TAMIL THATHTHA J K SIVAN

தமிழ்த்  தாத்தா நினைவு –   நங்கநல்லூர்  J K  SIVAN
”மாவிந்த புராணம்”

சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாக்கும் அரசாங்க புத்தகசாலை இருக்கிறது.  அதன் அதிபர்  ராஜதானி கல்லூரி  ஸம்ஸ்க்ரித   ப்ரொபசர் ராவ் பகதூர்  ம.ரங்காசாரியார்.   புத்தகசாலையில் அநேகர்  பணி  புரிந்தனர்.  தெலுங்கு,கன்னடம்,மலையாள ஏட்டுச் சுவடிகளும் அதில் உண்டு.
ரங்காச்சாரியார்  தமிழ் தாத்தாவை ஒருநாள்  சந்தித்து  ”இது எங்கள் அட்டவணை. இதில் எங்களிடம் உள்ள  புத்தகங்கள் எல்லாம் பட்டியலிட்டிருக்கிறது.  இதில் ஏதாவது திருத்தம் தேவையா என்று பார்த்து சொல்லுங்கள்”  என்றார். அந்த‌ அட்ட‌வ‌ணையில் ப‌ல‌ த‌மிழ்நூல்க‌ளின் பெய‌ர்க‌ள் காண‌ப்ப‌ட்ட‌ன‌.பெய‌ர்க‌ளிலே சில சில‌ பிழைகளும் இருந்த‌ன‌.தமிழ்
ஏட்டுச் சுவ‌டிக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொள்வ‌தில்  உ.வே.சாவுக்கு  மிகுந்த ஆர்வம். என்னென்ன உள்ளது என்று ஆவலோடு பார்த்தார்.  பல பிரபந்தங்கள், புராணங்கள், இலக்கணங்கள், சாஸ்திரங்கள், வைத்தியம், சோதிடம்  என்று  பலவகை நூல்களின் பெயர்கள்  இருந்தது.   இதோ  உ.வே. சா சொல்கிறார். கேளுங்கள்:
”அச்சிட்ட புத்தகங்களாக இருந்தாலும் ஏட்டுச்சுவடிகளின் உதவியால் பல அரிய திருத்தங்கள் கிடைக்கும்.  அச்சுப் பிரதிகளில் பலகாலமாகத் தீராமல் இருந்த சந்தேகங்கள் ஏடுகளிலே கண்ட பாட பேதங்களினால் தெளிவாகிய அனுபவம் எனக்கு.  கூர்ந்து பார்த்தேன்.  புராண வரிசையிலே ”மாவிந்தபுராணம்” என்ற ஒரு பெயரைக் கண்டேன்.  இப்படி  ஒரு புராணம் உண்டா? தெரியாதே,  கேட்டதில்லையே. தரும புத்திரனின் பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள வரலாறுகளைக் கூறும் ” மாவிந்தம்” மென்ற ஒரு நூல் உண்டு.  எளிய நடையில் அமைந்த அதுவோ? வேறு ஏதாவது  ஒரு ஸ்தல புராணமோ? மாவிந்தம் எனும்  ஸ்தலம் எங்கே இருக்கிறது? தெரியவில்லையே.  விந்தகிரியில்  உள்ள தேவியை  விந்தாசனி என்பது தெரியும் அவள் புராணமோ?  சரி எதற்கு  இவ்வளவு ஆலோசனை. அந்த புத்தகத்தை பார்த்துவிட்டு ஆராய்ச்சி பண்ணுவோம்  என புத்தகசாலைக்குச் சென்றேன். அங்கே சுவடிகளைப் பலர் பார்த்துப் படிப்பதற்கும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கும் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற் குரிய வேலைக்காரர்களும் இருப்பார்கள்.
மாவிந்த புராணத்திற்குரிய எண்ணைக் கூறி அதை கொண்டுவாருங்கள் என்றேன்.  அவர் ஒரு வேலைக்காரனை அனுப் பினார். அவன் தன் வழக்கப்படியே அடிமேல் அடிவைத்து அந்த்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வரச் சென்றான். எனக்கிருந்த மனோவேகத்தை அவன் கண்டானா? அவன்பால் எனக்கு அப்போது மிக்க கோபம் உண்டாயிற்று. என் செய்வது! ‘புத்தகம் வராமலா போய்விடும்? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?’ என்று சமா தானம் செய்து கொண்டேன்.
கால்மணிநேரம் கழித்து அவன்  ஒரு சுவடியை  என் கையில் கொடுத்தான். அவசர  அவசரமாக  பிரித்துப் பார்த் தேன். அதில் முற்பகுதியில் சில ஏடுகள் இல்லை. பிரித்தவுடன் முதலில் இருந்த ஏட்டைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய ஆத்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ‘மலையைக்  கெல்லி எலியை  பிடித்தது’ போல இருந்தது.எனக்கு பெரிய ஏமாற்றம்.  ‘இதற்குத்தானா இவ்வளவு ஆவலோடு ஓடிவந்தோம்!’ சே சே. ”ரங்காச்சாரியை கேட்டேன்: ”இந்த  பட்டியல்,  அட்டவணையைத் தொகுத்த புத்திசாலி யார்?'”எங்கள் புத்தகசாலைப் பண்டிதர்” “பண்டிதரா?”
“ஆமாம்”
“அவரை நான் பார்க்கலாமோ?”
“ஆகா! தடையின்றிப் பார்க்கலாம்.”
 பண்டிதரை அழைத்து வந்தார்.  பார்க்கும்போதே அந்த பண்டிதர்  எதையும் லக்ஷியம் செய்யாத இயல்புடையவர் என்று புரிந்தது. “இந்த அட்டவணையை எழுதியது தாங்களோ?” “ஆமாம். பின் வேறு யார் எழுதுவார்கள்? நான்தான் ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிரமப் பட்டுக் குறித்தேன்.”
“அப்படியா! இதில் மாவிந்தபுராணம் என்று ஒரு புத்தகத்தின் பெயர் இருக்கிறதே; அந்தப் பெயரை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”
“எல்லாம் அந்த அட்டவணையிலேயே தெளிவாக இருக்கும். புத்தகம் தானே சொல்லுமே. அதைப் பார்த்தால் எல்லாம் தெரியும்.”
“அட்டவணையைப் பார்த்துத்தான் புத்தகத் தைத் தேடினேன். இதோ இருக்கிறது அந்தச் சுவடி. இதன் பெயர் மாவிந்தபுராணமென்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.”
“ஆமாம். நான்தான் நன்றாக ஆராய்ந்து ஊகித்துக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறேன்.”
எனக்கு அவருடைய இயல்பைக் கண்டு சிரிப்பு ஒரு பக்கமும் கோபம் ஒரு பக்கமும் வந்தன.
“எதைக் கொண்டு ஆராய்ந்தீர்கள்?” “இங்கே கொடுங்கள் அதை. நான் சொல்கிறேன்”.பண்டிதர்  அலக்ஷியமாக  என் கையிலிருந்து அந்தச் சுவடியை வாங்கி அதில் உள்ள ஒரு  செய்யுளை உரக்க படித்தார்.
“மாவிந்த மென்னும் வளநாக கூற லுற்றாம்”
 “இந்தப் பாட்டைப் பாருங்கள். இதில் மாவிந்த மென்னும் பெயர் தெளிவாக இருக்கிறதே. இது தெரியவில்லையா? இந்தப் பெயரே இது மாவிந்த மென்னும் ஸ்தலத்தின் புராணமென்பதை விளக்க வில்லையா? முதற் பக்கத்திலேயே இந்த அடையாளம் இருக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்காமல் என்னைக் கேட்கிறீர்களே”  முன்பிருந்த்தைவிட அப்போது அவர் தொனி மிகவும் கம்பீரமாகவே அகம்பாவத்தோடு இருந்தது.  என் அறியாமை யால் நான் விஷயத்தைத் தெரிந்துகொள்ளவில்லை யென்பது அவர் எண்ணம்.
அவர் பேசப் பேச எனக்குச் சிரிப்பு  தாங்க  முடியவில்லை. “பண்டிதரே நீங்கள் நைடதம் படித்ததுண்டா?”
“நைடதம் படிக்காமலா இருப்பேன்? நான் ஒரு பெரிய வித்துவானுடைய மருமகன்” என்று அவர் சிறிது கோபத்தோடு பதில் சொன்னார்.  அருகில் நின்ற  வேலைக்காரரிடம்  ”அப்பா, இந்தப் புஸ்தகசாலையில் நைடத மென்ற புஸ்தகத்தின் அச்சுப் பிரதியிருந்தால் எடுத்துக்கொண்டு வா” என்றேன். நைடதம் வந்தது. பிரித்து நாட்டுப்படலத் தின் இறுதியிலுள்ள மேற்கூறிய செய்யுளைக் காட்டி படியுங்கள் என்று  பண்டிதரி டம் சொன்னேன். படித்தார்:
“கொல்லுலை வேற்க ணல்லார் கொழுநரோ டூடி நீத்த
வில்லுமிழ் கலன்கள் யாவு மிளிர்சுட ரெரிக்கு மாற்றால்
எல்லியும் பகலுந் தோன்றா திமையவ ருலக மேய்க்கும்
மல்லன்மா விந்த மென்னும் வளநகர்* கூற லுற்றாம்.”

“பண்டிதரே, நீங்கள் நைடதத்தைச் சரியாகப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இந்தச் சுவடியைக் கொஞ்சம் பின் னாலே புரட்டிப் பார்த்திருந்தால் உங்களுக்கே இது நளன் கதையென்று தெரிந்திருக்கும். போனது போகட்டும். நான் ஏமாற்றம் அடைந்தமாதிரி மற்றவர்கள் ஏமாறாதபடி இந்தச் சுவடியின் பெயரை இனிமேல் நைடதமென்று மாற்றிவிடுங்கள்” என் றேன்.
“படித்ததெல்லாம் ஞாபகத்திலே இருக்கிறதா? ஆயிரத்தில் ஒன்று தவறுவது வழக்கந்தான்” என்ற முணுமுணுப்போடு அப்பணிடிதர் வேறிடஞ்சென்ற விட்டார்.
அப்பால் நான் ராவ்பகதூர் ரங்காசாரியாரவர் களிடம் சென்று புத்தக அட்டவணையை முதலி லிருந்து நன்றாகப் பரிசோதித்தே வெளியிடவேண்ட மென்று தெரிவித்தேன். அங்ஙனமே வேறோரு தக்க பண்டிதரைக்கொண்டு முழுவதையும் பரிசீலனை செய்வித்து அட்டவணையை வெளியிட்டார்கள்”.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *