THIYAGARAJA SANGEETHAM J K SIVAN

தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN

”நகுமோமு ” – ஆபேரி

தியாகராஜ ஸ்வாமிகளை விட அவரது கீர்த்தனங்கள் பிரபலமானவை. ராமனை, கிருஷ்ணனை,சிவனை விட அவர்கள் நாமங்கள் சக்தி வாய்ந்தவை என்பதைப் போல. தியாகராஜ ஸ்வாமிகள் தெலுங்கர் என்பதால் கீர்த்தனங்கள் தெலுங்கு காரர்களுக்கு மட்டும் என்றில்லாமல் உலகம் முழுதும் பல தேசத்தில் பல மொழியினரால் கேட்கப் படுகின்றன. அவரது கீர்த்தனங்களுக்கு ஜீவன் ஊட்டுவது போல் அவர் அமைத்து இருந்த ராகங்கள் ஒரு காரணம். பக்தி சங்கீதத்துக்கு மொழி ஒரு தடையோ இடையூறோ இல்லவே இல்லை. மனதை பக்தி கலந்த சுநாதம் எந்தமொழியில் இருந்தாலும் நிச்சயம் எவர் மனதையும் தொடும். ஸ்வாமிகளின் கீர்த்தனங்களை எவர் பாடினாலும் அதன் ருசி அந்த ராகம் வழியாக செவிக்குள் நுழைந்து பக்தி பாவம் மனதுக்குள் இடம் பெறும். ராக தாளத்தை விட பாவம் முக்கியம்.

எத்தனையோ வருஷங்களாக கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு அருமையான, மிக பிரபலமான ஆபேரி ராக க்ரிதி ‘நகுமோமு”.

என்னைப் பொறுத்தவரை நான் முதலில் இந்த கீர்த்தனையை கேட்டு ஈர்க்கப் பட்டது ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில். அதை அவர் விசேஷமாக ரசித்து, ஆலாபனை பண்ணி விஸ்தாரமாக பாடியதை சின்ன வயதில் கேட்டபோது மயங்கினேன். சங்கீதம் அறியாத தெலுங்கு தெரியாத இசை வயப்பட்ட பையனாக. அதற்கப்பறம் எத்தனையோ முறை அதைக் கேட்கும்போது அதே ஆர்வம், அதே தாகம், அதே உணர்ச்சி. கொஞ்சம் காது மந்தமாகிவிட்டதால் சற்று வால்யூம் மிகைப் படுத்தி கேட்க வேண்டியிருக்கிறது. ருசி என்னவோ குறையவே யில்லை. தாகமும் தீரவில்லை.

நமக்கு எத்தனையோ வசதிகள் வந்தாலும் சங்கீதம் கேட்க வாய்த்திருக்கும் யூ ட்யூப், ஆடியோ வீடியோ வசதிகள் மிகவும் வரப்பிரசாதமாக அமைந்தவை என்று சொல்வேன்.

அப்போதெல்லாம் மெழுகில் வார்த்த RPM லாங் பிளே ரிகார்டுகள், இசைத்தட்டுகள் 3 நிமிஷம் பாட பலமுறை ஒரு வெல்வெட் தட்டின் மேல் சுற்றும். அது சுற்றும் போது சவுண்ட் பாக்ஸ் ஊசி அந்த மெழுகு வார்ப்பு தட்டு மேல் பிரயாணம் செய்யும். வரிசையாக வரிவரியாக தட்டு சுற்றச் சுற்ற புனல் மாதிரி பெரிய ஸ்பீக்கர் வழியாக ஓசை கேட்கும். சரியான வேகத்தோடு ரிக்கார்ட் பிளேட் சுற்றினால் தான் இசையை கேட்க முடியும். இல்லாவிட்டால் கர்ண கொடூர அழுகை. இன்னொரு விஷயம். இப்படி பிளேட் சுற்ற சாவி கொடுக்க வேண்டும். அதிகமாக கொடுத்தால் ஸ்ப்ரிங் .அறுந்து போகும். ஊசியை வேறு அடிக்கடி மாற்றவேண்டும்.

இன்னொரு முக்கிய சமாச்சாரம். மெழுகு இசைத்த தட்டில் எங்காவது கீறல் இருந்ததோ அவ்வளவு தான். அந்த இடத்தை விட்டு மேலே நகராமல் ஊசி அந்த இடத்திலேயே திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கும். மேற்கொண்டு கேட்க ஊசியை மெதுவாக தூக்கி நகர்த்தி அடுத்த கோட்டில் சரியாக மிருதுவாக வைக்க வேண்டும்.

ஒருமுறை MS சுப்புலக்ஷ்மி பாடிய ”கண்டதுண்டோ கண்ணன் போல” என்ற பிளேட் ”கண்ணன் போல” என்ற இடத்தில் கீறல் விழுந்து ஊசி மேலே நகராமல் தட்டு மட்டும் சுற்றிக் கொண்டிருக்க, திரும்ப திரும்ப ”போல போல,,லபோ லபோ” என்று ”லபோ லபோ” என்று கத்திக்கொண்டே இருந்தது ஞாபகம் இருக்கிறது.
இனி நகுமோமு கீர்த்தனை வரிகள் அதன் அர்த்தம் சொல்கிறேன்.

ராகம் ஆபேரி
பல்லவி :
நகுமோமு கனலேனி நாஜாலி தெலிசி
நனு ப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர – நகு
அனுபல்லவி
நகராஜ தர நீது பரிவாருலெல்ல
ஓகி போதன ஜெஸேவாரலு காரே யதுலுந்ததுரா நீ
சரணம்
ககராஜு நியா நதிவினி வேக சானலேதோ
ககனாநிகி லகு பஹு தூரம் பானி நாடோ
ஜகமேலே பரமாத்மா எவரித்தோ மோரலிடுது
வகஜூபகு தாளனு நன்னெலு கோறா த்யாகராஜனுதனி (நகு )

இந்த கீர்த்தனை எழும்போது ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் மனத்தில் தோன்றியது இது தானோ?:
”ரகு குல ஒளி விளக்கே, ஓ ஸ்ரீ ராமா, உன் புன்னகை தவழ் திருமுக மண்டலத்தை காணாமல் அனலிலிட்ட மெழுகாக தவிக்கிறேனே, என் தாபத்தை உணர்ந்து வரமாட்டாயா, என்னைக் காத்திட வாயேன் எம் காகுத்தா!
நீ தானே கிருஷ்ணனாக கோவர்தன கிரியை சுண்டுவிரலில் உயர்த்தி பிடித்தவன். கோப கோபியரைக் காத்தவன். கேசவன்.
உன் பரிவாரங்கள் என்ன செய்கின்றன? உனது கடமையை உனக்கு உணர்த்த வேண்டாமா? அன்றாட வேலைகளை நினைவு படுத்த வேண்டாமா? நீ என்னைக் காக்க வேண்டாமா? வேலையில் அவர்கள் ஏன் தவறுகிறார்கள்? ஏன் கருடன் நீ இட்ட வேலையை, கட்டளைகளை சரிவர வேகமாக செய்வதில்லையா? வைகுண்டம் தான் ரொம்ப தூரத்தில் இருக்கிறதே எப்படி பூமிக்கு உன்னைத் தூக்கி சென்று என் வேலையை செய்வது என்று சாக்கு போக்கு சொல்கிறானா? என்னிடம் நீ வரக்கூடாது என்று தகராறு பண்ணுகிறானா? மகா ப்ரபோ, லோக நாயகா, வேறு நான் யாரிடம் முறையிடுவேன்?. என் ஆதங்கத்தை எங்கே போய் எவரிடம் சொல்வேன்? என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் தள்ளாதே, நான் தாங்க மாட்டேன். என்னை உன் பரிவாரத்தோடு சேர்த்துக்கொள்ளேன்”

அசாத்தியமாக ஆபேரி என்று ஒரு மனம் கவரும் ராகத்தை ஸ்வாமிகள் இந்த கீர்த்தனத்துக்கு பொருத்தி இருக்கிறார். பால முரளியை சுகமாக கேளுங்கள். இது தான் லிங்க் அதை சொடுக்கி தியாகராஜரோடு லயித்து ராமனை தேடுங்கள் https://youtu.be/Lnxauzbb4Fk?si=qpF26NuP4CBAmlsT

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *