார்த்தான்.
ராமு, விதவையின் வீட்டில் வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, சரிகைக் குல்லாய் , மஞ்சள் பட்டு சட்டை, காலில் தண்டை, கொலுசு, கழுத்துக்கு தங்க நகைகள் எப்படியெல்லாம் தனது எஜமானன் மகன் ப்ரஹலாத் போட்டிருந்தானோ அதே போல் வாங்கி அவள் குழந்தை கிருஷ்ணாவுக்கு அலங்கரித்து, அழகு பார்த்து கவலையை போக்கிக் கொண்டவன் அல்லவா.
 இந்த பையன் கிருஷ்ணாவுக்கும் கொஞ்சம் கொஞ்சம் பேச்சு வந்து அவனோடு பேசி விளையாடியவன் அல்லவா? இப்போது அதை எல்லாம் ஜாக்ரதையாக எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.10 வருஷங்களுக்கு முன் வாங்கியவை.
தியாகு தான் முதலில் பேசினான் ” ராமு மீண்டும் இந்த வீட்டில் வேலைக்கு சேர்கிறாயா ?”
”தியாகு ஐயா, நான் அம்மாவிடம் முதலில் நமஸ்காரம் பண்ணி பேசவேண்டும் ”
கோகிலாவை வணங்கினான்.
”என்ன பேசவேண்டும் என்னோடு உனக்கு சொல் ? என்று வெடிப்பாக கேட்டாள் கோகிலா. அவன் மீது இருந்த சந்தேகம் இத்தனை வருஷத்திலும் இன்னும் நீங்கவில்லை அவளுக்கு.
”அம்மா , தாயே, உங்கள் மகன் ப்ரஹலாத் நதியில் மூழ்கவில்லை . சாகவில்லை” என்றான் ராமு ”
”ஹா என்ன சொல்கிறாய் நீ ராமு? கடவுளே, அப்படியானால் என் மகன் ப்ரஹலாத் எங்கே” வெறிபிடித்து கத்தினாள் கோகிலா.
”இதோ வாசலில் இருக்கிறான் ப்ரஹலாத்”
கோகிலா புயலாக ஓடினாள் வாசலில் கிருஷ்ணா நெளிந்து கொண்டு அந்த புது இடத்தில் ஒரு கம்பத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
யாரோ ஒரு அம்மா ஓடிவந்து அவனை அணைத்து முத்தமாரி பொழிந்ததும் அவன் திடுக்கிட்டான். தனது தாயின் ஞாபகம் வந்து விட்டது அவனுக்கு. அவனது நோயாளி தாய் அவனை கொஞ்சியதே இல்லை. கோகிலாவை அவனும் அணைத்துக் கொண்டான்.
கிருஷ்ணாவுக்கு ராஜோபசாரம் வீட்டில் நடந்தது. தியாகு அவனை அணைத்துக் கொண்டே முத்தமிட்டான்.
”ராமு, இது ப்ரஹலாத் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?”
தியாகு இப்படி கேட்பான் என்று எதிர்பார்த்து இருந்தான் ராமு.
”ஐயா, தங்கள் பிள்ளையை நான் கடத்தியது எனக்கும் அந்த பகவானுக்கும் மட்டுமே தெரியும்” என் மனசாட்சி ஒன்றே ஆதாரம்” . இது தான் அன்று குழந்தை ப்ரஹ்லாத் அப்போது போட்டிருந்த ஆடை, ஆபரணங்கள், குல்லா .
ஆனால் கோகிலா எந்த ஆதாரமும் கேட்கவில்லை. கிருஷ்ணா அவளைப் பொறுத்தவரை மீண்டு வந்த அவள் மகன் ப்ரஹலாத் ..
தியாகுவின் மனதில் ஒரு நெருடல். எதற்காக தன்னையே வளர்த்த ராமு தனக்கே துரோகம் செய்தான்? குழந்தையின் நகை ஒன்றே முக்யமாக போய்விட்டதா அவனுக்கு?
தியாகுவுக்கு கோவம் வந்தது.
”ராமு முதலில் இந்த இடத்தை விட்டு போய்விடு”
‘நான் எங்கே போவேன் அய்யா? இந்த வயதில் எனக்கு யார் இருக்கிறார்கள் உங்களைத் தவிர?”
இப்போது கோகிலா குறுக்கிட்டாள் ” நம் மகன் ப்ரஹலாத் ராமுவை மன்னித்து விட்டான். கிழவன் இனி இங்கேயே இருக்கட்டும்.
”இல்லை கோகிலா ராமுவின் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது”
ராமு தியாகு காலில் விழுந்தான். ”ஐயா நான் ஒன்றும் தவறு செய்யவில்லை. கடவுள் செயல். விதி அவ்வாறு நடந்துவிட்டது ” ராகுவால் ஒன்றும்  சொல்லமுடியவில்லை.
”செய்ததையும் செய்துவிட்டு, நீ செய்த குற்றத்தை கடவுள் மேல், விதி என்று எல்லாம் பழியைப் போடுகிறாயா அயோக்யா. உன்னை இனி  நம்பவே மாட்டேன்”பிடிவாதமாக ராமு சத்யம் செய்தான். ”நான் ப்ரஹலாதை கொல்லவில்லை, கடத்தவுமில்லை. காசுக்கு விற்கவுமில்லை”
“பின்னே யார் செய்தது அதை?”
” கடவுள் செயல், என் தலை விதி”
கிருஷ்ணா இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். 12வயது பெரிய பையன் அல்லவா. தான் சிறுவயதில் இந்த பணக்கார வீட்டில் இருந்து இந்த கிழவனால் கடத்தப்பட்டவன் என்றும் தனக்கு ப்ரஹலாத் தான் உண்மைப் பெயர், இந்த கிழவனும் தனக்கு அம்மாவாக இருந்தவளும் சேர்ந்து கிருஷ்ணா என்று பெயர் வைத்து ஆள் மாறாட்டம் செய்தவர்கள் என்றும் ஒரு வாறு புரிந்து கொண்டான். ஆனால் எதற்காக என்று புரியவில்லை. ராமுவின் மீது அவனுக்கும் கோபம் வந்தது. இருந்தாலும் தன்னை குழந்தை முதல் வளர்த்தவன் என்கிற பாசமும் அவனை ராமுவோடு பிணைத்தது.
”அப்பா ராமுவை மன்னித்து விடுங்கள். அவன் எங்காவது போகட்டும். அவனுக்கு ஏதாவது மாதா மாதம் கொஞ்சம் பணம் அனுப்பி உதவுங்கள். எங்கேயோ சாப்பிட்டுக்கொண்டு வாழட்டும்”
”அப்பா ” என்று கிருஷ்ணா கூப்பிட்டது தியாகுவையும் கோகிலாவையும் தேவலோகத்திற்கே கொண்டு சென்றது.
வெகுநேரம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ராமு திரும்பி சென்றான்.
”பகவானே, இனி அந்த பையன் கிருஷ்ணா வுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். தன்னை ஆதரித்த அந்த இளம் விதவை ஆத்மா மகிழும். இறந்த ப்ரஹாலாத் ஆத்மாவும் சாந்தி அடையட்டும். அவனை இழந்த பெற்றோருக்கு தன்னால் ஆன நன்றிக் கடனை செலுத்தியாகி விட்டது. உண்மை என்னோடு மறையட்டும். நான் குழந்தையை காசுக்காக ஆசைப்பட்டு கடத்தியதாக கடைசிவரை பிடிவாதமாக நம்பிய தாயின் எண்ணம் அவளை திருப்தி படுத்தட்டும். கடத்தப் பட்ட மகனை நானே திரும்ப கொண்டு வந்து தந்தேன் என்று அவர்கள் மகிழ்ந்தார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியை தரட்டும். ஒரு நல்ல முடிவுக்கு பலர் சந்தோஷத்துக் காக நான்  நான்  செய்யாத குற்றத்திற்கு,  ஏதோ  துரோகம் செய்துவிட்டதாக   ஒரு  அபவாதம்  என் மீது தங்கினால் அதில் என்ன தவறு?அதால்  நெஞ்சில் பாரமில்லை. ”
ராமு மெதுவாக நடக்க முடியாமல் நடந்தான்.
கல்கத்தா நகரத்தின் நெரிசலில் கூட்டத்தில் மறைந்து போனான். மறு மாதம் முதல் வாரத்தில் தியாகு ராமுவின் விலாசத்துக்கு அனுப்பிய ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி வந்து விட்டது.
” ராமு என்பவர் விலாசத்தில் இல்லை. இறந்துவிட்டார் என்று அறிகிறோம் ” என்று M.O .வில்  போஸ்ட் ஆபிசில் யாரோ பச்சை நிறத்தில் எழுதியிருந்தார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1406

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *