THANK YOU GOD FOR THIS BEAUTIFUL WORLD. J K SIVAN

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்  என் இறைவா?- நங்கநல்லூர்   J K  SIVAN

பிரச்னை இல்லாத  மனிதனே கிடையாது.  யாருக்காவது  இருப்பது தெரிந்தால்  சொல்லுங்கள்.  ஏதோ ஒரு விதமான பிரச்னை. அது மற்றவனுக்கு பிரச்னையே இல்லை என்று தோன்றலாம். அது  அது  அவனுக்கு என்று வரும்போது தான் அதன் பூதாகாரம் புரியும்.
முக்கால் வாசி பிரச்னையே  மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பதால் தான்.  தினமும்  ஒரு  புத்திசாலி சவடால்  பழைய கேடி  மந்திரிக்கு  இப்போது என்ன ஆயிற்று ? என்று மூன்று வேளையும்   யு ட்யூப், டிவி  வாட்ஸாப்ப்  ஏன் பார்க்கிறோம்?. அவருக்கு என்ன ஆனால்  என்ன.  தப்பு செய்தவன் தண்ணி குடிக்கட்டுமே. தப்பு செய்யாதவன் வீட்டுக்கு திரும்பிப் போய்  நெய்விட்டு பிசைந்த பருப்பு சாதம் சாப்பிடட்டும்.  ரெண்டிலும் நமக்கு என்ன பிரயோசனம்? நம்மை யாராவது அபிப்ராயம் கேட்கிறார்களா? பிரச்னையே என்ன என்று  இருட்டு அறையில், கருப்பு பூனையை குருடன் ஒருவன் தேடும்போது நமக்கு பிரச்னை எப்படி தெரியப் போகிறது.  தெரிந்தாலும் நாம்  அதை தீர்த்து வைக்கப் போகிறோமா? முடியுமா?  எதற்கு இதில் நேரம் வேஸ்ட் பண்ண வேண்டும்.
நமக்கு பிறரை விட நன்றாக யோசிக்கமுடியும்,  விவரமாக பிரச்னைகளுக்கு  தீர்வு காணமுடியும் என்ற குருட்டு நம்பிக்கை. அதனால் தான் மற்றவர்களோடு ஒத்து போகமுடியவில்லை, அவர்கள் முடிவு  நமக்கு தப்பானதாக தெரிகிறது.  வார்த்தை  தடித்து விரோதமும் வளர்கிறது.
எறும்பிலிருந்து  யானை வரை ஒவ்வொன்றையும் வெவ்வேறாக படைத்த பகவான் ஒவ்வொரு மனிதனையும் மற்றவன் போல் படைக்காததன் காரணம் அவனவன் தன்னுடைய வழியில் செல்லவேண்டும் என்பதற்காக தான்.  நம் வழியில் மற்றவர் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும்போது தான் நாம் துன்பத்தில் சிக்கிக்கொள்கிறோம்.
காலப்போக்கில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கை அமைகிறது. வளைந்து கொடுக்க பழகவேண்டும். அது இயற்கையாக இருக்கவேண்டும்.  நமக்கேற்ப சூழ்நிலை சந்தர்ப்பங்கள் அமையாது.  எதிர்பார்ப்பது  வீணில் ஏமாற்றம், துன்பம், அமைதியின்மை மட்டும் தான் தரும்.  நாம் தான் அவற்றுக்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும்.  மாற்றம் இன்றியமையாதது.  வீட்டிலும் நாட்டிலும்  இது தான் நியதி.  குடும்பத்திலேயே  மாற்றங்களை எதிர்ப்பவர்கள்  அவமரியாதை, அவமானம், துன்பம் இதைத்தான் அடைகிறார்கள்.
துன்பத்தை எதிர்கொள்ளாத போது  எஞ்சி இருப்பது இன்பம் ஒன்று தானே.  நான் கிருஷ்ணனுக்கு நன்றி கூறி ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாகத்தான் அனுபவிக்கிறேன். எதையும் எதிர்பார்க்காததால்  புவி மேல் எல்லாம் இன்பமயம்.
காலையில்  ”சொத்” என்று  பேப்பர் பல பக்கங்களோடு வந்து விழுகிறது. பிரித்தால் ??  ஏறகனே  தெரிந்த, வழக்கமான விஷயங்கள் தான்.   கோடிக்கணக்கில் பணம்  ஏய்ப்பு.  கணக்கு  காட்டாமல் பதுக்கல், பதுக்கியவன் ஓட்டம். போட்டி, பொறாமை, அபாண்டம், அநியாயம்,  ஆறு  வயது பெண் குழந்தையை   அறுபத்தெட்டு வயது தாத்தா…….. பஸ் , ரயில், கார், மோட்டார் சைக்கிள்,  விபத்துகள், தங்கச்சங்கிலி அபேஸ்,   குழந்தையை திருடுபவர்கள், பொது இடங்களில் ,ஆஸ்பத்திரி அட்டூழியங்கள்.  லஞ்சம் பல ரூபங்களில்,   சிலை திருடியவன்.  பாங்க்  சுவரைத் துளைத்து  கொள்ளை, நகைக்கடை அபேஸ், மனைவி காதலி துரோகம்….. இது  போன்ற செய்தி தான்  கொட்டை  எழுத்தில்…. ஏன் இதற்கு முக்கியத்துவம். நல்ல விஷயங்கள்,செயல்பாடுகள்,  எங்குமே, எப்போதும் நடக்கவில்லையா. அதெல்லாம் பற்றி  கொட்டை எழுத்தில்  போடலாமே.  நிறைய  பேர்  அதெல்லாம் படிக்கமாட்டார்கள்  என்று பேப்பர் காரனுக்கு தெரிந்து தானே  மேலே சொன்ன அபத்தமெல்லாம்  நிறைய  பக்கத்தை நிரப்புகிறது..
உயரே பறக்கும் கழுகுக்கு   ,பிருந்தாவனம், பெரிய கோவில், கங்கை,  காசி, தாஜ்மஹால்,  இதெல்லாம் லக்ஷியமில்லை. அதில்  ஈர்ப்பு இல்லை.   எங்காவது  செத்த நாய், எலி, பூனை உடல்களை  மட்டும் தான் தேடி சந்தோஷமாக அவற்றின்   மேல்  அதனுடைய கண் படும்.  கழுகுகள்  மாதிரி தான்  தினமும்  நாம் வேண்டுவது மேலே கண்ட  செய்திகள்  தான் என்று புரிந்து வைத்துக்கொண்டு அதை நிறைய  பிரசுரித்து தருவதால்,  நாமும்  காசு கொடுத்து வாங்குகிறோம்.  நாள் முழுதும் அது  பற்றியே பேசுகிறோம்.
 நமக்கு எது தெரியும், தெரியாது, நம்மால் எது முடியும் எது முடியாது என்பதையே  நம்மால்  முழுமையாக தெரிந்து  கொள்ள இயலவில்லை.  சக்தியோ, திறமையோ இல்லை.  ஆனால்  நமது  அகம்பாவத்துக்கு  இதில்  ரொம்ப பங்கு உண்டு.    எதையுமே  தெரிந்ததாக நினைத்துக் கொண்டுவிடுகிறோம். முடியம்,  முடிந்துவிடும் என்று காட்டிக்கொள்கிறோம்.  நம்மை நாமே  இந்த விஷயத்தில் அசாத்தியமாக நம்புகிறோம். எல்லை தெரியாமல் காட்டில் நுழைந்தால், கொடிய விலங்குகளால் ஆபத்து.  ஆழம் தெரியாமல் காலை விட்டால் மூழ்க  வேண்டியது தானே.
வெளி விவகாரங்களில் அதிகம் ஈடுபடுவதால் மன அமைதி காணாமல் போகும்.   அதை  குறைத்துக் கொண்டு  ஆத்ம  விசாரத்தில்  ஈடுபடுவோமே . தெரியாத தெல்லாம்  மெள்ள   மெள்ள  தெரியவரும். புரியாத புதிரெல்லாம் புரிபடும்.
மனம்  பகவானிடத்தில், பிரார்த்தனையில் ஈடுபடும்போது  தியானம் கை கூடும். அமைதி தானாகவே  தேடிவரும்.  மனதில் சிக்கல் எதுவும்  நெருங்காது.  தினமும்  ஒரு அரைமணி நேரமாவது  தியானத்தில் அமைதியாக  தனிமையில் நேரம் போகட்டுமே.   அதன் பலனே அலாதி சுகம்.  நாள் முழுக்க  பாட்டரி சார்ஜ் ஆகி  வாழ்க்கையின் மற்ற  இருபத்தி மூன்றரை மணி நேரமும்  அமைதியாக சுகமாக இயங்கும்.
இப்படி தியானத்தில் உட்காருவது மற்ற வேலைகளை கவனிக்க விடாமல் தொந்தரவாக இருக்குமே என்று எண்ணினால் அது தான் பெரிய தப்பு.  மற்ற வேலைகளை சரியாக அணுகுவதற்கு இந்த அரைமணி நேரம் பெரிதும் உதவுவதை அனுபவம் புரிய வைக்கும்.
பகவான் மேல் ”பா”ரத்தை  (பாலு  என்கிற வார்த்தையில் வரும்  ”பா”) போட்டுவிட்டு உன் மனச்சாட்சிக்கு பங்கமில்லாமல் செய்வன திருந்தச் செய்.  ”செய்ய  வேண்டுமா,வேண்டாமா” என்ற சஞ்சலம் வேண்டாம்.  இத்தகைய சஞ்சலங்களுக்கு  இடம் கொடுத்தால்,  மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாதக்கணக்கில், ஏன் வருஷக்கணக்கில் கூட  சந்தேகம்  இழுத்துச் சென்று  திசை தெரியாமல் தடுமாற செய்துவிடும்..
நம்மைப் பற்றி தெரிந்துகொண்டு தான்,  எதிர்காலம் நமக்கு தெரியக்கூடாது என்று நன்றாக யோசித்து  பகவான்    இருட்டடிப்பு செய்திருக்கிறான். எதற்கு  வரப்போவதை பற்றி,  நடக்கப்போவது பற்றி  எதிர்பார்ப்பு, ஜோசியம்  என்று எல்லாம் முயன்று  நாம்  எல்லை மீறவேண்டும்? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்  தெய்வம்  ஏதுமில்லை  ரொம்ப  அர்த்தமுள்ள  பாட்டு இல்லையா?   தோல்விகள் வெற்றிக்கு படிக்கட்டுகள். நடந்தது நன்றாக  நடந்ததாகவே இருக்கட்டும். கொட்டின பால் குடம் ஏறப்போவதில்லை?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *