KRISHNA THE MIRACLE J K SIVAN

அதிசயம்  என்றால் கிருஷ்ணன் தான்.   –   நங்கநல்லூர்  J K  SIVAN

கிருஷ்ணனை தெரியாதவர்கள் உண்டா?தெரியும் என்றால்  என்ன தெரியும்? கிருஷ்ணன் வசுதேவர் தேவகிக்கு பிறந்த எட்டாவது பிள்ளை.  கம்சன் வாளுக்கு  உயிர் தப்பி  பிறந்த சில மணித்துகள்களுக்குள்ளே  கோகுலம் சென்று நந்தகோபன் யசோதை பிள்ளையாக வளர்ந்து, பிருந்தாவனத்தில் அநேக  சாகசங்கள் புரிந்து மதுரா சென்று  கம்சனைக் கொன்று, ராஜாவாகி, எட்டு  ராணிகளை கல்யாணம் பண்ணிக்கொண்டு துவாரகையில் அரசாண்டு, பாண்டவர்களுக்கு உதவி  அர்ஜுனன் தேர்த்தட்டில்  பாகனாக அமர்ந்து  கீதை உபதேசித்து, பாரதப்போரை  பாண்டவர்கள் வெல்ல உதவி,  125 வருஷம் வாழ்ந்த வரலாறு  தெரியும். அப்புறம்?எண்ணற்ற  அதிசயங்களை  தன்னுள் அடக்கிய  கண்ணனை பாரதியார், வியாசர், ரிஷிகள், ஜெயதேவர்,  ஸூர்தாஸ் போல் எண்ணற்றவர்கள்  பாடியிருப்பதும் தெரியும்.  புல்லாங்குழல் ஊதும்   ஒரே ராஜா. ராஜதந்திரி.அப்புறம்?அப்புறம் சில  விவரங்களை விஞ்ஞானிகள்  சரித்ர ஆராய்ச்சியாளர்கள் தருகிறார்கள் அது தெரியுமா? தெரியாதென்றால்  இதோ அது இது தான். கிருஷ்ணனின்  சரித்திரம் அவனைப்போலவே  அதிசயமாக இருப்பதை   அநேகர்  அறியவில்லையே.

உலகத்திலே  பேசும் புலிகள் உண்டு என்றால் அது  நமது பாரத தேசத்தின்  சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தான்.  அவர்கள் மனிதர்களைக் கடித்துத் தின்ன மாட்டார்கள், ஆனால்  ஆராய்ச்சிக்கு இரை  கிடைத்தால்  ஒரு  பொட்டு  கூட விடமாட்டார்கள், புரட்டி புரட்டி, தோண்டித்  துழாவி பல விசித்திர  உண்மைகளை   தாங்கள் கண்டுபிடித்ததாக  வெளியிடாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.  இதில் ஒருவர்  சொன்னதை  மற்றவர் ஆமோதிப்பதும் கிடையாது. அது காட்ட எங்கெங்கேயோ அலைந்து ஆதாரம் தேடுவார்கள். எங்கோ  ஒரு புள்ளி,  ஒரு வினாடி தப்பிதம், தவறு என்று தென்பட்டால்   அதை இமயமலையாக்கி  சுட்டிக் காட்டுவார்கள்.

இப்படிப்பட்ட ஆராய்ச்சிக்கார்கள்  கிருஷ்ணன்  சரித்திரத்தை ஆராய்ந்தார்கள்.  பல வருஷங்கள் தேடி கண்டுபிடித்த  விஷயங்கள் என்ன?   ஆராய்ச்சியாளர்கள் அப்படி என்ன என்ன கண்டுபிடித்தார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? சுருக்கமாக சொல்கிறேன்:
கிருஷ்ணன் பிறந்தது 5250 வருஷங்களுக்கு முன்பு.
அவன் பிறந்தநாள்  ஜூலை 18, 3228 கி.மு. ஸ்ராவண  என்கிற ஆவணி மாசம், அஷ்டமி திதியில்,  ரோஹிணி  நக்ஷத்திரத்தில், அன்று  புதன் கிழமை.
பிறந்த நேரம் நடு ராத்திரி  12மணிக்கு. 00:00 A.M.
கிருஷ்ணன் 125 வருஷம் 8 மாசம்,  7 நாள்  வாழ்ந்தவர்.
மறைந்த தேதி  பெப்ரவரி 18, 3102  கி.மு.  

கிருஷ்ணனுக்கும் 18க்கும்  நெருங்கிய சம்பந்தம் இருக்கிறதே. பிறந்தது 18அன்று, மறைந்தது 18 அன்று,  பாரதப்போரில் பங்கேற்றது 18 நாள்.  மஹாபாரத  இதிகாசம் 18  பர்வம்.  பாரதப்போரில் கிருஷ்ணன் சொன்ன கீதையிலும் 18 அத்யாயம்.  

தேடிப்பார்த்தால்  கிருஷ்ணன் வாழ்க்கையில் இன்னும் நிறைய  18கள்  அகப்படலாம்.அதை ஆராய்ச்சியாளர் களுக்கே  விட்டு விடுகிறேன்.

மஹாபாரத போரின்   போது  கிருஷ்ணன் வயது 89.  நம் கணக்கில்  அவன் தொண்டு கிழம். குருக்ஷேத்திர மஹாபாரத யுத்தத்திற்குப்  பிறகு  கிருஷ்ணன்  36 வருஷங்கள் வாழ்ந்தார்.

மஹா பாரத யுத்தம்  ஆரம்பித்தது  8.12.3139  கி.மு.  முடிந்தது  25.12.3139 கி.மு.  18  நாள். மிருகசீரிஷ நக்ஷத்ரம் அன்று. ஏகாதசி திதி.  

அட, கிறிஸ்து பிறக்கும் முன்பே  கிரிஸ்மஸ்  தேதியிலா?  பின்னால்  அன்று கிறிஸ்மஸ் வரும் என்று கிருஷ்ணனுக்கு மட்டுமாவது தெரிந்திருக்குமா?

21.12.3139 கி.மு  அன்று  சூரிய க்ரஹணம்  மாலை  3 மணியிலிருந்து  5 மணி வரை. அது தான்  ஜயத்ரதன்  சூரிய அஸ்தமனம் என்று வெளியே வந்து அர்ஜுனன் அம்பால் மறைந்த நாள்.  எல்லாம் கிருஷ்ணன் வேலை.

பீஷ்மர்  மறைந்தது  3138 கி.மு. பெப்ரவரி 2ம் தேதி.  அன்று உத்தராயண புண்யகாலம் முதல் ஏகாதசி திதி.
மதுராவில்  கிருஷ்ணனை  வழிபடுவது :  கன்னையா என்று
ஒரிசாவில்   ஜகந்நாதன்.
மஹாராஷ்டிராவில் அவன்  விடோபா.
ராஜஸ்தானில் கிருஷ்ணன் பெயர்  ஸ்ரீ நாத்.
குஜராத் பிரதேசத்தில் அவனை வணங்குவது  துவாரகாதீசன் என்று.  இன்னொரு பெயர்  ரான்சோத்
கர்நாடகா  உடுப்பியில் அவன் கிருஷ்ணன்.
கேரளத்தில்  அவன் குருவாயூரப்பன்.
அப்பா பெயர்:  வசுதேவர்.
அம்மா: தேவகி.
வளர்த்த அன்னை: யசோதை. அப்பா:  நந்தகோபன்
அண்ணன் :  பலராமன். சகோதரி:  சுபத்ரா
பிறந்த ஊர்:  மதுரா:
மனைவிகள்  எட்டு பேர்:    ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நாகநஜீதி.  பத்ரா, லக்ஷ்மணா.
கிருஷ்ணன்  ஆயுதம் ஏந்தாமல்  தனது  வெறும்  கையால் மரணமடைய  வைத்தவர்கள்   4 பேர் மட்டும் தான்.   சாணூரன் என்ற மல்லன். கம்சன் என்கிற மாமன். (கம்சனுடைய வாளாலேயே அவனை கிருஷ்ணன் கொன்றான் என்று சொல்வதுண்டு) சிசுபாலன், தந்தவக்ரன் என்ற உறவினர்கள்.
அம்மா தேவகி ”உக்ர” வம்சம் . அப்பா  ”யாதவ”  குலம் . ஒருவிதமான   கலப்பு திருமணம்.
கிருஷ்ணன் பிறக்கும்போதே கருப்பு நிறம்.   அவனுக்கு இயற்பெயர் என்ன வென்றே தெரியவில்லை. ஊரார்  அவன் கருப்பாக இருப்பதால்   கருப்பு  என்ற அர்த்தமுள்ள பெயர்  ”கிருஷ்ணன்” என்று அழைத்த போது  திரும்பிப் பார்த்தான். கோகுலத்தில் அவனை ஆசையாக எல்லோரும் அழைத்தது  ”கருப்பன்”  என்கிற அர்த்தத்தில் ”கிருஷ்ணா, கண்ணா” என்ற பெயரில்  தான்.   கிருஷ்ணன் வசீகரன்.

ஒன்பது வயதில்  கோகுலத்திலிருந்து  ப்ருந்தாவனத்துக்கு  இடம் மாறியதற்கு  ஒரு காரணம் ”பஞ்சம்”, மற்றும்  பசுக்களுக்கு  காட்டு ஓநாய்களின் தொந்தரவு.

பிருந்தாவனத்தில் இருந்தது 14-16 வயசு வரை தான். அந்த வயதில் தான் மதுராவில் மாமன் கம்சனைக் கொன்றான். அப்பா அம்மா வசுதேவர்  தேவகியை சிறையிலிருந்து விடுவித்தான்.  அதற்கப்புறம் அவன் பிருந்தாவனம் போகவில்லை.

சிந்து ராஜா  காலயவனன்  அச்சுறுத்தலால்  மதுராவிலிருந்து  துவாரகை சென்றான்.

ஒரு புது மாதிரியான செய்தி:   ஜராசந்தனை கோமந்தக மலை (இப்போது  அந்த இடம்  கோவா)  வாழ் வைநதேய மக்கள் உதவியோடு போரில் ஜெயித்தான்.  வெல்வது வேறு  கொல்வது  வேறு.  மரணம் பீமன் கையால்.
அப்புறம்  துவாரகையை புதுப்பித்து கட்டினான்.
உஜ்ஜயினியில்  சாந்திபனி முனிவர்  ஆஸ்ரமத்தில் படிக்க  செல்லும்போது வயது  16-18க்குள்.
ஆப்ரிக்க தேசத்து  கடல் கொள்ளைக்காரர்களோடு  சண்டையிட்டு ஜெயித்து,  அவர்களி டமிருந்து  குரு சாந்தீபனி ரிஷி பிள்ளை புனர்தத்தன்  என்பவனை மீட்டு  குரு தக்ஷிணையாக கொடுத்தான்.  அந்த பையனை  கொள்ளைக்காரர்கள்  பிடித்துக்கொண்டு போன இடம்  குஜராத் நகரில் ஒரு துறைமுகமாக இருக்கும் ப்ரபாஸ  க்ஷேத்ரம்  அருகே.  

குருகுல வாசம் முடிந்த பிறகு தான் அவன்  அத்தை குந்தியின் பிள்ளைகள்  பாண்டவர்களின் வனவாசம் பற்றி தெரிந்தது.
பாண்டவர்களை   உருகியோடும் அரக்கு  மாளிகையிலிருந்து காப்பாற்றியவன்.  பிறகு தான் திரௌபதியை பாண்டவர்கள் மணந்தனர்.  இதில் கிருஷ்ணன் பங்கு  ரொம்ப ஜாஸ்தி.
பாண்டவர்கள்  இந்திர பிரஸ்தம் நகரை  நிர்மாணித்து, தலைநகராக கொண்டு பாதி  ராஜ்ஜியம் அரசாள  உதவினான்.
திரௌபதி மானம் காத்து  உதவினான்.
அவன் அத்தை பிள்ளைகள்  பாண்டவர்கள்   வனவாசம் சென்றபோது அவ்வப்போது  தேவைப்பட்டபோது உதவியாக  அவர்கள் பக்கம் இருந்தான்.
பாண்டவர்கள்  அவர்கள் சித்தப்பா திருதராஷ்டிரன்  பிள்ளைகள்,கௌரவர்கள்,  அராஜகத்தால், துரோகத்தால், அவர்கள் ராஜ்ஜியம் சொத்து அனைத்தையும்  அபகரிக்க, ஏற்றுக்கொண்ட  வனவாசம் முடிந்த கையோடு  கௌரவர்களோடு  சண்டையிட்டபோது  பாண்டவர்களுக்கு சகாயமாக நின்றான்.  பாரத யுத்தத்தை   பாண்டவர்களுக்கு வென்று கொடுத்தான்.

தான்  விரும்பி  நிர்மாணித்த  த்வாரகை கடலில் மூழ்கவேண்டும் என்று சங்கல்பித்து  அது அழிவதைப் பார்த்தான்.  அவனது யாதவகுலம்  முழுமையாக அழிய காத்திருந்தான்.

எல்லாவற்றையும்  எல்லோரையும்  பொறுப்பாக கவனித்தாலும் எதிலும் பட்டுக்கொள்ளாமல்  பற்றுதல் இல்லாமல்  இருந்தவன்.

கிருஷ்ணன் அதிசயமானவன்.  த்ரிகாலமும்  அறிந்தவன். இருந்தபோதிலும்  எப்போதும் நிகழ்கால  சம்பவங்களோடு மட்டும் நம்  போல் வாழ்ந்தவன்.
கடைசியாக ஒரு வார்த்தை.
கிருஷ்ணன் உபதேசித்த கீதை  உலகம் போற்றும் ஒரு  ஆன்மீக வாழ்க்கைப் பாடம்.  சிறந்த தத்வ நூல்.
எப்படி இருக்கிறது கிருஷ்ணன் சரித்திரம், சரித்திரக்காரர்கள் நோக்கில் பார்க்கும்போது ?
நம்மைப் பொறுத்தவரை யாரும் எவரும் சொல்லாமலேயே அம்மா அப்பா, தாத்தா பாட்டி சொன்னபடி கிருஷ்ணன்  விஷ்ணு அம்சம், ஒரு அவதாரம். சிறந்த பூரண  அவதாரம். எல்லோருக்கும் பிடித்த தெய்வம். அது போதும். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *