RAJA DESING J K SIVAN

ராஜா தேசிங்கு கதை –   நங்கநல்லூர்  J K  SIVAN
என் சின்ன வயதில் எனக்கு ஒரு பெரிய  ஹீரோ  ராஜா  தேசிங்கு.  எங்கம்மா  நாட்டுப்பாடல்களில்  ராஜா  தேசிங்கு கதையை பாடுவாள்.  அதெல்லாம் கேட்டு  ஐந்து ஆறு வயதில்  மயங்கியவன் நான். எல்லாம் இப்போது மறந்து விட்டது. வெள்ளை குதிரை பாராசாரி, தேசிங்குவின் நண்பன் மாவுத்து காரன் (அம்மா  சொல்வது மஹபூப்  கானை)   பலமான செஞ்சிக்கோட்டை  என்று BIT BIT  ஆக விஷயங்கள் மனதில் இன்னும் கொஞ்சம்  இருக்கிறது.  திருவண்ணாமலை போகும்போது செஞ்சிக்கோட்டை கண்களில் படும்.  ஓரிருமுறை  சுற்றுப்  பயணம் போனபோது  தேசிங்கு மேல் கவனம் செல்லாதது  என் தப்பு.  MGR  நடித்த  ராஜா தேசிங்கு படம் ஏனோ  என்னுள் ஒரு தாக்கம் உண்டாக்க வில்லை.
தேசிங்குவின் அப்பா  ஸ்வரூப் சிங்,  ஒளரங்கசீப்பின்  முகலாய படையில் ஒரு தளபதி. செஞ்சிக்கு  அதிபதி. அப்பா மறைந்த பிறகு, , ஒளரங்க சீப் மரணத்துக்குப்  பின் தேசிங்கு  செஞ்சிக்கு  ராஜாவாக தடையாக நின்றது ஆற்காட் நவாப்.  ”நானே  செஞ்சிக்கு அதிபதி. கப்பம் கட்டு” என்று கேட்ட நவாப்புக்கு  கப்பம் கட்ட .  தேசிங்கு மறுத்து போர் மூண்டது.  நவாபின் படையில்  80000 பேர். தேசிங்குவின் ஆட்கள் 800 பேர்.. யுத்தம் ஆரம்பித்த போது   தேசிங்குவின் நண்பன் மஹபூப் கானுக்கு கல்யாணம்.  தாலிகட்டும் நேரத்தில்  யுத்த செய்தி கிடைத்தது. ”கல்யாணம் அப்புறம் நண்பன் தேசிங்கு தான் முதலில்” என்று ஓடி வந்து விட்டான் மஹபூப் கான். தேசிங்கு கண் எதிரில் போரில் உயிரை விட்டான் நண்பன் மாவுத்துக்காரன் எனப்படும்  மஹபூப் கான். 

தேசிங்கு உண்மையில் தேஜ் சிங். தமிழில் நாட்டுப்  பாடலில் தேசிங்கா கிவிட்டான்.  செஞ்சி சென்னைக்கு 160 கி.மீ. தூரம். விழுப்புரம் அருகே. திருச்சி மார்க்கம் தெருவில் போகும்போதே கோட்டை தெரியும்.
இந்திய சரித்திரத்தில் சில வரிகள்:  சிவாஜி தலைமையில்  மராத்தியர்கள் முகலாய சாம்ராஜ்யத்திடமிருந்து  செஞ்சியை பிடித்தார்கள். சிவாஜி இறந்தவுடன் அவர் மகன் சாம்பாஜி கொல்லப்பட்டான். 2வது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டு வெல்ல முடியாமல் செஞ்சிக்கு  ஓடிவந்தான். மராத்தியர்களை வென்று பீஜப்பூர் சுல்தான் வசம் செஞ்சி வந்தது. சுல்தான் செஞ்சியை முற்றுகை இட்டான். மஹமூத் கான் படைத் தலைவன். அதில் குதிரைப்படை தலைவர் ராஜபுத்திர வீரர் சொரூப்சிங் செஞ்சிக் கோட்டையை வென்று அதன் ராஜாவானார். ஒளரங்கசீப் இறந்து அவன் மகன் ஷாஆலம் தில்லி சுல்தான் ஆன போது சொரூப் சிங் மகன் 18 வயது தேஜ் சிங் வீர இளைஞன்.  ஷாஆலம் வசம் ஒரு புதிய முரட்டு குதிரை பெயர் பாராசாரி. அதை அடக்கும் போட்டியில் 18 வயது தேஜ் சிங் வென்று அந்த குதிரையே அவனுக்கு பரிசு. இதோடு இன்னொரு ராஜபுத்திர தளபதி தனது மகள் ராணி பாயை தேஜ் சிங்குக்கு கல்யாணம் செய்து வைத்தார். சொரூப் சிங் தனது  மகன் தேஜ் சிங்கை செஞ்சி ராஜாவாக்கினார்.
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தூரம் வரை சிங்கவரம் கிராமம். அங்கே உள்ள ரங்கநாதஸ்வாமி ஆலயம் புராதனமானது. ஒரே கல்லில் செதுக்கிய 24 அடி நீள ரங்கநாதன் தான் தேஜ் சிங் வழிபட்ட  தெய்வம். அதற்காகவே ஒரு சுரங்கப்பாதை செஞ்சி அரண்மனையிலிருந்து  கோவிலுக்கு இருக்கிறது.
”ரங்கா, நான் நவாபுடன் போர் புரியட்டுமா?”
”இன்று வேண்டாம், நாளைக்கு போ”
”என்ன இப்படி சொல்கிறாய். எதிரி படைகள் கோட்டைவாசல் வரை வந்து விட்டதே?”
பதில் சொல்லாமல் ரங்கன் தலையை திருப்பிக்கொண்டான். அதனால் தான் ஆலயத்தில் ரங்கநாதன் முகம் இன்றும்  திரும்பி இருக்கிறது..
ரங்கன் வார்த்தையை மீறி தேசிங்கு போருக்கு சென்றான். ஆற்காட் நவாபின் ஆள் சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு இறந்தான். அவன் மனைவி ராணிபாய் தீ மூட்டி அதில் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை பாராசாரி என்கிற நீலவேணி குதிரையின் சமாதி.. நவாபின் பிரதிநிதி சததுல்லாகான்,  தேசிங்கு ராஜா அவன் மனைவி ராணிபாய் நினைவாக ஒரு சமாதி கட்டினான். ராணிபாய் பெயரால் ராணிப்பேட்டை இன்றும் இருக்கிறது.
செஞ்சியில் இயற்கையாக இருக்கும் மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு இன்றும் கம்பீரம். சோழர் காலத்தில் செஞ்சி தான் சிங்கபுரி,
செஞ்சிக் கோட்டை  3 மலைகளையும் சுற்றி இணைத்த சுவரோடு இருக்கிறது. 7 சதுர கி.மீ. பரப்பு. 800 அடி உயரத்தில் கோட்டை. கோட்டையை சுற்றி 80 அடி அகலமுள்ள அகழி. எட்டு மாடி உள்ள கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் எல்லாம் உள்ளே இருக்கிறது. இக் கோட்டைக்கு பாது காப்பு தான் மலைகள், கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி
வெள்ளையன் கைவசம் வந்தபின் மாறுதல் ஒன்றும் இல்லை.
அம்மா ராஜா தேசிங்கு ரசிகை.  அவனது வீரத்தை நாட்டுப்பாடல்கள் மூலம் பாடுவாள்.  அவன் சோக முடிவு கண்களில் நீர் சிந்த வைக்கும். அழுவாள்.  பெரிய எழுத்து  விக்ரமாதித்தன் கதை, நல்லதங்காள் சரித்திரம், ராஜாதேசிங்கு பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.  அந்த கதைகள் எல்லாம்  எனக்கும் சின்ன வயதில் பிடித்திருந்தது. .
ராஜா தேசிங்கு நாட்டு பாடல்களில்  சில வரிகள்
”இந்த விசை நவாப்பு கையினாலே  நான் செத்துப் போனால்
துலுக்கர் வந்துனது கோவிலெல் லாம் சூரையிடுவார்கள்”
இன்றைக்குஞ் சாவு நாளைக்குஞ் சாவு இருக்குது தலைக்கு மேலே
ஒன்றுக்கும் நீயஞ்ச வேண்டாம் உறுதி கொள்ளுமையா
செஞ்சிக் கோட்டைச் சிப்பாய்   ஐயா இராஜா தேசிங்குகத்தி பிடித்த சிப்பாய் மகனும் இராஜா தேசிங்கு அவன்,
கண்ணையுருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு
கால் பலங்களும் கைப்பலங்களும் சிதறியோடுமே
டாறு டாறாய் தீர்த்துப் போடுவான் இராஜாதேசிங்கு
சண்டை கெலித்து வந்தேனானால் தாலி கட்டுகிறேன்
போரைக் கெலித்து வந்தேனானால் புகழ்ந்து கட்டுகிறேன்
மாண்டு மடிந்து போவேனானால் மனது கலங்காதே
அல்லாரே அல்லாரே என்று கீழே விழுந்தானாம்
அரிகோவிந்தா என்று சொல்லிக் கீழே விழுந்தானாம்
என்னுடன் வளர்ந்த பிராண சினேகிதன் மோவுத்துக்காரன் போனான்
எந்தன் பலமும் பாதி போச்சுதுமோவுத்துக்காரனோடே”
தேசிங்கு  பாராசரி குதிரையை அடக்கி  வென்ற பாட்டு வரிகள் சில:
தேவரடியிற் பிறந்த பிள்ளை தேசியேற வேணும்”
“குதிரை களைத்த சப்தத்திலே தொப்பென்று விழுந்தார்கள்
அண்ட மிடிந்து விழுந்தாற்போல அலறி விழுந்தார்கள்
கோட்டையிடித்து விழுந்தாற்போலக் குப்புற விழுந்தார்கள்” !
“பாலன்பிறந்த மூன்றாம் மாதம் பதைத்து விழுந்தானாம்
குழந்தைபிறந்த ஏழாம்மாதம் குலுங்கி விழுந்தானாம்
தொட்டிலைவிட்டுக் கீழேயிறங்கித் துள்ளி விழுந்தானாம்
தங்கத் தொட்டியை எட்டியுதைத்துத் தரையில் விழுந்தானாம்”
“நிறைந்த கொலுவில் இருக்கும் துரைகள் சட்டென்று எழுந்தார்கள்
தகத்திலிருக்கும் டில்லித் துரை தானும் எழுந்தானாம்”
குதிரையை அடக்கச் சென்ற தேசிங்கு அக்குதிரை மீது ஏறித் தன் தந்தையை நோக்கி,
“புரவிஏறிச் சவாரி போறேன் பெற்றவரே ஐயா
தப்பித்தவறி வந்தேனேயானால் தழுவிக் கொள்ளுமய்யா
இன்றைக்குஞ்சாவு நாளைக்குஞ்சாவு இருக்குது தலைமேலே
ஒன்றுக்கும் நீ அஞ்சவேண்டாம் உறுதி கொள்ளுமய்யா”

“நானொரு வார்த்தை சொல்லுகின்றேன் கேளும் தோன்றமல்லண்ணா (தோடர் மால்)
அவனும் மகா சூரனையா ராசா தேசிங்கு
செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா ராசாதேசிங்கு
அவன் கண்ணை உருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு
கால் பலங்களும் கைபலங்களும் கதறியோடுமேதான்
தாறுமாறாய்த் தீர்த்துப் போடுவான் ராஜா தேசிங்கு
சண்டை பண்ணிச் செயிக்கமாட்டாய் தோன்றமல்லண்ணா”
என்று வழிப்போக்கன் கூறக் கேட்ட தோன்றமல்லன். தேசிங்கு முன் செல்ல அஞ்சி நெற்றியிலே நாமம் இட்டு அவன் முன்னே நடுநடுங்கிச் சென்றான். ”
”பாலூஞ்சோறும் தின்கிறவனானால் செஞ்சிக்குப் போங்களடா
ரத்தச்சோறு தின்கிறவனனால் என்பின்னே வாங்களடா
போர்களத்தில் செத்தோமானால் புகழும் கீர்த்தியுமுண்டு
இரணகளத்தில் செத்தோமானால் நல்ல பதவியுண்டு
சாவுக்கென்று பயப்படவேண்டாம் சமேதாருமாரே!
சல்தி சல்தி வாருமென்றான் ராசாதேசிங்கு”
செஞ்சி கோட்டை சைலண்டாக  எத்தனையோ  சரித்திர ரஹஸ்யங்களை  தன்னுள் அடக்கிக் கொண்டு மௌனமாக  கடின  பாறையாக இன்றும்  நிற்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1401

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *