HINDU RITES MAHALAYAM SRADHHAM ETC. J K SIVAN

மஹாளய பக்ஷம்,தர்ப்பணம், ஸ்ராத்தம் –  நங்கநல்லூர்  J K  SIVAN
(பல விஷயங்களை சேகரித்து இதை அளிக்கிறேன். திட்டவேண்டாம். பிடிக்காதவர்கள் மேலே படிக்கவேண்டாம். இது மொத்தமும் என் கருத்து அல்ல. பல பெரியோர்கள் அபிப்ராயம். பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்ட ப்ராமணர்களுக்காக என்று எடுத்துக் கொள்ளவும்.)
பரலோகம், பித்ரு லோகம், பித்ரு கர்மா  இதெல்லாம்  கொஞ்சம் புரிபடாத  விஷயங்கள். அங்கே எல்லாம்  நம்மை விட்டு பிரிந்து போன முன்னோர்கள்  வசிக்கிறார்கள்.  மரணத்தால்  உடல் இழந்து, பிரிப்பட்ட  ஜீவன்கள் பூலோகத்தை தாண்டி அடுத்த  புவர் லோகத்தை அடையும் வழியில் நடுவே   பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் தான் பிரேத நிலை நீங்கியவர்களாக  பித்ரு லோகத்தில் இடம் பெறுகிறார்கள்.
நாம் செய்யும் அமாவாசை தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம், ஸ்ராத்தம்  எல்லாமே  பித்ருக்கள் எனும் நமது முன்னோர்கள் சம்பந்தப்பட்டது. தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட  பித்ருக்களுக்கு செய்யும்  கர்மா, அதாவது  ஸ்ராத்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்வது வழக்கம்.
மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு பெருமாளிடம்  கொஞ்சம் டைம் கேட்டு, நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் பித்ரு ஸ்ராத்தம் அப்படி கிடையாது.  குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி  ஸ்ரத்தையோடு   ஸ்ராத்தம் செய்தே ஆக வேண்டும்.
 எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள், அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப் பிரிவினர். ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான். எந்த இடத்தில் ப்ராமண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள். பிண்ட ப்ரதானத்தினாலும், விகிரான்னத் தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப் பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும் பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர்களும்  நாம் செய்யும் பித்ரு கர்மாக்களின் மூலம் பலனடைகிறார்கள்.
ஆகவே  நமக்குத் தெரியாத   பாட்டன் பூட்டன் பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ராத்ததில் உச்சரிக்கும்  பல மந்திரங்களின்  மூலம், இரைக்கும்  எள்  நீரில்  திருப்தி அடைகின்றனர்.   நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று கதையை முடிக்க முடியாது. அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  ஸ்ராத்தத்தால் வளர்கிறது. பித்ருக்கள்  தெய்வாம்சம்  கொண்டவர்கள்.  நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். இனிமையானவர்கள். க்ரூர மானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்.
பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்ச வ்ருத்தி, ஆரோக்யம் ஞானம், இம்மை- மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.பித்ரு சாபம்  கடுமையானதுஎன்பார்கள். ஆகவே  நமது கடமை யிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சொல்வதும், சாக்கு போக்குகளை தேடி கண்டுப் பிடிப்பதும் இப்போது  கொஞ்சம் கூடவே அதிகமாகி வருகின்றது. இதைக் கைவிட வேண்டும்.   யாரிடம்தான் குறையில்லை. ஸ்ராத்தத்தை எப்படியாவது செய்ய வேண்டும்  என்பதில்தான்  கவனம்  வேண்டும்.
ஸ்ராத்தம் செய்யாதவன் நன்றி கெட்டவன் என்பது பொது அபிப்ராயம்.  குதர்க்க வாதம் வேண்டாம். பித்ருக்கள் சாபமிடுவார்களா மாட்டார்களா என்பது வேறு விஷயம்.  பித்ருக்கள்  மனம் வருந்தி கஷ்டத்தோடு  பெரு மூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்ச விருத்தி பாதிக்கலாம்.
ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடுமான வரையில், அப்யாசம் இல்லா விட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியம்.  ஸ்ரத்தையுடன்  செய்வது தான் ஸ்ராத்தம் எனப்படும் முக்கிய  வைதீக  கர்மா. ஸ்ரார்த்த  காரிய முடிவில்  சிரார்த்தத்தில் பங்கேற்கும் பிராமணர்களிடம்  ஸ்ராத்தம் செய்கிற கர்த்தா மந்திர ரூபமாக   என்ன வேண்டுகிறார் தெரியுமா?
”நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று  வேண்டி ஆசி பெறுதல்”
இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
இரண்டாவது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும்  பெற்றோர்  முன்னோர்  இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ‘ ப்ரத்யாப்திக’ ஸ்ராத்தம்.   கர்த்தா ஸ்ராத்த மாதம் அல்லது ஸ்ராத்த பக்ஷம் முழுவதும் நியமத்துடன் இருக்க வேண்டும்.  குறைந்த பக்ஷம் ஸ்ராத்தத்துக்கு முதல் நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டும். நியமம் என்றால் அந்த நாட்களில்  சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டை தவிர மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] இரண்டும் இருக்கணும்.
இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும் அடிமையாகிறோம்.  வேலை  நிமித்தமாக நமக்கு   ஸ்ராத்தம் எல்லாம் செய்வதற்கு   நேரம்  இல்லை என்கிறோம்.  மனமிருந்தால் மார்க்கம் உண்டு.    விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ராத்தத்தில்  சில முக்கிய  அம்சங்களையாவது  குறைந்த பக்ஷம்  கடைபிடிக்க வேண்டும். வசதி  என்பது முக்கியம் தான்.  குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம்? . வசதி இல்லாதவர் களுக்கு எந்த தோஷமும் வராது.
சாதாரண உத்யோகத்தில் குறைந்த சம்பளத்தில் உத்யோகம் பண்ணும்  ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் நிச்சயம்  செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ஸ்ரமம்தான். ஸ்ராத்தத்தை சுறுக்கி செய்வதால் தோஷம் ஏற்படாது.
எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ராத்தத்தை செய்யலாம். அரிசி, வாழைக் காய், தக்ஷணை மட்டும் அளிப்பது. ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ராத்தத்தை ஏனோ தானோ என்று அலக்ஷியத்தோடு  செய்தால் தான் பித்ரு  தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.
வசதி இருப்பவர்கள் அவசியம்  பின்பற்றவேண்டியவை:
1. பார்வணம் [ஹோமம்].
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. பித்ருக்களாக  வரும் ப்ராமணர்களுக்கு, பண்ணி வைக்கும்  ஆசாரியனுக்கு வஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராமணர்களுக்கு  தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு [பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [ அவருக்கும் எல்லா தான பொருட் களும்].வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.
6.வழங்கும் சாமான்கள் நல்லதாகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரணத்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்]. அரிசி நல்லதாக இருக்கவேண்டும். ரேஷன் அரிசி கொடுப்பதை நிறுத்தவும். வசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதை  விட அதிகமான நல்ல அரிசி, பருப்பு, வெல்லம் காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பது விதி.
இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ராத்த மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.
வசதி உள்ளவன் இதை செய்ய தவறும்போது தான் பித்ரு தோஷத்துக்கு, சாபத்திற்கு ஆளாக நேரிடும்.  நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் அகத்தில்  பழக்கமில்லை என்கிறார்கள். நமது  முன்னோர்கள், அவர்களுடைய பெற்றோர்களுக்கு  ஸ்ராத்தம் செய்ய  ஒரு வேளை வசதி இல்லாமல்  வஸ்திரங்கள்  வாங்க முடியும்மாள்  இருந்திருக்க லாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக் கொள்வது   சரியாகுமா?   டிவி, ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளை கூடத்தான் நமது  முன்னோர்கள் உபயோகப் படுத்த வில்லை.   நாம்  இதையெல்லாம் எங்கள்  அகத்தில் பழக்கமிலை என்று விட்டுவிடுகிறோமா?  அதில் மட்டும் என்ன பாரபக்ஷம்?
ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டா வாதம் கூடாது. கூடுமான வரை சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது, அர்த்தம் புரிந்து செய்வது  நல்லது.
ஸ்த்ரீகள் விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ராத்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்து விட்டால் கர்மா நன்றாக  நடக்கு மென்பதில் சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற ஒத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீ களுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும்.   புருஷர்களிடம்   ஸ்ரத்தை  கம்மியாக  இருந்தாலும், ஆசிகர அனுஷ்டானம் கொண்ட மனைவிகள் வற்புறுத்தலினால் ஸ்ராத்தம் நடை பெறுவதையும்  சில  இல்லங்களில் பார்க்கின்றோம்.
மொத்தத்தில் எல்லா வைதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டு மென்றால். புருஷர்கள் எண்ணம்  மட்டும் போதாது.  இல்லத்தரசிகளின் ஒத்துழைப்பும்  மிக மிக அவசியம். நமது தர்மத்தில் பாரம்பரியத்தில்  ஸ்திரீகளின் இடம் மகத்தானது.
சகோதரர்கள் குடும்பத்த்தில் பங்கு பிரிக்கப் பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித் தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று மட்டும்  அண்ணா வீடு தம்பி வீடு என்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல.
மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்ற  விதி  எப்போதும்  ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. [தாயார் உயிருடனிருந்தால் அவளுடன் அவன் இருக்கு மிடத்தில் பித்ருஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது வழக்கம்.].
தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ராத்தம் செய்வதால்,பித்ருக்களுக்கு அதிக திருப்தி.பித்ருக்கள் பல இடங் களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.ஸ்ராத்தத்தில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு.   ஆனால், ஸ்ராத்த காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்யவோ இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லா வற்றிற்கும் பிரதிநிதி உண்டு. ஸ்ரத்தைக்கு பிரதிநிதி இல்லை.
இன்னொரு முக்கிய விஷயம்.    ஸ்ரார்த்த திதி அன்று  ஸ்ராத்தத்துக்கு  பதில்  வருஷா வருஷம் அன்னதானம் செயகிறோம்.  ஏதாவது பாட சாலையில்  போஜனம் ஏற்பாடு செகிறோம். மொத்தமாகப் பணம் கட்டி விட்டோம். அதனால் ஸ்ராத்தம் செய்வதில்லை என்று கூறுவது அநியாயம். அக்கிரமம். அபத்தம்.
 அன்னதானம் செய்வதால்  கிடைக்கும் பலன் வேறு. ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து  தர்ப்பணம் செய்யாமல்  மற்றவர்களுக்கு அன்ன தானம்,  போஜனம் செய்விக்கலாம் என்ற  எண்ணமே  அடிப்படையிலேயே தவறு. எது எப்படி இருந்தாலும், ஸ்ராத்தத்திற்குப்  பதில் அன்னதானம் ஒருபோதும்  இணையாகாது.  ஸ்ராத்தம் ஸ்ராத்தம் தான். பிரச்னை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர் களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.
ஸ்ராத்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும்  சாப்பிட வரும் பிராமணர்கள் உட்பட அனாவசிய  பேச்சுக்களோ, வம்பு,அரசியல்  பற்றியோ பேசவே கூடாது.  டிவி  ஓடக்கூடாது.சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய் விடுவார் களாம். வீட்டிலேயே சமையல் செய்து ஸ்ராத்தம் செய்ய வேண்டும். வெளியே ஆர்டர் பண்ணி உபயோகிக்க கூடாது.  கர்த்தாவின் தர்ம பத்தினி சமையல் செய்வது உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பக்ஷணமும் தயார் செய்து வைத்து,  அதை ஸ்ராத்தம்  அன்று உபயோகிக்கக் கூடாது.சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர் கள் சாப்பிட வேண்டு மென்பது மிக முக்கியம் அல்லவா?
எங்க அகத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ராத்ததில் விலக்கப்பட வேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் சேர்க்கவே கூடாது.  மொத்தத்தில் சமையல் நன்கு  சாப்பிடும்படியாகவும் இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே.
சமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.   சமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும் படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்க
வனாக,  சாப்பிடும்  ஸ்ராத்த  ப்ராமணர்களை  சந்தோஷப்படுத்தி,   மெது  மெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு உபசரித்து பரிமாறுவது முக்கியம். பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அதிரஸம்  ருசியாக பண்ணியது,  வடை சூடாக  இருக்கு ..இன்னும்  ஒண்ணு  போட்டுக் கொள்ளுங்கள் ….என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். [அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டிய போதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது].
சமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.
கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.
ஸந்தியா வந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.
”சமையல் ருசியாக இருக்கா?”  என்று கர்த்தா சாப்பிடும் ப்ராமணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.
கருப்பு எள்  ஸ்ராத்தத்தில் மிகவும் அவசியமான ஒன்று .   ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி  தரக் கூடியது [ எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து இடிக்கக் கூடாது].
பழத்தைத் தவிர மற்ற  எதையும் வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்த த்தன்று  காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.
அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட் கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் கூட  இந்த விதி  பொருந்தும்.
மாத்யாஹ்னிகம் செய்து பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம்.
அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.  அபிஸ்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ,ப்ராமணர்கள் சாப்பிடும்போது  கர்த்தா சொல்லலாம்.
ஸ்ராத்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலியவை கூடாது.
ஸ்ராத்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, மற்றவர்களோடு  பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும். இரும்புப் பாத்திரத்தை ஸ்ராத்தத்தில் உபயோகிக்கக் கூடாது. பஞ்சகச்சம் அவசியமாக  கட்டிக்கொள்ளவேண்டும்.தினசரி செய்யும் வீட்டு  பூஜையை ஸ்ராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.
 ஸ்ராத்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய் விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.
கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி,ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.
ஒருவேளை ஸ்ராத்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு [ மகனாக இருந்தாலும் தோஷமில்லை] ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.கயா ஸ்ராத்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் பற்றி  சமீப காலமாக ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கிறது. அதாவது,  கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம்.சாஸ்த்திர விரோதமானது.
நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்  தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் கர்த்தாவின்  விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.
ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின்   பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது?  மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இது தான் பித்ருக்களின் அடையாளம்.   இதனால் ஒருவர் கொடுக்கும்  தர்ப்பணம் அவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.
பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்….
தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொரு வருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.
தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர் களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடை கிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப் போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில்  மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்தவேண்டும்.
சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது
உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.
நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.
மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்  பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகை. அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம்.  சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங் களை செய்ய வேண்டும்.
மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப் பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ரு லோகம் அடைகின்றனர் என்பதை  கருட புராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு,வாசனை திரவியங்கள் போன்றவை சேர்க்காமல் ஸ்ராத்தம் பண்ணுவது வழக்கம்.
கார்த்திகை மாதம் உத்ராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.
எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடு படுகின்றனர்.
ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத் தன்று அகத்திக் கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி, அவஸ்தை  நீங்கும்.
வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
சாஸ்திரப்படி, ஸ்ராத்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.
சிராத்தம் செய்யக் கூடியவர் முதல் நாள் முகச் சவரம் செய்யக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது,  வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக முக்கியம்.
துவாதசி பன்னி ரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்து பவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத் தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு  இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல   சௌபாக்கியங்களும் தேடி வரும்.
மஹாளய பக்ஷ 16 நாட்களும் ஸ்ராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

 தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப் படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் பலரிடத்தில் உள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது.  தந்தை, தாய், தந்தையின் தந்தை, தாயின் தந்தை, தந்தியின் தாத்தா, அம்மாவின் தாத்தா  என்ற மூன்று தலைமுறையினருக்கும் தர்ப்பணம் செய்தால்  முழு பலன்களையும்  பெறலாம்.     குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்ற வர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங் களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.    திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப் பட்டி, திரு வண்ணாமலை, திருவிடை மருதூர், காசி,  திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.   திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜா விற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது….

யோசியுங்கள். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பல வகைகளுடன் மிகவும் காஸ்ட்லி யான விருந்து [பெரிய நக்ஷத்ர ஓட்டலாகவும் அது இருக்கலாம்] சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் வீட்டில்  சாப்பிடாமல் இருக்கிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.  ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.
ஸ்ரார்த்ததில்  இன்னொரு விஷயமும் நடக்கிறது.  சம்பாவனை விஷயம் தான் அது.  எங்கள் அப்பா அப்போதெல்லாம்  இவ்வளவு தான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட்.  அது அபத்தம். அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா?  எப்படி பழசை இப்போதுள்ள நிலையோடு ஒப்பிடலாம்? முடிந்ததை திருப்தியாக சம்மாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம். அப்படி நம்பிக்கை இல்லாமல் ச்ராத்தம் பண்ணி என்ன பயன். வந்த பிராமணர்கள் நமது பெற்றோர் முன்னோர் என்ற எண்ணத்தில் தானே  உபசரிக்கிறோம்?சாப்பிடும் ப்ராமணர்களை  எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராமணர்களை அவமானப்படுத்தும் எண்ணமே கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!
நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தானே! ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும் போது மற்றவர்களை குறை கூற  நமக்கு என்ன யோக்யதை இருக்கு?
ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லா விடில் கர்மா எப்படி நடக்கும்?  வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீக பிராமணர்களிடம்  நம்பிக்கையும், மரியாதையும் வைப்பது தான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக இருப்பதால் மிக  முக்கியமான மந்திரங்களையாவது. நாம் ஒவ்வொருவரும் அத்யயனம் செய்ய வேண்டும். கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது.    நாம் வாயை திறந்து சொன்னால் தான் மந்திர பலன் கிடைக்கும். ஒரு நாளும் ஸந்தியா வந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியா வந்தனத்தில்  வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்ற வைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது. கூடிய  வரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால் நமக்கு ச்ரேயஸ் உண்டாகும்..
நமது கர்ம வினைகள் எல்லாம் சாஸ்திர விதிகள் படி செய்யும் சமஸ்காரங்களால் தான் தொலையும் – நாம் நம்மை பெற்ற பெற்றோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் , ஸ்ரார்த்தம் , மஹாளயம்  போன்ற பித்ரு சம்ஸ்காரங்களால் தான் அவர்களுக்கு பித்ரு லோகம் கிடைக்கிறது – முறைப்படி வாழ்நாள் முழுதும் செய்தால் அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து விடுதலை பெற்று மேலும் அடுத்த பிறவியில் அவர்கள் செய்த பாவ புண்ணிய ங்களுக்கு ஏற்ப முன்பு இருந்ததை விட நல்ல பிறவி அவர்களுக்கு வாய்க்கிறது – அதற்கு உரிய சம்ஸ்காரங்களை செய்த நாம் , அவர்களுக்கு நல்ல கதியை கொடுத்ததற்காக அவர்கள் தரும் பரிசு தான் நமக்கு இப்பிறவியில் கிடைக்கும் எல்லா மேன்மைகளும் வசதிகளும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *